இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் 14 வாரம்

இறைவாக்கினர்களா??? இறைவாக்கிற்கு செவிமடுப்பவர்களா???

எசேக்கியல் ; 2 ; 2-5
2 கொரிந்தியர் 12; 7-10
மாற்கு எழுதிய நற்செய்தி; 6: 1-6



இன்றைய நற்செய்தி வாசகத்தை வாசித்ததும் அருட்தந்தை நண்பர் ஒருவரிடம் கேட்டேன், இறைவாக்கினர்களாகிய உங்களுக்கு எந்த ஊரில் மதிப்பு என்று. அதற்கு அவர், கடவுளின் அருள் உனக்கு இல்லை என்றால் சொந்த ஊரில் மட்டுமல்ல எந்த ஊரிலும் மதிப்பில்லை என்றார். ஆம் கடவுளின் அருள் இல்லையென்றால் எந்த ஊரிலும் மதிப்பில்லை .
இன்றைய நிலைமை இப்படி தான் இருக்கிறது மறைப்பணியாற்றும் அனைவரும் சந்திக்கும் இன்னல்களை இன்றைய மூன்று வாசகங்களூம் எடுத்துரைக்கின்றன. எசேக்கியல் இறைவாக்கினர் பவுலடியார் இயேசு என அனைவருமே இறைவனின் வாக்கை இவ்வுலகிற்கு எடுத்துரைக்க வந்தவர்கள். பணியினால் ஏற்பட்ட இடையூறுகளை இன்று நமக்கு பாடமாக வாசகங்கள் முலமாக எடுத்துரைக்கின்றனர்.
முதல் வாசகத்தில் இறைவன் பணித்தளத்து மக்களின் இயல்பு பற்றி இறைவாக்கினருக்கு கூறுகின்றார். அவர்கள் வன்கண்ணும், கடின இதயமும், செவிசாய்க்காத இயல்பும் கொண்டவர்கள் என்கிறார். கண் நமது உணர்வை குணத்தை பிறருக்கு முதலில் தெரிவிக்கும் ஒரு உறுப்பு. நமக்கு பிடித்த அல்லது பிடிக்காத ஒரு உணவையோ அல்லது செயலையோ ஒருவர் செய்யும் போது முதலில் நம் கண் தான் அதை வெளிப்படுத்தும். கண் புருவங்கள், விழிகள் ஆர்வத்தால் விரியவோ, வெறுப்பால் சுருங்கவோ செய்யும். அதேப்போல நமக்கு மிகவும் விருப்பமான ஒரு நபரின் வருகையும் பேச்சும் நமது உணர்வு எப்படிப்பட்டது என்பதை அவர்களுக்கு நமது கண்கள் மூலமாக காட்டிக்கொடுத்துவிடும். சிலரது பார்வையே நமக்கு அவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று வெளிப்படுத்திவிடும். அப்படியிருக்க இறைவன் இஸ்ரயேல் மக்கள் வன் கண்ணுடையவர்கள் என்று சொல்லியே அனுப்புகிறார். மறைப்பணி செய்யும் அனைவரும்( அன்பியம் செப வழிபாடு நடத்தும் அனைவரும் மறைப்பணியாளர்களே) இப்படி வன் கண்ணுடைய மக்களை ஒரு முறையாவது சந்திக்க நேரிடும். .
கடின இதயம் உடைவர்களின் செயல்பாடும் பேச்சும் மிகவும் கடினமானதாகவே இருக்கும். வார்த்தைகளில் வன்மமும் செயல்பாடுகளில் சூழ்ச்சியும் இருக்கும்.
செவிசாய்க்காத காதுகள், இத்தகைய குணமுடையோர் எந்த விதமான நல்லவற்றையும் தங்கள் காதுகளில் வாங்க மாட்டார்கள். நாம் சொல்லும் நல்லது அனைத்தும் அவர்களுக்கு கெட்டதாகத் தான் கேட்கும். இப்படிப்பட்ட இஸ்ரயேல் மக்களின் குண நலன்களுக்கு மாற்றாக இறைவன் இறைவாக்கினர்களிடம் கேட்பது, வன்கண்ணுக்கு பதிலாக கனிவான பார்வையோ, கடின இதயத்துக்கு மாற்றாக அன்புச்செயலோ, செவிசாய்க்காத காதுகளுக்கு இனிமையான சொல்லோ அல்ல . இவைகளும் மிகவும் முக்கியம் தான் அதை விட முக்கியம் நமது இருப்பு , உண்மையான இறைவாக்கினர் போல நமது இருப்பு மிகவும் முக்கியம் என சொல்கின்றார்.
இன்று கால மாற்றத்தின் காரணமாக இறைவாக்கினர்கள் அனைவரும் புதிய நூற்றாண்டின் இறைவாக்கினர்களாக தங்களை தாங்களே மாற்றிக் கொண்டுவிட்டனர். மக்களும் தங்கள் இதயங்களை அவர்களின் தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொண்டனர். விளைவு இவர்கள் சொல்வதை அவர்கள் கேட்பதில்லை அவர்கள் கேட்குமாறு இவர்கள் சொல்வதில்லை. இதில் மாறாதது இறைவனும் அவரது இறைவார்த்தைகளும் தான். நாமும் இறைவனின் வார்த்தையை இவ்வுலகிற்கு நமது வார்த்தைகள் மூலமாகவும் வாழ்க்கை மூலமாகவும் பல வேளைகளில் பல இடங்களில் எடுத்துரைக்கின்றோம். பங்கில் அருட்பணியாளராக, அன்பியத்தில் பொருப்பாளராக, பள்ளியில் ஆசிரியராக, பிள்ளைகளுக்கு பெற்றோராக, வழிகாட்டும் நண்பர்களாக, அப்பாவாக அம்மாவாக என ஏதோ ஒரு நிலையில் நாம் அனைவரும் இறைவாக்கினர்களே. நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்று தான் நம்மிடையே ஒரு இறைவாக்கினர் ஒருவர் வந்துவிட்டார் என்று அவர்கள் எண்ணுமளவுக்கு நமது வாழ்க்கை முறை இருக்க வேண்டும். இல்லையென்றால் மாற்றி அமைக்க வேண்டும்.
இயேசு தனது சொந்த ஊருக்கு செல்லும் பகுதி இன்றைய நற்செய்தியில் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவருடன் அவரது சீடர்களும் செல்கின்றார்கள். இருவர் இருவராக பணித்தளத்திற்கு அனுப்பப்படுமுன் அவர்கள் இயேசுவிடம் பாடம் கற்கின்றனர். அவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கிறார் இயேசு. மூன்று விதமான இயல்புடைய மக்கள் அங்கும் இருக்கின்றனர்.
முதல் வகையினர்; அறிவுத்திறன்)
இவர்கள் இயேசுவின் ஞானத்தைப் பற்றியும் அவரது வல்லசெயல்கள் பற்றியும் பேசுபவர்கள். பெரும்பாலும் இவர்கள் அவரைப் பின்பற்றி வந்தவர்களாகத்தான் இருக்கும். அவர் ஏற்கனவே செய்த புதுமைகளையும் அருள் அடையாளங்களையும் கண்டவர்கள் அல்லது கேட்டவர்கள். நம்மிலும் இப்படி ஒரு சிலர் இருப்பர். சிலர் உண்மையைச் சொல்வர் . சிலர் புகழ்துதி பாடுவர். பெரும்பாலும் நமது வியப்பு, அவர்களது அறிவுத்திறன் கைவேலைப்பாடுகள் இதிலேயே முடிந்துவிடும் . இதனை தாண்டி நமது எண்ணம் செல்லாது அங்கேயே நின்று விடும்.
இரண்டாம் வகையினர்.( பிறப்பு பணி பின்னனி)
இவர்கள் இயேசுவினது வேலை மற்றும் பிறப்பு உறவு முறைகுறித்து பேசுன்றனர். ஏற்றுக்கொள்ள இயலாமை இவர்களின் முக்கிய பிரச்சனை. நம்மைப் போல உள்ள ஒருவன் எப்படி இப்படி ஒரு உயர்ந்த நிலைக்கு வர முடியும். ஒருக்காலும் முடியாது. இயேசு சாதாரண மனிதன் தான் இறைவாக்கினரும் அல்ல இறைமகனும் அல்ல என்று எதிர்க்கின்றனர். நமக்கு ஒருவர் நல்லது சொல்கின்றார் அல்லது செய்கின்றார் என்றால் அவரது செயலைப் பாராமல் அவரது குலம் தொழில் ஊர் பார்த்து செயல்படும் மன நிலை இன்று நம்மிலும் அதிகரித்து வருகின்றது .
மூன்றாம் வகையினர்; ( நம்பிக்கையின்மை )
இவர்கள் இயேசுவின் செயல் மீதும் நம்பிக்கை வைக்கவில்லை அவரது வார்த்தை மீதும் நம்பிக்கை வைக்கவில்லை. இதனால் இறைமகனான இயேசுவுக்கே அரும்செயல்கள் செய்ய முடியாமல் போகின்றது. நமது நலமான எண்ணத்தினாலும் நம்பிக்கையினாலும் நல்ல செயல்களை செய்ய வைக்க முடியும் என்பதை இந்நிகழ்வு நமக்கு எடுத்துரைக்கின்றது.
நாம் இறைவாக்கினர்களா இறைவாக்கிற்கு செவிமடுப்பவர்களாக என்று சிந்திக்க இன்றைய நாளில் இறைவன் நமக்கு அழைப்பு விடுக்கின்றார். இறைவாக்கினர்கள் என்றால் வன் கண்ணும் கடின இதயமும், செவி சாய்க்காத காதுகளும் கொண்ட மக்களுக்கு மத்தியில் ஒரு இறைவாக்கினர் போல நமது வாழ்வு அமைய வேண்டும். அது அம்மக்களுக்கு நம்மிடையே ஒரு இறைவாக்கினர் வந்துவிட்டார் என்று எண்ணுமளவுக்கு இருக்க வேண்டும்.
இறைவாக்கிற்கு செவிசாய்ப்பவர்கள் என்றால், அறிவுத்திறன் கொண்டோ குலம் படிப்பு ஊர் சார்ந்தோ மறைப்பணியாளர்களை எடை போடாது நம்பிக்கையோடு அவர்களின் வார்த்தைக்கு செவிமடுப்பவர்களாக வாழ வேண்டும்.
நாம் அனைவரும் வலுவற்றவர்களே , நமது வலுவின்மை என்னும் குறைவில் இறைவனின் வல்லமை வெளிப்படும் அவரது அருளால் நாம் அனைவரும் வல்லமை மிக்கவர்களாக மாறுவோம். இறைவனின் அருள் என்றும் நம்மோடு.