இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

ஆண்டின் பொதுக்காலம் ஆறாம் வாரம்

நன்மையைத் தேடி நாடி ஓடு

லேவியர் 13,1-2.44-46
1கொரிந்தியர் 10,31-11,1
நற்செய்தி: மாற்கு 1,40-45

நல்ல எண்ணங்கள் நன்மையைத் தரும் இது என்னுடைய வாழ்வில் நான் மிகவும் நம்புகின்ற ஒரு வார்த்தை. எனக்கு அறிமுகமான எல்லோரிடத்திலும் ஒரு பத்து முறையாவது சொல்லியிருப்பேன். நன்மையானது எது? எவனொருவனுக்கு ஒன்று அவன் தேவையைப் பூர்த்தி செய்கின்றதோ, அவன் பிரச்சனைக்குத் தீர்வாக அமைகிறதோ? இன்பம் தருகிறதோ? அது நன்மை. அப்படிப் பார்த்தால் எல்லோருக்கும் நன்மை எளிதில் கிடைப்பதில்லை. அதைத் தேடி , நாடி ஓடி அடைய வேண்டியதாயிருக்கிறது. ஏனெனில் எளிதில் கிடைக்கும் எந்தப் பொருளும் இன்பம் தருவதில்லை. மாறாக கஷ்டப்பட்டு , உழைத்துப் பெறும் பொருள் தான் மன நிம்மதியும் நிறைவும் தருகின்றது. இன்று நாம் கொண்டாடி மகிழும் தூய லூர்து அன்னையின் திருவிழா கூட பெர்னதெத் என்ற சிறுமியின் கடின முயற்சியின் பலன் தான் . அன்னை மரியாள் இவருக்கு 18 முறை காட்சியளித்திருக்கிறார். நன்மையைத் தேடி நாடி ஓடியதால் அவர் பெற்ற பரிசு இது. அவர் மட்டும் அன்னை மரியாள் காட்சியின் போது ஏதோ ஒர் வெளிச்சம் தானே, சப்தம் தானே என்று அலட்சியப்படுத்தி இருந்தால், இன்று இந்த திருவிழா கொண்டாடி இருக்க முடியுமா?. முடியாது. சிறுமி பெர்னதெத் சொன்னவுடன் யாரும் நம்பவில்லை. அவரை முட்டாள், கனவு காண்பவள், புத்தி பேதலித்தவள் என்று என்னவெல்லாம் சொல்லி இருப்பார்கள். ஆனால் எதற்கும் காது கொடுக்காமல் நன்மையின் சக்தியை நாடறியச் செய்வதிலேயே கவனமாய் இருந்திருக்கிறார். எங்கோ ஏதோ ஒரு நாட்டில், ஓர் குகையில் அன்னை மரியாள் காட்சியளித்த தினத்தை இன்று உலகம் முழுவதும் கொண்டாடக் காரணம் , நன்மையை மட்டுமே பரப்பும் நல்லவர்கள் சிலர் நாட்டில் இருப்பதால்தான்.

இன்றைய நற்செய்தியிலும் இத்தகைய நன்மையின் பண்பு மிளிர்கிறது. தொழுநோயாளர் இயேசுவால் குணம் பெறுகிறார். இது புதிதல்ல. ஏனெனில் பலரும் குணம் பெற்றனர் இயேசுவால். ஆனால் தொழுநோயாளர் நன்மையைத் தேடி வந்ததால் நலம் பெறுகின்றார். இந்த நற்செய்தியை தியானிக்கும் போது மூன்று விதமான நல் எண்ண மனிதர்கள் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். 1. நம்பி வந்து நலம் பெற்றவர்.
2. கட்டளைகளை கடைபிடிக்கஸ் சொன்னவர்.
3. நன்மையைத்தேடிக் கண்டடைந்த மக்கள்.

நம்பி வந்து நலம் பெற்ற மக்கள்.
தொழுநோயாளர்கள் தனிமையில் இருக்க வேண்டும்; யாருடனும் பேசக் கூடாது; பழகக் கூடாது; உண்ணக் கூடாது ; உறங்கக் கூடாது; ஊருக்கு வெளியே தான் இருக்க வேண்டும் என்று பலவிதமான வரைமுறைகள் அவர்கள் வாழ்க்கைக்கு மட்டும். இது தான் உனது வாழ்க்கை முறை இப்படி தான் நீ வாழ வேண்டும் என்று சட்டதிட்டங்கள் இயற்றி அவர்களை அதன்படி இயக்குவித்தது சமூகம். அதையும் சரி என்று சம்மதித்து வாழ பழகி ஒத்துக் கொண்டவர்கள் மத்தியில் இந்த தொழுநோயாளர் சற்று வித்தியாசப்படுகிறார். எனது வாழ்க்கை இதுவல்ல இப்படியல்ல, என்று எண்ணுகிறார். பிரச்சனைக்குத் தீர்வு காண எண்ணுகிறார். சட்டத்தை மீறி ஊருக்குள் வருகிறார். நன்மையின் நாயகனாம் இயேசுவை நாடிச் செல்கிறார். நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும் என்று முழந்தாள் படியிட்டு வேண்டுகிறார். பொதுவாக முழந்தாள்படியிட்டு இருநிலையினர் வேண்டுவர். ஒன்று அரசன் முன் மண்டியிட்டு அவர் கட்டளைக்கு அடிபணியும் சேவகர். இரண்டு காதலி முன் மண்டியிட்டு தன் அன்பை வெளிப்படுத்தி ஏற்கச் சொல்லி வேண்டும் காதலன் . இவ்விரு நிலையிலும் தொழுநோயாளர் இயேசுவை அரசனாகவும் அன்பராகவும் எண்ணி வேண்டுகிறார். நீர் விரும்பினால் நான் குணமாவேன் என்று வேண்டும் சேவகன் போலவும் , தன் அன்பை வெளிப்படுத்தி உம்மால் தான் நான் குணமடைய முடியும் என்று வேண்டும் அன்பன் போலவும் செயல்படுகிறார்.அவரது அன்பாலும் பேச்சாலும் கவரப்பட்ட இயேசு குணம் அளிக்கிறார். எப்படி? அன்பு கொண்ட அரசராக, அதிகாரம் கொண்ட அன்பராக. இப்படி குணம் பெற்றும் ஏன் இயேசுவின் வார்த்தைக்கு அடிபணியவில்லை அவர்? மோசே கட்டளைப்படி காணிக்கை செலுத்தும் என்று சொன்னதைச் செய்யவில்லை; யாருக்கும் சொல்ல வேண்டாம் கவனமாக இரும் என்று கூறியதைக் கேட்கவில்லை; ஏன் அவ்வாறு செய்தார்? தனக்கு நன்மை தராத சட்டங்கள் இருந்தென்ன இலாபம் என எண்ணினாரோ? சட்டங்கள் மனிதர்களுக்காக, மனிதர்கள் சட்டங்களுக்காக அல்ல என்பதை உணர்ந்தாரோ என்னவோ? பெற்ற நன்மையை பலருக்கும் பறைசாற்றிக் கொண்டே வாழ்க்கையை வாழத்தொடங்குகிறார். நம்பினார் நலம் பெற்றார். நமது நம்பிக்கை எப்படி உள்ளது? நம்புகிறோமா? நலம் பெறுகிறோமா? பெற்ற நன்மையைப் பறை சாற்றுகிறோமா?

கட்டளைகளைக் கடைபிடிக்கச் சொன்னவர்.
தொழுநோயாளியின் மேல் பரிவு கொண்டு தொட்டு குணம் தருகிறார் இயேசு. ஒரு நோயாளியை சந்திக்க நேர்ந்தால் நோயின் தீவிரம் என்ன? பரவுமா? பரவாதா? தொட்டால் பரவுமா? பேசினால் பரவுமா? என்று கண்ணும் கருத்துமாக பார்த்து பழகும் மனிதர்கள் மத்தியில் இயேசு வித்தியாசப்படுகிறார். நோயின் பாதிப்பினால் அல்ல, அவர் அன்பின் பாதிப்பினால் ஆட்கொள்ளப்படுகிறார். எந்த விதமான பயமும் இன்றி அவரைத் தொட்டு குணம் தருகின்றார். தன்னால் குணம் அடைந்தவர் என்றாலும் தன்னை முன்னிலைப் படுத்தாது கடவுளை முன்னிலைப்படுத்துகிறார். சிறு செயல்செய்து சில பல பதாகைகள் வைத்து விளம்பரப்படுத்தும் மனிதர்கள் மத்தியில் தனிமனித புகழ்ச்சி வேண்டாம், இறைபுஅழ்ச்சி ஒன்றே போதும் என்கிறார். தனக்கு புகழாரம் சூட்டத் துடிக்கும் மக்கள் முன்னிருந்து விலகி தனிமையை நாடிச் செல்கிறார்.

நன்மையைத் தேடி கண்டடைந்த மக்கள்;
இயேசு மறைவான இடம் தேடி தனிமையாக இருந்தாலும் மக்கள் அவரைத் தேடி நாடிச் செல்கின்றனர். இயேசு தொழுநோயாளருக்கு சுகம் தந்தார், ஆனால் அவர் இப்போது எங்கிருக்கிறார் என்று தெரியாது என எண்ணி சும்மா இருந்துவிடவில்லை அவர்கள். நன்மையின் சக்தி எங்கே என தேடுகின்றனர். காடு மேடு மலை ஊர் நாடு நகர் என அலைந்து தேடுகின்றனர். இறுதியில் அவரைக் கண்டு பிறரும் காண வழி செய்கின்றனர். இயேசுவே நன்மையின் நாயகன் என நம்பினர். அவரை நாடித் தேடுவதேக் கடமை எனக் கொண்டனர். கண்டபின் பிறருக்கும் அதை வெளிப்படுத்தினர். அவரைக் கண்டடைவோம் என எண்ணினர்; நம்பினர் நன்மையைக் கண்டனர். ஆம் இறையேசுவில் பிரியமானவர்களே எளிதில் கிடைக்கும் எதுவும் இன்பம் தருவதில்லை, கஷ்டப்பட்டு உழைத்து கையில் கிடைப்பவையே நமக்கு நிறைவையும் நிம்மதியையும் தரும் என்று நம்புவோம். நம்பியபடி வாழ்வோம். நமது தேவைகளை அரசன் முன் மண்டியிடும் சேவகன் போல எடுத்துரைப்போம். அவர் அன்பைப் பெறத்துடிக்கும் அன்பனாக அருள் வேண்டுவோம். புகழ்ச்சியின் மகுடத்திற்கு தலை வணங்காது இறைபுகழ்ச்சியில் இன்பம் அடைவோம். நன்மையின் ஒளி ,சிறு பொறி தான் என்றாலும் அது எங்கிருந்தாலும் அதைத் தேடிக் கண்டடைவோம்.நல்லதை எண்ணுவோம் நலமுடன் வாழ்வோம். நலன்களின் நாயகன் நம்மையும் நம் குடும்பங்களையும் நன்மையால் நிரப்புவாராக. ஆமென்