இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் 17 வாரம்

ஒன்றும் வீணாகாதபடி.....

2 அரசர்கள் : 4; 42-44
எபேசியருக்கு எழுதிய் திருமுகம்: 4; 1-6
யோவான் 6; 1-15

" மிகினும் குறையினும் நோய் செய்யும்..." என்பது வள்ளுவரின் வரிகள். மனிதனின் பயன்பாட்டுக்கு உரிய பொருள் எதுவாயினும் அது மிதமான நிலையில் இருக்க வேண்டும். அது அளவுக்கு அதிகமானாலும் குறைவானாலும் நோயை உண்டாக்கும். பொருளாக இருந்தால் மன நோய். உணவாக இருந்தால் உடல் நோய். இதை இருபது நூற்றாண்டுகளுக்கு முன்பே இயேசு தனது நற்செய்தியில் தனது அப்பம் பலுகுதல் நிகழ்வின் மூலம் தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறிவிட்டார்.
இயேசு செய்த புதுமைகளும் அரும் அடையாளங்களும் ஏராளம். இருப்பினும் அப்பம் பலுகுதல் புதுமை சிறப்பான ஒன்று . ஏனெனில் மற்ற புதுமைகள், அரும் அடையாளங்களின் போது ஒரு சில மக்களே அவருடன் அருகில் இருந்திருப்பர், அவர் செய்த புதுமைகளைக் கண்டிருப்பர். ஆனால் இங்கு ஏறக்குறைய சுற்றிலுமுள்ள ஊர் மக்கள் அனைவருமே ஒன்றாகக் கூடி இருக்கின்றனர். ஆண்களின் எண்ணிக்கையே 5000 என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியானால் கண்டிப்பாக பெண்களின் எண்ணிக்கையும் சிறுவர்களின் எண்ணிக்கையும் இரண்டு மடங்காக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் பெரும்பாலும் வீடுகளில் இருக்கும் பெண்களே, குடும்பத்திலுள்ள அனைவரின் நலனுக்காகவும் குடும்பத்திற்காகவும் சிறப்பாக செபிப்பர். படிப்பு, வேலை, திருமணம், உடல் நலன் என அனைத்திற்காகவும் பல கோயில்கள் ஏறி வேண்டுதல் செய்வது பெண்களே. (அதற்கு சான்று நமது கோவில்களில் திருப்பலி செப வழிபாடுகளுக்கு இப்போது மட்டுமல்ல எப்போதுமே ஆண்களை விட பெண்களே அதிகம்) பெண்கள் சென்றால் உடன் தன் பிள்ளைகளையும் கண்டிப்பாக அழைத்துச் சென்றிருப்பர். இதற்கு உதாரணம் நமது இன்றைய நற்செய்தியின் முக்கிய கதை மாந்தரான சிறுவன். சிறுவன் தாயோடு வந்தானோ, இல்லை தானாகவே வந்தானோ தெரியவில்லை . ஆனால் அவன் கையில் பசிக்கு உணவு வைத்திருந்தான் என்பதிலிருந்து தாயின் அனுமதியோடோ அல்லது அருகாமையோடோ தான் வந்திருப்பான் என்பது புலனாகிறது. இப்படி ஒட்டு மொத்த ஊர் மக்களையும் ஒன்றாகக் கூட்டி இயேசு அவர்கள் முன் இத்தகைய புதுமையைச்செய்கிறார். இதனால் அவரது புகழும் பெயரும் பட்டி தொட்டி எங்கும் வேகமாகப் பரவுகிறது.
இன்றைய முதல் வாசகமும் எலியா இறைவாக்கினரால் இறைவன் நூறு பேருக்கு உணவு பரிமாறிய நிகழ்வினை எடுத்துரைக்கிறது. இரண்டு நிகழ்வுகளுக்கு இடையில் பல ஒற்றுமை வேற்றுமைகள் இருக்கின்றன.
* ஊர் ,பெயர் கொண்ட ஒரு மனிதர் உதவுகிறார். / ஊர், பெயர் இல்லாத ஒரு சிறுவன் உதவுகிறான்.
* எலியாவிற்கு காணிக்கையாகக் கொடுக்கப்பட்ட உணவு. / சிறுவன் தனது பசிக்காக வைத்திருந்த உணவு.
* எலியாவின் ஒரு மாத உணவு. 20 வாற்கோதுமை அப்பம் / சிறுவனின் ஒரு நேரத்து உணவு 5 அப்பம் 2 மீன்.
* 20 அப்பம் 100 பேருக்கு பகிரப்படுகிறது. / 5 அப்பம் 5000 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
* எப்படி பரிமறுவேன் என பணியாளர் கேட்கிறார். / இது எப்படி போதும் என அந்திரேயா கேட்கிறார்.
இப்படி இரண்டு நிகழ்வுகளிலுமே இறைவனின் திருவுளம் வெவ்வேறு நபர்கள் வழியாக வெவ்வேறு உணர்வுகள் வழியாக நிறைவாக செயல்பட்டு அவரை நாடி வந்தவர்களின் பசி தீர்க்கப்படுகிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் பல கதை மாந்தர்கள் இடம்பெறுகின்றனர். அவர்களில் ஒரு சிலரின் செயல்களையும் வார்த்தைகளையும் நமது சிந்தனைக்கு எடுத்துக் கொள்வோம்.
1 . இயேசு மலை மேல் ஏறி தம் சீடர்களோடு அமர்கிறார்.
2 . மக்கள் கூட்டத்தை நிமிர்ந்து பார்த்தார்.
3 . பிலிப்பு - ஒரு துண்டு கூட கிடைக்காதே
4 . அந்திரேயா - இது எப்படி போதும்

இயேசு தான் மட்டும் மலை மேல் ஏறவில்லை தனது சீடர்களையும் உடன் அழைத்துச் செல்கிறார். தான் மட்டும் தான் தலைவர் . தனக்கு கீழ் தான் பிறர் அனைவரும் என்று எண்ணாமல் தனது நிலையை அவர்களும் அடையச்செய்கிறார். தனது பார்வை எப்படி பட்டது, எந்நிலையில் இருந்து அவர் மக்களைப் பார்க்கிறார் என்று சீடர்களையும் உடன் அழைத்துச்சென்று காட்டுகிறார். இதனால் சீடர்களுடனான சமத்துவமும் சீடத்துவமும் வீணாகாதபடிக்கு இந்த நிலையினை மனதினில் சேமித்து வைக்கச் சொல்கிறார். நமது குருவைப்போல வாழ வேண்டும் என்று எண்ணும் சீடர்களாகிய நாம், முதலில் குருவைப் போல சூழ்நிலைகளைக் காண முற்பட வேண்டும்.

மக்கள் கூட்டத்தை நிமிர்ந்து பார்க்கிறார் இயேசு. தன்னைச்சுற்றி இருப்பவர்கள் தன்னை புகழ்ந்து பேசுபவர்கள் என தன் கண்ணின் பார்வைக்கு எட்டியவர்களை மட்டும் பார்க்கவில்லை இயேசு . மாறாக தன் பார்வையை உயர்த்தி தூரத்தில் இருப்பவர்களையும் பார்க்கிறார். ஏற்கனவே ஒரு மலைமேல் தான் இருக்கிறார். அவரை அனைவரும் பார்க்க முடியும். இருப்பினும் தனது பார்வையை உயர்த்துகிறார். இதன் மூலம் தொலைவிலுள்ள மக்களையும் கண்ணோக்குகிறார். இயேசு தன்னைப் பார்க்கவில்லையோ என்று மக்கள் எண்ணி வருந்தாத அளவுக்கு செயல்படுகிறார். இதனால் அவர்களது நம்பிக்கை வீணாகாதவாறு பார்த்துக் கொள்கிறார். நாமும் பலநேரங்களில் நம்மைச்சுற்றி, நமக்கு புகழ் பாடும் கூட்டங்களையே பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருக்கிறோம். தொலைதூரத்தில் இருக்கும் நமது உறவுகளையும் நட்புகளையும் நாம் பார்ப்பதே இல்லை. நமது பார்வையை விசாலமாக்குவோம் நம் அன்பர் இயேசு போல.

பிலிப்பு கணக்கு பார்த்து வாழ்பவர் போல செயல்படுகிறார். 200 தெனாரியத்துக்கு அப்பங்கள் வாங்கினால் கூட ஆளுக்கு ஒரு சிறு துண்டு கூட கிடைக்காதே என்று கூறுகிறார். இதில் அவரின் வருத்தத்தை விட இவ்வளவு பணம் செலவழித்தாலும் யாரையும் நிறைவுபடுத்த முடியாதே என்பது தான் அவரது கவலையாக இருந்திருக்கும். இயேசு உடன் இருக்கிறார். அவரால் ஆகாதது ஒன்றுமில்லை என்ற நம்பிக்கையில் குறைபாடுள்ளவராக இருக்கிறார். ஆளுக்கு ஒரு துண்டாவது கிடைக்க வேண்டுமே என்ற நல்ல எண்ணம் உடையவராய் இருந்தாலும், தயக்கம் காட்டுகிறார். இயேசு அவரின் நல்ல எண்ணம் வீணாகாதபடிக்கு செயல்படுகிறார். அனைவரும் வயிறார உண்ட பின்பு மிஞ்சிய துண்டுகளை பன்னிரண்டு கூடைகளில் நிரப்பச்சொல்கிறார். எல்லோரும் நலமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் நம்மிடத்தில் இருந்தாலும் இது எப்படி முடியும்? நல்லவர்கள் சோதனைகளை அனுபவித்துத் தானே ஆக வேண்டும் என்றெல்லாம் கூறி நமது நல்லெண்ண அலைகளை நாமே வீணடித்துக் கொண்டு இருக்கிறோம். ஆண்டவர் இயேசு அருகிலிருக்க அனைத்தும் நலமாய் நடக்கும் என்று எண்ணி வாழ முயல்வோம்.

அந்திரேயா உணவு வைத்திருப்பவர் யார் , எவ்வளவு வைத்திருக்கிறார்கள் என்று தெள்ளத்தெளிவாக பார்க்கிறார். சூழ்நிலைக்கு ஏற்ப தெளிவாக செயல்படுகிறார். இருப்பினும் இது எப்படி போதும் என்றெண்ணி பின்வாங்குகிறார். பிரச்சனைக்கான தீர்வைக் காண முயன்றவர். இடையிலேயே மலைத்துப் போய் நிற்கிறார். எந்த நோக்கத்திற்காக அவர் அனைவரிடமும் உணவு இருக்கிறதா என்று சோதித்தாரோ அந்த வேலையை பாதியிலேயே விட்டு விடுகிறார். காரணம் இலக்கில் தெளிவில்லாததால் தான். பிரச்சனையைப் பெரிதாகவும் அதற்கான தீர்வை சிறு துளியாகவும் எண்ணியதால் வந்த விளைவு, தயக்கம் தடுமாற்றம். இயேசு, அந்திரேயா கண்டறிந்த அந்த சிறு துளியை வெள்ளமாக மாற்றுகிறார். அவர் கண்டறிந்த தீர்வு வீணாகாதபடிக்கு பார்த்துக் கொள்கிறார். நாமும் பல நேரங்களில் பிரச்சனைக்கு தீர்வினை சுலபமாகக் கண்டறிந்தும் அதை தீர்க்க முயலாமல் தயக்கத்திலும் தடுமாற்றத்திலும் அப்படியே விட்டு விடுகிறோம். நாம் எடுக்கும் சிறு முயற்சியில் இயேசு முழு ஈடுபாட்டையும் நமக்கு தருவார் என்று நம்புவோம்.

5000 பேருக்கு உணவளித்த இயேசு ஒன்றும் வீணாகாதபடிக்கு அதை சேர்த்து வைக்கச் சொன்னார். நமது வாழ்விலும் அன்றாடம் நமக்கு உணவளிக்கிறார். வெறும் உடல் உணவு மட்டுமல்ல உள்ள உணவு . அன்றாட நிகழ்வுகளில் நமக்கு மிச்சமாகும் உணர்வுகளை அனுபவங்களை வீணாகாதபடிக்கு நமது மனங்களில் எதிர்காலத்துக்கு சேமித்து வைக்கச் சொல்கிறார். நமது நம்பிக்கை, அன்பு, எதிர்பார்ப்பு, தீர்வு இவை அனைத்தும் வீணாகாதபடிக்கு அதை சேமித்து வைத்து வாழச்சொல்கிறார். உணவு மட்டுமல்ல நமது உணர்வுகளும் உன்னத அனுபவங்களும் சேமித்து வைக்கப்பட வேண்டியவையே. இதை உணர்ந்து செயல்பட்டால் வாழ்க்கை சுகமே. இறையருள் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவர் மீதும் நிறைவாக இருப்பதாக ஆமென்.