இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் 16 வாரம்

பாலைவன ஓய்வு எடுக்க தயாரா?

எரேமியா : 23: 1-6,
எபேசியருக்கு எழுதிய் திருமுகம்: 2: 13-18,
மாற்கு : 6: 30-34)


தேவையான அளவிற்கு பணம் சம்பாதித்து விட்டு, அதன் பிறகு நல்ல நிம்மதியான வாழ்க்கை வாழலாம் என்று நினைத்து பணம் சம்பாதிக்கும் பலர், அந்த எல்லைக் கோடு எங்கு இருக்கிறது என்று தெரியாமலே, கடைசி வரை சம்பாதித்துக் கொண்டு மட்டுமே இருக்கிறார்கள் வாழாமலே.....
இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு கொடுக்கும் செய்தி இதுதான் . ஓய்வு மனித நலத்துக்கு எவ்வளவு முக்கியம் என்பதை இயேசு தனது சீடர்களிடம் காண்பிக்கும் அன்பிலிருந்து தெரிந்து கொள்ளலாம். நமது வீடுகளில் சிறு குழந்தைகள் பள்ளியில் இருந்து சுற்றுலா சென்று வீடு திரும்பினால் அன்றிலிருந்து குறைந்தது ஒரு வாரமாவது அந்த சுற்றுலா பற்றிய பேச்சைத் தான் பேசிக்கொண்டு இருப்பார்கள். அதே போல் தான் இயேசுவின் சீடர்களும் திரும்பி ஒன்றாகக கூடி வந்து தங்களது அனுபவங்களை அவருடன் பகிர்ந்து கொள்கிறார்கள். இயேசுவும் பிள்ளைகளின் குரலுக்கு செவிமடுக்கும் பெற்றோர்களைப் போல ஆர்வமுடன் அவர்கள் கூறுவதைக் கேட்கிறார். தன் பிள்ளைகள் சோர்வடைந்திருக்கிறார்கள் என்பதை தாய் நன்கு அறிவாள். இயேசுவும் தாயாக தன் பிள்ளைகளை ஓய்வெடுக்க சொல்கிறார். சீடர்களும் படகேறி ஓய்வெடுக்க செல்கின்றார்கள். இந்த நற்செய்தி வாசகத்தின் மூலம் இயேசு நமக்கு விடுக்கும் செய்தி என்ன?

* உழைத்துக் கொண்டே இருக்காதே சற்று ஓய்வெடு.
* உன்னை தனிமையில் கண்டறி.
* உன் செயல் மூலம் உன்னை அடையாளப்படுத்து.
* உற்சாகத்துடன் முன்னேறு.
* உனக்குரிய ஆயனை தேடிக்கண்டு பிடி.

1. உழைத்துக் கொண்டே இருக்காதே சற்று ஓய்வெடு.
இன்று பெரும்பாலான மனிதர்கள் எதற்காக உழைக்கிறோம் என்று தெரியாமலே வாழ்நாள் முழுவதும் உழைக்கிறார்கள். தன் குடும்பம் தன் பிள்ளைகள் என்று எண்ணுபவர்கள் கடைசிவரை அவர்களுக்காகவே வாழ்ந்து தாங்கள் வாழாமலே போய்விடுகிறார்கள். வெளிநாட்டவர்கள் இதற்கு நேர்மாறாக, அந்த வருடத்தில் சம்பாதித்ததில் ஒரு பகுதியை அந்த வருடத்திலேயே ஓய்விற்காக செலவழித்து தங்களை புதுப்பித்து கொண்டு புதுவருடத்திற்கு உழைக்கத் தயாராகின்றனர். ஓய்வு மனிதனுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. கடவுளே படைப்பின் போது ஏழாம் நாள் ஓய்வெடுத்ததாக விவிலியம் கூறுகிறது. நம்மில் சிலர் ஓய்வே எடுப்பதில்லை . சிலர் ஓய்வெடுக்காமல் இருப்பதே இல்லை. இரண்டிற்கும் அதிக வித்தியாசம் உள்ளது. நாமும் சில நேர்ங்களில் ஓய்வு எடுக்கிறோம் ஆனால் தொலை தொடர்பு சாதனங்களோடு. அது உண்மையான முழுமையான ஓய்வாகாது. இயேசு, நமது புறச்சூழலிலிருந்து, தொலை தொடர்பு சாதனங்களில் இருந்து, நமது சிந்தனை ஓட்டங்களிலிருந்து நம்மை சற்று ஓய்வெடுக்க சொல்கிறார். நாமோ நமது உடழுழைப்பால் செய்யும் வேலைகளிலிருந்து நமக்கு ஓய்வு கொடுப்பதாய் நினைத்து இவை அனைத்திற்கும் முதலிடம் கொடுக்கிறோம். உனது நினைவுகளிலிருந்து உன்னை பிரித்தெடுத்து ஓய்வு கொள் இதுவே உண்மையான ஓய்வு. இத்தகைய ஒய்வைத் தான் இயேசு நம்மை எடுக்கச்சொல்கிறார். எதற்காக? இதன் மூலம் நம்மை புதுப்பித்து மீண்டும் நமது அன்றாட செயலை நல்ல முறையில் தொடங்குவதற்காக.

2. உன்னை தனிமையில் கண்டறி:
ஏராளமான அருள் அடையாளங்களையும் புதுமைகளையும் செய்து விட்டு திரும்பி வந்த சீடர்களுக்கு இயேசு பரிசுப் பொருள் எதுவும் தரவில்லை. இன்று நமது குழந்தைகள் ஏதாவது சாதனை புரிந்தால் பெற்றோர்கள் முதலில் பரிசுப்பொருட்கள் மூலம் அவர்கள் மனதை மகிழ்விக்கிறார்கள். ஏதாவது மின்னனு தொழில்நுட்ப பொருட்கள் தான் பெரும்பாலும் அவர்களது விருப்பமாகவும், தெரிவாகவும் இருக்கிறது. இத்தகைய பெற்றோர்கள் மத்தியில் இயேசு மிகச்சிறப்பான பெற்றோராக செயல்படுகிறார். சீடர்கள் செய்த அருஞ்செயல்களால் அவர்களது எண்ணம் பெருமையினாலும் செருக்கினாலும் நிறைந்து விடாது இருக்க முயல்கிறார். சின்ன செயல் செய்து சிலரிடம் பாராட்டு வாங்கினாலே அதை மிகப்பெரிய செயல் தாங்கள் செய்து விட்டதாய் எண்ணி பெருமையடைவர் பலர். அத்தகைய நிலை தனது சீடர்களுக்கு வராத வண்ணம் இயேசு செயல்படுகிறார். நீங்களாக இத்தகைய செயலைச் செய்ய வில்லை மாறாக கடவுளின் அருள் உங்களில் நிறைந்து உங்களை இவ்வாறு செய்யத் தூண்டி இருக்கிறது என்று அவர்கள் உணர செய்கிறார். அதற்காக தான் பாலைவனத்திற்கு அனுப்புகிறார். கூட்டம் அதிகமாக உள்ள இடத்தில் இருக்கும் போது மேலும் மேலும் அவர்களது அருஞ்செயல்களைப் பற்றியே பேசிக் கொண்டிருக்க தோன்றும். இதனால் அவர்கள் கடவுளின் அருள் தங்கள் மீது செயலாற்றியதை விடுத்து தற்புகழ் பாட தோன்றிவிடும் என்று எண்ணியே இயேசு அவர்களை தனிமையான ஒரு இடத்திற்கு அனுப்புகிறார். தனிமையில் நாமும் நமது செயல்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். இன்று நாம் தனிமையில் இருப்பது மிக அபூர்வமான ஒன்றாக மாறிவிட்டது. எல்லா நேரமும் அலைபேசி, எல்லா இடத்திலும் மின்னனு கருவிகள், என்று நமது வாழ்க்கையை நாம் குறுக்கிக்கொண்டோம். நாகரீக மாற்றத்தின் காரணமாக குரங்கிலிருந்து மனிதனாக மாறி நிமிர்ந்து நடந்த நாம் அதீத நாகரீக மாற்றத்தின் காரணமாக இப்போது மீண்டும் குனிந்து நடக்க ஆரம்பித்து இருக்கிறோம் . இது மீண்டும் நம்மை விலங்கின நிலைமைக்கு மாற்றாமல் இருந்தால் சரி. தனிமையே நாம் நம்மை யார் என்று கண்டு பிடிக்க சரியான இடம். தனிமையில் நீ எப்படி இருக்கிறாயோ அது தான் உண்மையான நீ ... நாம் செய்யும் பல நல்ல செயல்கள் அனைத்தும் நாமாக செய்ய வில்லை கடவுளின் அருளாலேயே செய்கிறோம் என்பதை தனிமையில் உணர்வோம்.

3. உன் செயல் மூலம் உன்னை யார் என்று அடையாளப்படுத்து:
சீடர்கள் செய்த அருள் அடையாளங்களை வைத்து மக்கள் அவர்கள் இன்னாரென்று அடையாளம் கண்டு கொள்கின்றனர். நாம் செய்யும் பல செயல்களும் நாம் யார் என்று பிறருக்கு நம்மை அடையாளப்படுத்தும். எனவே செய்யும் செயல்களை மிகவும் கவனமாக செய்ய வேண்டும். நமது ஒரு சில செய்கைகளும் கூட பலருக்கு பல கருத்துக்களை தெரிவிக்கும் . எனவே எல்லா நேரத்திலும் பிறருக்கு நல்ல முன் மாதிரிகையாக திகழும் மனிதர்களாக வாழ முற்படுவோம். நமது நல்ல அடையாளத்தை பிறருக்கு விட்டுச்செல்வோம்.

4. உற்சாகத்துடன் முன்னேறு:
சீடர்களோடு இயேசு படகேறி மறுகரைக்கு செல்லும் முன் மக்கள் கால்நடையாக சென்று அவர்களுக்கு முன் நிற்கின்றார்கள் . இது அவர்களது ஆர்வத்தையும் நம்பிக்கையையும் காட்டுகிறது . அவர்களது இத்தகைய செயலைக் கண்ட இயேசு அவர்கள் மீது பரிவு கொண்டு பலவற்றை கற்பிக்கின்றார். பாடம் நடத்தும் ஆசிரியர்கள் மாணவர்களின் கவனிக்கும் திறம் அறிந்து அவர்களுக்கு தெரிந்த அனைத்தையும் கற்பிப்பது போல இயேசு அவர்களுக்கு கற்பிக்கின்றார். எந்த அளவிற்கு நாம் நமது தேவையையும் நம்பிக்கையையும் கடவுள் முன் வெளிப்படுத்துகிறோமோ அதை விட அதிகமான அளவு திரும்ப பெற்றுக் கொள்வோம் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சான்று . எனவே எப்போதும் உற்சாகத்துடன் முன்னேறுவோம். தாகம் எடுக்கும் போது தான் அதிகமாக தண்ணீர் குடிக்க முடியும். ஆண்டவரைப் பற்றி அறிந்து கொள்ள எப்போதும் தாகமாய் இருப்போம்.

5. உனக்குரிய ஆயனைத் தேடிக் கண்டு பிடி:
மக்கள், இயேசு தான் தங்களது ஆயன் என்று கண்டு கொண்டனர். அவரைத் தேடிக் கண்டடைந்தனர். நாம் நமது ஆயன்களைக் கண்டடைந்து விட்டோமா? இப்போதுள்ள நமது சூழலில் ஒவ்வொரு போராட்டத்திற்கும் ஒவ்வொரு ஆயன்களை நாம் பின்தொடர்கின்றோம். எதற்கு போராட்டம்? யாருக்கு எதிராக போராட்டம் என்று உணராது யார் போராடினாலும் பின்னால் சென்றுவிடும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். நமது உண்மையான ஆயன் யார்? நாம் யாருடைய மந்தையைச் சேர்ந்த ஆடுகள் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. அதனால் இது ஆயனின் தவறா? ஆடுகளின் தவறா? என்று விவாதம் செய்தே காலத்தைக் கழித்துக் கொண்டு இருக்கிறோம். மந்தையை விட்டு ஆயன் ஒரு போது மறைவதில்லை . ஆடுகளாகிய நாம் தாம் நமது தொழில்நுட்ப சாதனங்களின் சத்தத்தினால் காதுகளையும், அவை உமிழும் ஒளி வெள்ளத்தில் கண்களையும் மறைத்துக் கொண்டு இருக்கிறோம். இதனால் ஆயனின் குரலையும் கேட்காது அவர் உருவத்தையும் காணாது சிதறடிக்கப்பட்ட மந்தைகளாக இருக்கிறோம். நமக்குரிய ஆயனைத் தேடிக் கண்டடைந்து வாழ முற்படுவோம்.
நல்ல ஆயனாக இயேசு நம்மோடு இருக்கிறார். நாம் அவரைக் கண்டறிவோம். அவரைப் பின் தொடர்வோம். வாழ்க்கை ஒரு முறை தான், வாழும் போதே அதை ரசித்து வாழ்ந்து விட வேண்டும் . இல்லையெனில் அது திரும்ப கிடைக்காது. உழைப்போம் அதற்கேற்ற ஓய்வினையும் எடுப்போம். பாலைவனம் வெறுமையின் அடையாளம் . அந்த வெறுமையின் தனிமையில் நாம் யார் என்று கண்டறிவோம். உற்சாகத்துடன் முன்னேறுவோம். நமக்குரிய ஆயன் நம்மைப் பின் தொடர்கிறார் என்ற நம்பிக்கை கொள்வோம். அவரைக் கண்டறிந்து அவர் பின் செல்லும் ஆடுகளாய் மாறுவோம். இயேசுவின் பாலைவன அனுபவம் அவரது பணிவாழ்விற்கு மிக அதிக பலனைத் தந்தது. இயேசு மட்டுமல்லாது பழைய ஏற்பாட்டு இறைவாக்கினர்கள் முதல் திருத்தூதர்கள் வரை அனைவரும் தங்கள் நிலையையும் இறையாசீரால் தங்களுக்கு கிடைத்த பலத்தையும் பாலைவன அனுபவம் மூலமாகவே கண்டு கொண்டனர். நாமும் நமது நிலையையும் பலத்தையும் உணரும் தருணம் நமது பாலைவனத் தனிமை அனுபவமே என்பதை உணர்வோம். பாலைவன ஓய்வில் பரமனையும் அவரது அருளையும் கண்டடைய முயல்வோம். இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தார் மீதும் இருப்பதாக ஆமென்.