இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு

இணைப்பில் இருக்கின்றீர்களா?

திருத்தூதர் பணிகள் 9,26-31
1யோவான் 3,18-24
யோவான் 15,1-8

இன்று பலரும் பலரிடம் கேட்கும் கேள்விகளில் ஒன்று இது தான். பாலப்பருவ நண்பர்கள் முதல் பல்லாடும் முதுமைப்பருவ நண்பர்கள் வரை ஒருவர் மற்றவரை நலம் விசாரித்துவிட்டு, பிற நண்பர்களுடன் இன்னும் அவர்கள் இணைப்பில்  இருக்கிறார்களா? என்றே கேட்கிறோம். முன்னர் எல்லாம் அவரை உங்களுக்குத் தெரியுமா?என்று கேட்டால் , என்ன இப்படிக் கேட்கிறீங்க? நாங்கள் எல்லாம் இணைபிரியாத நண்பர்கள். ஒன்றாகப் படித்தோம், விளையாடினோம், உண்டோம் உறங்கினோம் என்று சொல்லி, அவரின் நல்ல குணாதிசயங்களில் ( திறமைசாலி, புத்திசாலி) ஒன்றிரண்டைக்கூறி மகிழ்ந்து பூரிப்போம். ஆனால் இன்றோ, அவரா? நல்லா தெரியுமே, அவர் தொலைபேசி எண் கூட என்னிடம் இருக்கிறது. வாட்ஸப், ஃபேஸ்புக் (புலனம் முகநூல்) எல்லாத்துலயும் இருக்காரு. எப்பவாவது ஏதாவது மெசேஜ் அனுப்புவாரு. நானும் பதில் அனுப்புவேன். பேசுனது இல்ல. ஆனா என்னோட இணைப்புல ( காண்டக்ட்) தான் இருக்காரு என்று கூறி முடிக்கிறோம். தொலை பேசி எண் நம் அலைபேசியில் இருந்தாலே அனைவரோடும் இணைப்பில் இருப்பதாக எண்ணிக்கொண்டிருக்கிறோம். முகம் தெரியாத நபர்களின் எண்களையும், அலைத்தொடர்பு இல்லாத எண்களையும் அழிக்க மனமில்லாமல் அப்படியே வைத்திருப்பவர்களில் நாமும் ஒருவராகிவிடுகின்றோம். மனிதர்களுடனான நமது இணைப்பும் உறவும் இவ்வாறு இயந்திர மயமாகி இருக்க , இன்றைய நற்செய்தியில் இயேசு நம்மை இயற்கை வழி இணைய அழைக்கிறார்.

இணைப்பு- இந்த சொல் எவ்வளவு அர்த்தமுள்ள ஆழமான சொல்லாக இருக்கிறது. இன்று நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் ஏதாவது ஒரு விதத்தில் ஒன்றுடன் இணைப்பில் இருக்கின்றன. அலைபேசி எல்லோரிடமும் இருக்கும் ஒரு பொருள் . அதற்கு இருவிதமான இணைப்பு தேவை. ஒன்று மின்சார இணைப்பு அல்லது  பேட்டரி எனப்படும் மின்கலத்தின் மின்னூட்டல். மற்றொன்று தொலை தொடர்பு அலைவரிசை. இது இரண்டில் ஏதேனும் ஒன்று இல்லாவிட்டாலும் அலை பேசி பயன்தராத ஒன்றாகிவிடும்.

 அது போல கிறிஸ்தவர்களாகிய நமக்கும் இரு வகையான இணைப்பு தேவை. திராட்சை செடி கொடி உவமையில் , தந்தைக் கடவுள் விவசாயி, அன்பர் இயேசு திராட்சைசெடி, நாம் அதன் கிளைகள். நமது அன்புச்செயல்கள் கனிகள். எனவே கிளைகளாகிய நமக்கு செடியோடு இணைதல், கனியோடு இணைதல் எனும் இருவகையான் இணைப்புகள் நிச்சயம் தேவை. இதில் ஏதாவது ஒரு இணைப்பு துண்டிக்கப்பட்டாலும் பாதிப்பு நமக்கு தான் என்பதை இன்றைய விவிலிய வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.

செடியோடு இணைதல்:

     செடியின் வளர்ச்சி அல்லது தரம் அதன் கிளைகளைக் கொண்டே அறியப்படும். கிளைகளில் மேல் நோக்கிய வளர்ச்சி, கீழ் நோக்கிய வளர்ச்சி, பக்கவாட்டு வளர்ச்சி என பலவகைகளில் கிளைகள் இலைகளை பரப்பிக் கொண்டு இருக்கும். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப கிளையின் வளர்ச்சியைக் கண்டே கனியின் தரத்தை முடிவு செய்து விடுவார் விவசாயி. எது கனி தரும் கிளை, எது கனி தராத கிளை என்பதை அறிந்து அதனை கழித்து விடுவார். சில நேரங்களில் கிளைகளோடு களைகளும் வளர நேரிடும். செழுமையாக வளரும் இலைகளை ஏன் வெட்டி எறிகிறார் என்று நாம் பார்த்து வருத்தம் அடையலாம். ஆனால் விதைத்தவனுக்கு தெரியும் எது விளை பொருள், எது விளையாத பொருள் என்று. எந்தக் கிளை செடியோடு இணைத்து தனக்கு வலுவேற்றிக்கொள்கிறதோ, அதுவே நல்ல கிளையாக , பலன் தரும் கிளையாக மாறும். தன்னைப் போன்று மற்ற கிளைகளும் வளர துணை புரியும் .

நாமும் நமது வாழ்வில் திராட்சை செடியின் கிளைகள் போல பல நேரங்களில் பயணிக்கிறோம். நம்மிடமுள்ள வேண்டாத கிளைகள் வெட்டப்படுகின்றன  நாம் நல்ல கனி கொடுப்பதற்காக. நம்மைப் போன்றே காட்சியளிக்கும் சில கிளைகள் நம்மிடமிருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன நமது தனித்துவம் வெளிப்படுத்தப்படுவதற்காக.  நமது வளர்ச்சிகள் முளையிலேயே கிள்ளி விடப்படுகின்றன மாற்று திசையில் நாம் வளர்வதற்காக. நமது வளர்ச்சிக்கு செடியோடு சில குச்சிகளும் கம்பிகளும் ( நண்பர்கள் உறவுகள், அனுபவங்கள்)நாம் நமது கிளைகளை பரப்ப உறுதுணையாக வைக்கப்படுகின்றன. இவை அத்தனையும்  நமக்கு செய்யப்படுவதற்கு காரணம் நாம் செடியோடுள்ள நமது இணைப்பை இன்னும் அதிகமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான்.

கனியோடு இணைதல்:

     ஒரு கிளையின் தரம் பலன் அதன் கனியில் வெளிப்படுகிறது. கனியின் சுவையைக் கொண்டே திராட்சை செடியும் அதனை விளைவித்த விவசாயியும் பெருமைப்படுத்தப்படுகின்றனர். இன்னார் வீட்டுத் தோட்டத்து  திராட்சை மிகவும் சுவையானது. இவர் திராட்சை தோட்டத்தில் இந்த செடியின் கனி மிகவும் இனிமையானது என்று சொல்லுமளவுக்கு கனியின் தரம் சிறப்பானது. மற்ற பழ மரங்களின் வளர்ச்சியைப் போலல்லாமல் ஒரு கூட்டு முயற்சியின் வெற்றி தான் திராட்சை கனியின் வளர்ச்சி. ஒரு பழ மரத்தில் ஒரு கிளையில் உள்ள அனைத்து கனிகளும் ஒரே நேரத்தில் வளர்ச்சி அடையாது. தனித்தனியாக, ஒன்று மற்றொன்றை விட முன்போ பின்போ வளர்ச்சி அடையும். ஆனால் திராட்சை கனியின் ஒரு கிளையின் ஒரு கொத்து கனி ஏறக்குறைய ஒன்றாக சேர்ந்து வளர்ச்சி அடையும். கனியானது கனிந்த நிலையிலும் கூட கிளையோடு உள்ள இணைப்பில் தொடர்ந்தே இருக்க வேண்டும். நான் நன்றாக கனிந்து விட்டேன் சுவை தரும் பழமாக மாறி விட்டேன் என்று எண்ணி கிளையோடு தான் கொண்ட இணைப்பை, செடியோடு தான் கொண்ட உறவை துண்டிக்க நினைத்தால் அத்தனையும் வீண். ரசித்து ருசித்து உண்ண வேண்டிய கனி திராட்சை ரசமாய் மாறி விருந்தினை சிறப்பிக்க வேண்டிய கனி, காலில் மிதி பட்டு கால்நடைகளுக்கும் காட்டு மரத்திற்கும் உணவாக மாறும் நிலை ஏற்படும்.

நமது நற்செயல்களும் கனிகளாக பிறர்வாழ்வுக்கு இனிமை சேர்க்க வேண்டும் வளம் தர வேண்டும். நமது நற்செயல்களால் நாம் அடையாளப்படுத்தப்பட்டாலும் செடியோடு இணைந்த நம் கிளையின் பலனாலேயே நாம் இவ்வாறு பலன் தருகிறோம் என்ற எண்ணம் எப்போதும் நம்முள் இருக்க வேண்டும். கடைசி வரையிலும் கிளையோடும் செடியோடும் இணைப்பில் இருக்கும் கிளைகளே, இறுதியில் விதைத்தவனின் கையில் விளை பொருளாக மாறி மகிழ்வைத்தரும். கிளைகளாகிய நாம் நமது நற்செயல்கள்  என்னும் கனிகள் மூலம் வானகத்தந்தை என்னும் விதைத்தவன் கையில் தவழ்கிறோம்.

இறுதியாக , செடி நன்கு வளர அடிப்படைத்தேவை நல்ல மண் காற்று நீர் உரம் . இவை அனைத்தையும் செடி தன் வேர்கள் மூலமாக பெற்று தன் கிளைகளுக்கு ஊட்டச்சத்துக்களாகத் தருகின்றன. கிளைகள் அவற்றை கனிகளுக்கு தருகின்றன.

 அழுக்கு படிந்த மண்,

வெப்பக்காற்று, சுழல் காற்று,

வரப்பு வழியே பாய்ந்து அனைத்து கசடுகளையும் அள்ளி வரும் நீர்,

புழு பூச்சி நாற்றம் நிறைந்த உரம் இவை அனைத்தையும் வேர்கள் ஏற்றுக் கொண்டு கிளைகளுக்கு செழிப்பையும், இலைகளுக்கு கொழிப்பையும் தருகின்றன. இறுதியில் கனிகளின் இனிப்பான  சதைப்பகுதியில் தனது அனைத்து உழைப்பையும் தேன்சுவையாகத் தருகின்றன. கிறிஸ்து என்னும் செடியோடு இணைந்து இருக்கும் போது நமக்கும் அவமானம் நிந்தை அவச்சொல் பாடுகள் துன்பம் எனும் பல அழுக்குகள் நம்மை சூழ நேரிடும் ஆனால் அவை அனைத்தையும் உரமாக நீராக காற்றாக ஏற்றுக் கொண்டு நமது நற்செயல்கள் மூலம் நல்ல கனி கொடுக்க முயல்வோம்.

இறையோடு இணைந்திருப்போம் இயற்கையாக.

செடியோடு இணைந்திருப்போம் செழுமையாக,

கிளையோடு இணைந்திருப்போம் மகிழ்வாக ,

கனி தந்து இணைந்திருப்போம் நிறைவாக.

அலை இணைப்பில் அல்ல அன்பு இணைப்பில் ஒருவர் மற்றவருடன்  இணைந்திருப்போம் . இறைவன் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரோடும் இணைந்திருந்து நல்ல கனி தரும்படி நம்மை வழிநடத்துவாராக ஆமென்.