இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே,யேர்மனிஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

தவக்காலம் மூன்றாம் ஞாயிறு

உன்மீது நீ அன்புகூர்வது போல

விடுதலைப் பயண நூல 20: 1-17
1 கொரிந்தியர 1: 22-25
யோவான் 2: 13-25

முன்றாம் வார தவக்காலத்திற்குள் செல்லவிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இயேசுவின் திருநாமத்தில் வாழ்த்துக்களும், செபங்களும். இன்றைய வாசகங்கள் நமக்கு அன்பு, ஆலயம், நற்கருணை என்ற சிறப்பான வார்த்தைகளை தியானிக்கவும், வாழ்வாக்கவும் சிறப்பு அழைப்பிதழ் கொடுக்கிறது. அழைப்பிற்கு செவிமடுக்க பணிக்கிறேன். மனிதனின் வாழ்க்கையில் அடிப்படையாக தேவைப்படுவது விதிமுறைகள். இயேசுவின் மதிப்பீடுகளின் படி வாழ, அன்போடு, இரக்கத்தோடு, பணிவோடு, கனிவோடு வாழ்க்கையில் செல்ல விதிமுறைகள் வழிகாட்டுகின்றன. மேலும் உட்வேகமாக இருக்கிறது. மனித வாழ்வு விதிமுறைகள் மூலம் உயர்ந்திருக்கிறது. இன்றைய முதல் வாசகத்தில் கூட கடவுள் இவ்வாறாக உடன்படிக்கை செய்கிறார்.“என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன்“.(விப 20:4) உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களும் அன்பு என்ற வார்த்தைக்கு பொருள் கொடுக்கின்றன. ஆம் மனிதன் மகிழ்ச்சியாகவும், இன்பமாகவும் மேலும் நிம்மதியுள்ளவர்களாக வாழ ஒருவர் ஒருவருடன் இருக்கும் அன்பை பரிமாறிக் கொள்ள விதிமுறைகள் உதவுகின்றன.

1கொரி 13:1-13 இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் எனக்கு இருப்பினும், மறைபொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும், அறிவெல்லாம் பெற்றிருப்பினும், மலைகளை இடம்பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும் என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை. என் உடைமையை எல்லாம் நான் வாரி வழங்கினாலும் என் உடலையே சுட்டெரிப்பதற்கென ஒப்புவித்தாலும் என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை. அன்பு பொறுமையுள்ளது: நன்மை செய்யும்: பொறாமைப்படாது: தற்புகழ்ச்சி கொள்ளாது: இறுமாப்பு அடையாது. அன்பு இழிவானதைச் செய்யாது: தன்னலம் நாடாது: எரிச்சலுக்கு இடம் கொடாது: தீங்கு நினையாது. அன்பு தீவினையில் மகிழ்வுறாது: மாறாக உண்மையில் அது மகிழும். அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்: அனைத்தையும் நம்பும்: அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்: அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும். இறைவாக்கு உரைக்கும் கொடை ஒழிந்துபோம்: பரவசப்பேச்சு பேசும் கொடையும் ஓய்ந்துபோம்: அறிவும் அழிந்துபோம். ஆனால் அன்பு ஒருபோதும் அழியாது. ஏனெனில், நமது அறிவு அரைகுறையானது: நாம் அரைகுறையாகவே இறைவாக்கும் உரைக்கிறோம். நிறைவானது வரும் போது அரைகுறையானது ஒழிந்துபோம். நான் குழந்தையாய் இருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன்: குழந்தையின் மனநிலையைப் பெற்றிருந்தேன்: குழந்தையைப்போல எண்ணினேன். நான் பெரியவனானபோது குழந்தைக்குரியவற்றை அறவே விட்டுவிட்டேன். ஏனெனில் இப்போது நாம் கண்ணாடியில் காண்பதுபோல் மங்கலாய்க் காண்கிறோம்: ஆனால் அப்போது நாம் நேரில் காண்போம். இப்போது நான் அரைகுறையாய் அறிகிறேன்: அப்போது கடவுள் என்னை அறிந்துள்ளதுபோல் முழுமையாய் அறிவேன். ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது.

கலா 5:14 உன்மீது நீ அன்புகூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும் நிறைவு பெறுகிறது.

எபே 3: 17-19 நம்பிக்கையின் வழியாக, கிறிஸ்து உங்கள் உள்ளங்களில் குடிகொள்வாராக! அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைவதாக! இறைமக்கள் அனைவரோடும் சேர்ந்து கிறிஸ்துவுடைய அன்பின் அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர்ந்து, அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக! அதன் மூலம் கடவுளின் முழு நிறைவையும் நீங்கள் பெற்றுக்கொள்வீர்களாக!

எபே 5:2 கிறிஸ்து உங்களுக்காகத் தம்மை நறுமணம் வீசும் பலியும் காணிக்கையுமாகக் கடவுளிடம் ஒப்படைத்து உங்களிடம் அன்புகூர்ந்தது போல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள். நான் மானிடரின் மொழிகளிலும் வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும் அன்பு எனக்கில்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் போலாவேன்.

கடவுள் கொடுக்கும் அன்பு சுயநலமில்லாதது, நிபந்தனைற்றது, மேலும் முடிவு பெறாதது, இத்தகைய அன்பில் நாமும் நிலைத்திருக்க கடவுள் அழைக்கிறார். இறைமகன் இயேசு தம் சீடர்களுக்கு அன்பு கட்டளை கொடுக்கிறார். அடுத்திருப்பவர் மேல் அன்பு, பகைவரிடம் அன்பு, என்று அன்பு பணி ஆற்றுவதற்கு தேவையான உந்து சக்தியை தினமும் இறைவன் தனது நற்கருணை கொண்டாட்டத்தின் வழி கொடுக்கிறார். நமது அன்பு மகிழ்ச்சியின்றி, நிம்மதியின்றி, நிறைவின்றி எதை நோக்கிச் செல்கிறது? நமது கிறிஸ்தவ அன்பில் எவ்வகை தாராள மனம் அடங்கியுள்ளது? ஒருவர் ஒரு செயலை செய்யும் போது எந்த நோக்கத்திற்காக அவர் அதைச் செய்கிறார் என்பதை பல நேரங்களில் அறிந்துக் கொள்வது எளிதானதல்ல. இன்றைய நற்செய்தியில் இயேசு ஒரு புரட்சி வீராகவும் அவரது பணிவாழ்வு வீரியமிக்கதாக இருந்தது என புனித யோவான் நமக்கு வெளிக்காட்டுகிறார். தீமைகளை பார்க்கும் போதும், செயல்பாட்டில் ஈடுபடுபவரை நோக்கும் போதும், அவற்றைக் கண்டு அஞ்சாமல் துணிவுடன் நீதிக்கும் நேர்மைக்கும் குரல் கொடுக்க நம்மை அறிவுறுத்தியுள்ளார். அச்சமில்லை அச்சமில்லை உச்சிமீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமென்பதில்லையே என்ற பாராதியின் வரிகளை கிறிஸ்தவர்களாகிய நாம் உச்சரிக்க முடிகிறதா? இடையூறுகளை பொருட்படுத்தாது தொடர்ந்து நீதி, அன்பு, நேர்மைக்கு எப்போதும் ஒரு போர்வீரன் போல் நமது துணிவு இருக்க வேண்டும். தவற்றைச் சுட்டிக்காட்ட பயம், உண்மையை எடுத்துக் கூற பயம், நேர்மையின் வழி செல்ல பயம் இவற்றை எல்லாம் களைந்து நன்மையின் வழி வாழ இன்றைய நற்செய்தி அழைக்கிறது.

ஆலயம் புனிதமான இடம், இந்த புனிதமான இடம் தூய்மை குறையாமல் இருப்பதற்கு, நாம் தூசு படிந்த அழுக்கு நிறைந்த நமது காலணிகளை ஆலயத்திற்கு வெளிப்புறத்தில் வைத்துவிட்டுச் செல்கிறோம். உள்செல்லும் நாம் தூய்மையான, கறைப்படாத மனிதர்களைப் போல் தோற்றமளிக்கிறோம். ஆனால் நமது உள்ளத்தை மனசோதனைச் செய்துப்பார்த்தால், எவ்வளவு தூரம் தூய்மையற்றவற்களாக அழுக்கு நிறைந்தவர்களாக இருக்கிறோம் என அறியலாம். அப்படிப்பட்ட அழுக்குகளோடுத்தான் ஆண்டவர் திருமுன் செல்கிறோம். இருப்பினும் ஆண்டவரை உட்க்கொள்கிறோம். அவரில் இணைகிறோம். இறைவனது உடலை உட்கொள்ளும் நமக்கு அவரின் தூய்மை குடிகொள்கிறது. ஆலயத்தை விட்டு வெளியே வரும் போது தூய்மையாக இருக்கிறோமா? அல்லது பயப்படாமல் இயேசு நம்முடன் உள்ளார் என்ற துணிவான சிந்தனையுடன் வாழ்கிறோமா? செயல்படுகிறோமா?

தூய்மையானவற்றைத் தேடவும், தேடிக்கிடைக்கப் பெற்ற அன்பை, இரக்கத்தை, மன்னிப்பை தக்க வைத்துக்கொள்ள வரம் கேட்போம். ஆலயம் இருப்பதைக் கண்டு மகிழ்வோம், இறைவனுக்கு நன்றி கூறுவோம். ஆலய பணிகளில் தாராள மனதுடன் வேலை செய்வோம். இறைவனுக்கு உரிய சாட்சிய வாழ்வு வாழ்வோம். எங்கெல்லாம் ஆலயங்கள் மூடப்பட்டு திருப்பலி நிறைவேற்ற ஆட்கள் இல்லாமல் இருக்கிறதோ, மேலும் பிரச்சனைகளினால் மூடப்பட்டு இருக்கிறதோ, அங்கெல்லாம் நமது செபம் இவ்வாறாக அமையடடும். மத் 9:37-38 அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். எங்கெல்லாம் கிறிஸ்தவ ஆலயங்கள் எரிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் இறைவன் அன்பு பற்றியெரிய வேண்டுவோம். நமது தொடர் செபத்தின் மூலம் நன்மைகள் பொழிய இத்திருப்பலியில் தொடர்ந்து மன்றாடுவோம். ஆமென்.