இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் 8ம் ஞாயிறு

வார்த்தை என்னும் வண்ணஜாலம்

சீராக் 27: 4-7,
1 கொரிந்தியர்; 15:54-58,
லூக்கா; 6: 39-45)


குரு ஒருவர் தன்னுடைய சீடர்களுடன் ஓர் ஊரைக் கடந்து மறு ஊருக்கு செல்கின்றார். இவரையும் இவரது போதனைகளையும் பிடிக்காத ஒருவன் இவர்கள் எதிரே வந்து தகாத வார்த்தைகளால் பேசுகின்றான். குரு தனது முகத்தில் எந்த விதமான சலனமும் இல்லாமல் அவனைக் கடந்து செல்கின்றார். சீடர்களுக்கோ ஆச்சரியம் எப்படி இவரால் மட்டும் இப்படி இருக்க முடிகிறது என்று. ஆச்சரியத்தை அடக்க முடியாமல் சீடன் ஒருவன் குருவிடம் இதைக் குறித்து கேட்டும் விடுகிறான். குரு அவனுக்கு பதில் மொழி ஒன்றும் கூறாமல் அழுகிய நிலையில் இருந்த ஒரு பழத்தை கொடுத்து உண்ண சொல்கின்றார். அவன் அதை வாங்க மறுக்கிறான். குரு அவனை வற்புறுத்தி உண்ண சொல்கின்றார். இவனும் பழம் அழுகிய நிலையில் இருக்கிறது இதனை உண்டால் என் உடல் நிலை கெட்டு விடும் ஆகையால் இதனை தன்னால் வாங்கி உண்ண முடியாது என்று மறுபடியும் மறுக்கிறான். குரு அதற்கு மறுமொழியாக,இந்த அழுகிய பழம் போல் தான் அந்த மனிதனின் வார்த்தைகளும். ஒன்றிற்கும் உதவாது அதனை நாம் ஏற்று மனதிற்குள் செலுத்தினால் நமது மனம் உடைந்து விடும். நமது வாழ்க்கைக்கும் பயன்படாது. எனவே நம்மை எதிர்கொள்ளும் அனைவரின் சொற்களையும் நாம் ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை எது நமக்கு நன்மை தருமோ எது நம் வாழ்விற்கு வளம் சேர்க்குமோ அதை மட்டும் ஏற்றால் போதும் நம்முடைய வாழ்வு நலமாக மாறும் என்றார்.
வார்த்தை வாழ்வளிக்கும் என்பதே இன்றைய வாசகங்கள் அனைத்தும் உணர்த்தும் பாடம். சொல் எனும் மந்திரம். சில சொல் ஆக்கும் சில சொல் அழிக்கும். சில சொல் படைக்கும் சில சொல் பாழாக்கும். சிலருடைய வார்த்தைகள் நம் மனதிற்கு இதமளிக்கும் . சிலருடைய வார்த்தைகள் நம் மனதைக் காயப்படுத்தும். தேர்தல் பிரச்சாரங்கள் முடிந்து அமைதியடைந்து இருக்கும் சூழலில் இருக்கின்றோம். எத்தனை விதமான வாக்குறுதிகள், எண்ணிலடங்கா வசன கவிதைகள். சிலரின் வார்த்தை வாழ்வாகின்றது. சிலரின் வார்த்தை வானில் கரைந்த புகையாகின்றது இன்றைய வாசங்கங்கள் வழி நமது வார்த்தை எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்பதை எடுத்துரைக்கின்றன. நமது வார்த்தைகள் தரமானதாக , திடம் தருவதாக, வலிமையூட்டுவதாக இருக்க அழைக்கின்றன.

வார்த்தையின் தரம்:
வார்த்தையின் தரத்தினை மேம்படுத்த சொல்லில் உரையாடலில் கவனிக்கும் முறையில் நாம் முக்கியத்துவம் செலுத்த வேண்டும். நமது சொல் நெருப்பில் சுடப்பட்ட கலன் போல உடையாமல் உறுதியாக இருக்க வேண்டும்.
மரத்தின் கனி போல உரையாடலில் இனிமை இருக்க வேண்டும்.
பிறரைப் புகழ்ந்து பேசும் வார்த்தைகளை விட அவர்களின் சொற்களில் கவனம் செலுத்த வேண்டும். ஒருவர் யார் எப்படிப் பட்டவர் என்பதை அவர் பேசும் முன் புகழாதே அவர் பேச்சைக் கொண்டே அறிந்து கொள் என்கின்றது முதல் வாசகம். சல்லடையில் தங்கும் உமி போல நமது பேச்சின் முடிவும் சாரமும் நாம் யார் எப்படிப்பட்டவர்கள் என்பதை இவ்வுலகிற்கு எடுத்துரைக்கிறது. சூளையில் பரிசோதிக்கப்படும் கலன் போல நம்முடைய உரையாடல் நமது தரத்தை வெளிப்படுத்துகிறது.
ஆக தரம் என்பது பொருட்களுக்கு மட்டுமல்ல வார்த்தைகளுக்கும் முக்கியம். இன்று சில இடங்களில் வார்த்தைகளின் தரம் மிக மலிந்து போய்விட்டது. தரமற்ற பொருளுக்கே மதிப்பில்லாத போது தரமற்ற வார்த்தைகளுக்கும் அதனை பயன்படுத்தும் மனிதர்களுக்கும் மதிப்பில்லாமல் போகிறது. வார்த்தையின் தரம் நிரந் தரமாக இருக்க முயற்சிப்போம்.

திடமான வார்த்தை:
சிலரது வார்த்தைகள் கடினமான சூழலையும் இலகுவாக்கிவிடும். சிலரது வார்த்தைகள் கலகலப்பான வாழ்வையும் கலவர பூமியாக்கிவிடும். இன்றைய இரண்டாம் வாசகத்தில் இடம் பெரும் பவுலடியாரின் வார்த்தைகள் சோர்ந்து போயிருக்கும் உள்ளங்களுக்கு திடமளிப்பதாக உள்ளது. உறுதியாயிருங்கள். நிலையாய் நில்லுங்கள். ஆண்டவருக்காக உழைப்பது வீண் போகாது என்பதை அறிந்து இன்னும் அதிகமாக பணி செய்யுங்கள். என்று திடமான வார்த்தைகளின் மூலம் நம்முடைய வாழ்விற்கு திடமளிக்கின்றார். உறுதி, நிலைத்து நிற்றல், நம்பிக்கை மனம் கொண்டு வார்த்தைகளில் செயல்படுத்த அழைக்கின்றார்.

வலிமையான வார்த்தை:
நற்செய்தி வாசகத்தில் இயேசு மூன்று விதமான வலிமைகளை எடுத்துரைக்கின்றார்.
1. உன்னை பார்.
2. உள்ளத்தைப் பார்.
3. உயர்வைப் பார்.
1. உன்னை பார் ;
இன்று நம்மில் பலர் செய்ய மறக்கும் மறுக்கும் செயல் இது. தன்னைப் பார்க்காமல் பிறரைப் பார்ப்பது. நம்மிடம் இருக்கும் ஆயிரம் குறைகள் நம் கண்களுக்கு தெரிவதில்லை ஆனால் பிறரிடம் இருக்கும் ஒரு சிறு குறை நம் கண்களுக்குள் சென்று உறுத்திவிடும். அதனால் தானோ என்னவோ இயேசு உன் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுத்து விடு அதன்பின் உன் சகோதரன் கண்ணில் இருக்கும் சிறு துரும்பை எடுக்க உனக்கு நன்றாக கண் தெரியும் என்றாரோ. மரத்துண்டு பெரியது அது கண்ணில் விழுந்தால் கண் பார்வை சரியாக சில பொழுதுகள் ஆகும். நமது குறை நீங்கி நம் பார்வை தெளிவானால் பிறரது நிறை குறைகளை எளிதில் கண்டும் விடலாம் அதை நிவர்ந்தி செய்ய வழிவகையும் செய்து விடலாம். வெறும் குறையை மட்டும் காணாதே குறைக்கான நிவர்த்தியையும் செய் என்கின்றார். உன்னை நீ சரி செய்து கொண்டால் பிறரது குறையை கண்டுபிடிப்பதோடு மட்டுமல்லாமல் அதனை சரி செய்யவும் உன்னால் முடியும் என்கின்றார். நம்மைப் பார்ப்போம். நம்மை சரி செய்து கொள்வோம். பார்வை பெறுவோம் அப்போது தான் பார்வையற்றவர்களின் வலி புரியும். குறையுள்ள மனிதனுக்கு குறைபாடுள்ளவனின் நிலை நன்கு புரியும்.

2. உள்ளத்தைப் பார்:
உள்ளத்தின் நிறைவை வாய் பேசும் என்கின்றார் நம்முடைய உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்து இருந்தால் மகிழ்வான வார்த்தைகள் வெளிப்படுகின்றன. துன்பத்தில் ஆழ்ந்து இருக்கும் போது, வருத்தமான வார்த்தைகள் வெளிப்படுகின்றன. மகிழ்வும் துன்பமும் நம்முடைய எண்ணங்களைப் பொறுத்து வேறுபடுகின்றன. நாம் நல்லவர்களானால் நல்ல கருவூலச்சொற்கள். தீயவர்களானால் தீய கருவூல சொற்கள். ஆக உள்ளம் எப்போதும் நல்லவற்றையே சிந்தித்து நல்லவற்றையே பேச அழைக்கின்றார். நாம் நல்லவற்றை பேசும் போது நம்மை சுற்றிலும் நல்ல எண்ண அலைகள் பரவுகின்றன. அவை நன்மையை மட்டும் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கின்றன. தீமையை பற்றி பேசும்போது ஏராளமான எதிர்மறை உணர்வுகள் வெளிப்படுகின்றன. அவை தீய நிகழ்வுகளை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கின்றன. எனவே கூடுமானவரை நல்ல எண்ணங்களாலும் செயல்களாலும் நம் மனதை நிரப்புவோம். உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும் குப்பை தொட்டியல்ல . பலவகை மணம் பரப்பும் மலர்கள் பூக்கும் பூஞ்சோலை.
3. உயர்வைப்பார்:
குருவை மிஞ்சிய சீடர் இல்லை ஆனால் தகுந்த தேர்ச்சி பெற்றால் சீடனும் குருவைப் போல ஆகலாம் என்கின்றார். ஆக முயற்சி உயர்வை தரும். முயற்சி செய்கின்ற மனிதன் முன்னேற்றம் அடைகின்றான். எவன் ஒருவன் தன்னுடைய உயர்வை விரும்பி தேடுகின்றானோ அவன் தானும் உயர்கின்றான் தன் அருகில் இருப்போரையும் உயர்த்துகின்றான். எனவே நம்முடைய எண்ணங்களும் சிந்தனைகளும் செயல்களும் எப்போதும் உயர்ந்ததாக இருக்க முயற்சிப்போம். எப்போதும் நமது வார்த்தைகள் நமது உயர்வை நோக்கியதாகவும் பிறரையும் உயர்வை நோக்கி அழைத்து செல்வதாகவும் அமையட்டும். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல். வெள்ளத்தனைய மலர் நீட்டம்.
ஆக நாம் ஒவ்வொருவரும் உன்னைபார் உள்ளத்தைப் பார் உயர்வைப் பார் என்ற நோக்கில் வாழ முயற்சித்தால் நமது வார்த்தைகள் தரமானதாக திடமானதாக வலிமயானதாக மாறும். நம்மை சுற்றி இருக்கும் சுழலும் தரமானதாக திடமானதாக வலிமையானதாக மாறும். நாம் அனைவரும் நல்ல கனி தரும் நல்ல மரங்கள் நல்ல கருவூலத்திருந்து நல்ல கருத்துக்களை பேசும் நல்லவர்கள் . நன்மைகள் பல செய்து நல்லவர்களாக திகழ இறைவன் ஆசீர் நிறைவாக நம்மில் பொழியப்படுவதாக ஆமென்.