இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் 13 வாரம்

உனது பயணம் எத்திசையை நோக்கியது?????

>சாலமோனின் ஞானம் 1;13-15,2;23-24<
கொரிந்தியர் 8;7,9,13-15<
மாற்கு 5;21-43

இன்றைய நமது வாழ்க்கைச்சூழலில் ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல அனைவரும் பயன்படுத்துவது ஊடுறுவல் வரைபடம் என்னும் NAVIGATION MAP . அலைபேசி நமது வாழ்வை மிகச்சுருக்கி நமது உள்ளங்கைக்குள் உலகத்தை கொண்டு வந்துவிட்டது. இளையோர் முதல் பெரியோர் வரை அனைவரும் இதைதான் பயன்படுத்துகின்றனர். பக்கத்து தெருவிற்கு செல்ல வேண்டுமென்றாலும் பாதையை தொடுதிரையில் பார்த்து மகிழ்கின்ற காலமாகமாறிவிட்டது. அதில் நாம் சென்று சேர வேண்டிய இடத்தை குறித்து வைத்தால் அது நமக்கான எளிதான பாதையை காட்டும். இதன் மூலம் நமது பயணம் சுலபமானதாக மகிழ்வானதாக அமையும். நமது வாழ்வும் அப்படி தான் ஆனால் அதற்கான பாதை இயேசு என்னும் அலைபேசியில் அடங்கி இருக்கிறது. முதலி நாம் இயேசுவை அறிய வேண்டும் அதன் பின் நமது வாழ்வுக்கான பாதையை அறியலாம்.
வாழ்க்கையில் நாம் எங்கு நிற்கிறோம் என்பதை விட எந்த திசையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதே மிக முக்கியம். நமது வாழ்வு ஒரு பயணமாக பயணித்துக் கொண்டே இருக்கின்ற ஒரு நதியாக ஆறாக இருக்க வேண்டும். அப்போது தான் நமக்கும் நம்மைச்சுற்றி இருப்பவர்களுக்கும் ஒரு செழிப்பையும் பசுமையையும் தர முடியும். இல்லையெனில் தேங்குகின்ற கழிவு நீர் போல நமது வாழ்வு மாறிவிடும். அது பசுமையையும் செழிப்பையும் ஒரு போதும் தர முடியாது. இன்றைய நற்செய்தியின் மூலம் இயேசு நமக்கு விடுக்கும் அழைப்பும் இதுதான். யாயீர் என்னும் தொழுகைக் கூடத் தலைவரின் மகள் குணமடைதலும் , பெரும்பாடுள்ள பெண் குணமடைதலும் பகுதியை வாசிக்கக் கேட்டோம் . இன்றைய நற்செய்தியில் பல நபர்கள் இடம் பெறுகின்றனர். இயேசு, அவர் தம் சீடர்கள், யாயீர் அவருடைய மகள், இரத்தப்போக்குள்ள பெண், மக்கள் கூட்டம் என பலர் இருப்பினும் நம்பிக்கையோடு பயணித்தவர்கள் சிலர் மட்டுமே. அவர்கள் யாயீர், யாயீர் மகள்,பெரும்பாடுள்ள பெண். இவர்களின் இன்றைய செயல்பாடுகள் நமக்கு கொடுக்கும் செய்தி என்ன என்பதை அறிய முயல்வோம்.
யாயீர்;
தொழுகைக் கூடத் தலைவர். அவர் நினைத்திருந்தால் பணியாளரையோ அல்லது தொழுகைக்கூடத்து முக்கியமான நபர்களையோ இயேசுவிடம் அனுப்பி தன் மகளுக்கு உடல் நலம் வேண்டி இருந்திருக்கலாம். ஆனால் தன் மகள் மேல் கொண்ட அன்பின் நிமித்தம் தன் வீட்டிலிருந்து தானே வெளியேறி இயேசுவைத் தேடி செல்கிறார். தன் மகள் குணமாக வேண்டும் என்ற ஆவல் , ஏக்கம் அவரை வெளியே இயேசுவை நோக்கி அவர் இருந்த திசையை நோக்கி அழைத்து செல்கிறது. தன் வீட்டிலேயே இருந்து தன் மகளுக்காக அழுது கொண்டிருக்காமல் வெளியே பயணிக்கிறார். அந்த நம்பிக்கை பயணம் அவருக்கு நலம் பயக்கிறது. அவரது மகள் குணமடைகிறாள். அவரது நம்பிக்கை செயல்பாடுள்ள நம்பிக்கையாக இருக்கிறது.

யாயீரின் மகள்:
பன்னிரண்டு வயதுள்ள சிறுமி. உடல் துன்பத்தோடு உள்ள துன்பமும் வருத்த நோய்வாய்ப்பட்டு இறக்கின்றாள். தன் வயது சிறுமிகள் எல்லாம் ஓடியாடி விளையாட இவள் மட்டும் படுக்கையில் கிடக்கிறாள். இயேசு வந்து தன் கரங்களை தொட்டு எழுந்திரு என்று சொன்னதும் உடனே எழுந்ததோடு மட்டுமல்லாமல் நடக்கவும் ஆரம்பிக்கிறாள் . இயேசுவின் வல்லமை தன்னை குணப்படுத்தும் என்று நம்பிய சிறுமி , தனது நம்பிக்கை தன்னை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வரும் என்று எண்ணி அதை செயல்படுத்துகிறாள். குணமும் பெறுகிறாள்.
பெரும்பாடுள்ள பெண்;
பன்னிரண்டு ஆண்டுகள் இரத்தப் போக்கினால் அவதிப்பட்ட பெண் . தனது ஊர் கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறி இயேசுவைக் காண வருகிறாள். தான் நலம்பெற வேண்டும். வீட்டிற்குள் அடைந்து கிடப்பதாலோ அல்லது மனித மருத்துவம் கை விட்டு விட்டதே என்று எண்ணி வருந்தி அழுவதாலோ நலம் கிடைத்து விடாது. மாறாக, நலம் அருள்பவரை நாடி செல்ல வேண்டும் என்று எண்ணி வீட்டை விட்டு வெளியேறி ஊருக்குள் வருகிறாள். நம்புகிறாள் நலம் பெறுகிறாள்.
இயேசு ;
தனது ஆற்றல் இறை வல்லமை தன்னைப் பின் தொடரும் மக்களோடு மட்டும் இருந்து விடாமல் தனது இருப்பினை நாடுபவர்களுக்கும் கிடைக்கப்பெற வேண்டும் என எண்ணுகிறார். அதனால் தான் மக்களை நாடி செல்கிறார். நம்பிக்கையோடு தொடுபவர்கள் நலம் பெற்றுக்கொள்கின்றனர். சிலரை இயேசு தொட்டு குணப்படுத்துகிறார். சிலர் இயேசுவைத் தொட்டுக் குணம் பெறுகின்றனர். இயேசுவும் ஒரே இடத்தில் இருந்து கொண்டு போதனைகளையும் புதுமைகளையும் செய்யவில்லை . இயக்கம் ஒன்றே இயல்பான இன்பமான வாழ்வு தரும் என்பதை அறிந்தவர் அவர். எனவே அவர் உதவியை நாடிய மக்களை தேடி செல்கிறார்.
மக்கள் கூட்டம் :
இயேசுவோடு மறுகரையிலிருந்து இக்கரைவரை அவரைப் பின் தொடர்ந்தவர்கள், இக்கரை மக்கள், வேடிக்கை பார்க்க வந்தவர்கள், என பலவிதமான மக்கள் அவரைப் பின் தொடர்கின்றனர். இவர்களும் பயணம் செய்தவர்களே ஆனால் இவர்கள் பயணமும் இயக்கமும் தெளிவில்லாத பயணமாக இயக்கமாக இருக்கிறது. இவர் என்ன தான் செய்கிறார் பார்ப்போமே என்ற வேடிக்கை பார்க்கும் மனப்பான்மையே இவர்களிடம் அதிகமாக இருக்கிறது. சிலர், இரத்தப்போக்குடைய பெண்ணை விமர்சனம் செய்பவர்களாக, சிலர் யாயீரிடம் இயேசுவை ஏன் தொந்தரவு செய்கின்றீர் என்று அவருக்கு சாதகமாக பேசுபவர்களாக, சிலர் நடப்பது அனைத்தையும் பார்த்து மலைத்து போனவர்களாக, சிலர் இதைக் காணாத மக்களுக்கு நடந்ததை விளக்கிச்சொல்ல முயல்பவர்களாக இருக்கின்றனர்.
இயக்கமோ பயணமோ ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து செல்வது மட்டுமல்ல. ஒரு குறிக்கோளோடும் தெளிவான முடிவோடும் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிகளையும் நம்பிக்கையோடு எடுத்து வைப்பதே முழுமையான பயணம் அல்லது இயக்கமாகும்.
யாயீரின் பயணத்தில் தன் மகள் நலம் பெற வேண்டும் இயேசுவை தன் இல்லத்திற்கு அழைத்து வந்து தன் மகளை தொட வைத்து நலம் பெற வைக்க வேண்டும் என்ற குறிக்கோளும் ஆசையும் இருந்தது. நம்பிக்கையோடு தன் அடியை எடுத்து வைத்தார் வெற்றி பெற்றார்.
யாயீரின் மகள் இயேசு தன்னை தொட்டு விட்டார் தன் உடல் பலவீனத்தை மாற்றி விட்டார் என்று அறிந்ததும் எழ முயற்சித்தவள் நடக்க ஆரம்பிக்கிறாள். தனது பயணத்தை அப்பொழுதே தொடங்கிவிடுகிறாள். முயற்சிக்கிறாள் வெற்றி பெறுகிறாள்.
இரத்தப் போக்குடைய பெண் தன் வீட்டை விட்டு , தனது மருத்துவ சூழல்களை விட்டு வெளியே வருகிறாள். இயேசு இருக்கும் திசையை நோக்கி பயணிக்கிறாள் நலம் பெற்று மகிழ்வுடன் திரும்புகிறாள்.
மக்கள் கூட்டம் இலக்கற்ற பயணம் மேற்கொண்டவர்கள் எனவே வியப்பையும் ஆதங்கத்தையும் மட்டுமே பெற்றவர்களாக இல்லம் திரும்புகின்றனர்.
நமது பயணம் யாருடைய பயணத்தைப் போல இருக்கிறது எந்த திசையை நோக்கியதாக இருக்கிறது என்று சிந்திப்போம். வில்லிலிருந்து பாயும் அம்பு இலக்கின்றி பயணித்தால் திசை மாறி காணாமலேயே போய்விடும். நமது அன்றாட வாழ்வும் அப்படித்தான் ஒவ்வொரு நாளும் ஒரு பயணம் இலக்கு தெளிவாக இருந்தால் பாதை தெளிவானதாக அமையும் பயணமும் இனிதாக அமையும். எனவே தெளிவான இலக்கோடும் பயணத்தை தொடர இறைவனின் ஆசீர் வேண்டுவோம் இறையருள் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்.