இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் பத்தொன்பதாம் ஞாயிறு

ந‌ல்ல‌ ப‌சியார்வ‌ம்  ஏற்ப‌ட‌ வாழ்த்துக்க‌ள் 

1அரசர்கள் 19,4-8
எபேசியர் 4,30-5,2
யோவான் 6,41-51


மேலை நாடுக‌ளில் உண‌வு உண்ண‌த் தொட‌ங்குமுன் ந‌ல்ல‌ ப‌சியார்வ‌ம் ஏற்ப‌ட‌ வாழ்த்துக்க‌ள் (..Have a good appetite . buonappetito    ) என்று ஒருவ‌ர் ம‌ற்ற‌வ‌ர்க்கு வாழ்த்து கூறி ம‌கிழ்வ‌ர். இத‌னால் உண்ப‌வ‌ர் ந‌ல்ல‌ ப‌சி ஏற்ப‌ட்டு உண்டு ம‌கிழ‌ வேண்டும் என்ப‌து அவ‌ர்க‌ள் விருப்ப‌ம். ந‌ம்மிடையே அப்ப‌டிச் சொல்லும் வ‌ழ‌க்க‌ம் இல்லை. அத‌ற்கு மாறாக‌ ந‌ல்லா சாப்பிடுங்க‌ள், இதைக் கொஞ்ச‌ம் அதிக‌மாக‌ எடுத்து சாப்பிடுங‌ள், இது உட‌ம்புக்கு ந‌ல்லது‌ என்று கூறி நாமே ப‌சியைத் தூண்டி விடும் ஊக்கியாக‌ மாறிவிடுவோம். இப்ப‌டி ந‌ம்மை அறியாம‌லே நாம் கிரியா ஊக்கியாக‌ செய‌ல்ப‌டும் த‌ருண‌ங்க‌ள் ப‌ல‌.  இயேசு அவ‌ர‌து பிள்ளைக‌ளாகிய‌ நாம் ந‌ல்ல‌ வாழ்க்கை வாழ‌ வேண்டும், ந‌ல‌முட‌ன் வாழ‌ வேண்டும் என்ற‌ எண்ண‌த்தில் ப‌ல‌ வ‌ழிமுறைக‌ளை த‌ன‌து ந‌ற்செய்தியின் மூல‌ம் கூறி இருக்கிறார். ப‌ல‌ இட‌ங்க‌ளில் உண‌வினை மேற்கோளாக்கி இருக்கிறார். எத‌ற்காக‌ உண‌வினை அவ‌ர் எடுத்துக்காட்டாக‌ ந‌ம‌க்கு கூற‌ வேண்டும்??? ஏன்? எத‌ற்காக‌? 


ஏனெனில் உண‌வு அனைத்து நிலை ம‌னித‌ர்க‌ளும் அறிந்த‌ ஒன்று. ஏழை ப‌ண‌க்கார‌ன் இருப்ப‌வ‌ன் இல்லாத‌வ‌ன் என்று எல்லா நிலையின‌ரும் அவ‌ர‌வ‌ர் நிலைக்கேற்ப‌ உண‌வினை உண்ப‌ர். உண‌வு உற‌வின் சின்ன‌ம் , உட‌ல் ந‌ல‌த்தின் அடித்த‌ள‌ம். ச‌த்தான‌ உண‌வினை ச‌மாதான‌மான‌ சூழ‌லில் உண்டு வாழ்ந்தால், உற‌வும் உட‌ல் ந‌ல‌மும் ஆரோக்கிய‌மாக‌ இருக்கும். ந‌ம‌து அன்பினை நாம் அதிக‌மாக‌ பிற‌ருக்கு வெளிப்ப‌டுத்துவ‌து உண‌வு வேளையின் போதுதான். விருந்துக்கு அழைப்ப‌து, விரும்பிய‌தை ச‌மைப்ப‌து, சுவையான‌தைத் த‌ருவ‌து, சுக‌மான‌ இருத்த‌லைக் கொடுப்ப‌து என‌ அனைத்தையுமே விருந்தோம்ப‌லின் போது ம‌ட்டுமே ஆர்வ‌த்தோடு செய்வோம்    என‌வே தான் இயேசு இத்த‌கைய‌ மேன்மையான‌ உண‌வின் மூலம் த‌ன‌து போத‌னைக‌ளை எடுத்துரைக்கிறார். அவ‌ர‌து போத‌னைக‌ள் பெரும்பாலும் உண‌வுக்கு முன், உண‌வுக்கு பின், உண‌வின் போது என‌ அதைச்சுற்றியே இருக்கும். இன்றைய‌ ந‌ற்செய்தியில் இயேசு ஒருப‌டி மேலே போய், நானே வாழ்வு த‌ரும் உண‌வு என்று த‌ன்னையே உண‌வாய் மாற்றிக் கூறுகின்றார். இதைக் கேட்ட‌ யூத‌ர்க‌ள் முணுமுணுக்கின்ற‌ன‌ர், நிலைவாழ்வு பெற‌ விரும்புகிறாயா என்னைப் பின் தொட‌ர்..... என்று துணிவுட‌ன் கூறி அவ‌ர்க‌ளுக்கும் வாழ்வின் பாதையைக் காட்டிச் செல்கின்றார். 


இன்றைய‌ முத‌ல் வாச‌க‌த்தில் எலியா இறைவாக்கின‌ர்க்கு வான‌தூத‌ர் உண‌வு கொடுத்து வ‌லுப்ப‌டுத்திய‌தை வாசிக்க‌க் கேட்டோம். இறைவாக்கின‌ரின் இன்றைய‌ வாச‌க‌ நிக‌ழ்வும் ந‌ம‌து வாழ்க்கை நிக‌ழ்வும் ப‌ல‌ நேர‌ங்க‌ளில் ஒத்துப்போகும். சாக‌ வேண்டும் என்று க‌ட‌வுளிட‌ம் கேட்ட‌வ‌ர், க‌டைசியில் உண‌வு உண்டு வ‌லிமை பெற்று ப‌ய‌ண‌த்தைத் தொட‌ங்குகிறார். நாமும் ப‌ல‌ நேர‌ங்க‌ளில் இவ‌ரைப் போல‌த்தான். என‌க்கு இந்த‌ வாழ்க்கை வேண்டாம், என‌க்கு வாழ‌ பிடிக்க‌வில்லை என்று உத‌ட்ட‌ள‌விலும் உள்ள‌த்த‌ள‌விலும் புல‌ம்பி இருப்போம். க‌ட‌வுளின் அருள் எலியாவிற்கு வான‌தூத‌ர் வ‌டிவில் அப்ப‌ம், நீர் மூல‌ம் பொழிய‌ப்ப‌ட்ட‌து போல‌ , ந‌ம‌க்கும் ஏதாவ‌து சூழ‌ல், ம‌னித‌ர்க‌ள் வ‌ழியாக‌ பொழிய‌ப்ப‌ட்டிருக்கும். இல்லையென்றால் இனி மேல் மாற்ற‌ப்ப‌ட‌ இருக்கும்.

 
எலியா இறைவாக்கின‌ர் ஒருநாள் பாலைவ‌ன‌த்தில் ப‌ய‌ண‌ம் செய்து க‌ளைப்புற்ற‌வ‌ர், ஆனால் ஒரே நாளில் உண‌வு உண்டு நாற்ப‌து நாள் இர‌வும் ப‌க‌லும் ப‌ய‌ண‌ம் செய்து ஒரேபு ம‌லையை அடைகிறார். இதற்‌கு கார‌ண‌ம் வான‌தூத‌ரால் இர‌ண்டு முறை உண‌வு உண்ட‌து ம‌ட்டும‌ல்ல‌. இறைவ‌னைக் காண‌ வேண்டும், இறைவ‌ன் ப‌ணியைச் செய்ய‌ ஆற்ற‌ல் வேண்டும் என்ற‌ செய‌ல் ஆர்வ‌ம் ப‌சியார்வ‌ம் அவ‌ரிட‌ம் இருந்த‌தால் தான். ஆண்ட‌வ‌ர் என்னை அழைத்தார், அவ‌ர் இட்ட‌ ப‌ணியை முழுமையாக‌ என்னால் செய்ய‌ இய‌ல‌வில்லை, நான் ப‌ல‌வீன‌மாயிருக்கிறேன், நான் ப‌ல‌ம் பெற‌ வேண்டும் என்ற‌ எண்ண‌ம் இருந்த‌தால் வான‌தூத‌ர் எழுப்பி உண‌வு கொடுத்த‌தும் உண்கிறார். உண்மையிலேயே சாக‌ வேண்டும் என்று எண்ணி இருந்தால், உண‌வு உண்ணாம‌ல் ப‌ட்டினியால் மாண்டு உயிர் விட்டிருக்கலாம். ஆனால் எலியா வாழ‌ விரும்பிய‌வ‌ர். அத‌னால் தான் உண‌வை உண்டு ப‌ல‌ம் பெற்ற‌தும் ப‌ய‌ண‌த்தை மேற்கொள்கிறார். எவ‌னொருவ‌ன் த‌ன‌து ப‌லவீன‌த்தை உண‌ர்ந்து, அதை மாற்றிக் கொள்ள‌ விழைகிறானோ, அவ‌னே பல‌ம் பெற்று செழிப்ப‌டைவான்.

வாழ்வைப் பெற‌ வேண்டும் என்ற‌ ஆர்வ‌த்தால் ஊக்குவிக்க‌ப்ப‌ட்ட‌தால், சாக‌ வேண்டும் என்று எண்ணி சூரைச்செடியின் அடியில் ப‌டுத்து உற‌ங்கிய‌வ‌ர், உய‌ர‌மான‌ ஒரேபு ம‌லையை அடைகிறார். 
நான் என் மூதாதைய‌ரை விட‌ ந‌ல்ல‌வ‌ன் அல்ல‌ன் என்று கூறிய‌வ‌ர், ம‌ன‌ம்மாறி, ந‌ற்செய‌ல்க‌ள் செய்ய‌த் தொட‌ங்குகின்றார். இறைவ‌ன் த‌ந்த‌ உண‌வினை உண்டு ப‌ல‌ம் பெற்ற‌ எலியா இறைவாக்கின‌ர் போல‌ நாமும் ந‌ம‌து ப‌ல‌வீன‌த்தை உண‌ர்ந்து ப‌ல‌ம் பெறவும், இறைப‌ராம‌ரிப்பில் முழு ந‌ம்பிக்கை‌ கொண்டு வாழ‌வும் அருள் வேண்டுவோம். 


இன்றைய‌ முத‌ல் வாச‌க‌ம் உண‌வை உண்டு வாழ்வு பெற்ற‌தைப் ப‌ற்றிக்கூறும் நேர‌த்தில் இன்றைய‌ இர‌ண்டாம் வாச‌க‌த்தில் ப‌வுல‌டியார் உண‌ர்வினை கொண்டு வாழ்வ‌து ப‌ற்றி ந‌ம‌க்கு எடுத்துரைக்கின்றார். ந‌ன்மை செய்து ப‌ரிவு காட்டுங்க‌ள், ஒருவ‌ர் ஒருவ‌ரை ம‌ன்னியுங்க‌ள், அன்பு கொண்டு வாழுங்கள்‌ என்கிறார். இவை அனைத்தையும் நாம் பெற்று அத‌ன் ப‌ய‌னாக‌ தூய‌ ஆவியின் முத்திரையை நாம் பெற்றுக் கொள்ள‌ அழைப்பு விடுக்கிறார். ப‌ரிவு, ம‌ன்னிப்பு , அன்பு இவை மூன்றும் ம‌னித‌ன் ம‌னித‌னாக‌, ம‌னித‌ உண‌ர்வு உள்ள‌வ‌னாக‌ வாழ‌ மிக‌வும் தேவை. நாட்டின் சுத‌ந்திர‌ தின‌ ஆண்டு விழாவை சிற‌ப்பிக்க‌ ந‌ம்மை நாம் த‌யாரித்துக் கொண்டிருக்கும் இந்நாட்க‌ளில் ந‌ம்மிட‌த்தில் இவை மூன்றும் நிலைக்க‌ முய‌ற்சிப்போம். பெய‌ர‌ள‌வில் சுத‌ந்திர‌ம் பெற்றோம் என்றில்லாம‌ல் பெய‌ர் சொல்லும் அள‌விற்கு சுத‌ந்திர‌ம் பெற‌ விரும்புவோம் உள்ள‌த்து சுத‌ந்திர‌மே உல‌க‌ சுத‌ந்திர‌த்திற்கு முத‌ல் புள்ளி . இந்த‌ முத‌ல் புள்ளிக்கு முன்னுரை இந்த‌ ப‌ரிவு ம‌ன்னிப்பு அன்பு மூன்றும். என‌வே ந‌ம‌து உள்ள‌த்து வ‌ள‌ர்ச்சி என்ன‌? வீழ்ச்சி என்ன‌? துவ‌க்க‌ம் என்ன‌? தேக்க‌ம் என்ன‌ என்று க‌ண்ட‌றிந்து அப்ப‌குதிக‌ளில் வ‌ள‌ர‌ முய‌ற்சிப்போம். இல்லை முத‌லில் வ‌ள‌ர‌ ஆர்வ‌ப்ப‌டுவோம். 


உண‌வினை , உண‌ர்வினை உண்டு நிலை வாழ்வு பெற‌ விரும்புப‌வ‌ர்க‌ளே எல்லோரும் என்னிட‌ம் வாருங்க‌ள். உங்க‌ளுக்கான‌ அழியா உண‌வினையும், ஆழ‌மான‌ உண‌ர்வினையும் நான் உங்க‌ளுக்கு த‌ருகிறேன் என்கிறார் இயேசு. உண‌வும் உண‌ர்வும் ம‌னித‌னுக்கு மிக‌வும் முக்கிய‌ம். இர‌ண்டில் ஒன்றில் சிறித‌ள‌வு மாற்ற‌ம் ஏற்ப‌ட்டாலும் பிர‌ச்ச‌னைதான். இனிப்பு இருக்க‌ வேண்டிய‌ இட‌த்தில் கார‌மோ, ம‌கிழ்வு இருக்க‌ வேண்டிய‌ இட‌த்தில் வ‌ருத்த‌மோ இருந்தால் அங்கு குழ‌ப்ப‌மே நிலைக்கும். வாழ்வு த‌ரும் உண‌வாகிய‌ இயேசுவை நாம் உண்டோமானால் , அவ‌ரை நிலையாக‌ பெற்றுக்கொண்டோமேயானால், அவ‌ருட‌ன் நிலைத்து வாழ்வோம். அத‌ற்கு ந‌ம‌க்கு தேவை, ஆர்வ‌ம். அவ‌ரைப் பெற‌ வேண்டும், நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள‌ வேண்டும் என்னும் ஆர்வ‌ம். நாம் வாழ‌ அவ‌ர் த‌ன‌து ச‌தையை உண‌வாக‌க் கொடுத்தார். என‌வே வாழ‌ ஆசைப்ப‌டுவோம். ஆர்வ‌ப்ப‌டுவோம். ப‌சியுள்ள‌ வ‌யிறே உண‌வை ர‌சித்து ஏற்றுக்கொள்ளும். ஆண்ட‌வ‌ரின் ச‌தையை உண்ண‌ ஆர்வ‌முடைய‌வ‌ர்க‌ளாய் வாழ்வோம். எப்போதும் ந‌ல்ல‌ ப‌சியார்வ‌ம் கொண்ட‌வ‌ர்க‌ளாய் வாழ்வோம். இறைய‌ருள் என்றும் ந‌ம்மோடு, ந‌ம் குடும்ப‌த்தாரோடும் த‌ங்குவ‌தாக‌ ஆமென்.    Have good appetite.....