இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

உயிர்ப்புக் காலம் இரண்டாம் ஞாயிறு/ இறை இரக்க ஞாயிறு

கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும்

முதல்வாசகம் : திருததூதர் பணிகள் 4:32-35
இரண்டாம் வாசகம் : 1யோவான் 5:1-6
நற்செய்தி வாசகம் : யோவான் 20:19-31

இன்று உயிர்ப்புக் காலம் இரண்டாம் ஞாயிறும, இறை இரக்கத்தின் ஞாயிறுமாகும். திருத்தூதர் யோவான் சிலுவை அடியில் நின்றவர். அன்னை மரியாளை தன் அன்புத் தாயாக ஏற்றுக் கொண்டார். இறைமகன் இயேசுவினால் அதிகம் அன்பு செய்தவர் என்று நாம் அறிந்த உண்மை. அவர் இறைமகன் இயேசுவின் அன்பை ஆழமாக உணர்ந்து அனுபவித்த காரணத்தால் அவர் இவ்வாறு கூறுகின்றார். கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும் என்று. கடந்த நாட்களில் திருவழிபாட்டிற்காக தரப்பட்ட இறைவாசகங்களை தியானிக்கின்ற வேளையில் உணர்ந்த உண்மை யாதெனில், உயிர்த்த இயேசுவின் அருள் பிரசன்னத்தை தன்னுடன் நெருங்கி இருந்த திருத்தூதர்களால் கூட அறிந்து கொள்ள முடியவில்லை. அவர் பலமுறை உயிர்ப்பைபற்றி அவர்களிடம் கூறியிருந்தும் அவர்களால் விசுவசிக்க முடியவில்லை. யூதர்களுக்காக அஞ்சி வாழ்ந்தார்கள். பயம் மனக்கவலையால் அவர்கள் மனம் அடைபட்டுவிட்டது. இறைமகன் இயேசு அப்பத்தைபிட்டு பகிரும்போதுதான் அவர்களால் அவர் இயேசு என்று உணரமுடிந்தது. நாமும் அவர்களைப் போல் தான் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அவரது பிரசன்னம் நம்மோடு இருந்தும்கூட, அவரை அனுபவிக்க முடியாமல் தவிக்கின்றோம். அவரை அனுபவிக்க தூய்மை நிறைந்த உள்ளமும், தூய்மையான வாழ்வும் தேவை. இன்றைய வாசகங்களின் வழியாக இறைவன் நமக்கு தரும் உண்மையான நற்செய்தி என்னெவென்றால் விசுவாசம் நம்பிக்கை என்ற இரண்டு மாபெறும் அருள் கொடைகள் நமக்குத் தேவை என்று. இறைமகன் இயேசுவிடம் நம்பிக்கை கொள்பவர்கள் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள் என்று தெள்ளத் தெளிவாக இறைவார்த்தை எடுத்துரைக்கின்றது. மேலும் கடவுளிமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும். உலகை வெல்லுவது இறைமகன் இயேசு கிறிஸ்து ஒருவரால் மட்டுமே என்று அவர் விளக்குகின்றார்.

நவீன உலகத்தில் அறிவியிலும் விஞ்ஞானமும் வளர்ந்து வருகின்ற காலக்கட்டத்தில் நாம் அனைவரும் உலகப் போக்கின்படிதான் ஒவ்வொரு நாளும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நமது நடைமுறைகள், பண்பாடுகள் அனைத்தும் உலகின் போக்கின்படிதான் உள்ளது. நம்முடைய வாழ்வு மிகவும் பரிசுத்தமாய் இருக்க வேண்டும். மேலை நாடுகளில் வாழும் நாம் அனைவரும் நாம் செய்கின்ற பாவங்களுக்கு மனம் வருந்துவதில்லை, பாவம் நிறைந்த உள்ளத்துடன் இறைமகன் இயேசுவின் திருஉடலை உட்கொண்டு அவரை வேதனைப் படுத்துகின்றோம். ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டவர்கள் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தார்கள் எனறு காண்கின்றோம். இன்று நமது கிறிஸ்துவ சமூகத்தில் எத்தனை பிளவுகள், எத்தனை மனக் கசப்புக்கள், நான் உயர்ந்தவன், நீ உயர்ந்தவன் என்ற பாகுபாடுகள். நமது வழிபாடுகளில் இறைவனின் வல்லமையை பெற்றுச் செல்கின்றோமா? அல்லது மனக்கசப்பை பெற்றச் செல்கின்றோமா? சிந்திக்கவும். திருப்பலியில் பங்கு பெறும்போது ஒரே உள்ளம் கொண்டவர்களாக இருக்கின்றோமா? உயிர்த்த இயேசுவின் பிரசன்னத்தை உணர்ந்து அவருடன் வாழ்ந்தோம் என்றால் நம்மிடையே இப்டிபட்ட மாற்றங்கள் காண்பதற்கு வாய்ப்பு இல்லை. இறைமகன் இயேசு கிறிஸ்துவின் வழியாக மட்டுமே நம்மால் உலகை வெல்ல முடியும். உயிர்த்த இறைமகன் இயேசு நம்மிடம் வாழ்கின்றார் என்று நானும் நீங்களும் நம்புகின்றோமா? இறைவார்த்தையை நமது வாழ்வில் தியானித்து அருள்வாழ்வில் வளர்ந்தால் நம்மால் ஒரே உள்ளம் கொண்ட இறைசமூகமாக வாழ முடியும்.

திருத்தூதர் மத்தேயு எழுதிய நற்செய்தி 18: 19-20 இறைவசனங்களில் இறைமகன் இயேசு கூறுகின்றார் “ உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார். ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே இருக்கின்றேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் “என்ற இறைமகன் இயேசுவின் வார்த்தையை நம்புவோம். இறைமகன் இயேசுவின் அருள் பிரசன்னத்தை இழக்காமல் இருக்க முயற்சி செய்வோம்.

இரக்கம் மிகுந்த இயேசுவே நாங்கள் பாவிகளாய் வாழ்ந்தும் எங்களை அன்பு செய்வதற்காக உமக்கு நன்றி. இரக்கம் மிகுந்த இயேசுவே நீர் எங்களை மன்னிப்பது போல் நாங்கள் எங்களையே மன்னிக்க முடியாத தருனத்திற்காக எங்களை மன்னித்தருளும். இரக்கம் மிகுந்த இயேசுவே உமது அளவிட முடியாத இரக்கத்தை உணராமல் ஊதாரித் தனமாக உலகப் போக்கில் வாழ்வதற்காக எங்களை மன்னித்தருளும். இரக்க மிகுந்த இயேசுவே உமது திரு உடலை பாவம் நிறைந்த உள்ளத்தோடு வாங்கியதற்காக எங்களை மன்னித்தருளும். இரக்கம் மிகுந்த இயேசுவே நவீன உலகத்தில் அனுபவிக்கும் பலவகையான சுகங்கள் உமது அன்பிற்கு எதிராக உள்ளதை என்பதை நன்கு உணர்ந்தும் அதற்கு அடிமையாக வாழ்வதற்கு எங்களை மன்னித்தருளும். இரக்கம் மிகுந்த இயேசுவே மேலை நாடுகளில் வாழும் தமிழ் இறைசமுகத்தின் மீது உமது இரக்கத்தைப் பொழிவதற்காக நன்றி செலுத்துகின்றோம். விசுவாசம் மறைந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் நாங்கள் அனைவரும் நற்செய்தியின் விழுமியங்களை நன்கு கற்று அதன்படி வாழ்ந்து கிறிஸ்துவ சமூதாயத்தை கட்டி எழுப்ப வரம் தந்தருளும். நாங்கள் அனைவரும் உம்மிடமிருந்து பிறந்தவர்கள் ஆகையால் எங்களால் உலகை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையில் முன்னோக்கி பயணிக்க, உமது ஆவியானவரின் கொடைகளை எங்கள் அனைவரின் மீதும் பொழிந்தருளும்.

இயேசு அவரிடம், நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர். யோவான் 20:29