இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் 5வது வாரம்

இலக்கை நோக்கிய பயணம்

யோபு 7: 1-4,6-7
1 கொரி 9: 16-19, 22-23
மாற்கு 1: 29-39

நோய்நாடி நோய்முத‌ல் நாடி அதுத‌ணிக்கும்
வாய்நாடி வாய்ப்ப‌ச் செய‌ல்ப‌டும் ம‌ருத்துவ‌ராக‌ இன்றைய‌ ந‌ற்செய்தியில் வ‌ல‌ம் வ‌ருகிறார் இயேசு. முன்பொரு கால‌த்திலெல்லாம் வியாதி என்றாலே காய்ச்ச‌ல் என்று தான் ப‌ல‌பேருக்குத் தெரியும். ஆனால் இக்கால‌த்திலோ காய்ச்ச‌லிலேயே ப‌ல‌ வ‌கை. வித‌வித‌மான‌ பெய‌ர்க‌ளில் காய்ச்ச‌ல் வியாதிக‌ள் ந‌ம்மைச் சுற்றி வ‌ட்ட‌மிட்டுக் கொண்டும் ப‌ய‌முறுத்திக் கொண்டும் இருக்கின்ற‌ன‌. இதில் எந்த‌ பெய‌ர் கொண்ட‌ காய்ச்ச‌லினால் சீமோன் பேதுருவின் மாமியார் பாதிக்க‌ப்ப‌ட்டிருந்தார் என்று யாருக்கும் தெரிய‌வில்லை. ஆனால் என‌க்கு ஒரு வ‌கை காய்ச்ச‌ல் தெரியும் . காய்ச்ச‌ல் என்றாலே என‌க்கு நினைவுக்கு வ‌ருவ‌து எங்க‌ள் ஊர் ரொட்டிக்க‌டை இட்லி காய்ச்ச‌ல் தான். என‌து சிறுவ‌ய‌தில் ஐம்ப‌து பைசாவுக்கு ஒரு இட்லியும் ஒரு ட‌ம்ள‌ர் சாம்பாரும் கிடைக்கும் இட‌ம் அது தான். காய்ச்ச‌ல் என்று யார் சொன்னாலும் ம‌ருந்தாய் வ‌ருவ‌து அந்த‌ இட்லியும் சாம்பாரும் தான் . அத‌ற்காக‌வே காய்ச்ச‌லில் ப‌டுக்க‌ ஆசைப்ப‌ட்ட‌ நேர‌ங்க‌ள் ப‌ல‌.

இன்றைய‌ ந‌ற்செய்தியில் பேதுருவின் மாமியார் காய்ச்ச‌லினால் அவ‌திப்ப‌ட்டுக் கொண்டிருக்கின்றார். இயேசு அவ‌ருக்கு குண‌ம் அளிக்கின்றார். குண‌ம் பெற்ற‌தும் அவ‌ர் அவ‌ர்க‌ளுக்குப் ப‌ணிவிடை புரிகின்றார். இதில் மூன்று வ‌கையான‌ ம‌ன‌நிலை கொண்ட‌ ம‌னித‌ர்க‌ள் என் ம‌ன‌தில் நிலைத்து நிற்கின்ற‌ன‌ர்.

1. ம‌றைமுக‌ ம‌னித‌ர்க‌ள்.
2. ம‌றை ப‌ணி செய்யும் மாமியார்.
3. மாற்றிட‌ம் தேடிச்செல்லும் ம‌னும‌க‌ன்.

1. ம‌றைமுக‌ ம‌னித‌ர்க‌ள்
தொழுகைக் கூட‌த்தை விட்டு வெளியே வ‌ந்த‌ இயேசுவோடு ம‌க்க‌ள் ப‌ல‌ரும் இருந்த‌ன‌ர் . அவ‌ர்க‌ள் யாக்கோபோடும், யோவானோடும் சீமோன் பேதுருவின் மாமியார் வீட்டுக்குச் செல்கின்ற‌ன‌ர். அங்கு சென்ற‌வுட‌ன் பேதுருவின் மாமியார் காய்ச்ச‌லால் அவ‌திப்ப‌டுகின்றார் என்று அவ‌ருக்குச் சொல்கின்ற‌ன‌ர். வ‌ழ‌க்க‌மாக‌ ந‌ம‌து குடும்ப‌ங்க‌ளில் இள‌ம் வ‌ய‌துடையோர் நோய்வாய்ப் ப‌டும் போது அவ‌ர்க‌ளை குண‌ப்ப‌டுத்த‌வேண்டும் என்று குடும்ப‌ம் அனைத்தும் முழு மூச்சுட‌ன் செய‌ல்ப‌டும் . ஏனென்றால் இள‌ம்வ‌ய‌தின‌ர் இன்னும் வாழ‌ வேண்டும் அத‌னால் சுக‌ம் பெற‌ வேண்டும் என்று நினைப்போம். ஆனால் அதுவே ஒரு வ‌ய‌தான‌வ‌ர் சுக‌மிழ‌ந்தால், அது அவ‌ர் வ‌ய‌து மூப்பு தான் அத‌ற்கு கார‌ணம் , என்று கூறி அவ‌ர‌து உட‌ல் நிலை முன்னேற்ற‌ம் அடைய‌ அதிக‌ முய‌ற்சிக‌ள் அவ்வ‌ள‌வாக‌ யாரும் எடுப்ப‌தில்லை எ‌ன்ப‌து அப்ப‌ட்ட‌மான‌ உண்மை. ஆனால் இங்கு ந‌ற்செய்தியில் அத‌ற்கு மாற்றாக‌ ந‌ட‌க்கிற‌து. அந்த‌ ம‌றைமுக‌ ம‌னித‌ர்க‌ள் வீட்டிலுள்ள‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் க‌ண்க‌ளுக்கு அப்பால் ம‌றைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ அந்த‌ வ‌ய‌தான‌ மூதாட்டியை இயேசுவின் பார்வை முன் கொண்டுவ‌ர‌ முய‌ற்சிக்கிறார்க‌ள். இயேசுவின் சீட‌ர்க‌ளிலேயே அதிக‌ வ‌ய‌தான‌வ‌ர் பேதுரு, அவ‌ரின் மாமியார் நிச்ச‌ய‌ம் அவ‌ரை விட‌ மூத்த‌வ‌ராக‌த் தான் இருந்திருப்பார். அப்ப‌டிப்ப‌ட்ட‌ அந்த‌ வ‌ய‌தான‌ பெண்ம‌ணியும் வாழ்வு பெற‌ வேண்டும் என‌ நினைக்கின்ற‌னர் இந்த‌ ம‌றைமுக‌ ம‌னித‌ர்க‌ள். எந்த‌வித‌ எதிர்பார்ப்புமின்றி ஒருவ‌ரின் வாழ்க்கை ந‌ன்றாக‌ அமைய‌ த‌ங்க‌ளால் இய‌ன்ற‌ ந‌ற்செய‌ல்க‌ளை செய்யும் ம‌னித‌ர்க‌ள் இவ‌ர்க‌ள். ம‌ருத்துவ‌ர் நோய‌ற்ற‌வரு‌க்க‌ன்றி நோயுற்ற‌வ‌ருக்கே தேவை என்ற‌ இயேசுவின் வார்த்தைக்கு வாழ்க்கை வ‌ழி வ‌டிவ‌ம் கொடுத்த‌வ‌ர்க‌ள் இவ‌ர்க‌ள். ம‌ருத்துவ‌ரான‌ இயேசுவை நோயுற்ற‌வ‌ரிட‌ம் சேர்த்த‌ விரைவு உந்திக‌ள், அவ‌ச‌ர‌ ஊர்திக‌ள் (ஆம்புல‌ன்சு) விரைவாக‌ செய‌ல்ப‌ட‌ ,அவ‌ச‌ர‌த்தில் செய‌ல்ப‌ட‌ உருவாக்க‌ப்ப‌ட்ட‌ இய‌ந்திர‌ வாக‌ன‌ங்க‌ள் இய‌ல்பாக‌ இய‌ங்க‌ ம‌றுக்கும் இந்நிலையில், இயந்திரமென செயல்பட்ட மனிதர்கள். நம்மிலும் பலர், ஏன் நாம் ஒவ்வொருவரும் கூட இயல்பாக செயல்பட பல நேரங்களில் முயல்கிறோம் . ஆனால் இயலாமல், இயந்திரம் போல் யாராவது நம்மை இயக்கினால் தானே இயங்குகிறோம். இயல்பாக செயல்பட்டு இனிமையை சேர்க்க முயல்வோம்.

2. மறை பணி செய்யும் மாமியார்.
இயேசு அந்த பெண்மணியின் அருகில் சென்று அவரதுக் கையைத் தொட்டு அவரைத் தூக்கினார். வயதானவர்கள் அவர்களது இறுதிகாலத்தில் விரும்புவது அருகிருப்பு, அரவணைப்பு, அன்பான செயல்/சொல். இது மூன்று மட்டும் தான். . ஆனால் நாம் தான் இதைக் கொடுக்க மறந்துவிடுகின்றோம். நாம் கொடுக்கின்ற விலையுயர்ந்த மருந்துகளோ, மாட மாளிகை வசந்தங்களோ, வண்ண உடைகளோ, விருந்து உபசரிப்புகளோ, அவர்களுக்கு மகிழ்வளிப்பதில்லை. மாறாக நான் இருக்கிறேன், நாங்கள் இருக்கிறோம் உங்களுக்காக என்று அவர்கள் கரம் பற்றி நீங்கள் தரும் ஒரு அழுத்தம் தான் அவர்களை மகிழ்விக்கும்.
உண்மையான உணர்வுடன் இருக்கும் உங்கள் அரவணைப்பு, தொடுதல் அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். அன்பான ஒரு சொல்/செயல் அவர்கள் வாழ்க்கையை இன்னும் இனிமையாக்கும். ஆம் இவை மூன்றையும் ஒரே நேரத்தில் பெற்ற பேதுருவின் மாமியார் மறுவாழ்வு பெற்றவராக புத்துணர்ச்சியுடன் மீண்டும் எழுந்து நிற்கின்றார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கியது. அதோடு அவரைப் பிடித்திருந்த தனிமை , இயலாமை , பாதுகாப்பின்மையும், அவரை விட்டு நீங்கியது . உடனே அவர்களுக்குப் பணிவிடை செய்யத் தொடங்குகிறார். வயதில் மூத்தவராக இருந்தாலும் இளம் வயதுடைய இயேசுவுக்கும் அவர்தம் சீடர்களுக்கும் தானாக முன்வந்து பணிசெய்கின்றார். இயேசுவின் சிறு தொடுதலினால் அன்பையும் அரவணைப்பையும் ஆற்றலையும் பெற்றவராக வாழத் தொடங்குகின்றார்.பிறருக்கும் அதைப் பகிர்கின்றார்.

3. மாற்றிடம் தேடிச் செல்லும் மனுமகன்
ஓடுகின்ற நீர் செல்வ வளம் கொழிக்கும் ஆறாகும்; தேங்குகிற நீரோ புழு பூச்சிகளோடு நாற்றமெடுக்கும்; இயேசு வற்றாத வளம் கொழிக்கும் அருவி நீர், மலையில் தோன்றி மடுவில் மோதி மண்ணின் வழியே மனிதர்களின் மனங்களை மகிழ்விக்கும் அற்புத நீர். காய்ச்சலில் கிடந்த மாமியாரை அதாவது யாரும் தீண்டாமல் ஒரு ஓரமாய் இருக்கும் உயிரற்ற , விலை மதிப்பற்ற பொருட்களைத் தான் இங்கே கிடக்கிறது அங்கே கிடக்கிறது என்பர். அப்படி ஒரு பொருள் போல் உயிரற்று மதிப்பற்று இருந்தவரை தொட்டு குணமாக்குகின்றார். குணம் பெற்றதும் பணிவிடைகள் செய்ய துவங்கிய அந்த பெண்மணியைப் பார்க்கின்றார் இயேசு. தன்னைப் பின்பற்றி வந்தவர்களுக்கும் பணிவிடை புரிந்த அந்த பெண்மணியின் செயல் அவருக்குள் ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிகாலை இனிமையில், இறைவனோடு கலந்து இறை ஆற்றலைப் பெருக்கிக் கொள்கின்றார். தனது நோக்கத்தைக் கூர்மைப் படுத்திக் கொள்கின்றார்.

''மானிட மகன் பணிவிடை பெறுவதற்கன்று, பணிவிடை புரியவே''..... என்ற வரிகளைக் கூர்ந்து தியானித்தாரோ என்னவோ/? தன்னைத் தேடி வந்த சீடர்கள் '' உம்மை எல்லோரும் தேடிக் கொண்டிருக்கின்றார்கள் என்று சொன்னதும் வாருங்கள் நாம் அடுத்த ஊருக்குப் போவோம். அங்கும் நான் நற்செய்தியைப் பறை சாற்ற வேண்டும் அதற்காகவே நான் வந்திருக்கிறேன் என்று சொல்கிறார். தனது இலக்கை நோக்கியப் பயணத்தில் ஒவ்வொரு நாளும் தனது பாதையை நெறிப்படுத்திக் கொண்டேசெல்கிறார். இம்மியளவும் தனது பாதையில் தடம் மாறாது எங்கும் தேங்கிவிடாது தொடர்ந்து பயணிக்கிறார்.

நமது பயணம் இலக்கை நோக்கிய பயணமா உள்ளதா??
அன்பு உள்ளங்களே நற்செய்தியில் உள்ள இயேசுவைப் போல அனுதினமும் தனிமையில் இறைவனோடு உரையாடி, நாம் சென்று அடைய வேண்டிய இலக்கைக் கூர்மைப் படுத்துபவர்களாக, மனநிறைவோடு மறைபணி செய்பவர்களாக, எதிர்பார்ப்பின்றி நன்மைகள் செய்யும் மறைமுக மனிதர்களாக வாழ இறைவனின் அருள் வேண்டுவோம். எல்லாம் வல்ல இறைவனின் ஆசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரோடும் இருந்து நம்மை வழிநடத்துவதாக ஆமென்.