இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் 10 வாரம்

ஒளிந்து கொள்ள இடம் தேடாதே

தொடக்க நூல்; 3;9-15
கொரிந்தியர்2;4;13-5;1
மாற்கு; 3; 20-35

சிறுவயதில் கண்ணாமூச்சி என்றொரு விளையாட்டு விளையாடிய நியாபகம் எல்லோருக்கும் இருக்கும் . ஒருவர் கண்களை மூடிக் கொள்ள மற்ற அனைவரும் எங்காவது சென்று மறைந்து கொள்வர், ஒளிந்து கொள்வர். குறிப்பிட்ட நேரத்துக்கு பின்னர் கண்களை மூடியவர் மறைந்திருப்பவர்களைக் கண்டறிய வேண்டும். ஆனால் இங்கு இந்த விளையாட்டு வித்தியாசமாக விளையாடப்படுகிறது. இயேசு ஒருவரை அவருடைய உறவினர்கள், தாய் மற்றும் சகோதரர்கள் தேடி வருகின்றனர். அவருடைய மூன்றாண்டு கால பணிக்காலம் முடியும் முன் அவரை தேடி வருகின்றனர். இயேசு தானாக ஒளிந்து கொள்ளவில்லை மாறாக மக்கள் கூட்டத்தின் நடுவே மறைக்கப்படுகின்றார். எறும்புகள் இனிப்பைச்சுற்றி மொய்த்து மறைப்பது போல இயேசுவின் இனிமையான வார்த்தைகளில் மயங்கி மக்கள் அவரைச்சுற்றி மறைத்து இருக்கின்றனர். இருப்பினும் உறவினர்களும் தாயும் சகோதரர்களும் அவர் இருக்கும் இடத்தைக் கண்டு கொள்கின்றனர்.
இயேசு நன்மையை விரும்பும் மக்கள் கூட்டத்தால் மறைக்கப்பட்டிருக்கின்றார். சென்ற இடமெல்லாம் நன்மையை மட்டுமே செய்து வந்த இயேசு தன்னை அம்மக்கள் கூட்டத்தில் மறைக்கின்றார். நாம் நம்மை எங்கு மறைக்கின்றோம்? நாம் எங்கு ஒளிந்து கொள்கின்றோம்? என்று சிந்திக்க இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன.
நம் ஆதிப் பெற்றோர்கள் இன்றைய முதல் வாசகத்தில் கடவுளின் கட்டளையை மீறி உண்ணக்கூடாது என்று சொன்ன கனியை உண்டனர். அதானால் பயம் ஏமாற்றம் எனும் உணர்வினால் தங்களை மறைக்க முயல்கின்றனர். எனினும் முழுதும் மறைக்க இயலாமல் தங்களது நிர்வாணம் வெளிப்படுவதாக உணர்ந்து வருந்துகின்றனர். எனவே தான் ஆண்டவர் அழைத்தும் அவர் முன் வரத் தயங்குகின்றனர். விளைவு, ஆண்டவரின் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாகின்றனர். தவறு செய்யத் தூண்டியவர்( சாத்தான்), தவறு செய்ய முனைந்தவர் ( ஏவாள்), தவறு செய்யத் தூண்டப்பட்டவர் (ஆதாம்) என அனைவரும் ஆண்டவரின் தீர்ப்புக்கு ஆளாகின்றனர்.
நாமும் பல நேரங்களில் தவறு என்று தெரிந்தும் அதைத் துணிந்து செய்பவராக, செய்யத் தூண்டுபவராக, தூண்டப்படுபவராக இருந்திருக்கிறோம். ஆனால் அதற்காக அப்போது வருந்தாது , தவறுக்கு தண்டனை பெறப் போகிறோம் என்றதும், பயம் அச்சம், ஏமாற்றம் குற்ற உணர்வு வருத்தம் போன்ற எதிர்மறை உணர்வுகளின் மத்தியில் ஒளிந்து கொள்கிறோம். நம்மை நாமே அடையாளம் காண முடியாத விதத்தில் நமது உருவினை மாற்றிக் கொள்கிறோம் நமது ஆதிப் பெற்றோர்கள் போல. பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் , பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும் என்பதற்கிணங்க எத்தகைய உணர்வுகளால் நாம் சூழப்படுகின்றோமோ, அதே உணர்வுடையவர்களாகவே நாம் மாறுகின்றோம் என்பது பிரபஞ்ச நியதி. நல்ல உணர்வுகளால் சூழப்படும் போது நன்மையை அடைகிறோம். எதிர்மறை உணர்வுகளால் சூழப்படும்போது தீமையை அடைகிறோம்.
ஆதிப்பெற்றோர்கள் இந்த எதிர்மறையான உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்டதனால் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகின்றனர். செய்த தவறுக்கு மன வருந்தி மன்னிப்பு பெற எண்ணி இருந்தால் ஒருவேளை ஏதேன் தோட்டம் எழில் மாறாமல் இன்று வரை இருந்திருக்கலாம். அவர்கள் பயம், ஏமாற்றம், எனும் உணர்வுகளில் ஒளிந்து தங்கள் வாழ்வை அழித்தது போல நாமும் இருக்கக் கூடாது என்பதே இன்றைய நாளில் இறைவன் நமக்கு தரும் செய்தி. நம்மை மறைக்கும் உணர்வுகளைக் களைந்து , நம்மை பிறருக்கு வெளிப்படுத்தும் உணர்வுகளை அணிந்து கொள்ள முயற்சிப்போம்.
கொரிந்து நகர் மக்களுக்கு அறிவுரைக் கூறும் பவுலடியார், மீண்டும் அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள் பெற்றுக்கொள்ளவில்லை என்று வலியுறுத்துகிறார். இந்த அறிவுரை நமக்கும் பொருந்தும். நாம் கடவுளை அப்பா தந்தாய் என்று அழைக்கும் உரிமை பெற்ற மக்கள். தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை, என்பர். நாம் நம் தாயாம் கடவுளின் இயல்புடைய பிள்ளைகள். ஆனால் பல நேரங்களில் நாம் தாம் அதை உணராது செயல்படுகிறோம்.அச்சம் கொள்வது கடவுளின் இயல்பு கொண்ட பிள்ளைகளின் குணம் அல்ல. எனவே அச்சத்தை விடுத்து அன்போடு வாழ முயல்வோம்.
இன்றைய நற்செய்தியில் இயேசு மக்கள் கூட்டத்தால் மறைக்கப்படுகிறார். நன்மையைத் தேடி நாடி வந்த மக்கள் மத்தியில் இருக்கிறார். நம்மைச்சுற்றி இருப்பவர்கள் யார்? நன்மையைப் பெற விரும்புபவர்களா? நன்மையைத் தர விரும்புபவர்களா? என்று சிந்திக்கும் முன் நாம் அவர்களுக்கு யாராக இருக்கின்றோம் என சிந்திப்போம். இன்றைய நற்செய்தி பகுதியில் இடம் பெறும் இயேசுவின் செயல்களுக்கும் முதல் வாசகத்தில் இடம் பெறும் ஆதிப் பெற்றோர்களின் செயல்களுக்கும் இடையே உள்ள ஒரு சில ஒப்புமைகளை கூறி எனது சிந்தனைகளை நிறைவு செய்ய விளைகிறேன்.
இயேசு உண்ண நேரமின்றி மக்களுக்கு போதனை செய்கின்றார். ஆதிப்பெற்றோர்கள் ஏதேன் தோட்டத்தில் உள்ள அனைத்துக் கனிகளோடு விலக்கப்பட்ட கனியையும் உண்டு மகிழ்கின்றனர்.
இயேசு மக்கள் கூட்டத்தினால் சூழப்படுகின்றார். ஆதிப்பெற்றோர், தனிமையினால் ஆட்கொள்ளப்படுகின்றனர்.
உறவினர்களும் தாயும் சகோதரர்களும் அவரைத் தேடி, உடன் அழைத்துச் செல்ல எண்ணுகின்றனர். ஆதாம் ஏவாளும் தோட்டத்தினின்று விரட்டப்பட்டு கடவுளால் தேடப்படுகின்றனர்.
பேய்களின் தலைவன் பெயல்செபூல் கொண்டு இவன் பேய்களை ஓட்டுகிறான் என்று சொன்ன மறைநூல் அறிஞர்களை அழைத்து அவர்களுக்கு புரியுமாறு உவமைகள் வாயிலாக விளக்குகின்றார். ஆதிப் பெற்றோர்களோ கட்டளைகளை மீறி தவறு செய்து விட்டு, அதை கடவுளிடமே மறைக்கப் பார்க்கிறார்கள், கடவுள் முன்னிருந்து மறையப் பார்க்கின்றார்கள்.
மதி மயங்கி இருக்கிறார் என்று குற்றம் சாட்டப்படுகிறார் இயேசு. நிலத்தைப் பயிரிட்டு உண்ண, பேறுகால வேதனை அடைந்து குழந்தை பெற தீர்ப்பிடப்படுகின்றனர் ஆதிப்பெற்றோர்.
இவற்றில் நாம் யார் இயேசுவா? ஆதிப் பெற்றோர்களா?
இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பவர்களே என் தாயும் என் சகோதரரும் சகோதரியும் ஆவார் என்று கூறி தன்னைப் பெற்ற தாயைப் பெருமைப் படுத்தியவர் இயேசு. இவர் மற்ற தாய்மார்களைப் போல சாதாரண தாய் அல்ல . இறைத்திருவுளத்தை இனிதே நிறைவேற்றும் உன்னத தாய் என்று அங்குள்ள அனைத்து மக்கள் முன்னும் அறிக்கை விடுகின்றார். தனது உயர்ந்த எண்ணங்களினாலும், தூய செபத்தினாலும் மிக உயர்ந்த நிலையினை அடைந்த அன்னை மரியாள் போல நாமும் அருளிலும் அன்பிலும் வளர அருள் வேண்டுவோம். இயேசுவின் திரு இருதய விழாவையும் , அன்னை மரியாளின் மாசற்ற இருதய விழாவையும் மகிழ்ந்து கொண்டாடிய நாம் அவர்களின் இருதய அன்பில் சிறக்க அருள் வேண்டுவோம். நமக்குள்ளும் நம் உணர்வுகளுக்குள்ளும் ஒளிந்து விடாது நம்மை நாமே வெளிக்கொணர்வோம். ஒளிய இடம்தேடாது, ஒளி வீச இடம்தேடுவோம் இறைவன் அருள் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தார் அனைவர் மீதும் இருப்பதாக ஆமென்.