இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு

மகிழ்வான சந்திப்பு

மீக்கா 5; 2-5
எபிரேயர்; 10; 5-10
லூக்கா : 1; 39-45


மகிழ்ச்சி என்பது மற்றவர்கள் முன்னால் சிரிப்பது அல்ல. தனிமையில் இருக்கும் போது அழாமல் இருப்பதே.
வாழ்க்கையில் சந்தோசம் வேண்டுமென்றால் உன்னை நேசி . சந்தோசமே வாழ்க்கையாக வேண்டுமென்றால் உன்னை நேசிப்பவரை நேசி இவைகள் மகிழ்ச்சி, சந்தோசம் பற்றி நம்மிடையே நிலவும் வாக்கியங்கள். இன்று இரு பெரும் பெண்கள் சந்திக்கின்ற நிகழ்வு நமக்கு நற்செய்தி வாசகமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இயேசுவின் வாழ்வில் மிக முக்கியமானவர்கள். மரியா, எலிசபெத் அம்மாள். இவர்களில் மரியாள் இயேசுவின் தாய். எலிசபெத் அம்மாள் இயேசுவை முன்னறிவித்த திருமுழுக்கு யோவானின் தாய். இயேசு பிறப்பு விழாவிற்கு நம்மை தயாரித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இவர்களின் சந்திப்பு இவர்களுக்கு மட்டுமல்லாது நமக்கும் மிகப்பெரிய சந்தோசத்தை மகிழ்வை தருகின்றது. அமைதியின் ஞாயிறைக் கொண்டாடும் இந்நாளில் இவர்களின் சந்திப்பு ஆழ்ந்த அமைதியும் அர்த்தமும் பொதிந்த நாளாக வெளிப்படுகிறது. சலனம் இல்லாத நீரில் தான் பிம்பம் தெளிவாக தெரியும் . அதுபோல் ஆழமான அமைதியுடன் இருந்தால் தான் மனம் நிம்மதி அடையும். இவர்கள் இருவரின் ஆழமான அமைதி மகிழ்வான சந்திப்பாக அமைந்தது. நம்முடைய மன அமைதி நமக்கு நிறைவான மகிழ்வைத் தருகிறதா ? என்று சிந்தித்துப் பார்ப்போம்.

இந்நாளில் அன்னை மரியாள் மற்றும் எலிசபெத் அம்மாள் இருவரின் செயல்களையும் வாழ்த்தையும் ஆழ்ந்து சிந்தித்து செயலாற்ற நாம் அழைக்கப்படுகின்றோம்.
அன்னை மரியாளின் செயலை நான்கு வார்த்தைகளில் நிறைவு செய்து விடுகின்றார் நற்செய்தி ஆசிரியர். புறப்பட்டார், விரைந்தார், அடைந்தார், வாழ்த்தினார். இந்த நான்கு செயல்களுமே சாதாரண செயல்கள் தான் என்றாலும் அன்னை மரியாள் அதனை, எங்கு? எப்படி? யாரை?, எதற்கு? என்ற கோணத்தில் செயல்படுத்துகிறார்.

எங்கு புறப்பட்டார்?
தனது ஊரிலிருந்து புறப்பட்டு எலிசபெத் அம்மாவை சந்திக்க கிட்டத்தட்ட் 150 கிலோ மீட்டர் பயணம் செய்கின்றார். பெண்களுக்கு ஏற்ற பாதுகாப்பு இல்லாத காலகட்டம், பயணம் செய்ய ஏதுவான வாகன வசதி இல்லாத காலம், அறிமுகம் இல்லாத நபர்கள் மற்றும் ஊர்களை கடந்து செல்ல வேண்டிய தருணம். இவை அனைத்தையும் பொருட்படுத்தாமல் புறப்படுகின்றார். வானதூதர் சொன்ன செய்தியின் உண்மையை அறிய சென்றாரா என்பதல்ல நமது கேள்வி. மாற்றம், மீட்பு என்பது தன்னில் இருந்து முதலில் துவங்கட்டும் என்று எண்ணி தனது பயணத்தைத் துவக்குகின்றார். மாற்றத்தை பிறரில் காண முற்படும் முன் நம்மில் ஏற்படுத்துவோம்.

எப்படி விரைந்தார்?
அவரது செயல் அனைத்துமே மிக துரிதமாக இருந்தது. கால தாமதம் செய்யாமல் உடனடியாக செயல்படுகின்றார். பெற்றொரிடம் தெரிவித்துவிட்டு உடனடியாக செல்கின்றார். தன்னால் இயன்ற உதவியை தன்னுடைய உறவினர்க்கு செய்ய வேகமாக விரைந்து செல்கின்றார். அவரின் இந்த செயல், " சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்". என்ற குறளுக்கு வரி வடிவம். நாமும் பல நேரங்களில் பிறருக்கு உதவி செய்கின்றோம். ஆனால் அவற்றை எப்படி செய்கின்றோம்? என்று சிந்திப்போம். காத்திருந்து செய்யும் உதவியை விட கண நேரத்தில் நாம் செய்யும் உதவிக்கு கைம்மாறு அதிகம்.

யாரை அடைந்தார்?
மரியா செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தம்மாவை சந்திக்கின்றார். இவரோ இளம்பெண் . அவரோ முதியவர். இந்நாள் வரை மலடி என்று பிறரால் அவப்பெயர் சூட்டப்பட்டு இகழப்பட்டவர், ஏளனமாக கருதப்பட்டவர். இப்படிப்பட்ட கடை நிலையில் இருந்த எலிசபெத் அம்மாவை சந்தித்து தன்னால் ஆன உதவிகளை செய்ய வருகின்றார். துன்பத்தில் துணை நிற்கின்றார். தன்னைப் போல் உள்ள ஓர் இளம்பெண்ணை சந்தித்து உண்டு உறவாடி மகிழ வரவில்லை. மாறாக அடிமை போல அவர்களுக்கு தன்னை கையளித்து பணிபுரிய வருகின்றார். நமது தேடல் யாரை நோக்கியதாக இருக்கின்றது. நமக்கு மிகவும் பிடித்தவர்கள் பழக்கமானவர்கள், ஒத்த வயதுடையவர்கள், வசதியானவர்கள் இவர்களை தேடி அடைவது நமது மகிழ்ச்சியாக இருக்கிறதா?

எதற்கு வாழ்த்தினார்?
மரியாள் கூறிய வாழ்த்து எதுவும் நமக்குக் கொடுக்கப்படவில்லை. அவருடைய கனிவான பார்வையினாலும் தொடுதலினாலும் ஆயிரம் ஆயிரம் வாழ்த்துப் பாக்களை பரிமாறியிருப்பார். முதிர்ந்த வயதில் பிள்ளை பெற்றெடுக்க இருக்கும் அவரை ஆனந்தமாக்க, கடவுளின் வாக்கை நம்பி வாழ்வு பெற்ற அவர்களின் வாழ்வு பிறருக்கு சான்றாக அமைய, கடவுள் நம் கோரிக்கைகளை எப்படியும் நிறைவேற்றுவார் என்பதை பிறருக்கு அறிவிக்க மரியாள் எலிசபெத் அம்மாவை வாழ்த்துகின்றார். நம்முடைய வார்த்தைகளும் வாழ்த்துகளும் எப்படி இருக்கின்றன? பிறரை மகிழ்விக்க, குளிர்விக்க வேண்டும் என்பதற்காக போலியான வாழ்த்துகளாக இருக்கின்றனவா? இல்லை உண்மையான வாழ்த்துக்களா என்பதை ஆராய்ந்து பார்த்து செயல்படுவோம்.

எலிசபெத் அம்மாள் அன்னை மரியாளுக்கு இரு பெரும் பெயர்களை அளிக்கின்றார்.
1. பெண்களுள் பேறுபெற்றவர். 2. ஆண்டவரின் தாய்.
அன்னை மரியாள் பேறுபெற்றவர் என்பதை தான் உணர்ந்ததோடு மட்டுமல்லாமல் அவர் பெண்களுள் பேறுபெற்றவர் என்று பிற பெண்கள் அறிய உயர்த்திக் கூறுகின்றார்.

தனக்கு நிகழ்ந்ததை மட்டும் அல்லாமல் அன்னை மரிக்கு நிகழ்ந்ததையும் உறுதியாக நம்பி அவரை ஆண்டவரின் தாய் என்று உலகிற்கு முதன்முதலில் அறிமுகப்படுத்துகின்றார்.

இவர்களின் சந்திப்பு இவர்களுக்கு மகிழ்வையும் அமைதியையும் கொடுத்தது. நமக்கு, நாம் எப்படிப்பட்ட வார்த்தைகளை பிறருக்கு பயன்படுத்த வேண்டும் என்பதையும், உண்மையான வாழ்த்து என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தி இருக்கின்றது. ஆண்டவர் உனக்கு சொன்னது நிறைவேறும் என்று நம்பிய அன்னை மரியாள் பேறுபெற்றவர். ஆண்டவர் நமக்கும் அனுதினமும் ஆசீர்வாதங்களைப் பொழிகின்றார். முதல் வாசகத்தில் சொல்லப்பட்டது போல, அமைதியை அருள்வார். அச்சமின்றி நம்மைக் காப்பார். மேன்மை பொருந்தியவராய் விளங்குவார். இறைவார்த்தைகளில் நம்பிக்கையை வைத்து நமது வாழ்வை வாழ்வோம்.

அமைதியின் ஞாயிறைக் கொண்டாடும் இவ்வேளையில் உள் மன மகிழ்வை பெற்று வாழ்வோம். ஒருவரை ஒருவர் சந்தித்து உள்ளார்ந்த விதமாக நம் அன்பை பரிமாறுவோம். சப்தத்தின் முன்னுரை நிசப்தத்தின் முடிவுரை அமைதி. எல்லா சூழ்நிலைக்கும் பொருந்தக் கூடியது அமைதி. பேச ஆயிரம் வார்த்தைகள் கொட்டிக் கிடந்தாலும் அமைதியை மட்டுமே தேர்ந்தெடுப்போம். வார்த்தைகள் தராத நிம்மதியை மகிழ்வை அது தரும்'. சந்திப்போம் சக மனிதர்களை, சந்தோசத்தை சாரல் போல தெளிப்போம். இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தில் உள்ள அனைவரோடும் இருந்து நம்மைக் காப்பதாக ஆமென் .