இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

உயிர்ப்புக் காலம் அறாம் ஞாயிறு

என் அன்பில் நிலைத்திருங்கள்

முதல் வாசகம் : திருப்பணிகள் 10: 25-26. 34-35.44-48
இரண்டாம் வாசகம் : 1 யோவான் 4:7-10
நற்செய்தி : யோவான் 15:9-17

உயிர்ப்புக் காலம் ஞாயிறுக் கிழமையில் பயணிக்கின்றோம். உயிர்ப்புக் காலத்தில் இறைமகன் இயேசுவின் அமைதி, அன்பு, உடனிருப்பை அவருடைய வார்த்தைகளின் வழியாக உணர்ந்து அனுபவித்திருப்போம் என்பது உண்மை. இன்றைய இறைவாசகங்கள், இறைவன் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்றும், இறைவனின் அன்பு மாறாது என்றும், அவருடைய அன்பில் நிலைத்திருக்க வேண்டும் என்ற சிறப்பான மையக்கருத்துக்களை நமக்கு தருகின்றது. இன்று நானும் நீங்களும் இறைவனின் அன்பில் நிலைத்திருக்கின்றோமா? அவருடைய அன்பை சுவைத்துள்ளோமா? இறைமகன் இயேசு மிக அழகாக கூறுவதைக் கவணிக்க வேண்டும் “என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள்“ என்று. இன்று நாம் அனைவரும் அழிந்து போகும் உலகின் செல்வங்கள் மீது அன்பு செலுத்தி நிலைவாழ்வை இழந்து தவிக்கின்றோம். திரைஉலகில் வெறும் பணத்திற்காக அன்பை கொச்சைப் படுத்தி நாடகமாடி காணப்படும் கதைகளின் போக்கில் இளம் உள்ளங்கள் தங்களுடைய வாழ்வைக் கட்டி எழுப்பி நாசமாகிக் கொண்டிருக்கும் சமுதாயத்தைப் பார்க்கின்றோம். திருமணத்திற்கு முன்பு அன்பு என்று சொல்லிக் கொண்டு கட்டப்படும் உறவு, திருமணம் முடிந்து பிறகு ஓர் இரண்டு ஆண்டுகிளில் முறிவடைவது ஏன்? இன்று அவர்கள் உண்மையான அன்பு என்னும் அடித்தலத்தில் கட்டப்படுபதில்லை. பணம் செல்வம், படிப்பு, சாதி, சமயம் என்ற போர்வையில் அன்பை எடை போட்டு திருமண ஒப்பந்தத்தை செய்கின்றார்கள். உண்மையான அன்பு இல்லாத காரணத்தால் வெகு விரைவில் திருமணம் என்ற முத்திரை உடைகின்றது. எத்தனை கத்தி வெட்டு குத்துக்கள், தற்கொலைகள் அன்பின் அடிப்படையில். சாதி சமயம் வரதட்சணை என்ற பெயரில் எத்தனை போரட்டங்கள் நமது சமுதாயத்தில். உண்மையான அன்பில் வளர்ந்தவர்கள் எத்தனை பேர் அன்புக்கு எடுத்து காட்டாக வாழ்கின்றார்கள். உண்மையான அன்பு இறைவனிடமிருந்து வருகின்றது ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. இறைமகன் மகன் இயேசுவின் பெற்றோர்கள் எளியவர்கள், தச்சுத் தொழில் செய்து அன்புறவில் வாழ்ந்து, இறைவனின் அன்பில் நிலைத்திருந்தார்கள். ஆண்டவர்க்கு அர்ப்பணிக்க ஒருசோடி மாடப் புறாக்களைக் கொண்டுவந்தனர். ஏழ்மையில் உண்மை அன்பு வெளிப்படுகின்றது.

முதல் வாசகத்தில் கொர்னலியு திருத்தூதர் பேதுருவின் காலில் விழுந்து வணங்கிய பொழுது அவர் கூறுவது, “எழுந்திடும், நானும் ஒரு மனிதன்தான் என்று தன்னுடைய மனித நிலையை நன்கு உணர்வதை அவருடைய வார்த்தைகளின் வழியாக அறிகின்றோம். எத்தனைபேர் நம்மில் மனிதனின் நிலையை அறிந்து செயல் படுகின்றோம். இறைவன் ஆள்பார்த்து செயல்படுவதில்லை, இறைவனுக்கு அஞ்சி நடந்து நேர்மையாக செயல்படுபவர்களே அவருக்கு ஏற்புடையவர்கள் என்று கூறியபோது தூய ஆவியாவர் அங்கு கூடியிருந்த புற இனமக்களின் மீது இறங்கி வந்தது என் று காண்கின்றோம். இன்று இறைசமூகமாக ஒன்று கூடும் வேளையில் இறைவனின் பிரசன்னமும், ஆவியானவரின் வழிநடத்தலும் இக்காலக்கட்டத்தில் மிகவும் அவசியம். ஆவியானவர் நம்மில் செயலாற்றினார் என்றால் இறைவனின் உண்மையான அன்பு நம் மத்தியில் வெளிப்படும். கொர்னேலியு என்ற பெரியவர் எவ்வாறு திருதத்தூதர் பேதுருவை மதித்து காலில் விழுந்து வணங்கியது போல் நாமும் நமது சொற்களிலும் செயலிலும் பிறரை மதித்து நடக்க கற்றுக் கொள்ள வேண்டும். இறைவனின் அன்பும் அவருடைய விழுமியங்களும் நமது வாழ்விற்கு அடித்தலமாக இருந்தால்தான் நம்மால் அவ்வாறு செய்ய முடியும். இல்லை என்றால் இருளானவன் நம்மை வேறு திசையில் இட்டுச் சென்று உண்மையான அன்பை உடைக்க முயற்சி செய்வான். எனவே உண்மையான அன்பில் வளர முயற்சி செய்வோம்.

இறைமகன் இயேசு அவருடைய அன்பில் நிலைத்திருக்க இன்று அழைககின்றார். அவருடைய அன்பில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் அவருடைய கட்டளைகளை கடைபிடிக்க வேண்டுமென்று விரும்புகின்றார். அவருடைய கட்டளைகளை கடைபிடிப்பது அவ்வளவு சுலபம் அல்ல. இறைமகன் இயேசு “நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்“ என்று கூறுகின்றார். இன்று இறைவனின் வார்த்தைக்கு என் வாழ்வில் முதலிடம் தருகிறேனா? சற்று சிந்திப்போம். பட்டப் படிப்பு படிக்க இரவு பகலாக படித்து சான்றிதழ் பெற்று வெற்றிகரமாக வாழ்க்கையை ஓட்டுகின்றோம். அவை எவ்வாறு முக்கியமாக தோன்றுகிறதோ அதேபோல் இன்று இறைவார்த்தையும் நமது வாழ்க்கைக்கு ஒளி விளக்காக இருப்பது அவசியம். ஆனால் நம்மில் பலருக்கு நிலைவாழ்வு கொடுக்கும் இறைவனின் வார்த்தையைப் படிப்பதற்கு நமக்கு நேரம் இல்லை. இறைவனின் அன்பு நம்பில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் ஒவ்வொரு நாளும் இறைவார்த்தையை தியானித்து நேரம் ஒதுக்கி கற்றுக் கொண்டு அதன்படி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். இறைவனின் அன்பு சிலுவை மரணத்தின் வழியாக அனைவருககும் கொடையாக கொடுக்கப்பட்டது எனவே அவருடைய அன்பில் என்றும் நிலைத்திருக்க முயற்சிப்போம். உண்மையான அன்பில் வளர்வோம்.

நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன, இவற்றுள் அன்பே தலைசிறந்தது. 1 கொரிந்தியர் 13:13