இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு

இயேசு அவர் அருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார்

முதல்வாசகம் : யோபு 7: 1-4, 6-7
இரண்டாம் வாசகம் : 1 கொரிந்தியர் 9:16-19,22-23
நற்செய்தி வாசகம் : மாற்கு 1:29-39

இன்று பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு. இன்றைய இறைவாசகங்கள் நமக்கு தருகின்ற உண்மைகள் யாதெனில் துன்ப வேளைகளில் இறைவன் மேல் மனிதன் எவ்வளவு ஆழமான நம்பிக்கை கொண்டுள்ளான் என்பதாகும். இதற்கு யோபுவின் வாழ்க்கை ஓர் எடுத்துக் காட்டு. இறைவாக்கினர் யோபு நேர்மையாளராய் இருந்தும் வாழ்க்கையில் துன்பங்களை சந்திக்க நேர்ந்தது. அவர் துன்பங்களைப் பார்த்து குழம்புகின்றார். அவருடைய நண்பர்களும் ஏளனமாகப் பேசுகின்றார்கள்என்று விவிலியத்தில் காண்கின்றோம். ஆனால் அவர் மனம் தளரவில்லை. அவர் இறைவன்மேல் கொண்ட நம்பிக்கை அசைய முடியாத ஒன்று. அவரை மேன்மேலும் உயரச் செய்தது. மனிதனாகப் பிறந்த நாம் அனைவரும் வாழ்க்கையில் பேராடவேண்டும். அப்போராட்டத்தில் இறைவன் நம்மோடு உள்ளார் என்ற ஆழமான நம்பிக்கை நம்மில் இருக்க வேண்டும். இறைவனால் ஆகாதது ஒன்றும் இல்லை என்ற திடமான நம்பிக்கை நம்மில் இருக்க வேண்டும். யோபு இறைவனிடம் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்ததால் அவருக்கு இரண்டு மடங்காக ஆசீர்வாதம் கிடைக்கின்றது. இன்றைய காலக்கட்டத்தில் யோபு எதிர் கொண்ட துன்பங்களைப் போல் நம்முடைய வாழ்க்கையிலும் நடைபெற்றால் என்ன செய்வோம். பொறுமையாய் ஏற்றுக் கொள்கின்றோமா? அல்லது எனக்கு ஏன் இள்ளவு துன்பங்கள் என்று புழம்புகின்றோமா? இன்று நம்மில் பலர் இறைவனிடத்தில் புழம்புகின்றோம். எனக்கு மட்டும் ஏன்? என் குடும்பத்திற்கு மட்டும் ஏன்? என்று. இறைவன் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார். இறுதியில் இறைவன் நல்வழியை நமக்கு காட்டுவார் என்பது நிச்சயம்.

இன்று நமது சமுதாயத்தில் சிறுவர் முதல் பெறியோர் வரை எடுக்கும் தீர்மாணங்கள் நல்லதாகவும் உண்டு, தீமை நிறைந்ததாகவும் உண்டு. ஊடகங்கள் வழியாகவும், செய்தித் தாள்களில் அனுதினம் வாசிக்கப்படும் சம்பங்கள் அனைத்தும் கவலைக்கு உரியதாக உள்ளது. மனிதன் தன்னுடைய சிறிய சிறிய பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லை என்று அவனுடைய வாழ்க்கையை ஒரு நொடிப் பொழுதில் முடித்துவிடுகின்றான். இரக்கமும் அன்பும் நிறைந்துள்ள இறைவன் மீது கொண்டுள்ள நமது நம்பிக்கை எங்கே? துன்பங்களைச் சந்திக்கும் நேரத்தில் இறைவரர்த்தையும் அவருடைய அருள் பிரசன்னம் நம்பில் நம்பிக்கையை வளர்க்கும். இருள் சூழ் பள்ளத்தாக்கில் நாம் நடக்க நேர்ந்தாலும் அவருடைய அன்புக் கரம் நம்மை தூக்கிவிடும். ஏனெனில் “உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்: நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார் “(திருப்பாடல் 34:18) இறைவன் நம் அருகில் இருந்தும் அவருடைய அருள் பிரசன்னத்தை உணராமல் வாழ்க்கையை ஓடிக் கொண்டிருக்கின்றோம். நம்முடைய நம்பிக்கை எவ்வளவு ஆழமாக உள்ளது என்பதை சற்று ஆய்வு செய்து இறைஉறவில் வளர்வோம்.

திருத்தூதர் பவுலடிகளார் தனது நற்செய்திப் பணியைப்பற்றி இரண்டாம் வாசகத்தில் எடுத்துரைக்கின்றார். நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்கு கேடு என்று கூறுகின்றார். இன்று நானும் நீங்களும் நற்செய்தி அறிவிக்க கடைமைப் பட்டுள்ளோம். ஐரோப்பா கண்டத்தில் ஜெர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப் பணியகப் பொது நிலையினர் நற்செய்திப் பணியை இணையத்தளம் மூலமாக அனுதினம் சிறப்புடன் செய்வது மிகவும் பாராட்டுதற்குரிய ஒன்று. அவை அனுதினம் மனித உள்ளங்களைத் தொடுகின்றது. அதன்வழியாக உலகில் பல நாடுகளிலிருந்து இறைவார்த்தைக்கு செவிமடுக்கின்றனர். விசுவசாம் குறைந்து கொண்டு போகும் இக்காலக்கட்டத்தில். ஆவியானவரின் துணையுடன் நற்செய்திப் பணிசெய்ய எழுந்து ஒளி வீசுவோம். நற்செய்திப் பணிக்கு இன்று வேளையாட்கள் மிகவும் தேவையாக உள்ளது ஆகையால் அறுவடையின் உரிமையாளரிடம் மன்றடாடுவோம். நற்செய்தியை நன்றாக பகுத்தறியவும் அவற்றை வாழ்வாக்கவும் அனுதினம் முயற்சிப்போம். திருத்தூதர் நற்செய்தியை பறைசாற்ற எல்லாருக்கும் எல்லாம் ஆனேன் என்று கூறுகின்றார். ஆகையால் அவரைப்போல் நாமும் நமது பணிவாழ்வில் சந்திக்கும் சவால்களைக் கண்டு மனம் தளராமல் ஆவியானவரின் துணையுடன் திறமையுடன் செய்வதற்கு முன் வருவோம்.

இறைமகன் இயேசு தனது பணிவாழ்வில் மூன்று செயல்களை தனது இறையாட்சி வாழ்க்கையின் கேடயமாக ஏற்றுக் கொண்டார். இறைஉறவு, நற்செய்திப் பணி, குணமளிக்கும் பணி, என்று. அவருடைய பணியும் இறைஉறவும் ஒன்றோடு ஒன்றாக இணைந்திருந்தது. இறைமகன் இயேசு சீமோன் பேதுருவின் மாமியாரின் கையைப் பிடித்து குணமாக்குகின்றார். நமது அன்றாட வாழ்வில் இறைவன் பல்வேறு வழிகளில் நம் அனைவரின் மேல் அக்கறையாக இருக்கின்றார். காலை முதல் மாலைவரை அனைத்து பிணியாளர்களை குணமாக்கியதோடு பாவங்களையும் மன்னிக்கின்றார். பேய்களையும் ஓட்டுகின்றார். அவருடைய பணி வாழ்வும் செப வாழ்வும் இணைந்து பலனைக் கொடுத்ததுபோல் நாமும் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகின்றார். நற்செய்தியை அறிவிக்கும் அனைவருக்கும் இருக்க வேண்டிய நற்குணங்கள் – ஆழமான இறைநம்பிக்கை – இறைவார்த்தையை அறிய வேண்டிய ஆர்வம், விவிலியத்தியின் அறிவு, இறைஅனுபவம், பணிவாழ்வில் எதிர் கொள்ளப் போகின்ற சவால்களை தாங்கும் மனம், துன்பங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம், ஆசி வழங்கும் மனம், இறைவனுக்காக எல்லாவற்றையும் குப்பை எனக் கருதுவது போன்ற குணங்கள் நம்மிடம் இருந்தால்தான் நம்மால் சிறப்புடன் நற்செய்திப் பணியை தொடரமுடியம். இறைமகன் இயேசுவும் நம்மோடு இருந்தால்தான் அனைத்திலும் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். இன்று நற்செய்திப் பணி என்னால் திறமையாக செய்ய முடியவில்லையே என்று நாம் ஒவ்வொருவரும் கவலைப்பட வேண்டும். நமக்கு புது வழிகளைத் திறந்துவிட இறைவனிடம் மன்றாடுவோம்.திருத்தூதர் பேதுரு கூறுவது ‘உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால் அவர் உங்கள் மேல்கவலை கொண்டுள்ளார் “. என்ற இறைவார்த்தையை கருத்தில் கொண்டு துணிவுடன் பயணிப்போம். இறைவனை நம்புவோம். வாழ்வில் உயர்வோம்.

உங்களுக்கு ஏற்படுகின்ற சோதனை பொதுவாக மனிதருக்கு ஏற்படும் சோதனையே அன்றி வேறு அல்ல. கடவுள் நம்பிக்கைக்குரியவர் . அவர் உங்களுடைய வலிமைக்கு மேல் நீங்கள் சோதனைக்குள்ளாகவிடமாட்டார்; சோதனை வரும் போது அதைத் தாங்கிக்கொள்ளும் வலிமையை உங்களுக்கு அருள்வார். (1 கொரிந்தியர் 10:13)