இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே,யேர்மனிஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் 14 ஆம் ஞாயிறு.

என் அருள் உனக்குப் போதும்.

எசேக்கியல் 2:2-5
2 கொரிந்தியர் 12:7-10
மாற்கு 6:1-6

இன்றைய ஞாயிறு வாசகங்கள் அனைத்தும் நம் வாழ்வில் நிகழும் வல்ல செயல்களை நாம் புரிந்துக்கொள்ளவும், அதை அறிந்துக்கொள்ளும் ஞானத்தையும் பெற்றுக்கொள்ளவும், அழைப்பு விடுக்கிறது. இப்படிப்பட்ட திருவிருந்திற்கு வந்திருக்கும் அன்னையர்கள், தந்தையர்கள், இளம் உள்ளங்கள், குழந்தைகள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். மனித வாழ்க்கை கடமைகளும், பொறுப்புக்களும், அதிசயங்களும், ஆச்சரியங்களையும் உள்ளடக்கியது. இதில் மனிதன் விரைவாக ஓடிக்கொண்டே இருக்கின்ற சூழலுக்குள் தள்ளப்படுகின்றான். ஆகவே எது தேவை, எது தேவையற்றது என அறிந்துக்கொள்ள நேரம் குறுகியதாக இருக்கிறது, மேலும் அதை புரிந்துக்கொண்டு செயல்பட அறிவும், ஞானமும் அவசியமானதாக இருக்கிறது. அவசியமானதாக நாம் உணர்ந்துக்கொள்ள புனித பவுலடியார் கூறும் சில சிந்தனைகள்........... “என் அருள் உனக்குப் போதும்; வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்” (2கொ 12:9) என் அருள் உனக்குப் போதும் என்பது நிறைவாழ்வை நோக்கிச் செல்ல உந்துசக்தியாக இருக்கும் என தனது அனுபவத்தில் இருந்து வெளிக்கொணர்கிறார். இறைவனுடைய அருள் நம்மை தொடரும் போது நம் உள்ளமும், நம் உள் வாழ்க்கையும் சரியானவைகளாக அமைகிறது. என் அருள் என்பது இறைவனின் மதிப்பீடுகளாகிய அன்பு, இரக்கம், தாழ்ச்சி, பொறுமை, உதவி, மன்னிப்பு ........ நாம் பெற்று அதனை மற்றவருக்கு பிரதிப்பலிக்கும் நபர்களாக திகழ வேண்டும் என்பதாகும். கடவுளிடமிருந்து அருள் வரும் நேரங்கள் நமக்குக் கிடைக்கும் அறிய வாய்ப்புக்களை நம் வாழ்வில் பயன்படுத்தவும் அவற்றின் வழி மற்றவருக்கு வெளிப்பத்துதல் வழியாக அருள்வரங்களை நாம் ஆழப்படுத்தவும், கண்டுக்கொள்ளவும் அழைக்கும் புனித பவுலடியாரோடு நாமும் இணைவோம்.

இன்றைய நற்செய்தியில் கூறும் கருத்து இறைவனுடைய ஞானம் என்பது வல்லமையின் செயல்கள் என நம் கண்முன் வைக்கின்றது. இறைஞானத்தோடு செயல்படும் போது வாழ்வில் ஏற்படுகின்ற எதார்த்தமான சூழ்நிலைகளுக்கு சரியான முறைகளில் தீர்வுகளை கண்டுக்கொள்ள முடியும் என்பதை எண்பிக்கிறது. இதற்கு சான்றாக ஞானம் — ஆற்றல் கொண்டது. அவ்வாற்றல் அறிவுடையது; தூய்மையானது; தனித்தன்மை வாய்ந்தது; பலவகைப்பட்டது; நுண்மையானது; உயிரோட்டம் உள்ளது; தெளிவுமிக்கது; மாசுபடாதது; வெளிப்படையானது; கேடுறாதது; நன்மையை விரும்புவது; கூர்மையானது.ஞானம் — எதிர்க்கமுடியாதது; நன்மை செய்வது; மனிதநேயம் கொண்டது; நிலைபெயராதது; உறுதியானது; வீண்கவலை கொள்ளாதது; எல்லாம் வல்லது; எல்லாவற்றையும் பார்வையிடுவது; அறிவும் தூய்மையும் நுண்மையும் கொண்ட எல்லா உள்ளங்களையும் ஊடுருவிச் செல்வது.ஞானம் — அசைவுகள் எல்லாவற்றையும்விட மிக விரைவானது; அதன் தூய்மையினால் எல்லாவற்றிலும் நிரம்பி நிற்கிறது; எல்லாவற்றையும் ஊடுருவிச் செல்கிறது. (சா.ஞா 7:22-24) இயேசுவும் இப்படிப்பட்ட ஞானத்தை நிலை நிறுத்த தன்னையே அர்ப்பணித்தார். இயேசு ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்.(லூக் 2:52) இயேசு குழந்தைப்பருவத்தில் இருந்து எவ்வாறு ஞானம் மிக்கவராக இருந்தார் என்றும் கடவுளின் திட்டத்திற்கு முழுமையாக ஒத்துழைத்து ஞானத்தோடு வல்ல செயல்களை செய்தார் எனவும் பார்க்கிறோம்.

இறைமகன் இயேசுவின் செயல்கள் அனைத்துமே மற்றவர்களுக்கு பயன்படும் விதத்தில்தான் அமைந்ததாக வாசிக்க கேட்கிறோம். இவ்வுலகில் வித்தியாசமான செயல்கள் மூலம் மக்களை கவரக்கூடியவர்கள் உண்டு. ஒரு செயலை மிகச்சிறப்பாக செய்வதன் மூலம் கிடைக்கும் திருப்தி வேறு எதிலும் தரமுடியாது. இப்படிப்பட்ட திருப்தியை அனைவரும் கண்டுக்கொள்ள தனது ஞானம் நிறைந்த செயல்பாடுகளை மக்கள் முன் இயேசு செய்கிறார், அவற்றை ஏற்றுக்கொள்ள மற்றும் விசுவாச கண்ணோட்டத்தோடு பார்க்க பாரம்பரிய சட்டங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் என்று தடைகற்களை போட்டு இயேசு இம்மண்ணிற்கு எதற்காக வந்தார் என்பதை ஏற்றுக்கொள்ள மறுதலிக்கின்றனர். ஆனால் நமது செயல்களே, கடவுள் மீதுள்ள நமது நம்பிக்கையின் வெளிப்பாடாக, அமைய வேண்டும். இல்லாதவரோடு பகிர்தல், ஏழைகளுக்கு, விதவைகளுக்கு, அநாதைகளுக்கு, அந்நியருக்கு இரக்கம் காட்டுதல் போன்ற செயல்கள் மூலம் இறையன்பை வெளிப்படுத்தும் புதுமைகளை காண்போம்.

நம்பிக்கை செயலின் தொடக்கம்
நம்பிக்கை செயலின் ஊக்கம்
நம்பிக்கை தான் வாழ்க்கை
நம்பினோர் கெடுவதில்லை என்பது சான்றோர் சொல்
நம்பிக்கையற்ற செயல் தோல்வியே
நம்பிக்கை நற்காரியத்தின் செயல்பாட்டின் மீது இருக்கட்டும்
நம்பிக்கையற்ற மார்க்கத்தின் செயல்பாடு வீண்
இறைவன் மீது வைத்த நம்பிக்கை என்றும் வற்றாத நம்பிக்கையாகும். ஆமென்