இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பாஸ்கா ஞாயிறு

கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர்

முதல்வாசகம் : திருத்தூதர் பணிகள் 10: 34,37-43
இரண்டாம் வாசகம் : கொலைசையர் 3:1-4
நற்செய்தி வாசகம்: யோவான் :20:1-9

இன்று பாஸ்கா ஞாயிறு. இருளை வென்று வாழ்வு தந்தவர் உயிர்ப்பின் இறைமைந்தனாகிய இயேசு கிறிஸ்து. கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர் என்று திருத்தூதர் பவுலடிகளார் கொலோசையர்க்கு எழுதிய திருமுகத்தில் கூறுகின்றார். குளிர் காலத்தைக் கடந்து இயற்கையும் வசந்த காலத்தை கையில் ஏற்று, பட்டது போல் காட்சியளிக்கும் மரங்களிலிருந்து துளிர்விட்டு வரும் பச்சை இலைகளும், சாலை ஓரங்களில் புல்தரையிலிருந்து புதிய பூச்செடிகள் தலைதூக்கி மலரும் மலர்களின் அழகு அனைத்தும் புதிய வாழ்வைப்பற்றி எடுத்துரைக்கின்றது. இறைவனுடன் நாற்பது நாட்களில் பலதரப்பட்ட தவங்களை செய்து , பாவங்களால் மூடப்பட்ட கல்லறையாக நமது மனத்தில் மாற்றம் பெற்று இன்று உயிர்ப்பின் ஆசீர் வாதங்களை பெறுவதற்கு தயாராக உள்ளோம். நாம் அனைவரும் திருமுழுக்கின் வழியாக உயிர்த்த கிறிஸ்துவுடன் ஒன்றிணைந்து புதுவாழ்வு பெற்றவர்கள். கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நாம் கொண்டுள்ள நம்பிக்கை என்று திருத்தூதர் பவுல் உரோமையர் திருமுகத்தில் கூறுகின்றார். கிறிஸ்துவர்களாகிய நானும் நீங்களும் திருமுழுக்கின் வழியாக உயிர் பெற்றிருந்தாலும் சில வேளையில் இருள்நிறைந்த மூடிவைக்கப்பட்ட கல்லறைகளாய்த்தான் இன்றும் வாழ்ந்து வருகின்றோம்.

இறைமகன் இயேசு இறந்த லாசரின் கல்லறையின் கதவைப் திறந்து புதுவாழ்வு கொடுத்தது போல் இன்று நாம் நமது இதயக் கல்லறைகளை திறக்க விடுவோம். அவரால் தான் புதுவாழ்வை நமக்கு கொடுக்க முடியும். அவர் எவ்வாறு நிலைவாழ்வைப் பெற்றார் என்று சிந்திப்போம். இறைமகன் இயேசுவை தன்னம் தனியே விட்டு விட்டு அனைவரும் ஓடிப் போய்விட்டனர். ஓசான்னா பாடி அரசராக்க வேண்டியவர்கள் அவருடன் இருக்க வில்லை. எவ்வளவு இழிநிலைக்கு அவரை தள்ளப்பட்டு இருப்பினும் அவர் தந்தையாகிய இறைவனுக்கு கீழ்படிந்து சிலுவை மரணத்தை அமைதியுடனும், தாழ்ச்சியுடனும் நம் அனைவருக்காக ஏற்று கொண்டார். சிலுவைதான் நமக்கு வெற்றியைத் தருவது. அவர் எவ்வாறு பாவத்தை ஒழிக்க இறந்தாரோ அதேபோல் நாமும் இதயம் என்னும் கல்லறையில் கிடக்கும் பாவத்தை களைந்து எரிய வேண்டும். இறைமகன் இயேசு அளிக்கும் உயிர்ப்பு என்னும் அருள் கொடைகளால் நமது பாவங்களைக் களைந்து மனம் மாறிய மகனாக மகளாக மாறுவோம். இறைவன் முன் நாம் எப்பொழுதும் பரிசுத்தமாய் வாழவேண்டும். உயிர்த்த இறைமகன் இயேசு நம்மோடு வாழ்கின்றார் என்று ஆழந்த விசுவாசமும், நம்பிக்கையும் நமக்கு உண்டாக வேண்டும். இறைமகன் இயேசு கிறிஸ்துவின் போதனைகளுக்கு எதிராக நடக்கும் இக்காலக்கட்டத்தில் ஒவ்வொருவரும் உயிர்ப்பின் உண்மை சாட்சிகளாய் விளங்க அவருடைய வார்த்தையை நன்கு அறிந்திருக்க வேண்டும். இறைவிசுவாசம் மறைந்து கொண்டிருக்கும் மேலைநாடுகளில் வாழும் தழிழ் இறைக்குலம் இதனைக் கட்டி எழுப்ப வாய்ப்புக்கள் நிறைய உள்ளது என்பதை அறிந்து, இறைமகன் இயேசுவுக்கு உண்மை சாட்சிகளாய் இருப்போம்.

திருத்தூதர் யோவான் நற்செய்தியில் இறைமகன் இயேசு முன்கூட்டியே வாழ்வு தரும் உணவு நானே என்று 6 ஆம் அதிகாரத்தில் கூறுகின்றார். விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே, இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், மேலும் “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொலிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள் என்று. ( 6:51,53) ஆண்டுதோறும் உயிர்ப்பு விழாவை வெறும் சடங்காகவும் கடமையாகவும் கொண்டாடாமல், சிலுவையில் தன்னையே கொடையாக தந்தவர் ஒவ்வொரு திருப்பலியிலும் சிறு கோதுமை அப்பத்தின் வழியாக நமக்கு வாழ்வு தருகின்றார் என்பதை விசுவசித்து புதுபடைப்பாக கட்டி எழுப்பட்டு, மேலுகு சார்ந்தவற்றை நாடுவோம். நவீன உலகத்தில் பயணம் செய்பவர்களாகிய நாம் அனைவரும் நவீன பொருட்களும்,பணம், பதவி, ஆடம்பர சுக வாழ்வுகள், நமக்கு நிரந்தர வாழ்வைக் தருகின்றது என்று நமபி அவற்றை அடைவதற்கு ஓடுகின்றோம், அவற்றில் மகிழ்ச்சியும், இன்பமும் அடைகின்றோம். ஆனால் நமக்கு நிலைவாழ்வைத் தரக்கூடியவர் இறைமகன் இயேசு ஒருவர் மட்டுமே என்பதை ஆழமாக அறிந்திருக்க வேண்டும். தாகமாய் இருப்போர் என்னிடம் வரட்டும்; விருப்பம் உள்ளோர் வாழ்வு தரும் தண்ணீரை இலவசமாய்க் குடிக்கட்டும் என்ற இறைவனிடம் நம்பிக்கையுடன் செல்வோம் ஏனென்றால் அவர் இருளை வென்ற இறைமகன். நம் அனைவரையும் உயிரப்பின் வேந்தனாக விளங்கும் அவர் மகிழ்ச்சியின் பாதையில் நம் அனைவரையும் வழி நடத்தட்டும்.

உயிர்த்தெழச் செய்பவனும் வாழ்வு தருபவனும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். யோவான் 11:25-26