இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் பதினைந்தாம் ஞாயிறு

அழைக்கப்பட்டோம் அனுப்பப்பட ….

ஆமோஸ் 7 , 12- 15
எபேசியர் 1 , 3- 14
மாற்கு 6, 7- 13


இறையேசுவில் மிகவும் பிரியமான அன்பு உள்ளங்களே இன்றைய நற்செய்தியில் இயேசு பன்னிரு சீடர்களை இருவர் இருவராக பணிக்கு அனுப்பும் பகுதியை வாசிக்கக் கேட்டோம். பயணத்திற்கு எது தேவை எது தேவையில்லை என சீடர்களுக்கு அறிவுரை கூறுகிறார் இயேசு. இருபது நூற்றாண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்ட அறிவுரை இது . இந்த இருபதாம் நூற்றாண்டில் இறைமகன் இயேசு வாழ்ந்திருந்தால் தமது சீடர்களை பணிக்கு அனுப்பும் முன் என்ன சொல்லி இருப்பார். தொடுதிரை அலைபேசியை கொண்டு செல்லாதே. விரைவுச்சிற்றுண்டிகளை வாங்கி உண்ணாதே, பொருட்களை வாங்கி சேர்க்காதே என்று தான் கூறியிருப்பார். ஏனெனில் நமது நிலைமை அப்படி தான் இருக்கிறது. நமது தேவைக்கு பொருட்கள் என்பது மறைந்து பொருட்களின் பயன்பாட்டுக்கு நாம் என்ற நிலைமை மாறிவிட்டது.
இயேசு தமது சீடர்களை பணிக்கு அனுப்புகிறார். தன்னை எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை விட இறையரசுப்பணி எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு அதிகம் . அதனால் தான் தனது சீடர்களை மக்களை நோக்கி அனுப்புகிறார். இருவர் இருவராக அனுப்புகிறார். ஒருவருக்கு ஒருவர் துணையாக , பக்க பலமாக இருக்க அனுப்புகிறார். அவர்கள் தனது போதனைகளுக்கு செவிமடுத்தால் மட்டும் போதாது அவர்களும் போதனை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் அனுப்புகிறார். புதுமை அற்புதம் போன்றவற்றை நிகழ்த்தும் போது கூட்டத்தோடு கூட்டமாய் வியப்படைந்து நின்றால் மட்டும் போதாது. அவர்களும் அப்புதுமைகளை செய்து மக்களை வியப்படையச் செய்ய வேண்டும் என்ற ஆசையில் அனுப்புகிறார்.
ஒரு சிறந்த ஆசானுக்கு உரிய அழகு இதுதான். தன்னைப் போல , தன்னை விடவும் அதிகமாய் தனது மாணவன் வளர வேண்டும் அவன் ஊரார் போற்ற வாழ வேண்டும் அதனைக் கேட்டு அந்த ஆசானின் மனம் மகிழ வேண்டும் . இயேசுவும் ஒரு தலை சிறந்த ஆசிரியராக தன் மாணவர்களை வழிநடத்துகிறார். அவர்களுக்கு தன்னுடைய அத்தனை செயல்பாடுகளையும் வாய்மொழியாகவும் வாழ்க்கை மொழியாகவும் வெளிப்படுத்துகிறார். பயிற்சியை முடித்த மாணவர்கள் போல சீடர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த ஊர்ப்புறத்தில் உள்ள மக்களை நாடிச்செல்கின்றனர். தங்களைத் தேடி மக்கள் வருவார்கள் என்று எண்ணி அவர்கள் இருக்கவில்லை மாறாக மக்களை நாடிச் செல்கின்றனர். பல நேரங்களில் நாம், நான் நிறைய படித்திருக்கிறேன், எல்லா வேலைகளும் எனக்கு தெரியும், என்னை விட அறிவாளி இங்கு யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் எண்ணி பிறரை நம்மை நோக்கி இழுக்க பார்க்கிறோம். நாம் பிறரை நோக்கிச் செல்வதில்லை . புதிய பாதைகளைத் தேடிச் செல்லும் நீரோட்டம் செழிப்பாக மாறுகிறது. தன்னை நோக்கி அனைத்து நீரோட்டங்களையும் இழுத்துக் கொள்ளும் பள்ளம், கழிவுநீர்த் தேக்கமாகவும் பாதாளக் கிணறாகவும் மாறுகிறது.
உணவு பை செப்புக்காசு போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டாம் என கட்டளையிடுகிறார். உணவு, உடல் நலனுக்கானது. உடலை சோர்வு அசதி மற்றும் பலவீனம் போன்றவற்றிலிருந்து காக்கும் வலிமையுடையது. அத்தகைய உணவை இயேசு எடுத்துச் செல்ல வேண்டாம் என்கிறார். அன்று பாலை வனத்தில் இஸ்ரயேல் மக்களுக்கு மன்னா அருளிய போது அன்றன்றைக்குரிய உணவை எடுத்து உண்டவர்கள் நிறைவாகவும் மகிழ்வாகவும் உணர்ந்தனர். அடுத்த நாளுக்கும் சேர்த்து எடுத்து வைத்தவர்கள் புழு பூச்சி அரித்து உணவு பாழானது குறித்து வருத்தமடைந்து சோர்ந்திருப்பார்கள். அத்தகைய வீண் கவலை இறையரசுப் பணியாற்ற செல்லும் தனது சீடர்களுக்கு ஒருபோதும் வந்து விடக் கூடாது என்பதற்காக அப்படி சொல்கிறார். மேலும் அவர்களை நிறைவாகவும் மகிழ்வாகவும் வழிநடத்தும் இறையாற்றல் அவர்களோடு உடனிருக்கிறது என்பதையும் எடுத்துரைக்கின்றார்.
பை – பெரும்பாலும் எதிர்காலத்தேவைக்கான பொருளினை சேர்க்கும் தளமாகவே செயல்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ஒரு சிறு கைப்பையை கையோடு எடுத்துச் செல்வது வழக்கமாகிவிட்டது. அதில் என்ன இருக்கும் தண்ணீர், அலைபேசி. பணம், நம்மை அடையாளப்படுத்தும் சில பல அட்டைகள் . இவை அனைத்துமே எதிர்காலத்தேவைக்கு தான். தாகம் எடுத்தால் தண்ணீர், யாருடனாவது பேச நினைத்தால் அல்லது யாராவது என்னுடன் பேச நினைத்தால் அலைபேசி, ஏதாவது செலவு ஏற்பட்டால் பணம், நாமே தொலைந்து விட்டால் நம்மை நமது உடமைகளை அடையாளப்படுத்த அட்டைகள். இப்படி எல்லாமே எதிர் வரும் நிகழ்வுகளை முன்னிருத்தியே இருக்கின்றன. இவை அனைத்தும் நமக்கு சொல்வது, நாம் கடவுளின் உடனிருப்பை வழிகாட்டுதலை பாதுகாப்பை நம்ப மறுக்கிறோம் என்றே. தனது சீடர்கள் கடவுளின் பாதுகாப்பில் முழு நம்பிக்கை வைத்து வாழ வேண்டும் என்ற தெளிவுடன் அவர்களை பை எடுத்துக் கொண்டு போக வேண்டாம் என்கிறார்.
பணம் செப்புக்காசு – அழிவின் முதல் படி பண ஆசை . மனிதனை மிருகமாக மாற்றுவது இந்த பணம். இன்னும் வேண்டும் , இன்னமும் வேண்டும் என்று அளவுக்கதிகமான ஆசையைத் தூண்டுவது பணம். பணம் குணமுள்ள மனிதனையும் குப்பையான மனிதனாக்கும் ஆற்றல் கொண்டது. பணம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் உடையவன் அந்த எண்ணத்தினாலேயே விரைவில் அழிவான். ஆதி மனிதன் நாடோடி வாழ்க்கை வாழ்ந்தான். அவனே பயிரிட்டான் உண்டான் மகிழ்வாக இருந்தான். பண்டமாற்று முறையைக் கண்டறிந்தான் பொருளுக்கு பொருள் என்ற நிலை மாறி பொருளுக்கு பணம் என்று வந்ததும் அழியாத அந்த பணத்தை சேர்க்க நினைத்தான் மகிழ்வை தொலைத்தான். இப்படி தனது சீடர்கள் பணத்தை சேமித்து மகிழ்வை தொலைத்து விடக் கூடாது என்று எண்ணி பணப்பை எடுத்துக் கொண்டு போக வேண்டாம் என்கிறார்.
இவ்வாறாக பார்த்து பார்த்து தன் சீடர்களை பணிக்கு அனுப்புகிறார் இயேசு . சீடர்களும் தாங்கள் அழைக்கப்பட்டது அனுப்பப்பட என்பதை நன்கு அறிந்து அதற்கேற்ப பணி புரிய தொடங்குகின்றனர். எந்த நோக்கத்திற்காக அனுப்பப்பட்டார்களோ அந்த நோக்கத்தை நிறை வேற்றி இயேசுவிடம் திரும்புகின்றனர்.
நாமும் அழைக்கப்பட்டவர்களே, நாமும் தினமும் அனுப்பப்படுகிறோம் நமது அன்றாட வாழ்வில் இறையரசுப் பணியாற்ற. நாம் அதை உணர்வதில்லை . நமது அனுதின வாழ்வு ஒரு இறையரசுப்பணி . அந்நாளில் நாம் கடவுளின் பராமரிப்பின் மீது முழு நம்பிக்கை வைத்து செயல்பட்டால் நம்மாலும் நமது அன்றாட வாழ்வின் துன்பங்கள் என்னும் பேயை ஓட்ட முடியும். நமது அவநம்பிக்கை என்னும் உள்ள நலத்தை குணப்படுத்த முடியும் . நாமும் இயேசுவால் அழைக்கப்பட்ட சீடர்களே அவரால் அனுதினமும் அனுப்பப்படும் சீடர்களே என்பதை உணர்வோம் இறையருள் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தோடும் இருப்பத்தாக ஆமென்.