இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் 11 வாரம்

விதைகளா? விழுதுகளா?

எசேக்கியல் 17;22-24
கொரிந்தியர் 5 6-10
மாற்கு 4; 26-34


கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது இந்த பழமொழியை நாம் பலமுறை உபயோகப்படுத்தியிருப்போம். பலர் சொல்லவும் கேட்டிருப்போம். கடுகில் அவ்வளவு மருத்துவ குண நலன்கள் இருப்பதாலேயே இவ்வாறு சொல்கிறோம். விதைகளிலேயே மிகவும் சிறிய விதை கடுகாகத்தான் இருக்கும். பயன் தருவதிலேயும் அதிக பயன் தருவதும் இதுவாகத்தான் இருக்கும். நாம் பொதுவாக வீடுகளில் சமையலுக்கு அதிகம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று கடுகு. கடுகு, எண்ணெயோடு சேர்ந்து தரும் மணமும் சுவையுமே நமது சமையலை நிறைவான ஒன்றாக மாற்றுகிறது. சிலருக்கு கடுகு தாளிக்கும் வாசனையே பசியை தூண்டிவிடும் . சிறுவயதில் எங்கள் வீட்டில் பெரும்பாலும் காலை உணவு பழைய சோறாகத் தான் இருக்கும். எண்ணெய் கடுகு கருவேப்பிலை மிளகாயோடு சேர்த்து தாளிக்கப்படும் பழைய சோறுக்கு இணை எந்த இட்லி பொங்கலுக்கும் வராது. கடுகின் மகத்துவம் அவ்வளவு மகத்துவமிக்கது. உடலின் உள்ளுறுப்புக்களின் நலனான வாதம் பித்தம் ஜீரணம் போன்றவற்றிற்கும் வெளிப்புற உறுப்புக்களின் நலனான மூட்டு வலி கை கால் இடுப்பு வலி போன்றவற்றிற்கும் மிகவும் பயன்படுகிறது. கடுகு எண்ணெய், கடுகுத் தூள், கடுகு கீரை என அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்தவை. தெரிந்தோ தெரியாமலோ நாம் சமையலுக்கு பயன்படுத்தும் கடுகு சார்ந்த பொருட்களில் அத்தனை நன்மைகள் இருக்கின்றன. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கடுகின் பயன் தெரியுமோ இல்லையோ கடுகைப் பற்றி நன்கு தெரியும்.
இயேசு தனது போதனைகளில் பெரும்பாலும் உவமைகளையும் கதைகளையும் பயன்படுத்துவது அதிகம். அவை அதிகமாக அந்த பகுதி மக்களுக்கு பழக்கமான, பயன்பாட்டோடு தொடர்புடைய ஒரு பொருளாகவோ கதையாகவோ தான் இருக்கும். வலை, முத்து, விதைப்பவர், காணாமல் போன ஆடு, விளக்கு, தாலந்து, ஊதாரி மைந்தன், என அனைத்து உவமைகளுமே மக்களோடு தொடர்புடைய பொருட்கள் ஆட்கள் சம்பந்தப்பட்டவை. அவ்வகையில் கடுகும் மக்களுக்கு மிகவும் பழக்கமான ஒரு பொருளாகத் தான் இருந்திருக்கும். இன்றைய நற்செய்தியில் இயேசு இறையாட்சியை கடுகு விதைக்கு ஒப்பிடுகிறார். சிறிய கடுகு விதை மண்ணில் விதைக்கப்பட்டு, பின்னர் பெரிய மரமாக வளர்வது போல் இறையாட்சி என்னும் நம்பிக்கை நம்முள் கடுகு விதை போல விதைக்கப்பட்டு கடுகு மரமாக வளர வேண்டும் என அழைப்பு விடுக்கிறார்.
இறையாட்சி நமக்குள் இருக்கிறது. நம் உள்ளத்தில் இருக்கிறது. அது விதையாக இருக்கிறதா? இல்லை விழுது தரும் மரமாக இருக்கிறதா என்று சிந்திக்க இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. கடுகு விதை மிகவும் சிறியது. மரமோ மிகப் பெரியது.
விதை சிறிய உருண்டை வடிவம். மரமோ சொல் வடிவத்தால் விவரிக்க முடியாத அளவு பெரியது.
விதை பறவைகளுக்கு உணவாக அமைகிறது. மரம் பறவைகள் வந்து உணவு உண்ணும் இடமாக (உண்ணும் விடுதி) மாறுகிறது.
விதை பறவையின் நிழலுக்கு அடியில் இளைப்பாறுகிறது. மரம் பல பறவைகள் வந்து தங்கி இளைப்பாறும் இடமாக மாறுகிறது.
விதை பறவைகளால் எடுத்துச் செல்லப்பட்டு உணவாகிறது. மரம் பல பறவைகளை தன்னிடம் வரவழைக்கும் இடமாக மாறுகிறது.
இறையாட்சி என்னும் கடவுளின் அரசு நம்பிக்கை, நம்முள்ளும் துளிர் விட்டு வளர்ந்து கொண்டிருக்கிறது. சிலர் விதையை வளர வைத்து , மரமாக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றோம். பலர் விதையாகவே வாழ்ந்து, பறவைகளுக்கு அந்த நேரத்துக்கு மட்டும் உணவாகின்றோம். சிலர் நம்முடைய சொல் செயல் வாழ்வு முறை மூலமாக பலர் வாழ்க்கைக்கு மருந்தாகிறோம். சிலர் நம்முடைய பண்பு நலன் உறவு முறை மூலமாக பலருடைய வாழ்வுக்கு மணமும் சுவையும் சேர்க்கிறோம் . விதையாக இருந்தால் சிலருக்கு மட்டுமே பயன் தர முடியும். மரமாக மாறினால் தான் பலருக்கும் பயன் தருவதோடு பல பயன் தரும் மரங்களையும் உருவாக்க முடியும். விதைகளா? மரங்களா? நாம் எதுவாக இருக்கிறோம். எதுவாக மாறப்போகிறோம் என்பதை சிந்தித்து வாழ்வோம். வாழ்க்கையில் நடப்பவை அனைத்தும் நமக்கு சாதகமாக நடப்பதில்லை. நாம் தாம் அதை தீர்மானித்து நமக்கு ஏற்றவையாக மாற்றிக் கொள்ள வேண்டும். விதையோ மரமோ வீரியமிக்க ஒன்றாக இருக்கின்றோமா என நம்மை நாமே சுய ஆய்வு செய்து கொள்வோம். இது தான் வாழ்க்கை என்று ஒரு போதும் எண்ணிவிடாது இதைவிட மேலான ஒன்று உண்டு என்று முன்னோக்கி செல்வோம். இதுவல்ல வாழ்க்கை, இதற்கு மேலான ஒரு வாழ்வு உண்டு என்று எண்ணி தன் வாழ்வை மாற்றிய ஒரு மனிதனின் கதையைக் காண்போம்
ஒரு நகரத்தில் ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே!
ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள். அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. (இப்படி ஒரு சட்டம் நம்மூரில் இருந்திருக்க வேண்டும்). இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன்.
ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம். இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது.
இருப்பினும் ஒரு சிலர்'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு. இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் கிடைத்தது. நன்கு பணி செய்தான் . மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தான். அவன் ஐந்தாண்டு பணி முடிந்தது. அவன் செயலைப் பார்த்த மக்களுக்கு மன்னனை அனுப்ப மனம் வரவில்லை இருப்பினும் சட்டத்தை மாற்ற முடியாதல்லவா? அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது. மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். முகத்தில் எந்த் கவலையும் இல்லை. மிகவும் சந்தோஷமாக இருந்தான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறார்; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''
தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''
கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.
மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.
மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை.
அழுது புலம்பி,புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவரோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறார். படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''
''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''
''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''
''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''
''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''
''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!
இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.
மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!
நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.
இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்!
சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன். காட்டை அழித்து நாட்டாக்கியது ஒரு தவறு. ஆட்சியில் கொள்ளை அடித்து புது நாட்டை உருவாக்கியது ஒருதவறு என்றாலும் அந்த மன்னன் இன்னும் வாழ வழி இருக்கிறது என்று எண்ணியது ஒரு புதுமை. இதற்கு முன் இருந்த அனைவரும் இறந்து மடிய இவன் வேறு மாதிரியாக சிந்தித்திருக்கிறான்.
ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை? பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.
ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.
இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!
அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும்,திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே!
சிந்தனைத் திறனும் திட்டமிட்டு செயல் புரிதலும் ஒருவரிடம் அமைந்தால் அவரால் எதையும்
சாதிக்கமுடியும் நமது இயல்க்கு எது என தீர்மானிப்போம் விதையாக வாழ்ந்து மடிவதா? இல்லை விழுது தரும் மரமாக வாழ்ந்து பயன் தருவதா?
!விவசாயமும் விவசாயிகளும் அழிந்து மாண்டு கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் இந்த இறையாட்சி பற்றிய கடுகு உவமை நம்மை அவர்களுக்காக செபிக்க அழைக்கிறது. விழுதாக மாறி நம்மை பாதுகாக்க வேண்டிய விவசாயம் இன்று நம் கண்களுக்கு களைச்செடி போல் காட்சியளித்து நம் கண் முன்னே இருந்து அழிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலை மாற செபிப்போம். இயற்கை முறையில் உண்டு உடல் நலத்தோடும் மகிழ்வோடும் வாழ்ந்து வந்த நாம் செயற்கை உணவுகள் நல்லது என்று எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டதனால் வந்த விளைவு இயற்கையை தீமை என கருதியது. இன்று ஏராளமான பாதிப்புக்கு உள்ளான பின்பு இயற்கையை நாடுகிறோம் . அது நம்மை விட்டு வெகு தொலைவில் போய் கொண்டிருக்கிறது. இயற்கையையுமது சார்ந்த பொருட்களையும் இயேசு உவமையாக பயன்படுத்தியது அதன் மேன்மையை நாம் நன்கு உணர்ந்தவர்கள் என்பதனாலும், இன்னும் அதிகம் உணர வேண்டும் என்பதனாலும் தான். கடுகு உவமையை இறையாட்சிக்கு பயன்படுத்திய இயேசு நாம் அது போல் பயன் தரக்கூடிய வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காகவே.
கதையில் பார்த்த மன்னன் போல நமது இலக்கு எதுவென நிர்ணயிப்போம் . விதையாக வடிவம் பெற்ற நாம் மரமாக மாற முயற்சிப்போம். பல பறவைகள் இளைப்பாறும், நிழல் பெறும் மரமாக நமது வாழ்வு மாற இறையருள் வேண்டுவோம் . இறைவனின் ஆசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தோடும் இருந்து நம்மை ஆசீர்வதிப்பதாக ஆமென்.