இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே,யேர்மனி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் 17ஆம் ஞாயிறு.

“பராமரிக்கும் தந்தை”

2அரசர்கள் 4:42-44
எபேசியர் 4:1-6
யோவான் 6:1-15

இன்றைய வாரம் கடவுள் “பராமரிக்கும் தந்தையாக” இருக்கிறார் என அறிந்துக் கொள்ள திருச்சபை நமக்கு வாய்ப்பினை கொடுக்கிறது.
முதலாவதாக இன்றைய நற்செய்தி கூற விரும்புவது:
பெலிக்கான் பறவையின் கதையை நாம் கேட்டிருக்கலாம். அவை தன் குஞ்சுகளுக்கு இரை கிடைக்காத பொழுது தனது நெஞ்சைப் பிளந்து தன் குருதியைத் தன் குஞ்சுகளுக்குக் கொடுக்குமாம். உணவில்லாமல் தன் குஞ்சுகள் செத்து மடிவதை விட தன் இரத்தம் சிந்தி தன் குஞ்சுகள் வாழ்வதை விரும்புகிறது. விண்ணகத்தில் இருக்கும் நம் தந்தை இதை விட உயர்ந்தவர். நம்மை பாதுகாப்பதிலும், பராமரிப்பதிலும் சிறந்தவராக இறைவன் விளங்குகிறார். பகிர்தல் வழி பலதரப்பட்ட சூழ்நிலைகளை கடந்து வர இன்றைய நற்செய்தி அழைக்கிறது. இயேசு வாழ்ந்த காலத்தில் அவர் அனுபத்தில் இருந்து பலதரப்பட்ட பகிர்தலை மக்களுக்கு கொடுத்தார். அதன் வழி பலர் வாழ்க்கைத்தரம் சீரமைக்கப்பட்டது. இறைமகன் இயேசு அன்பை, செபத்தை, மன்னிப்பை, இரக்கத்தை, ஞானத்தை, கோபத்தை, பொறுமையை, ஆதரவை, அரவணைப்பை, ஆறுதலை, நட்பை, இறுதியாக தன்னையே இவ்வுலகிற்கு பகிர்ந்து கொடுத்தார்.
இருப்பதைப் பகிர்வதில் பெறுகின்ற இன்பம் எதிலும் இல்லையே
இழப்பதை வாழ்வென ஏற்றிடும் இலட்சியம்
இறுதியில் வெல்லுமே
வீதியில் வாடும் நேரிய மனங்கள் நீதியில் நிலைத்திடுமே
நமை இழப்போம் பின்பு உயிர்ப்போம்
நாளைய உலகின் விடியலாகவே

ஆம் நாம் முடிவில்லா வாழ்வு பெறும் பொருட்டு தன் உடலையும் இரத்தத்தையும் வாழ்வளிக்கும் அருமருந்தாக அடையாளப்படுத்துகிறார். இந்த அடையாளத்தை பெற்றுக்கொள்ள இன்றைய நற்செய்தி நம்மை தூண்டுகிறது. பசியால் மக்கள் இருப்பதை இயேசு அறிந்து உடல்பசியை போக்குகிறார். அன்று தந்தை கடவுள் இஸ்ராயேல் மக்கள் பாலை நிலத்தில் உணவின்றி, நீரின்றி தவித்த பொழுது மோசே வழியாக விண்ணகத்திலிருந்து, மன்னாவையும், பாறையிலிருந்து நீரையும் கொடுத்து பரிவுடன் பராமரித்து வந்தார். புதிய ஏற்பாட்டில் இறைமகன் இயேசு எவ்வாறு ஆன்மாவிற்கும், உடலுக்கும் பசியை போக்கும் பரமனாக விளங்குகிறார் என அறிவோம். ஆன்மா என்பது உயிரை குறிப்பதாகும். அப்படிப்பட்ட உயிர் வாழ தேவையானது உணவு. அதற்கு இயேசு கூறும் எடுத்துக்காட்டு:
விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே
• நானே வாழ்வு தரும் உணவு
• நானே உயிர் தரும் உணவு

பக்தியோடு உணவை உண்டு வாழ்வு அடையலாம் நாமும் சக்திபெற்று வாழ்வில் ஓங்க வழியும் பிறக்கலாம் என்னை உண்டு வாழ்பவர்கள் என்றும் நிலைப்பார் என்று இயேசு சொன்ன பொன்மொழியை விசுவசிப்போமே blue
இனிமையான விருந்து ஒன்றை இயேசு படைத்தார் நாமும் இன்புறவே வாழவேண்டும் என்று நினைத்தார் வானின் உணவை உண்பவர்கள் என்றும் அழியார் என்று வானரசும் கூறியதை வாழ்ந்து காட்டுவோம்
இப்படிப்பட்ட ஆன்மீக பசியை தணிக்கும் உணவாக இயேசு விளங்குகிறார். அவரையே நமக்குத் தருகிறார். இவ்வாறாக ஆன்மீகபசி தீரும் போது வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் நம்மை தொடர்ந்து வழிநடத்தும், இதை உறுதியாக நம்புவோம். இரண்டாவதாக இன்றைய நற்செய்தி கூற விரும்புவது:
இயேசு கொடுப்பதில் தாராள குணம் உடையவராக இருக்கிறார். அவர் கொடுக்கும் அருளில் எந்த விதமான பற்றாக்குறையும் ஏற்படுவதில்லை.
“தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசி இருக்கும்
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும்.”

ஆம் வாழ்க்கையில் அனைவருக்கும் பசி என்றால் என்னவென்று தெரியும். கடவுள் நம்மை அன்பு செய்கிறார் என்பதை பல வழிகளில் வெளிப்படுத்துகிறார். அந்த அன்பின் வெளிப்படுத்தான் பசியை போக்கும் நிகழ்வு. இதற்கு உதாரணமாக இன்றைய நற்செய்தியில் வாசிக்க கேட்கிறோம், அனைவரும் வயிறார உண்டனர். இது நிறைவை கொடுக்க கூடிய செயல். பசியின் கொடுமை நம்மில் இருக்கும் போது மயக்கம், சக்தியை முழுமையாக இழந்து போதல், தேடல், குறைந்த பொறுமை என எண்ணிக் கொண்டே போகலாம். நிறைவை வழங்கும் இறைவனாக நம்மில் செயலாற்றுகிறார். நிறைவு என்பது முழுமையை குறிக்கிறது. ஆம் இயேசு முழுமையான வாழ்வை நமக்கு கொடுத்து அதில் ஆற்றல் பெற்றிட திடம் கொடுக்கிறார்.
முன்றாவதாக இன்றைய நற்செய்தி கூற விரும்புவது:
இயேசு சேமித்து வையுங்கள் என்று தம் சீடர்களிடம் கூறுகிறார். சேமித்தல் என்பது மற்றவருக்கு மேலும் வருங்காலத்திற்கு பயன்பட உதவும் கருவி. இந்த கருவியை பயன்படுத்தும் நபரை பொறுத்தது. தனக்கு தன்னை மட்டும் சார்ந்தவர்களுக்கு பயன்படுத்தும் சிறிய கருவியாகவும் பயன்படுத்தலாம், பெரிய இயக்கநிலைலே ஓடிக்கொண்டிருக்கும் இயந்திரமாகவும் மாற்றலாம். எவ்வாரெனில் சமுதாயம், நாடு என நம்மிடம் இருப்பதை ஏழை, எளியவர்களோடு பகிர்ந்துக் கொள்ளலாம். அதன் வழி சேமிப்பின் உயர்வை அறிந்துக்கொள்ள இயேசு இன்று தெளிவாக கூறுகிறார். நமது உடனிருப்பு, செபம், ஆறுதல் வார்த்தைகள், பண உதவி, என என்னிடம் இருக்கும் பண்பு நலங்கள் வழி என்னை பகிர்ந்துக்கொள்ளலாம். அதன் வழி புதிய சமுதாயத்தை இறைவன் பாதையில் உருவாக்கலாம். உருவாக்குவோம். ஆமென்.