இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டவரின் திருவுடல் திரு இரத்தப் பெருவிழா.

உயிருள்ள உணவாய் உடன் வருவாயே!!!!

முதல் வாசகம்: விடுதலைப் பயணம் 24,3-8
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 116
இரண்டாம் வாசகம்: எபிரேயர் 9,11-15
நற்செய்தி: மாற்கு 14,12-16.22-26

நாம் உண்ணுகின்ற உணவுகள் அனைத்துமே உயிரற்ற உணவுகள். உயிரோடு இருப்பதைக் கொன்று உண்கிறோம். அது செடி கொடியானாலும் சரி, விலங்கினமாக இருந்தாலும் சரி. அதை நாம் உண்ணும் போது அதிலுள்ள சத்துக்கள் நம் உடலினுள் சென்று உடலுக்கு பலத்தையும் நலத்தையும் தருகின்றன. உயிருள்ள ஒன்று உயிரற்றதாக மாறி, உடலுக்கு உயிர் தருகிறது. ஆனால் இயேசு தரும் உணவு உயிருள்ள உணவு. உண்பதற்கு முன், உண்ணும்போது, உண்ட பின் என எல்லா நேரமும் உயிருள்ள உணவாக மாறி நமக்கு ஊட்டம் தருகிறது. நாம் தான் அதை உணர்வதில்லை. ஆண்டவரின் திருஉடல் திரு இரத்தப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் அந்த உயிருள்ள உணவின் உடனிருப்பை உணர்ந்து கொள்ள இன்றைய நாளின் வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. 
இன்றைய  நற்செய்தி வாசகத்தில் இயேசு தனது சீடர்களுடன் பாஸ்கா விருந்து உண்ணும் பகுதி இடம் பெற்றிருக்கிறது. அவரது பணிவாழ்வுக்குப் பின் சீடர்களோடு அவர் கொண்டாடிய இந்த விருந்தே, நமது கிறிஸ்தவ வாழ்வின் மையமாக அமைந்துள்ளது. பல இடங்களில் அப்பமும் மீனும் கொண்டு புதுமைகள் பல நிகழ்த்தி இருந்தாலும், தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றி இருந்தாலும் அந்த இடங்களில் எல்லாம் சொல்லாததை இந்த பாஸ்கா விருந்தின் போது சொல்கிறார். இது என் உடல் என் இரத்தம் என்று அப்புதுமைகளின் போது சொல்லி இருந்தால் இன்று நமது நற்கருணை வழிபாட்டு முறையே மாறி (கானாவூர்த் திருமணம், மீன்பிடித்திருவிழா, திபேரியக் கடல் மீன்பாடு, புல்வெளியில் பந்தி) இருந்திருக்கும். ஆனால் இயேசு நம்பிக்கை கொண்ட சீடர்கள் மத்தியில் மட்டுமே அப்பம் பிட்டு, இது என் உடல், இது என் இரத்தம் என்று சொல்கிறார். ஏனெனில் ஐயாயிரம் பேருக்கு உணவு அளித்த போதோ, கானாவூர் திருமணத்தில் திராட்சை இரசம் புதுமை செய்த போதோ, அங்கிருந்த அனைவரும் நம்பிக்கை உடையவர்களாய் இல்லை. கூடியிருந்த அனைவரும் பல்வேறு நோக்கங்களுக்காய் கூடி இருந்தனர்.  உணவிற்காக, உறவிற்காக, உறவினர்க்காக, உடல் நலத்திற்காக, என்று பல நோக்கங்கள் இருந்திருக்கலாம். ஒரு சிலருக்கே இயேசுவைப் பற்றிய ஒரு புரிதல், நம்பிக்கை இருந்திருக்கும். எனவே தான் இயேசு தான் விரும்பி அழைத்துக் கொண்ட பன்னிரு சீடர்கள் மத்தியில் தன்னை பலியாக அளிக்கின்றார். ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் இயேசுவின் செயலுக்கான காரணத்தையும் அவர் சொன்ன வார்த்தையின் ஆழத்தையும் புரிந்து கொள்கின்றனர். அவரது உடலை உண்டு இரத்தத்தை குடித்து நிலை வாழ்வு பெறுகின்றனர். 
இந்த பாஸ்கா உணவு உண்ண இயேசு சீடர்களை தயாரிக்கும் முறை மிகவும் வித்தியாசமானதாக இருக்கிறது. ஆர்வத்தைத் தூண்டுதல், பின்செல்லல்,கேட்டறிதல்,கண்டறிதல்,தொடுதல், உள்வாங்குதல் என பல நிலைகளில் தம் சீடர்களைத் தயார் படுத்துகிறார். இதனை புற தயாரிப்பு அகத் தயாரிப்பு என்று இரு நிலைகளில் வகைப்படுத்தலாம்.
(அ) வருடா வருடம் கொண்டாடும் விழா தானே எப்படி எங்கு கொண்டாடினால் என்ன என்று இருந்து விட அவர்களை விடவில்லை. மாறாக அவர்களுக்குள்ளே அந்த ஆர்வத்தைத் தூண்டுகிறார். சீடர்களே வந்து இயேசுவிடம் கேட்கிறார்கள், எங்கு இடம் ஏற்பாடு செய்யவேண்டும் என்று. விடுமுறை முடிந்து புதிய கல்வி ஆண்டு தொடங்கும் காலம். புதிய பள்ளி கல்லூரி, பணி மாற்றம் இடமாற்றம் என்று இருந்தால் நினைவு முழுவதும் அதுவாகவே இருக்கும். பலரின் பேச்சுக்களும் கருத்துக்களும் கதைகளும் கண்முன்னே படமாக ஓடி அந்த இடத்திற்கே நம்மை அழைத்துச்சென்று விடும். பலரிடமும் அதைப் பற்றிக் கேட்டு குறிப்புகளை சேகரிக்கும் மனநிலை அதிகரிக்கும் . இத்தகையதொரு ஆவலை சீடர்கள் மனதில் ஏற்படுத்துகிறார் இயேசு. 
பணி மேலும் இடத்தின் மேலும் பதவி மேலும் இருக்கும் நமது ஆர்வம், ஈடுபாடு நற்கருணை ஆண்டவர் மேல் உள்ளதா என்று சிந்தித்து பார்ப்போம்.
(ஆ) யார் எவர் என்று தெரியாத ஒரு மண்குடம் சுமந்த பணியாளரைப் பின் தொடரச் சொல்கின்றார். சீடர்கள் நகருக்குள் வந்து இயேசு சொன்ன அந்த மனிதரை சரியாக அடையாளம் காண்கின்றனர். தாங்கள் வந்த வழியை விட்டு எதிர்த்திசையில் தங்கள் பயணத்தை மாற்றி அமைக்கின்றனர். யார் என்று தெரியாது, எங்கிருந்து வருகின்றார், எங்கு செல்வார் என்று எதுவும் தெரியாது இருப்பினும் பின் தொடர்கின்றனர்.
கிறிஸ்தவ வாழ்வுக்கு நம்மை அழைத்துச் செல்லும் அருட்பணியாளர்களும் ஒரு விதத்தில் இந்த மண் குடம் சுமந்த பணியாளர்கள் போலவே. அவர்கள் பணியை அவர்கள் செய்கின்றார்கள். நாம் தான் அவர் யார் எப்படி பட்டவர், என்ன பணிசெய்கிறார் எங்கிருந்து வருகின்றார், எங்கு செல்கின்றார் என்று விசாரிப்பதிலேயே நம் கவனத்தையும் ஆற்றலையும் செலவிடுகின்றோம். விளைவு எங்கு செல்ல வேண்டுமோ அங்கு செல்ல வழி தெரியாது, யாரைப் பின்பற்ற வேண்டும் என்று விடை தெரியாது தவிக்கிறோம்.
(இ) சீடர்கள் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் நகர்ப்பகுதிக்குள் வருகின்றனர். வெளிப்புறத்தில் இருந்து உட்புறத்திற்கு வருகின்றனர். 
நாம் நமது வெளியுலக வாழ்வை விட்டு நம் உள் மனம் என்னும் நகருக்குள் செல்ல அழைப்புவிடுக்கின்றார். 
(ஈ) பணியாளரின் உரிமையாளரைச் சந்திக்கின்றனர். அவரின் வார்த்தைகளுக்கு செவிமடுக்கின்றனர். இதனால் இடத்தைக் கண்டறிகின்றனர். திடிரென்று இருவர் வந்து விழா கொண்டாட இடம் கேட்கின்றனர். உரிமையாளரும் இடத்தைக் காட்டுகின்றார். ஏற்கனவே இயேசுவால் முன்னேற்பாடு செய்யப் பட்ட அறையாக இருந்தால் அவர் முகவரி அல்லவா சொல்லி இருந்திருப்பார் சீடர்களுக்கு. இப்படி பணியாளரை பின் தொடர்ந்து செல்லுங்கள் என்று சொல்லி இருந்திருக்க மாட்டார் அல்லவா? ஆக முன்னேற்பாடு செய்யப்பட்டது அறை அல்ல மனித மனங்கள். விட்டின் உரிமையாளர் அவர் வீட்டை ஆண்டவர் இயேசுவிற்கு கொடுக்க எந்த நேரமும் தயாராக இருக்கிறார்.   
நாம் எல்லோரும் எல்லோரையும் நம் வீடுகளில் தங்க அனுமதிப்பது இல்லை. சிலர் முன்னமே அனுமதி கேட்டாலும் மறுக்கப்படுகிறது. சிலர் திடிரென்று வந்து கேட்டாலும் சகல வசதிகளுடன் இடம் கொடுக்கப்படுகிறது. இதற்கு பேர் பாரபட்சம் அல்ல ஒருவர் மற்றவரின் குண நலன் நம்மில் ஏற்படுத்தும் தாக்கம். விருந்தினர்களே ஆனாலும் இவர்கள் வந்தால் சந்தோஷம், இவர்கள் வந்தால் தோஷம் என்று நினைக்கிறோம். நமக்கு  மிகவும் பிடித்தவர்கள் நமது வீட்டுக்கு வருகிறார்கள் என்றால் நமது செயல்களிலே ஒரு புத்துணர்ச்சி மாற்றம் இருக்கும். வீடே புதுப் பொலிவுடன் இருக்கும். அதுவே விருப்பமில்லாதவர்கள் வந்தால் வராத நோய் கூட வந்து ஒட்டிக் கொண்டது போல் நமது செயல் பாடுகள் இருக்கும்.
நற்கருணை ஆண்டவரை அனுதினமும் உட்கொள்ளும் நாம் நமது உள்ளம் எனும் வீட்டை தயார் நிலையில் வைத்திருக்கிறோமா என்று சிந்திப்போம்.
(உ) புற தயாரிப்பு இந்நிலையில் இருக்க அகத் தயாரிப்பு நிலை அப்பம் உண்ணும் முன் தொடங்குகிறது. சீடர்கள் இயேசுவோடு பந்தியில் அமர்கிறார்கள் அவரது உடனிருப்பை உணர்கிறார்கள். அவரது செயல்பாடுகளைக் கண்களால் கண்டும் அவரது வார்த்தைகளைக் காதுகளால் கேட்டும், தெளிவு பெறுகின்றனர். அவர் ஆசீர்வதித்து கொடுத்த அப்பத்தையும் இரசத்தையும் கைகளால் தொட்டு உண்கின்றனர். அவரது உடலை உள்வாங்குகின்றனர். உள்ள நலன் பெறுகின்றனர். பரவசம் அடைகின்றனர். மறு இயேசுவாக மாறி ஆனந்தத்தில் பாடல் பாடி மகிழ்கின்றனர். உயிருள்ள உணவாக அவர்கள் உடலில் இயேசு வாழ்ந்ததினால் அவர்களது வாழ்வு புது வாழ்வாக மாறியது. நாம் அனுதினமும் நற்கருணையை உண்கிறோம் ஆனால் அதை இயேசுவின் உடலாக உயிருள்ள உடலாக எண்ணுவதில்லை. சாதாரண ஒரு அப்பமாக எண்ணுவதினால் நமது வாழ்வில் மாற்றம் ஏற்படுவதில்லை. என்று ? நாம் அவரை உயிருள்ள உணவாக உட்கொள்கிறோமோ அன்று தான் நமது வாழ்விலும்  எண்ணற்ற மாற்றங்கள் நிகழும். 
பழைய ஏற்பாட்டில் தந்தை இறைவனோடு இஸ்ரயேல் மக்கள் கொண்ட உடன்படிக்கையை மோசே ஆடு மாடுகளின் இரத்தம் கொண்டு கடவுளுக்கு பலி செலுத்தினார். 
புதிய ஏற்பாட்டில் இயேசு மக்களின் மீட்பிற்காக தன் இரத்தத்தை சிந்தி பலியினை நிறைவேற்றினார். 
நிகழ் ஏற்பாட்டில் மண்ணின் நலனுக்காக, எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்விற்காக எம் தலைமுறையினர் இரத்தம் சிந்திக் கொண்டிருக்கின்றனர்.
மோசே இஸ்ரயேல் மக்களின் இளைஞர்களை பலி செலுத்த அனுப்பி வைத்தார். இங்கோ எம் இளைஞர்கள் பலிப் பொருளாகவே மாறி விட்டனர். அன்று மோசே ஆட்டின் இரத்தத்தை பலி பீடத்தின் மீது தெளித்து உடன்படிக்கையை நிருவினார். இன்றோ இளைஞர்களின் இரத்தத்தின் மேலே இந்த மண்ணின் மீட்பிற்கான சட்டம் இயற்றப்பட இருக்கிறது. இயேசுவின் உயிருள்ள உடலை உண்டு அவர் போல மக்களுக்காக இரத்தம் சிந்திய இவர்கள் வாழ்வு சொல்லும் நாம் அனைவரும் உயிருள்ள இறைவனின் உயிர்த் தசைகள் என்று. திரு உடல்திரு இரத்தப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்நாள் நாம் அனைவரும் அந்த உடலின் சிறு தசைகள் என்பதை இந்த உலகுக்கு சொல்லவே. இன்று நம் உள்ளங்களில் நாம் ஏந்தும் கிறிஸ்துவின் திரு உடல் நம்மிலும் நம்மை சுற்றிலும் ஒரு சில மாற்றத்தையாவது கொண்டு வரட்டும் . அவரது உடல் நம் உடலோடு கலந்து நம்மையும் அவரைப் போல் மாற்றுகிறது என்று நம்புவோம். உயிருள்ள உணவாய் உடன் வரும் இயேசுவை கண்டு கொள்வோம். இறைவனின் அருளும் ஆசீரும் என்றும் நம் ஓவ்வொருவர் மேலும் இருந்து நம்மை வழிநடத்துவதாக ஆமென்.