இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பாஸ்கா காலம் நான்காம் ஞாயிறு

ஆடுகளா? ஆயன்களா? நாம் யார்?

முதல் வாசகம்: திருத்தூதர் பணி 4,8-12 பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 118 இரண்டாம் வாசகம்: 1யோவான் 3,1-2 யோவான் 10,11-18

பாஸ்கா காலத்தின் நான்காம் வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் நம்மை நல்ல ஆயன்களாக, ஆடுகளாக வாழ இறைவன் அழைக்கிறார். நல்ல ஆயன் நானே என் ஆடுகள் என் குரலுக்கு செவிசாய்க்கின்றன என்று கூறியவர், இன்று அவர் குரலுக்கு செவிசாய்க்கும் ஆடுகளாக மாற நம்மை அழைக்கிறார்.
ஆடு;
ஆடு ஏழைகளின் பசு. புல்வெளிகள் சாதாரண இடங்கள் தவிர மேட்டுப்பாங்கான இடங்களில் கூட ஆடுகளை வளர்க்க முடியும். ஆனால் பசு, காளை, எருமை போன்ற விலங்குகளை அதில் வளர்ப்பது அவ்வளவு எளிதல்ல. ஆடு வளர்க்க அதிக பணம் தேவையில்லை. குறைவான முதலீடு, சிறிய இடம், எளிய கொட்டகை போதும். மேய்ச்சல் நிலத்தில் மேய்ந்து விட்டு, கிடைத்ததை உண்டு கூடவே இருக்கும் ஒரு விலங்கு, என்பதை விட ஏழைகளின் செல்லப்பிராணி என்றே கூறலாம். ஏழைகளின் அன்றாட செலவுக்கு உதவும் ஒரு பொருளாக, பாசம் காட்டி மகிழும் குடும்பத்து உறவாக, சொல்லப்போனால் ஏழைகளின் ஏடிஎம்மே ATMஆடுதான். ஏனெனில் உடனடி பணத் தேவையைப் பூர்த்தி செய்வதே அதுதான். பால், தோல், கறி என தொகைக்கேற்ப, தேவைக்கேற்ப தன்னையே இழக்கும் ஓர் உன்னத உறவு ஆடு.
ஆயன்;
சாதாரண மனிதன். ஆடுகளின் குரல் அறிந்தவன். அவற்றின் குரல் கொண்டே அதன் உடல் நலம் அறிபவன். அதன் செய்கைகள், சேட்டைகள் மூலமாக அதன் உணர்வுகளை உணர்பவன். ஆடுகளை மேய்ச்சல் நிலத்திற்கு அழைத்துச்செல்பவன். செல்லும் இடம் பசுமையானதா?, தன் ஆடுகளின் சுவைக்கு உகந்ததா? என அறிவதோடு மட்டுமல்லாமல் செல்லும் பாதையையும் செழுமையான பாதையாக தேர்ந்தெடுப்பவன். காலாலும் கோலாலும் பாதையில் கிடக்கும் முள், கண்ணாடி போன்ற தீங்கிழைக்கும் பொருட்களை தூர எறிபவன். உயரமான மரக் கிளைகளை தன் கோல் கொண்டு இழுத்து பாதையிலேயே பசியாற்றுபவன். நெடுங்கழி கொண்டு தன் ஆடுகளை ஓநாய் போன்ற தீய எதிரிகளிடமிருந்து காக்கும் வலிமை பெற்றவன். சொல்லப்போனால் ஆடுகளின் அடையாளம், அரண் ஆயனே.
இயேசு நல்ல ஆயனாக, தன்னை பாவித்து, தன் ஆடுகளாக நம்மைப் பராமரித்து வருகிறார். அவர் தான் ஒரு சிறந்த ஆயன் என்பதையும், ஆடுகளுக்காக உயிரையேத் தரும் ஆயன் என்பதையும் தனது வாழ்வால் நிரூபித்துவிட்டார். அவரைப் பிரதிபலிக்கும் நாம், சிறந்த ஆயன்களா? சிறந்த ஆடுகளா? என சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.
நாம் ஆடுகளா?????
அன்று ஆடுகளின் தேவையை ஆயன் அறிந்து பூர்த்தி செய்த காலம் போய் , இன்று ஆடுகளாகிய நாம் தாம், எனது தேவை இது இது என பட்டியல் இடுகிறோம் ஆயனாகிய ஆண்டவரிடம். பணம் வேண்டும், நகை வேண்டும், வேலை வேண்டும், வீடு வேண்டும் பட்டம் வேண்டும் பதவி வேண்டும். இதை எல்லாம் நீ செய்தால், மொட்டை அடிக்கிறேன், முழு நாள் விரதம் இருக்கிறேன், காது குத்துகிறேன், காசு தருகிறேன் என்று அவரிடமே வியாபாரம் பேசுகிறோம். இயேசு ஆடுகளாகிய நமக்கு ஆயனாக இருந்தார். அதே நேரம் தந்தை கடவுளின் திட்டத்திற்கு செம்மறியாக இருந்து தன்னையே அர்ப்பணித்தார். ஆக ஆயனும் அவரே, ஆடும் அவரே. இரண்டுமாக இருந்து தன்னையும் தன் வாழ்வையும் நமக்கு முன் மாதிரிகையாக காட்டியவர். தந்தையின் வழி நடந்து, இறைத்திருவுளத்தை நிறைவேற்றியவர். ஆனால் அவர் வழியைப் பின்பற்ற வேண்டிய நாம் திசைமாறிப் போகிறோம். ஆயன் காட்டும் வழியில் செல்லும் ஆடுகளாக இல்லாமல், ஆயனுக்கு வழிகாட்டும் ஆடுகளாக மாறிக் கொண்டிருக்கிறோம். ஆயன் முன் சென்று, ஆடுகள் பின் சென்றால், பாதையில் இருக்கும் ஆபத்துகள் விலக்கப்பட்டு, பயணம் பாதுகாப்பான பயணமாக இருக்கும். ஆனால் நாம் பணம் பதவி, பட்டம் வீடு வேலை போன்ற பாதையில் முன் செல்ல விரும்பி, ஆயனுக்கு முன் நடக்கும் ஆடுகளாகிறோம். விளைவு, பயணத்தில் கரடு முரடு, முள்ளும் புதரும் நிறைந்த காட்டினூடே பயணம் என துன்புறுகிறோம். பாதையை நாமே தேர்ந்தெடுத்துவிட்டு, பழியை ஆயன் மேல் போடுகிறோம்.
நாம் ஆடுகளெனில்,
நல்ல ஆயனைப் பின் தொடரும் நல்ல ஆடுகளாவோம்.
செல்லும் பாதையை ஆயனே தேர்ந்தெடுக்க விடுவோம்.
கொட்டகையின் நுழைவாயில் வழி வருபவனே உண்மையான ஆயன். வேற்று வழியில் வருபவன் ஆயனல்ல என்பதை உணர்வோம்.
ஓநாயைக் கண்டு சிதறி ஓடாது, ஒற்றுமையாக அனைவரும் சேர்ந்து, ஓநாயை விரட்ட முயல்வோம்.
நாம் ஆயன்களா????
நாம் ஆயன்கள் தாம் அதுவும் சாதாரண ஆயன்கள் அல்ல . பரம்பரை ஆயர்கள். நம் முதல் பெற்றோர் பெற்ற பிள்ளையான ஆபேல் தொடங்கி ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு மோசே என தாவீது முதல் தாய் மரியின் மைந்தன் இயேசு வரை அனைவரும் ஆயர்களே. அவர் வழி வந்த நாமும் ஆயர்களே. பிள்ளைகளுக்கு பெற்றோர்கள், மாணவர்களுக்கு ஆசிரியர்கள், தொழிலாளிக்கு முதலாளி பெண்ணுக்கு ஆண் என நாம் அனைவரும் ஒருவகையில் ஆயன்களே. ஆயர்களாக இருந்தவர்களே ஆண்டவர் அழைப்பைப் பெற்றார்கள். மந்தையை மாண்புடன் காத்தார்கள். நாம் எப்படி இருக்கிறோம்? சொந்த மந்தையை மேய்க்கும் ஆடுகளாக இல்லாமல் பல நேரங்களில் கூலிக்கு வேலைபார்க்கும் ஆயன்கள் போலத்தான் நாம் செயல்படுகிறோம். அதிக லாபத்திற்கும் பணத்திற்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு சொந்த மக்களை ஓநாய்களிடமே ஒப்படைப்பவர்களாகிறோம். நான் நலமாய் இருந்தால் போதும் என்றெண்ணி, மந்தையை மாற்றானிடம் விற்றுவிடுபவர்களாகிறோம். கோலும் கழியும் பாதையில் பசியாற்ற, பாதுகாக்க என்பதை மறந்து, அதைக் கொண்டே மந்தையைக் காயப்படுத்துபவர்களாகிறோம். மந்தைக்கு செழுமையான பாதையை, பசும்புல் வெளியைக் காட்டாது, தான் மட்டும் இளைப்பாற பசியாற இடம் தேடும் சுயநலமுள்ள ஆயனாகிறோம்.
நாம் ஆயன்கள் எனில்!!!!!
சொந்த மந்தையை பிள்ளை போல் கண்ணும் கருத்துமாக காப்பவர்களாவோம்.
சிங்கம் புலி போன்று நேரடியாக தாக்கும் விலங்குகள் மட்டுமல்லாது ஓநாய் போன்று மறைமுகமாக தாக்குபவர்களிடமிருந்தும் மந்தையைக் காப்பவர்களாவோம்.
மந்தைகளின் திறன், நலன் அறிந்து செயல்படுபவர்களாவோம்.
நமக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராயிருக்கும் நம் மந்தைகளுக்காக நம் உயிரைக்கொடுக்கவும் விழிப்பாயிருப்போம்.
நாம் மந்தைகளாக மட்டுமல்ல மாண்புள்ள பிள்ளைகளாக வாழ அழைக்கப்படுகிறோம்.
ஆயன் களாக மட்டுமல்ல ஆண்டவரின் அன்பு சீடர்களாக மாற அழைக்கப்படுகிறோம்.
ஓநாய் போன்ற குணமுள்ள கொடிய மிருகங்கள் இன்றும் நம் நடுவில் மனித உருவில் நடமாடிக் கொண்டு தான் இருக்கின்றன. அவைகள் ஆஷிபா போன்ற எண்ணற்ற இளம் செம்மறிகளை வேட்டையாடிக் கொண்டும், ஆலைகள் என்ற பெயரில் நம் அடிப்படை உரிமைகளை அழித்துக் கொண்டும், அணைகள் என்ற முறையில் நம் வாழ்வாதாரத்தையும் பறித்துக் கொண்டும் தான் இருக்கின்றன. நாம் ஆடாக இருந்தால் ஒற்றுமையாக சேர்ந்து ஓநாய்களை எதிர்ப்போம். ஆயனாக இருந்தால் ஓங்கிய புயத்துடனும் வலிமையுடனும், நெடுங்கழியும் கோலும் கொண்டு அவைகளை ஒழிப்போம்.
நமது வாழ்க்கையில் நாம் பலமுறை சந்தோஷப்பட்டிருப்போம். நம்மைக் குறித்தும் நம் வாழ்வைக் குறித்தும். ஆனால் ஒரு சில நேரங்கள் மட்டுமே அதைக் குறித்து பெருமை அடைந்திருப்போம். பெருமை அடைவது சந்தோசத்தை விட வலிமையானது,சிறப்பானது. நாம் நல்ல ஆயன்களாக நல்ல ஆடுகளாக வாழ்வதில் நம் இறைவன் சந்தோசமல்ல பெருமைப்படும்படி நாம் வாழ வேண்டும். என் மகள்/ மகன்,நல்ல ஆயன்/ நல்ல மந்தை என்று சொல்லுமளவுக்கு வாழ வேண்டும். அதற்கான அருளை அவரிடம் கேட்போம். ஆண்டவரின் அருள் நலமும் பேரன்பும் நமது வாழ்நாள் முழுவதும் நம்மையும் நம் குடும்பத்தார் அனைவரையும் புடை சூழ்ந்து வரட்டும் ஆமென்.