இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பாஸ்காக் காலம் மூன்றாம் ஞாயிறு

நலமானதை எங்களுக்கு அருள்பவர் யார்?

முதல் வாசகம்: திருத்தூதர் பணி 3,13-15.17-19
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 4
இரண்டாம் வாசகம்: 1யோவான் 2,1-5
நற்செய்தி: லூக்கா 24,35-48

உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் உண்மையான அன்பு உள்ளங்களே, பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிற்றுக் கிழமையில் அடியெடுத்து வைத்திருக்கிறோம் . இந்நாளில் எம்மாவூஸ் சீடர்களோடு உடன் பயணிப்பவர்களாய், உயிர்த்த இயேசுவின் தரிசனம் பெறுபவர்களாய் வாழ நாம் அழைக்கப்படுகிறோம். இயேசுவோடு எம்மாவூஸுக்கு பயணம் செய்த சீடர்கள் வழியில் இயேசுவைக் கண்டு , குறிப்பாக அப்பம் பிடும் செயல் மூலம் அவரைக்கண்டு கொண்டு எருசலேம் திரும்புகின்றனர். மற்ற சீடர்களோடு தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருக்கும் வேளையில் இயேசு அவர்கள் அனைவருக்கும் காட்சியளிக்கிறார். எம்மாவூஸ் நோக்கிப் புறப்பட்ட அவர்கள் பயணம் நினைத்தது போல் முடியவில்லை. வெற்றி பெறவில்லை. ஆனால் அதுவே ஓர் மிகப்பெரிய அனுபவமாக மாறி அவர்கள் வாழ்வை வெற்றி பெற வைத்தது. உயிர்த்த ஆண்டவரின் ஆற்றலும் அது தரும் அனுபவமும் நமது வாழ்க்கையை , வாழ்க்கைப்பாதையை மாற்றிப் போடக்கூடிய அளவுக்கு வல்லமை வாய்ந்தது என்பதே ஆணித்தரமான உண்மை. காணொளி ஒன்றில் கண்ட செய்தி ஒன்றினைக் கூறி எனது சிந்தனைகளை உங்களுடன் பகிர விரும்புகிறேன். தொலைதூர நெடுஞ்சாலைப் பயணம். இளம் தம்பதியர் இருவர் தங்களது மகிழுந்தில் பயணம் செய்து கொண்டிருக்கின்றனர். இருமருங்கும் காட்டு மரஞ்செடிகொடிகள், அடைய வேண்டிய இலக்கை நோக்கிய பயணம், இனிய இசை என விரைந்து செல்கிறது மகிழுந்து. திடீரென்று சாலையின் நடுவில் ஒரு பெண், கை கால் தலையில் அடிபட்டு ரத்த வெள்ளமாய் காட்சியளிக்கிறாள். கண்களில் கண்ணீர் மல்க, கை கூப்பி உதவி கேட்டு மன்றாடுகிறாள். இளகிய மனம் கொண்ட அவர்கள் வண்டியை விட்டு இறங்கி உதவ விரைகின்றனர். தாயானவள் தூரத்தில் தெரிந்த ஒரு வண்டியைக்காட்டி கண்ணீர் சிந்துகிறாள். விரைந்து சென்று விபரம் என்னவென்று அறிகின்றனர். நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த மகிழுந்து தடம் மாறி காட்டு மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. வண்டியை ஓட்டி வந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விடுகிறார். மோதிய வேகத்தில் வண்டியின் ஜன்னல்களும் கதவுகளும் இறுக மூடிக்கொள்ள, வண்டியினுள்ளே ஒரு குழந்தையானது மூச்சுவிட சிரமப்பட்டு உயிருக்காக போராடிக்கொண்டிருக்கிறது. சூழ்நிலை புரிந்த தம்பதியினர், கண்ணாடிகளை உடைத்து குழந்தையைக் காப்பாற்றுகின்றனர். ஓட்டுநர் இடத்தில் அமர்ந்தவாறு இறந்திருந்த பெண்ணின் முகத்தைப் பார்த்ததும் திடுக்கென்று இருந்தது அவர்களுக்கு . ஏனெனில் எந்தப் பெண் தங்களது வண்டியை நிறுத்தி உதவி கேட்டு கண்ணீர் சிந்தினாரோ, அந்த பெண்ணே ஓட்டுநர் இடத்தில் இறந்து கிடந்தார். அக்குழந்தையின் தாயே அவர். தான் இறந்த பின்பும் தன் குழந்தையின் உயிரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என துடிப்பது தாயின் உள்ளம் மட்டுமே. ஆவியாக மாறினாலும் தாய் எந்நிலையிலும் தாய் தான் என்பதை இந்நிகழ்வு நமக்கு நினைவூட்டுகிறது. தாயின் அன்புக்கு ஈடாக இவ்வுலகில் எதையும் கூற முடியாது. அதே தாயன்பைத் தான் இன்றைய விவிலிய நிகழ்வில் இயேசுவினிடத்தில் நாம் காண்கிறோம். பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாய்க்கு இணையான பாசத்தை மூன்றாண்டுகாலம் தன் சீடர்கள் மேல் காட்டியவர் இயேசு. சிறு குழந்தை போல் அவர்களுக்கு எல்லாவிதமான பயிற்சியும் வாய்ப்பும் கொடுத்து வளர்த்தவர். தான் இறந்த பின்பும் தனது சீடர்கள் நலமாக வாழ வேண்டும் என்று எண்ணியவர், விரும்பியவர். எனவே தான் யூதர்களின் மிரட்டல், உரோமை அரசின் அதிகார அடக்குமுறை, தலைமை குருக்களின் கண்காணிப்பு, போன்ற கெடுபிடிகளுக்கு மத்தியில் தங்களுக்கு யார் உதவுவார்? என்று எண்ணி வருந்திய அவர்களுக்கு மகிழ்வளிக்க உயிர்த்த இயேசு காட்சியளிக்கிறார். இன்றைய திருப்பாடல் வரிகளில் வருவது போல நலமானதை எங்களுக்கு அருள்பவர் யார்? என எண்ணி வருந்திய அவர்களுக்கு நம்பிக்கையூட்டி அருள் ஆசீர் தருகிறார்.

வாழ்வில் சவால்களை சந்திக்கின்ற மனிதர்கள் ஏராளம். அவர்கள் அனைவரின் மிக முக்கியமான கேள்விகளில் ஒன்று. எங்களுக்கு நன்மை செய்பவர் யார்? என்பதே. இன்று தமிழக மக்களாகிய நம் அனைவர் மனங்களிலும் எழுந்திருக்கக்கூடிய கேள்வியும் இதுதான். ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட், காவிரி நதிநீர் மேலாண்மை, ஹைட்ரோகார்பன், மீத்தேன் என நாம் அன்றாடம் சந்திக்கும் சவால்கள் ஏராளம். இது அனைத்திலுமிருந்து நம்மை மீட்பவர் யார்? இத்தனை தீமைகளுக்கும் மத்தியில் எம் தமிழக மக்களுக்கு நன்மை தருவது யார் என்று ஏங்கிக்கொண்டிருக்கிறோம், எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். நமக்கு உயிர்த்த இயேசுவாக தோன்றி திடமளிப்பவர் யார்? அவர் அனுபவமாக மாறப்போவது எது? சிந்திப்போம். இயேசு சீடர்களோடு அமர்ந்து உண்கிறார். அன்றைய காலத்து எளிய மக்களும் உண்ணும் உணவு மீன். இயேசு பிறக்கும் போது மட்டுமல்ல, இறந்து உயிர்த்த பின்பும் எளியவராகவே வாழ்கிறார் என்பதை உணர்த்துகிறது இச்செயல். கொஞ்சம் பணமும் பதவியும் புகழும் வந்தாலே, பேச்சும் மிடுக்கும் தோரணையும் மாறிவிடும் இக்காலத்தில் இயேசு இறந்து உயிர்த்து இறைமகனாக மாட்சி பெற்றும், எளியவராகவே காட்சி தருகிறார். உறவினர்கள் வீட்டு நிகழ்வில் கலந்து கொள்ளும் போது கை நனைத்தல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக நமது ஊர்களில் கருதப்படும். விருந்தில் கை நனைக்காமல் அதாவது உணவு உண்ணாமல் ஒருவர் சென்றுவிட்டாரென்றால் விழா கொண்டாடும் நபரோடு அவருக்கு இனி உறவு இல்லை என்று அர்த்தம். அதுவே விருந்து உண்டு மகிழ்ந்தார் என்றால் உறவு புதுப்பிக்கப்பட்டு பலப்படுத்தப்படுகிறது ,தொடர்கிறது என்று அர்த்தம்.

சீடர்கள் தங்களது உயிர்த்த இயேசுவின் அனுபவத்தை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து மகிழ்ந்து கொண்டிருக்கும் தருணம், இயேசு அவர்கள் மகிழ்வில் பங்கு கொள்கிறார். தான் இறந்து உயிர்த்த பின்பும் அவர்களுடனான உறவு நீடிக்கும், தொடரும் என்பதை வெளிப்படுத்தும் அடையாளமாக அவர்களோடு அமர்ந்து உணவு உண்கிறார்.அதே போல் அனுதினமும் திவ்ய நற்கருணை மூலமாக நம்முள் வந்து தங்கி, நம்முடனான உறவையும் புதுப்பித்துக் கொள்கிறார். நாம் அதை உணர்கிறோமா? அவருடனான உறவைப் புதுப்பிக்கின்றோமா?

அன்று சீடர்களுக்கு தோன்றி கலங்காதீர்கள் பயம்கொள்ளாதீர்கள் என்று கூறி திடப்படுத்தியவர், எலும்பும் சதையுமான தனது உடலைத் தொட்டு நம்பிக்கை பெறச்செய்தவர், இன்று நமக்கும் திட மூட்டுகிறார். நம்பிக்கை தருகிறார். அன்று உண்மைக்கு சாட்சியம் பகிரவே நான் வந்தேன் என்று கூறியவர், இன்று இக்காலத்து சீடர்களாகிய நம்மைப்பார்த்து சொல்கிறார் நீங்களே இதற்கு சாட்சிகள் என்று. இன்றைய நமது ஒவ்வொரு செயல்பாடுகளும் நமது வருங்கால சந்ததியினருக்கு சாட்சியமே . சாட்சியம் சொல்லுதல் என்பது கொடை ஒரு புது வாழ்வு. சாட்சியம் கூறுபவனுக்கும் அதனால் பயன் பெறுபவனுக்கும் ஒரு கொடையாக புது வாழ்வளிப்பதாக மாறுகிறது. நமது வாழ்வு புது வாழ்வாக மாற, கொடையாக பொலிவடைய நாம் உண்மையின் சாட்சிகளாக மாற வேண்டும்.

எவ்வாறு உயிர்த்த இயேசு திகிலும் மனக்கலக்கமும் கொண்டிருந்த சீடர்களுக்கு தைரியமும் மனத்திடமும் கொடுத்தாரோ, அதே போல் நமக்கும் தருவார் என நம்புவோம். எங்களுக்குத் தலைவராக இருந்து வழிநடத்திய இயேசு இறந்து விட்டார் . இனியார் எங்களுக்கு தலைமை தாங்குவார்? என்று எண்ணி கலங்கிய சீடர்களையே தலைவர்களாக மாற்றுகிறார். பாவ மன்னிப்பு பெற மனம் மாறுங்கள் என்று கூறி உலகெங்கும் நற்செய்தியைப் பறைசாற்ற சீடர்களாக அல்ல, தலைவர்களாக அல்ல, மக்கள் பணி செய்யும் பணியாளர்களாக அனுப்புகிறார். அவர்கள் தலைவர்களாக, முன் மாதிரிகைகளாக உருமாறுகிறார்கள். நாமும் உருமாறுவோம் . நலமானதைப்பெற, நன்மையை பிறருக்கு தர உண்மையின் சாட்சிகளாவோம். நலமானதை நமக்கு அருள்பவர் இறைவன் ஒருவரே. அந்த இறைவனின் அருளை நாம் பெற உயிர்த்த இயேசுவின் திருமுக ஒளி நம்மீது படுபவர்களாக நாம் மாற வேண்டும். பள்ளிப் பருவத்தில் குழி ஆடி, குவி ஆடி எனும் இரண்டு லென்ஸுகளைப் பற்றி நாம் படித்திருப்போம். ஒன்று ஒளியை உள்வாங்கி பிரதிபலிக்கும் . மற்றொன்று ஒளியைக் குவித்து நெருப்பாக மாற்றும். நாம் உயிர்த்த இயேசுவின் திருமுக ஒளியைப் பெறுபவர்களாக மாறும்போது அதை பிறருக்கு பிரதிபலிக்கும் லென்சாகவும், அவ்வொளியால் தீமையை சுட்டெரித்து சுடர்விட்டு எரியும் நெருப்பாகவும் மாறவேண்டும் . தான் மட்டும் நலமாய் இருந்தால் போதும் என்று நினைப்பவரைக் காட்டிலும் தானும் நலமாய் வாழ்ந்து ,தன்னைச்சுற்றிலும் இருப்பவர்களையும் நலமாய் வாழ வைக்க எண்ணும் நல் இயேசுக்களாய் வாழ முற்படுவோம். நலமனைத்தையும் தரும் உயிர்ப்பின் ஆற்றல் நம்மேலும் நம் குடும்பத்தினர் அனைவர் மேலும் இருந்து வழிநடத்துவதாக ஆமென்.