இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பாஸ்கா காலம் ஆறாம் வாரம்

அன்பெனும் நட்பில் மகிழ்வோம்.

திருத்துதர் பணிகள் 10:25-26, 34-35
1 யோவான் 4:7-10
யோவான் 15: 9-1

பாஸ்கா காலத்தின் ஆறாம் வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் நம்மை அன்பெனும் நட்பில் மகிழ இன்றைய வாசகங்கள் மூலம் அழைக்கிறார் இறைவன். அன்பு,நட்பு,மகிழ்ச்சி இவை மூன்றும் மனித வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானவை.
தந்தை இறைவனின் பண்பு இஸ்ரயேல் மக்கள் மீது இரக்கமாக/அன்பாக வெளிப்பட்டது.
இயேசுவின் குணம் தம் சீடர்கள் மேல் நட்பாக வெளிப்பட்டது.
தொடக்ககால கிறிஸ்தவர்கள், மற்றும் புனிதர்களின் குணம் அவர்கள் வாழ்வில் மகிழ்வாக வெளிப்பட்டது. ஆக அன்பு, நட்பு, மகிழ்ச்சி எனும் பண்புகளில் குணங்களில் நாம் வளர்வது நமக்கு கொடுக்கப்பட்டுள்ள கடமைகளில் ஒன்று என்று சொன்னால் அது மிகையாகாது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு, என் அன்பில் நிலைத்திருங்கள், என் கட்டளைகளைக் கடைபிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள் என்கிறார். கட்டளை என்றால் என்ன? ஒரு தலைவன் அல்லது ஒரு அரசன் தனக்கு நன்மை விளையும் ஒன்றை தான் பெற, தனக்கு கீழே இருப்பவர்களிடம் செய்யச்சொல்லும் ஒரு வேலை. இதில் கட்டளைகளை நிறைவேற்றுபவர்களுக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது கட்டாயம் செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். இதனால் தலைவனுக்கு/அரசனுக்கு நன்மை உண்டாகும். பணியாளர்களுக்கு இதனால் ஒரு பயனும் இல்லை. ஆனால் இயேசு நம்மை பணியாளர்களாக அல்ல நண்பர்களாக அழைக்கிறார். ஒருவர் மற்றவரை அன்பு செய்யுங்கள் என்பதே அவர் நமக்கு விடுக்கும் கட்டளை. அவரது கட்டளைகளை நிறைவேற்றினால் அதன் பயன் அவர் தம் நண்பர்களாகிய நமக்கும் உண்டு. மற்றவர்களை அன்பு செய்வதன் மூலம் இறைவனின் கட்டளைகளை கடைபிடிப்பவர்கள் எனும் நல்ல தகுதியைப் பெறுபவர்களாகிறோம். பிற மனிதர்களை அன்பு செய்வதால் அவர்களிடம் இறைவனைக் காணும் பேறுபெற்றவர்களாகிறோம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.
பழைய ஏற்பாட்டில் யாவே இறைவன் இஸ்ரயேல் மக்கள் மேல் தான் கொண்டிருந்த அன்பை வெளிப்படுத்த, அவர்களோடு எந்நாளும் உறவோடிருக்க, பத்துக் கட்டளைகளை மோயீசன் மூலமாக கொடுத்தார். பத்துக்கட்டளைகளையும் இரண்டு கட்டளைகளில் சுருக்கி, எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனை நேசி, தன்னைத் தான் நேசிப்பது போல பிறரையும் நேசி என்று கூறி, அன்பில் அதனை நிலைநிறுத்துகிறார். புதிய ஏற்பாட்டு இயேசுவோ அதனை தனது வாழ்வால் எண்பித்துக் காட்டுகிறார். ஆக அனைத்திற்கும் மூல காரணம் அன்பே என்று ஆதியாகமம் முதல் திருவெளிப்பாடு வரை உள்ள அனைத்து இறை நூல்களும் கூறுகின்றன. நாம் அன்பு செய்கிறோமா? எப்படி செய்கிறோம் ?
நான் அனைவரையும் அன்பு செய்கிறேனா? என்று சிந்திப்பவர்களை விட என்னை யாராவது அன்பு செய்கிறார்களா? என்று ஏங்குபவர்களின் எண்ணிக்கை தான் இப்போது அதிகமாகிக் கொண்டிருக்கிறது. விளைவு அலைபேசியில் குறுஞ்செய்திகளையும் அழைப்புகளையும் எதிர்பார்ப்பவர்களாக மாறிக் கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்டவர்களை அன்புக்காக ஏங்குபவர்கள் என்கிறோம். ஆனால் உண்மையில் இவர்கள் அன்புக்காக ஏங்குபவர்கள் அல்ல. பிறரின் கவனத்தை ஈர்க்க விரும்புபவர்கள். என்னைப் பார்க்க மாட்டார்களா? என்னிடம் பேச மாட்டார்களா? என்று, அவர்கள் கவனம் என்னை நோக்கி திரும்பாதா? என்றே ஏங்குகிறார்கள். உண்மையான அன்பை மற்றவரிடத்தில் காட்டுபவர்கள் ஒரு நாளும் இவ்வாறு எண்ண மாட்டார்கள், ஏங்க மாட்டார்கள். அன்பு கொடுக்க கொடுக்க சுரக்கும் நீர் கேணி போன்றது என்று நன்கு அறிந்து அவர்கள் செயல்படுவார்கள்.
சிறு குழந்தை முதலே நம்மையும் அறியாமல் இந்த கவன ஈர்ப்பு விளையாட்டை நாம் விளையாட ஆரம்பிக்கிறோம். குழந்தைப் பருவத்தில், நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தை திடீரென்று அழுது ஆர்ப்பாட்டம் செய்து தாய் தந்தையரின் கவனத்தை தன்பக்கம் திருப்புவது. பள்ளிப்பருவத்தில், மாணவர்கள் ஏதாவது சேட்டைகள் செய்து, ஆசிரியர் மற்றும் அனைத்து மாணவர்களின் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்ப்பது. இளம் பருவத்தில், சிகை அலங்காரம் உடை அலங்காரம் முக அலங்காரம் செய்து எதிர் பாலாரின் கவனத்தை கவர்வது. முதிர் வயதில், தங்களது புலம்பல்கள் மற்றும் பழைய கதைகள் மூலமாக மற்றவர்களின் கவனத்தை தங்கள் பக்கம் தக்கவைத்துக் கொள்வது. இப்படியாக நாம் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் எப்போதோ சில தருணங்களில் அன்புக்காக ஏங்குபவர்களாக இருந்திருக்கிறோம். சிலர் அன்பைப் பெறும் நிலையில் இருந்து முன்னேறி, அன்பைக் கொடுப்பவர்களாக மாறி இருக்கிறோம் . சிலர் இன்னும் அன்பைப் பெறும் நிலையிலேயே நின்று கொண்டு மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். பல நேரங்களில் சிலருடைய அளவுக்கதிகமான அன்பு முதலில் பிரமிக்கப்பட்டு, ரசிக்கப்பட்டு,பின்பு தொல்லையாகி சலிக்கப்பட்டு, இறுதியில் உதாசீனப்படுத்தப்பட்டு பின் உதறித்தள்ளப்படுகிறது. நம்முடைய அன்பு அப்படி ஆகிவிடக் கூடாது என்பதற்காகத் தான் இயேசு தன்னை உதாரணமாகக் காட்டுகிறார். தனக்கும் தந்தை இறைவனுக்கும் இடையே உள்ள அன்பு உறவைப் போல நமது அன்பு உறவுகள் இருக்க வேண்டும் என்று முன்மாதிரி காட்டுகிறார். அன்பைக் கொடுப்போம் அன்பைப் பெறுவோம்.கொடுப்பது சிறிது என்று எண்ணித்தயங்க வேண்டாம் பெறுபவருக்கு அது பெரியதாகக் கூட இருக்கலாம்.
நட்பிற்கு இலக்கணமாய் வாழ்ந்து, நண்பர்களான நமக்காய் தன் உயிரையே தந்தவர் இயேசு. நம் அனைவருக்கும் நண்பர்கள் உண்டு. ஆனால் நல்ல நண்பர்கள் ஒரு சிலருக்கே உண்டு. நண்பர்கள் நம் வாழ்வில் நடந்த அனைத்து நல்ல நிகழ்வுகளையும் நன்கு அறிவார்கள். ஆனால் நல்ல நண்பர்கள் சிறந்த நண்பர்கள் மட்டுமே அந்த நல்ல நிகழ்வுகளுக்கு காரணமானவர்களாகவும், அந்த நிகழ்வில் வாழ்ந்தவர்களாகவும் இருப்பர். பல நேரங்களில் நாம் நல்ல நண்பர்களை தேடி அலைகிறோம். அவர்கள் எங்கு இருப்பார்கள் எப்படி இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பதை விட்டு விட்டு நாம் நல்ல நண்பர்களாக மாறுவோம். பின்னர் சிறந்த நண்பர்கள் நமக்கு தானாக கிடைப்பார்கள். நண்பர்கள் நிலைக்கண்ணாடி போன்றவர்கள்.
நமது முக அழகை, உடையை சரி செய்ய உதவுவது கண்ணாடி.
நமது நிறை குறைகளை சரி செய்வது நண்பர்கள்.
இரும்பு மரச்சட்டம் கொண்டு விளிம்புகள் காக்கப்படுவது கண்ணாடி.
நம்பிக்கை என்னும் பண்பு கொண்டு காக்கப்படுவது நட்பு.
ஒருபுறம் பாதரசம் பூசப்பட்டு மறுபுறம் பிம்பம் பிரதிபலிப்பது கண்ணாடி.
தன்னை மறைத்து நம்மை பிரதிபலிக்கச் செய்வது நண்பர்கள்.
எனவே நல்ல நண்பர்களை நாடி தேடுவதில் நேரத்தை செலவழிக்காது நாமே நல்ல நண்பர்களாக மாற அழைக்கிறார் இயேசு.
இறுதியாக, மகிழ்ச்சி எல்லோராலும் விரும்பப்படும் ஒன்று. யாரும் மகிழ்ச்சி எனக்கு தேவையில்லை என்று கூறுவதில்லை. மனிதர்களாகிய நாம் அனைவரும் கஷ்டப்பட்டு, படித்து, வேலை தேடி சம்பாதிப்பது எதற்காக என்று கேட்டால்,கடைசி காலத்தில் மகிழ்ச்சியாக வாழ என்று சொல்வோம். ஆனால் பல நேரங்களில் பணத்தை சேமிப்பதற்காக வாழ்க்கையில் கிடைக்கும் சின்ன சின்ன சந்தோஷங்களை மகிழ்ச்சியை இழக்கிறோம். பணம் சேர்த்த பின்பு அந்த மகிழ்ச்சியைப் பெறுவதற்காக சேமித்த பணத்தை இழக்கிறோம். கடைசியில் இரண்டில் ஒன்று கூட எஞ்சி நிற்பதில்லை. வாழுகின்ற வாழ்க்கை ஒரு முறை தான். போகின்ற போக்கில் கிடைக்கின்ற மகிழ்ச்சியை மகிழ்ந்து விடவேண்டும். மகிழ்வைக்கொடுப்பவர்களாக நாம் மாற வேண்டும். எல்லா இடங்களிலும் மகிழ்வாய் இருக்க முடியவில்லையா? நாம் இருக்கும் இடத்தையாவது மகிழ்வால் நிரப்ப முற்படுவோம்.
நாம் வாழ்கின்ற வாழ்க்கை என்பது ஒரு புத்தகம் போல. முதல் பக்கம் கருவறையில் தொடங்கி கடைசி பக்கம் கல்லறையில் முடிவடைகிறது. இடையில் இருக்கும் பக்கங்களை அன்பாலும், நட்பாலும், மகிழ்வாலும் நாம் தான் நிரப்ப வேண்டும். ஏனெனில் நாம் கனி தர, கனி தந்து நிலைத்து நிற்க இயேசு விரும்புகிறார். ஆம் மகிழ்வெனும் கனி தர, அதில் நிலைத்து நிற்க அவர் நம்மை அழைக்கிறார். உயிர்த்து விண்ணேற்றம் அடையும் நாள் வரை தனது சீடர்களுக்கு காட்சி தந்து அவர்களை அன்பினால் திடப்படுத்தி, நட்பினால் நலப்படுத்தி, மகிழ்வாய் மனதார வாழ்த்தியவர் நம் அன்பர் இயேசு. அவரது விண்ணேற்பு பெருவிழாவிற்காகவும், தூய ஆவியின் வருகைக்காகவும் உள்ளங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் நம்மை அவரது அளவில்லாத அன்பினாலும் நிலைத்த நட்பினாலும் மறையாத மகிழ்வினாலும் நிரப்பி காப்பாராக. நபை நட்பை மகிழ்வைப் பெறுபவர்களாக அல்ல அதைக் கொடுப்பவர்களாக மாறுவோம். உயிர்த்த இறைவனின் அருளும் ஆசீரும் நம்மீதும் நம் குடும்பங்களில் உள்ள ஒவ்வொருவர் மீதும் நிலைத்து இருப்பதாக ஆமென்.