இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

விண்ணேற்றப் பெருவிழா

பறைசாற்றுங்கள்... பணியாற்றுங்கள்....

திருத்தூதர் பணிகள் . 1:1-11,
எபேசியருக்கு எழுதிய திருமுகம் 4: 1-13,
மாற்கு எழுதிய நற்செய்தி 16:15-20)

பறைசாற்றுங்கள்... பணியாற்றுங்கள்.... மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா ம.ஊ.ச. "உலகைப் பார்த்து வாழ்பவன் சாதாரண மனிதன். உலகமே பேசுமளவிற்கு வாழ்பவன் சாதனை மனிதன்" அவ்வகையில் இயேசு சாதனை மனிதராக இன்றைய நற்செய்தியின் மூலம் நமக்கு காட்சி தருகின்றார். தந்தைக் கடவுள் கொடுத்த பணியைச் செவ்வனே செய்து முடித்து மகிழ்வுடன் அவரிடமே திரும்பும் தருணம் இது. விண்ணுலகிலிருந்து மண்ணுலகிற்கு மனிதனாய் பிறப்பெடுத்து வந்தவர், மக்களின் மனங்களைக் கொள்ளை கொண்டு விண்ணுலகிற்கே மீண்டும் திரும்புகிறார். உடலோடும் ஆன்மாவோடும் விண்ணேற்றம் அடைந்த இயேசு, உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள், பணியாற்றுங்கள் எனும் அன்பு வேண்டுகோளினை நமக்கு விடுக்கிறார். பறைசாற்றுங்கள் பணியாற்றுங்கள். இயேசு பாடுபட்டு இறந்து, உயிர்த்த நாற்பதாம் நாள் விண்ணேற்றம் அடைகிறார். இந்த நாற்பது நாட்களும் சீடர்களோடு உடனிருந்து அவர்களைத் திடப்படுத்துகிறார். நாற்பது நாட்கள் என்பது விவிலியத்தில் ஒரு முழுமையின் அடையாளத்தைக் குறிக்கிறது என்பதை நாம் நன்கறிவோம். இஸ்ரயேல் மக்களின் பாலைவனப் பயணம், தாவீது மன்னரின் ஆட்சி, என நாற்பது ஆண்டுகளுக்கான சான்றுகள் விவிலியத்தில் பல உள்ளன. அதன்படி நமது திருச்சபையின் ஆண்டு சுழற்சியிலும் காலங்களை, திருவருகைக்காலம், தவக்காலம், உயிர்ப்புக்காலம் என நாற்பது நாற்பது நாட்களாக பிரித்துவைத்திருக்கின்றது. இதன் மூலமாக கிறிஸ்துவின் வாழ்வோடு இன்னும் அதிகமாக ஒன்றிக்க நமக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. இயேசு உயிர்த்த பின் நாற்பது நாட்களும் தன் அன்புச்சீடர்களுடன் பயணிக்கிறார். சீடர்களும் அவர் சொல்லையும் செயலையும் கூர்ந்து கவனிக்கின்றனர். அவரோடு மூன்றாண்டுகள் உடன் பயணித்த போது இல்லாத விழிப்புணர்வு, இந்த நாற்பது நாட்களில் அவர்களிடத்தில் அதிகமாகக் காணப்படுகிறது. எப்படியெனில் இயேசு உயிர்த்த போது அனைவரும் ஒரே இடத்தில் இல்லை. வெவ்வேறு இடங்களில் இருந்து, செய்தி கேட்ட பின் ஒன்றாகக் கூடினர். ஆனால் விண்ணேற்றத்தின் போது இயேசுவின் முன் அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்று கூடி இருக்கின்றனர். இயேசுவே அவர்களை அவ்விடத்திற்கு அழைத்திருந்தாலும் கூட, எளிதில் தொடர்பு கொள்ளுமளவிற்கு அவர்கள் ஒற்றுமையாக உறவோடு இருந்திருக்கின்றனர். முன்னர் இருந்ததை விட அதிக மாற்றத்தை அவர்கள் தங்களுக்குள் காண்கின்றனர். இயேசு இன்னும் சிறிது காலமே தங்களுடன் இருப்பார் என்பதை நன்கு உணர்ந்த அவர்கள் மிகவும் கவனத்துடன் அவர் குரலுக்கு செவிமடுக்கின்றனர். (ஆண்டு முழுவதும் படிக்காமல், இறுதித்தேர்வுக்கு முன் அரை நிமிடத்தைக் கூட வீணாக்காமல் முட்டி மோதி படிக்கும் மாண்வர்கள் போல). பள்ளி நிறைவு நாளில் பணி மாற்றமாகிச் செல்லும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுரைக் கூறிச்செல்வது போல இயேசு சீடர்களுக்கு ஆசீர் அளிக்கிறார். சீடர்களும், இது தான் இவர் நமக்கு தரும் கடைசி செய்தி, கட்டளை என்பது போல மிக கவனமுடன் செவிமடுக்கின்றனர். அதன்படியே தங்கள் வாழ்வை மாற்றி அமைக்கின்றனர். தூய வாழ்வு வாழ்ந்து தூய்மையில் மிளிர்கின்றனர். நாம் இயேசுவின் குரலுக்கு செவிமடுக்கிறோமா? எப்போது? ஐம்புலனும் ஐந்து குணமும்: இயேசுவின் விண்ணேற்றம் அவர் தம் இக்கால சீடர்களாகிய நமக்கு விடுக்கும் செய்தி என்ன? நம்பிக்கையோடு திருமுழுக்கு பெற்றவர், மீட்படைவர். நம்பிக்கையற்றோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர் என்கிறார். நாம் அனைவரும் திருமுழுக்கு பெற்றவர்கள். ஆனால் நம்பிக்கையோடு திருமுழுக்கு பெற்றோமா? மீட்படைவோமா? என்பது நம்மிடம் நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரு கேள்வி. நாம் நம்பிக்கையோடு திருமுழுக்கு பெற்றவர்கள் எனில், பேயோட்டும் வல்லமை, புதிய மொழிகள் பேசும் திறமை, கொடிய விலங்குகளோடு உறவாடும் யுக்தி, நஞ்சுள்ள உணவை உண்ணும் சக்தி, நோயாளிகளைக் குணப்படுத்தும் குணம் ஆகிய ஐந்தும் நம்மிடம் இருக்கும் என்கிறார். இவைகள் ஐந்தும் நம்மிடம் உள்ளதா? பிரபஞ்சத்திற்கு எப்படி நிலம் நீர் காற்று ஆகாயம் வானம் எனும் ஐந்தோ அது போல மனிதனுக்கும் மெய் வாய் கண் மூக்கு செவி எனும் ஐம்புலன்களும் மிகவும் முக்கியம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் மனிதன் ஐம்புலன்களின் இன்பத்திற்காக ஐம்பூதங்களையும் மாசுபடுத்துகிறான். விளைவு ஐம்பூதங்களோடு ஐம்புலன்களும் பாதிப்படைகின்றன. இயேசுவின் நற்செய்தியைப் பறைசாற்றி மக்களை மனம் திருப்ப தயாரான சீடர்கள் முதலில் தங்களுக்குள் மாற்றம் பெற்றனர். ஐம்புலன்களிலும் வல்லமை பெற்று பிறரையும் வல்லமை பெற தயார்படுத்தினர். அன்று கலிலேயாவில் அவரால் அழைக்கப்பட்ட சீடர்கள் முழுமாற்றம் அடைய வேண்டுமென அவர் விரும்பினார். அது போல சீடர்களும் மாற்றம் அடைந்தார்கள். நாமும் மாற்றம் அடைய வேண்டும் என்பது அவரது விருப்பம். சாதாரண மாற்றமல்ல. முழுமனதோடு, நம்பிக்கையோடு, ஐம்புலன் ஒடுக்கத்தோடு கூடிய மாற்றம். பேய்களை ஓட்டுவர்: (கண்) கண் தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் எல்லாம் நலமாயிருக்கும். நாம் வாழுகின்ற சமுதாயத்தைப் பார்க்கும் பார்வையிலே குறைபாடுடையவர்களாக இருக்கிறோம். இனம், சாதி, ஏற்றாத்தாழ்வு, பாகுபாடு என ஏராளமான பிரிவினைகள் பேய்களாக மாறி நம் பார்வையைக் குறைபாடுடையதாகச் செய்கிறது. இவற்றை எல்லாம் கண்ணாலேயே விரட்டி விட வேண்டும் . எதை ஒன்றை ஆர்வமுடன் நாம் பார்க்கிறோமோ , அது ஒரு நாள் நமக்குள் புகுந்து நம்மையும் அது போல் செய்யத் தூண்டிவிடும் . எனவே இது போன்ற தீமையான பேய் குணங்களை பார்க்காது கண்ணாலே விரட்டி ஓட்டுபவர்களாக நாம் இருக்க வேண்டும். புதியமொழி பேசுவர்: (வாய்) அன்பு மொழிக்கு ஈடாக எந்த மொழியும் கிடையாது. பகைவனை நண்பனாக்கும் வல்லமையும், கோழையை வீரனாக்கும் வல்லமையும் அன்பு மொழிக்கு உண்டு. இத்தகைய அன்பு மொழி பேசி மக்கள் அனைவரையும் ஒன்றிணைப்பவர்களாக நாம் இருக்க வேண்டும் . கொடிய விலங்கினைக் கையால் பிடிப்பர்: (வாசனை) எறும்புகள் வரிசையாக செல்லும் போது ஒரு விதமான திரவத்தை சுரந்து தனது பாதச்சுவடுகளில் விட்டுச்செல்லுமாம். அது அதன்பின் வரும் மற்ற எறும்புகளுக்கு பாதை காட்டும் வழித்தடமாக மாறும் என்பது செய்தி. விலங்குகள் பூச்சிகள் இப்படியாக வாசனை மூலம் தங்களை பிறருக்கு அடையாளப்படுத்துகின்றன. மனிதர்களையும் அவரவர் உபயோகப்படுத்தும் வாசனை திரவியம் மூலமாக நாம் கண்டு கொள்கிறோம். வெளிப்புறத் தோற்றத்தை, அடையாளத்தை திரவியம் மூலம் அறியலாம். ஆனால் எண்ணங்களின் வாசனையை எப்படி அறிய முடியும்? நாம் வாழுகின்ற சமூகத்திலே எண்ணங்களினால் செயல்பாடுகளினால் கொடியவர்களாக, விலங்கை விட தரம் தாழ்ந்தவர்களாக பலர் இருக்கின்றனர். அவர்களோடு கை குலுக்கி உடன் பணி செய்யும் நிலை நமக்கு ஏற்படலாம். அப்படி ஒரு நிலை வந்தாலும் அவர்களது கொடிய எண்ணம் நமது நல்லெண்ணத்தை பாதிக்காதவாறு நாம் இருக்க வேண்டும். நஞ்சுள்ள உணவை உண்டாலும் தீங்கிழைக்காது: (செவி) செவிக்குணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் உணவு கொடுக்கப்படும் என்று திருவள்ளுவர் தனது குறளில் இரண்டு வகை பசியைப் பற்றிக் கூறி இருப்பார். எவ்வளவு தான் நாம் நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்து செய்தாலும் சிலரது அவதூறான , எதிர்மறையான, தீய வார்த்தைகள் நம் காதுகளை எட்டாதவாறு நாம் பணியாற்ற வேண்டும். நல்லவற்றை மட்டும் கேட்க பழக வேண்டும். உடல் நலமற்றவர் சுகம் பெறுவர்: (மெய்) உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்பார் திருமூலர். உடல் அனைத்து உறுப்புகளின் வாசஸ்தலம். உறுப்புகளில் ஏதாவது குறை அல்லது காயம் ஏற்பட்டால் மொத்த உடலும் சோர்வடையும். அது போல நமது எண்ணம் சொல் செயல் செவிமடுத்தல், போன்றவற்றில் குறைவோ பாதிப்போ ஏற்படும் போது நமது மனம் என்னும் உடல் பாதிப்படைகிறது. தீமையை கண்ணால் அகற்றி, வாயால் அன்பு மொழி பேசி, தீயவர்களின் சிந்தனையை நுகர்ந்து, எதிர்மறையான வார்த்தைகளுக்கு செவி கொடுக்காது வாழ்ந்து உடல் உள்ள பூரண நலம் பெற்று வாழ வேண்டும் இவ்வாறாக ஐந்து பண்புகளையும் பெற்று நாம் வாழ வேண்டும் என விண்ணேற்றமடைந்த இறைவன் விரும்புகிறார். இப்பண்புகளை ஆசீராகப் பெற்று உலகெங்கும் பறை சாற்ற நம்மை அழைக்கிறார். பறைசாற்றுங்கள் பணியாற்றுங்கள் என்கிறார். பறப்பது பறவையின் இலக்கு என்றால் சிறகுகள் பிரிவது தோல்வி அல்ல, தொடக்கம். உயிர்த்த இயேசு சீடர்களை விட்டுப் பிரிந்தார், விண்ணுலகம் சென்றார். பறவைகள் போல நாம் உயரப் பறக்க அவர் நமக்கு சிறகுகளாய் இருந்தார். அவர் நம்மை விட்டுப் பிரியவில்லை என்றும் நம் உடனிருக்கிறார். நம்பிக்கை வாழ்வு என்னும் வானில் பறக்க சிறகுகளாய்ப் பிரிவோம். விண்ணேற்றமடைந்த விமலனாம் இயேசுவின் ஆசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தார் அனைவர் மீதும் இருப்பதாக ஆமென் அனைவருக்கும் விண்ணேற்றப் பெருவிழா நல்வாழ்த்துக்கள் ...