இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

தவக்காலம் மூன்றாம் ஞாயிறு

உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்துவிடும்

முதல்வாசகம் : விடுதலை பயணம் 20:1-17
இரண்டாம் வாசகம் : 1 கொரிந்தியர் 1: 22-25
நற்செய்தி வாசகம் : யோவான் 2 :13-25

தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையில் பயணிக்கின்றோம். உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்துவிடும் என்ற இறைவார்த்தையைபற்றி சிந்திப்போம். இறைமகன் எருசலேமுக்குச் சென்ற பொழுது கோவிலில் கண்ட காட்சி அவருடைய மனதிற்கு ஆழமான வலியைத் தந்திருக்கும். ஆடு, மாடு, புறா விற்பவரையும், நாணயம் மாற்றுவோரையும் கண்டு கோபம் கொண்டு கயிறுகளால் சாட்டை பின்னி அவர்கள் எல்லோரையும் கோவிலிருந்து துரத்துகின்றார். அங்குள்ள அனைத்தையும் கவிழ்த்துப்போடுகின்றார். என்தந்தையின் இல்லத்தை சந்தை ஆக்காதீர்கள் என்று கூறுகின்றார். இறைமகன் இயேசு கோபம் கொள்வதை இங்கு காண்கின்றோம். இன்று நாம் அனைவரும் இறைவனின் ஆலயத்தில் ஒன்று கூடும்போது ஒரு சில நேரங்களில் நிகழ்வது மிகவும் வருத்தம் தரக்கூடிய செயல்கள் என்று தான் சொல்லலாம். இறைவனின் இல்லத்தின்மீதுள்ள ஆர்வம் நம்மை எரிக்கின்றதா? அவருடைய ஆசிரைப் பெறுவதற்கு ஆவலுடன் வருகின்றோமா? நடைமுறையில் அடிக்கடி காண்பது இறைவனின் இல்லத்திற்கு வரும்பொழதுதான் அனைத்து முரண்பாடுகளும், சண்டைச் சச்சரவுகளும் இடைபெறுகின்றன. ஏன்? இன்று இறைமகன் இயேசு நமது ஒன்றுகூடலின்போது நமது மத்தியில் வந்தால் என்ன நடக்கும், சாட்டையை எடுத்து நம்மை துரத்துவாரா? அல்லது நவீன உலகத்தில் தூப்பாக்கிகூட அவர் கையில் கிடைத்தால் என்ன நடக்கும் என்று யோசித்துப்பார்ப்போம். இன்று நாம் அனைவரும் நவீன உலகத்தின் நடைமுறைகளோடுதானே இறைவனின் இல்லத்தில் நுழைந்து அவரையும் நாடுகின்றோம். இறைவனின் இல்லத்தில் நமக்காக இரவும் பகலும் பிரசன்னமாய் வாழுகின்ற இறைவனைவிடவும் பலிப்பீடத்தில் உயிருடன் அப்பத்தின்வடிவில் மறுரூபமாகும் இயேசுவைவிடவும் சில நேரங்களில் தொலைபேசியில் உள்ளவர் மிகவும் முக்கியமானவராக கருதுகின்றோம் அப்படித்தானே? இறைவனை விலைகொடுத்து வாங்கிவிடலாம் என்று இன்று மனிதன் நினைக்கின்றான் ஆனால் அது ஒருபோதும் முடியாத காரியம். இறைவனை உளமாறப் புகழ்ந்து பாடுவதற்குக்கூட நம்மிடையே போட்டிகளும் பொறாமைகளும் ஊறிக்கிடக்கின்றன. எங்கே செல்லுகின்றது நமது கிறிஸ்துவ சமுதாயம்? இறைமகன் இயேசுவை நமது பெயரில் கிறிஸ்துவன் என்று இணைத்துக் கொண்டு நாம் அவரை முழுமனதுடன் அன்பு செய்து, அவரை விசுவசிக்கின்றோமா? நாம் அனைவரும் இறைவன் வாழும் கோவில்தானே? இன்று தவற்றை சூட்டிக் காட்டினால் அவன் பொல்லாதவன்? அவன்மேல் தவறாக சுமத்தும் பாவங்கள்தான் எத்தனை? இறைவன் வாழும் நமது உள்ளம் தூய்மையாக இருந்தால் நமது செயல்களும் வார்த்தைகளும் தூய்மையாக இருக்கும் என்பது உண்மை. குற்றத்தை எடுத்துச் சொல்ல இயேசுவைப்போல் துணிவு வேண்டும்.

இறைவாக்கினர் எசாயா தனது நூலில் 56:7வது இறைவசனத்தில் கூறுகின்றார் “ அவர்களை நான் என் திருமலைக்கு அழைத்து வருவேன்; இறைவேண்டல் செய்யப்படும் என் இல்லத்தில் அவர்களை மகிழச் செய்வேன், அவர்கள் படைக்கும் எரிபலிகளும் மற்றப் பலிகளும் என் பீடத்தின்மேல் ஏற்றுக் கொள்ளப்படும்: ஏனெனில், என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைமன்றாட்டின் வீடு “என அழைக்கப்படும் என்கின்றார். இன்று நமது ஆலயங்கள் இறைமன்றாட்டின் வீடாக உள்ளதா? ஆம் என்று பதில் சொன்னாலும் அங்கே எத்தனை ஆடு, மாடு, புறா போன்ற தீய சமூக சக்திகள் நம்மை சூழ்ந்து உண்மையா அருள் கொடைகளை இழந்து வருகின்றோம்.

நாம் அனைவரும் இறைவன் வாழும் கோவில் ஏனென்றால் அங்கே தூய ஆவியானவர் நம்மில் வாழ்கின்றார் என்பது உண்மை. ஆகையால் நாம் அனைவரும் மனம் திரும்பி, மாற்றம் பெற்று, தவற்றை உணர்ந்து, இறைவனின் மன்னிப்பு என்னும் அருள் கொடைகளால் ஆன்மா என்னும் ஆலயத்தை சுத்தம் செய்ய வேண்டும். ஆவியானவரின் ஒளியின் துணையுடன் நமது மனசாட்சியை பரிசோதிக்க வேண்டும். நமது எண்ணம், நமது சொற்கள், நமது செயல்களை இறைவன் முன்பு தாழ்மையுடன் பரிசோதிக்க வேண்டும். நமது வாழ்க்கை முறையை ஆய்வு செய்வது அவ்வளவு எளிதல்ல மாறாக நமக்கு அதற்கு தைரியம் வேண்டும். நம்முடைய ஒழுக்கம் நடத்தை அனைத்தும் இறைவனுக்கு உகந்ததாக இருக்கின்றதா? இறைவனுக்கு எதிராக நமது சொல், செயல், வாழ்க்கை இருக்கின்றதா? நமது கண்ணகள் வழியாக பணத்திற்கும், பதவிக்கும் பாவம் செய்கின்றோமா? நமது காதுகள் உதட்டின் வழியாக புறணிக்கும் பழிசொல்லுக்கும், பொய் பேசுவதற்கும் உடந்தையாக இருக்கின்றோமா? நமது கைகள் பாவச் செயல்களுக்கு உபயோகிக்கின்றோமா? நமது கால்கள் பாவம் என்னும் சூழ்நிலைகளுக்கு இட்டுச் செல்கின்றதா? சிந்தித்து நற்செயலில் இறங்குவோம். கோபம், ஆணவம், பொறாமை, பழிவாங்குதல், போன்ற தீயகுணங்களை நம்மிலிருந்து அகற்றி தூயஆவியார் வாழும் இல்லமாக மாற்றுவோம்.

இறைவாக்கினர் எசாயா கூறுகின்றார் “அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்; அவர் தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம். பாவிகளை நேசிக்கின்ற இறைமகனிடம் நமது ஆன்மாவை கொடுப்போம். மகிழ்ச்சியின் காலமாகிய தவக்காலத்தில் தூயஆவியானவர் தங்கும் உள்ளத்தில் கிடக்கும் கரடுமுரடான கற்களை அகற்றி சாந்தமும், எளிமையும், அன்பும் நிறைந்த தூய இதயத்தைப் புதுப்பிக்க இரக்கம் நிறைந்த தந்தையிடம் மன்றாடுவோம். இறைவன் இல்லத்தின் மீது உள்ள ஆர்வம் நம்மை எரிக்கட்டும்.

என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்; என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும். திருப்பாடல் 19:14