இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









தவக்காலம் ஐந்தாம ஞாயிறு

நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்

முதல்வாசகம் : எரேமியா 31:31-34
இரண்டாம் வாசகம் : எபிரேயர் 5: 7-9
நற்செய்தி வாசகம் : யோவான் 12:20-33

தவக்காலம் ஐந்தாம் ஞாயிற்றுக் கிழமையில் பயணிக்கின்றோம். இந்த ஆண்டு தவக்காலத்தின் இறைவாசகங்களின் வழியாக பலமுறை இறைவன் நம்மோடு வாசம் செய்வதற்கு விருப்பமாய் இருக்கின்றார் என்றும், அவர் நமக்கு கொடுத்துள்ள கட்டளைகளையும், நெறிகளையும் பின்பற்றி தூய்மையுடன் வாழவேண்டும் என்றுதானே விரும்புகின்றார் தந்தையாம்நமது இறைவன். அவர் செய்த புதிய உடன்படிக்கையை இன்று நமது கவணத்திற்கு கொண்டுவருவோம். “என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்; அதை அவர்களது இதயத்தில் எழுதிவைப்பேன். நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்“ , பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் என்னை அறிந்து கொள்ளவர். அவர்களது தீச்செயலை நான் மன்னித்துவிடுவேன், அவர்களுடைய பாவங்களை இனிமேல் நினைவு கூரமாட்டேன் என்று நம்பிக்கை நிறைந்த அழகான வாக்கை புதிய இஸ்ரயேல் மக்களாகிய நமக்குத் தருகின்றார். இறைவன் இறைவாக்கினர் எசேக்கியேல் வழியாக இதே கருத்தைத்தான் கூறகின்றார். நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். உங்கள் உடலிலிருந்து கல்லான இதயத்தை எடுத்துவிட்டு, சதையாலான இதயத்தைப் பொருத்தவேன் என்று வாக்கு தருகின்றார். இறைவனின் அருள் பிரசன்னத்தை உணரவேண்டும் என்றால் முதலில் நமக்கு அகத்தூய்மை மிகவும் அவசியம்.

இன்றைய பதிலுரைப் பாடல் 51 :10வது இறைவசனத்தில் தாவீது அரசர் தனது குற்றத்தை உணர்ந்து மனம் மாற்றம் பெற்று இவ்வாறு செபிக்கின்றார்,, “ கடவுளே தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதி தரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும் “என்று. தூய்மையான உள்ளத்தில் இறைவன் வாழ்வதற்கு விரும்புகின்றார். நம்மைப் படைத்தவரும் மீட்பவருமான இறைவன் நம் குற்றங்களைக் கார்மேகம் போலும், உன் பாவங்களைப் பனிப்படலம் போலும் அகற்றிவிட்டேன் என்னிடம் திரும்பி வா, நான் உனக்கு மீட்பளித்துவிட்டேன் என்று தந்தையின் பாசத்தையும் நேசத்தையும் இதன் வழியாக அறிவுறுத்துகின்றார். இறைவன் நம்மோடு நல்லுறவு உடன்படிக்கை செய்து கொள்வேன் என்று இறைவாக்கினர் எசேக்கியேல் வழியாக அருள் பொழிந்தது “ என் தூயகத்தை அவர்கள் நடுவே என்றென்றும் நிலைக்கச் செய்வேன். என் உறைவிடம் அவர்கள் நடுவே இருக்கும் நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் எனக்கு மக்களாய் இருப்பர். என் தூயகம் அவர்கள் நடுவே என்றென்றும் நிலைத்திருக்கையில், இஸ்ரயேலைத் தூய்மைப்படுத்துபவர் ஆண்டவராகிய நானே என வேற்றினத்தார் அறிந்து கொள்வர் என்கின்றார். (எசேக்கியேல் 37:27-28). மேலும் (திருவெளிப்பாடு 21:3) இறைவசனங்களும் கூறுவது “ பின்பு விண்ணகத்திலிருந்து எழுந்த பெரும் குரல் ஒன்றைக் கேட்டேன். அது இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார்; அவரே அவர்களுடைய கடவுளாய் இருப்பார். இறைவன் நம் அனைவரின் மேல் கொண்டுள்ள அக்கறையும் நேசமும் அவருடைய உயிருள்ள வார்த்தையால் நன்றாக உணரமுடிகின்றது. இறைமகன் இயேசு வாக்குவாக நம்மிடையே குடி கொண்டார். அவரிடம் வாழ்வு இருந்தது. அந்த வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது. ஒளியான இறைவன் நம்மில் குடிகொள்ள வேண்டுமென்றால் நம்மில் இருக்கும் அனைத்துச் தீச்செயல்களை அகற்றி விட வேண்டும். நமது உள்ளத்தில் படிந்து கிடக்கும் பாவங்களை வேரோடு பிடுங்கி அகற்ற வேண்டும். நமது இறைவன் எளிதில் சினம் கொள்ளாதவர். ஆகையால் அவருடைய வல்லமை நம்மில் நிறையட்டும். மனிதனாகப் பிறந்த அனைவரும் பேறு பெற்றவர்கள். அவருடைய தூயகத்திலிருந்து நமக்கு உதவி அனுப்புவார். நமது உள்ளத்ததில் வாழ விரும்பும் இறைவனை உளமார வரவேற்போம். தவக்காலத்தில் நாம் போடும் போலி வேசங்களைக் களைவோம். இனிமேல் வெள்ளை அடிக்கப் பட்ட கல்லறைகளாய் வாழ வேண்டாம். கல்லறையிலிருந்து உயிர்பெற்ற இயேசுவின் சுடராய் விளங்குவோம். வாழ்வு தரும் வாழ்வை வாழ்◌ாவம். தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும். தந்தையும் தாயுமான நமது அன்பு இறைவனை முழு உள்ளத்தோடும் முழு ஆற்றலோடும் நமது ஆன்மா என்னும் சிறிய குகையில் உண்மையோடு வழிபடுவோம். இறைவன் நம் நடுவில் தொடர்ந்து வாசம் செய்வதற்கு விழிப்போடு இருப்போம். இறைவன் நம்மோடு என்றும் வசிக்கின்றார். இனிவரும் அருள் நிறைந்த நாட்களை புனிதமாக செவழிக்க ஆவியானவரின் வழிநடத்தலை கேட்போம். இறைமகன் இயேசு தந்தையின் வார்த்தைக்கு கீழ்படிந்து அவருடைய மகிமைக்காக செய்ததுபோல் நாம் அனைவரும் முயற்சிப்போம். நம் ஒவ்வொரு செயல்களும் இறைவனை மாட்சியையும் மகிமையையும் எடுத்துரைக்கட்டும்.

கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை. திருபாடல்கள் 51:17