இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் 23ம் ஞாயிறு

உறவாக உணர்வாக உடைமையாக இயேசு

சாலமோனின் ஞானம் 9:13-18
பிலமோன் 9-10,12-17
லூக்கா 14:25-33

பொதுக்காலத்தின் 23 ஆம் ஞாயிற்றில் இருக்கும் அன்பு இறைமக்களாகிய நாம் அனைவரும் இயேசுவைப் பின்பற்றும் உண்மையுள்ள சீடர்களாக வாழ இன்றைய நாளின் வாசகங்கள் வழியாக இறைவன் அழைக்கின்றார். உண்மையான இயேசுவின் சீடர்கள்  என்பவர்கள்  உறவாக உணர்வாக உடைமையாக இயேசுவைக் கொண்டு வாழ வேண்டுமென்று வலியுறுத்தி ஞானத்தின் மூலம் மீட்படைய வழி சொல்கின்றார்.

தன்னைப் பின்தொடர்ந்து வந்த ஏராளமான மக்களை திரும்பிப் பார்த்த இயேசு தனக்குரிய சீடர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றார். தாய் தந்தையர்களை தன்னை விட மேலாக கருதுபவர்கள், தம் சிலுவையை தூக்க மறுப்பவர்கள், உடைமையை விட விரும்பாதவர்கள் போன்றோர் தனக்கு சீடராக இருக்க தகுதியற்றவர்கள் என்கின்றார். மாறாக உறவு உணர்வு உடைமை என எல்லாமாக தன்னை நினைப்பவன் மட்டுமே சீடனாக வாழ முழுத் தகுதியுடையவன் என்று வலியுறுத்துகின்றார்.

உறவாக இயேசு.

நாம் வாழும் இவ்வுலகில் ரத்த உறவுகளும் எந்த சூழ்நிலையிலும் நம்மை விட்டுக் கொடுக்காத நட்புறவுகளும் கட்டாயம் தேவை. உயிரும் உணர்வும் கலந்த இவ்வுறவு பல நேரங்களில் கடவுளன்பை விட மேலானதாக கருதப்படுகின்றது. கடவுளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய பல நேரங்கள் இந்த உறவு முறைகளுடனான பொழுதுபோக்கில் காணாமல் போகின்றன. கடவுளா உறவா என்று வரும்போது இக்காலகட்டத்தில் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள். கடவுளன்பினால் தான் இத்தகைய உறவுகள் வந்தன என்றும் இனி வரப்போகும் உறவுகளும் அவராலே வந்து நிலைபெறப் போகின்றன என்றும் எண்ணாதவர்கள் தான் இத்தகைய உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

 நம்முடைய உறவுகள் கடவுளோடு நாம் கொண்டுள்ள உறவை வளர்ப்பதாக இருக்கவேண்டுமே தவிர பாதிப்பதாக ஒரு போதும் இருக்கக் கூடாது. தாய் தந்தையர் சகோதர சகோதரிகள் நண்பர்கள் அனைவரும் கடவுளன்பின் சுவையை நாம் உணர நமக்குக் கடவுளால் கொடுக்கப்பட்டவர்கள் என்று உணர்ந்தோமானால் நம் வாழ்வு செழிப்படையும். அடிமையாகிய ஒபேசினுவிற்கு பவுலடியார் காட்டிய அன்பு போல நமது அன்பும் பலுகிப்பெருகும். கடவுளன்பை அதிகமதிகமாக சுவைத்து அதனைப்  போதனைகள் வழியாகப் பிறருக்கும் கொடுத்த புனித பவுலடியார் அடிமை ஒபேசினுவைப் பற்றி அவரது தலைவன் பிலமோனிற்கு எழுதும் கடிதத்தில் இதயத்திற்கு ஈடாக சகோதரனுக்கும் மேலாக கருதி தன்னை ஏற்பது போல் அவரையும் ஏற்க சொல்லி எழுதுகின்றார். இதனையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் நாம் அவன் என் தனிப்பட்ட அன்புக்குரியவன். அப்படியானால் மனிதன் என்னும் முறையிலும் ஆண்டவரைச் சார்ந்தவன் என்னும் முறையிலும் அவன் எத்துணை மேலாக உம் அன்புக்குரியவனாகிறான்! 17எனவேநமக்குள்ள நட்புறவைக் கருதிஎன்னை ஏற்றுக்கொள்வதுபோல் அவனையும் ஏற்றுக்கொள்ளும். என்று பிலமோனுக்கு எழுதியக் கடிதத்தின் வழியாக  வாசிக்கக்கேட்டோம். கடவுளின் உறவை உலகிலுள்ள உறவுகளில் எல்லாம் மேலான உறவாக புனித பவுலைப் போல நினைப்பவர்களே உண்மையான சீடர்கள் என்று வலியுறுத்துகின்றார் இயேசு.

2. உணர்வாக இயேசு.

மனிதர்களாகிய நாம் பல உணர்வுகளால் நிறைக்கப்பட்டுள்ளோம். மகிழ்ச்சி பெருமிதம் வெட்கம் கோபம் கவலை போன்ற உணர்வுகளின் நிலை அதிகமாகும் போது நம்முடைய இயல்பு நிலையில் இருந்து மாறி செயல்படுகின்றோம். உணர்வுள்ள மனிதனே உண்மை மனிதன். எவரொருவர் நம்முடைய உணர்வுகளோடு நம்மை மதித்து அன்பு செய்து ஏற்றுக் கொள்கின்றாரோ அவருடனான உறவு காலத்திற்கும் அழியாது நிலைத்திருக்கும் என்பர். இப்படிப்பட்ட உணர்வுகளின் அடிப்படையாக ஆணிவேராக இயேசு இருந்து செயல்படும்போது நம் வாழ்வு முற்றிலும் மாற்றம் பெற்ற வாழ்வாக இருக்கும்.

இன்றைய நற்செய்தியில் இயேசு தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது. என்று கூறுவதன் வழியாக  சிலுவையைத் தூக்கிக் கொண்டு பின்தொடர்பவனே உண்மையான சீடன் என்று வலியுறுத்துகின்றார். சிலுவையைத் தூக்க முதலில் உடலில் பலம் மனத்திடம் நல்ல மன நிலை வேண்டும் இவை இல்லாமல் சிலுவையைத் தூக்க முயற்சிப்பவரால் இறுதிவரை அவரைப் பின் செல்ல முடியாது.  என்னால் தான் சுமக்க முடியும் என்ற ஆணவமோ என்னால் தூக்கவே முடியாது என்ற தாழ்வு மனப்பான்மை உணர்வினால் ஆட்கொள்ளப்பட்டால் அவரது சீடராக இருக்க முடியாது. இன்றைய முதல் வாசகத்தில் குறிப்பிடப்படுவது போல நிலையற்ற மனிதரின் எண்ணங்கள் பயனற்றவைநம்முடைய திட்டங்கள் தவறக்கூடியவை. அழிவுக்குரிய உடல் ஆன்மாவைக் கீழ்நோக்கி அழுத்துகிறது. இந்த மண் கூடாரம் கவலை தோய்ந்த மனதுக்குச் சுமையாய் அமைகிறது. நம்முடைய உணர்வுகள் எல்லாம் இயேசுவாக இருக்கும் போது எண்ணங்களும் திட்டங்களும் சிறப்பாக அமையும். நமது உடலைக் கடந்து ஆன்மா இறைவனில் இன்புற்று மகிழும்.

3. உடைமையாக இயேசு.

ஒரு மனிதன் இவ்வுலகில் இன்பமாக வாழ அடிப்படை உரிமைகளும் உடைமைகளும் தேவை. ஆனால் அடிப்படையான இவ்வுலகப் பொருட்களை சில நேரங்களில் கட்டாயத் தேவையாகக் கருதிக் கொண்டு செயல்படுகின்றோம். உதாரணத்திற்கு தொலைபேசி  தொலை தூரத்தில் இருக்கும் நம் உறவுகளை வலுப்படுத்த தொடக்க காலகட்டத்தில் பயன்படுத்தப் பட்டது. காலப் போக்கில் நம்முடைய அன்றாட வாழ்வின் அத்தியாவசிய தேவையாக மாறி இன்று சிலருக்கு சுவாசமாகவே மாறி விட்டது. கொரோனா காலத்தில் முகக்கவசம் அணிந்து பழக்கப்பட்டவர்களுக்கு அது அணியாமல் வெளிய செல்வது ஏதோ உடையணிவதில் ஏதோ மறதி ஏற்பட்ட உணர்வு அது போல தொலைபேசியை அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு அது இல்லாமல் வெளியே பயணிப்பது என்பது உடல் உறுப்பில் ஒன்று இல்லாமல் பயணிப்பது போல் உணர்வைத் தரும் அந்த அளவிற்கு உடலோடு ஒட்டிக் கொண்டு நம்முடன் பயணிக்கின்றது.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றில் மேல் ஆசை பற்று உண்டு. சிலருக்கு உடையில் சிலருக்கு உடைமையில். இப்படி உலகப் பொருட்களின் மேல் பற்றும் ஆசையும் கொண்டு செயல்படுபவர்களால் இயெசுவைப் பின்பற்றும் உண்மையான சீடர்களாய் இருக்க முடியாது. நமது பற்று ஆசை எல்லாம் பற்றற்ற இயேசுவின் மேல் இருக்கும் போது நாம் கடவுளிடமிருந்து வரும் உண்மையான ஞானத்தை பெற்று அவரது சீடர்களாக மாறுகின்றோம். ஞானம் என்னும் மெய்யறிவு என்பது கடவுளிடம் இருந்து கிடைக்கப்பெறுவது அது கிடைக்க நாம் அதிகமாக செபிக்கவேண்டும் . இது தெரியாமல் சிலர் உலக அனுபவத்தினால் கிடைக்கக் கூடிய அறிவு தன்னுடைய சொந்த கடின உழைப்பினால் கிடைத்தது என்று எண்ணி பெருமிதம் கொள்கின்றனர். இத்தகைய பெருமிதம் கொள்வதும் ஒருவகையில் உலக அறிவை உடைமையாகக் கொள்வவதற்கு சமம் ஆக உடைமையாக இயேசுவைக் கருதுபவர்களால் மட்டுமே அவரது உண்மை சீடர்களாக இருக்க முடியும்.

எனவே அன்பு உள்ளங்களே உறவாக உணர்வாக உடைமையாக இயேசுவைக் கோண்டிருப்பவர்களாக மாறுவோம். அவரே நம் வாழ்வின் எல்லாம் என உணர்ந்து செயல்படுவோம் இறைவன் நம்மையும் நம் குடும்பத்திலுள்ள அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்து வழி நடத்துவாராக ஆமென்