இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே,யேர்மனிஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் 5ஆம் ஞாயிறு

நிறைந்த நம்பிக்கை கொண்டு நிறைய செய்ய அழைப்பு

எசாயா 6: 1-2. 3-8
1கொரிந்தியர் 15:1-11
லூக்காஸ் 5:1-11

உலகில் பிறக்கும் எந்தவொரு மனிதனுமே இயல்பான வாழ்க்கை வாழ்வதற்கே அழைக்கப்பட்டவனாக இருக்கிறான். நல்லதற்கும் கெட்டதற்கும் உலகம் வகுத்துள்ள பாதையின்படி தான் அனைவரும் செல்ல அழைக்கப்பட்டுள்ளோம். இப்படிப்பட்ட இயல்பு வாழ்க்கையில் அழைக்கப்பட்டவர்கள் தான் சீடர்கள். ஆம் தன்னுடைய சீடர்களாகும்படி அழைத்தார். அதே உலகத்தில் வாழ்ந்தாலும், உலகத்தின் இயல்பு நிலையில் இருந்து நீங்கலாகி, தான் காண்பித்த படி வாழ்வதற்காக அழைப்பு விடுத்தார். இது தாமரை இலையில் வைக்கப்பட்டு இருந்தாலும், ஒட்டாத நீர்த் துளியாக வாழ வேண்டும் என்பதை இயேசுவின் அழைப்பு. ஆனால் இயேசுவின் மீது நம்பிக்கை கொணடவர்கள் கூட, வாழை இலையில் ஒட்டப்பட்ட எண்ணெய் போல, உலக இயல்புகளோடு ஒன்றி வாழ்கிறார்கள், என்ற தந்துவத்தை லூக்காஸ் சற்று வேறு விதமான கண்ணோட்டத்தோடும், ஆழமான நம்பிக்கை இருக்கும் போது சாட்சிய வாழ்வு வாழ முடியும் என கூறுகிறார்.
உழைப்பதற்கு அழைப்பு
உழைப்பு என்றால் இலக்கை நோக்கி செல்ல தொடர்ந்து முயற்சி செய்வது. உழைப்பு என்பது ஒரு நல்ல தொடக்கமும் முடிவுமாகும். கடினமாக உழைத்தால் மகிழ்ச்சியாக இருப்பார். “ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” (லூக்காஸ் 5: 4) கடின உழைப்பையும், அயராத உழைப்பையும் நம் கண்முன் வைக்கிறது. கடின உழைப்பு ஒன்றுதான் ஒருவனை வெற்றியை நோக்கி கைப்பிடித்து அழைத்துச்செல்லும். வெற்றி பெறுவதற்கு ஒரே வழி உழைப்புதான். உழைப்பின் சிகரம் கட்டாயம் வெற்றியாகத்தானிருக்கும். ஒருவன் தான் ஆசைப்படும் எதையும் உழைப்பின் மூலம் சுலபமாக பெறலாம். அயராத உழைப்பு, கடினமான உழைப்பு இதுதான் ஒருவனுடைய உயிர் மூச்சாக விளங்க வேண்டும். அதுதான் அவனது இலட்சியமாக திகழ வேண்டும். ஒருவனுக்கு ஒன்றில் தோல்வி கிடைத்தால் அவனுடைய உழைப்பு போதாது என்றுதானே பொருள். ஆம் அவ்வாறுதான் சீடர்கள் அமர்ந்திருக்கும் போது இறைமகன் இயேசு விடாமுயற்சியை கைவிட்டு விட வேண்டாம் என்றும் உழைப்பு வீணாவதில்லை எனவும் கூறுகிறார். இன்றைய வளர்ந்து வரும் உலகில் நாம் சிற்ப்பாக வாழ்வதற்கு பல் வழிகளில் முயற்சி எடுக்கிறோம். அதனை அன்றாட வாழ்க்கையில் செயல்படுத்தியும் வருகிறோம். பல நேரங்களில் நமது பலவீனம் நம்மில் ஆட்சிசெலுத்துவதால் விடாமுயற்சியை விட்டுவிடுகிறோம். ஆனால் இறைபலத்தைக் கொண்டு முயல்வது தான் வாழ்க்கை என சீடர்களுக்கு கற்றுக்கொடுத்த இயேசு இன்று நம்மையும் பார்த்து அழைப்பு விடுக்கிறார்.
நம்பிக்கைக்கு அழைப்பு
நம் இறைவன் மீது நம்பிக்கை கொண்டு செயல்படுவோமானால், தினந்தோறும் நாம் ஒரு மிகச்சிறந்த வெற்றியாராக வளர முடியும் என்பதை சீமோன் தனது நம்பிக்கை வழி நமக்கு உணர்த்துகிறார். “ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்” (லூக்காஸ் 5:5b )இறையாற்றலில், இறைவனின் பேரன்பில், இறைவார்த்தையில் நம்பிக்கை கொண்டு செயல்படுவது. அவ்வாறு, சொல்லி, செயல்பட்ட உடனே பேதுருவின் வாழ்வில் அற்புதம் நிகழ்ந்தது. வலைகள் கிழியும் அளவிற்கு மீன்பாடு கிடைத்தது. மனிதர் விரும்புவதாலோ, உழைப்பதாலோ அதிகம் நிகழ்ந்து விடுவதில்லை. ஆனால் கடவுளின் இரக்கம், கனிவு நம்மில் கிடைக்கும் போது வாழ்க்கை முழுமை பெற்று நிறைவை கொடுக்கிறது. சீடர்கள் இறைவார்த்தையில் நம்பிக்கை கொண்டு செயல்பட்டதை போல் அவர் குரலை கேட்டு செயல்பட துணிவு கொள்ள, பேதுரு இன்று நம்மை பார்த்து அழைப்பு விடுக்கிறார்.
பகிர்தலுக்கு அழைப்பு
அன்னை தெரசாவின் வீட்டுக்கு அருகே ஏழைக் குடும்பம் ஒன்று வசித்து வந்தது. அவர்கள் சாப்பிட்டே பல நாட்கள் ஆகியிருந்தன. இளகிய மனம் கொண்ட அன்னை தெரசா அவர்களுடைய வறுமையை அறிந்தபோது மனம் வருந்தினார். கொஞ்சம் அரிசியை எடுத்துக் கொண்டு அந்த வீட்டுக்கு விரைந்தார்.அந்த வீட்டுப் பெண்மணியிடம் அரிசியைக் கொடுத்து பசியாற்றிக் கொள்ளச் சொன்னார். அந்தப் பெண்மணியின் கண்களில் ஆனந்த மின்னல். அடுத்த வினாடியே அந்த அரிசியில் பாதியை இன்னொரு பையில் அள்ளிக் கொண்டு வெளியே ஓடினார் அந்தப் பெண்மணி. சிறிது நேரம் கழித்து திரும்பி வந்த அந்தப் பெண்மணியிடம் தெரசா கேட்டார்.'அத்தனை அவசரமாய் எங்கே போனீர்கள்?' அந்தப் பெண்மணி மூச்சிரைத்துக் கொண்டே சொன்னார், 'பக்கத்தில் இன்னொரு வீடு இருக்கிறது. அவர்களும் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. அவர்களும் சாப்பிடட்டுமே என்று அந்த அரிசியைக் கொண்டு போய் கொடுத்தேன்'.அன்னை தெரசா நெகிழ்ந்தார், அந்தப் பெண்மணியின் இளகிய மனதைக் கண்டு வியந்தார்.பகிர்தல் ஓர் அற்புதமான மனித நேயப் பண்பு. மனதில் ஒளிந்திருக்கும் அன்பின் வெளிப்பாடு பகிர்தலில் வெளிப்படும். ஆனால் அந்த பண்பை இன்று சீடர்களிடத்தில் இறைமகன் இயேசுஊட்டி வளர்ப்பதில் பெரும் அக்கறை காட்டுவதை காண்கிறோம். முதலாவது, பகிர்தல் என்பது பொருள் சார்ந்த விஷயமே கிடையாது. அது நமது மனம் சார்ந்த விஷயம். பட்டினியின் விளிம்பில் கிடந்தாலும் பகிரும் மனப்பான்மையுடன் இருக்கலாம் அல்லது சுவிஸ் பேங்கில் பணத்தைப் போட்டும் சுயநலத்துடன் திரியலாம். எல்லாம் நமது மனதில்தான் இருக்கிறது. பகிர வேண்டும் எனும் மனம் நமக்குள் இருக்கும் போது வாய்ப்புகள் எப்போதும் நமது கண்களுக்கு முன்னால் தெரியும். பேருந்தில் பயணம் செய்யும் போது உங்கள் இருக்கையை இன்னொருவருக்குக் கொடுப்பதில் ஆகலாம். உங்கள் வாகனத்தை இன்னொருவரின் தேவைக்கு பகிர்வதில் ஆகலாம். இப்படி, நீங்கள் வாய்ப்புகளைக் கண்டறிந்துப் பயன்படுத்தப் பயன்படுத்த உங்களுக்குள் பகிர்தல் இயல்பு வேர்விட்டு வளரும். அந்த ஏரியில் ஆழமான பகுதியில் இருக்கும் போது கூட சீடர்களுக்கு தோன்றியது பகிர்தல். “மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகைகாட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள்”. (லூக்காஸ் 5:5b )பகிர்தல் வழியாக நிறைவை காண்கிறார்கள். கொடுக்க கொடுக்க நாம் ஆசீர்வதிக்கப்படுகிறோம். மேலும் மனித நேயத்தோடு வாழ பழகுகிறோம். ஆகவே நாமும் நம்மை சுற்றியிருக்கும் மனிதர்களிடத்திலும் மாண்பை வளர்போம்.
சாட்சிய வாழ்வு வாழ அழைப்பு
மனிதரின் வாழ்க்கையில் அச்சம் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். நமக்கு ஏதோ ஆபத்து நிகழப்போகிறதோ என்னும் எண்ணம் மேலோங்குகின்ற வேளையில் நாம் அச்சமடைகிறோம். நமக்கு ஏற்படுகின்ற பயம் பிற மனிதர் நமக்குத் தீங்கிழைக்கப் போகிறார்களோ என நாம் நினைப்பதால் ஏற்படலாம். அல்லது இயற்கை நிகழ்வுகள் நம் உள்ளத்தில் பயத்தை எழுப்பலாம். அன்றாட உணவும், வாழ்வதற்குத் தேவையான பொருளாதாரமும் நமக்கு இல்லையே என்னும் உணர்வினால் பயம் தோன்றலாம். நோய்நொடிகள் ஏற்படும்போதும், நம்மைச் சார்ந்திருப்போருக்குத் தீங்கு ஏற்பட்டுவிடுமோ என நாம் நினைப்பதாலும் அச்சம் தோன்றலாம். மனித வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் அச்சம் ஏற்படக் கூடும். ஆனால் இன்று விவிலியம் நமக்குத் தருகின்ற செய்தி, “அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்” (லூக்காஸ்5:10) நாம் உண்மையிலேயே அஞ்சவேண்டிய ஒருவர் உண்டு. அவர்தான் நம்மை அன்புசெய்கின்ற கடவுள். கருணையே உருவான இயேசுவோடு வாழ புனித பேதுருவுக்கும் மற்ற சீடர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. நம் வாழ்வில் நமக்கு கிடைத்த கூட்டுறவை மகிழ்வோடு பகிர்வோம்.
அழைப்பு விடுத்த இயேசு
ஒரு பொறுப்புள்ள குடும்பத் தலைவர், தன்னுடைய மரணத்திற்குப்பின் தன் குடும்பத்தின் தேவைகளை கவனிக்க ஏற்பாடுகள் செய்வார் அல்லவா? இயேசுவும் அதைத் தீர்க்கமாகச் செய்தார். இந்த பூமிப்பந்தில் இறையரசை நிறுவ அனுப்பப்பட்ட இயேசுவும் தம்முடைய மரணத்திற்குப்பின் இறையரசு தொடர்ந்து நிலைத்திருக்கச்செய்யும் பணியைத் தொடர தன் சீடர்களை தேர்வு செய்தார். இந்த தேர்வில் நாமும் அழைக்கப்பட்டிருக்கிறோம். ஆகவே, இன்று சிந்திப்போம் அழைப்புகளிலேயே மாபெரும் அழைப்பு எது, என்ன, எப்போது என நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்துவோம். ஆமென்.