இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் மூனறாம் ஞாயிறு

கடவுள் அவர்கள் செய்தது அனைத்தையும் பார்த்தார்

முதல் வாசகம்: யோனா 3:5.10
இரண்டாம் வாசகம் : 1 கொரிந்தியர் 7: 29-31
நற்செய்தி வாசகம்: மாற்கு 1:4-20

இன்று பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு. இன்றைய இறைவாசகங்களின் வழியாக இறைவன் மனித வாழ்விற்கான வேண்டிய மூன்று ஆமீகக் கருத்துக்களை நம் முன் வைக்கின்றார். மனம் மாற்றம், அழைப்பு, நற்செய்தி அறிவிப்பு. இரண்டு நாளைக்கு முன்பு, வெள்ளிக்கிழமை அன்று வாசிக்க கேட்ட மாற்கு நற்செய்தி கூறுவது “ இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள். தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பபடவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை அழைத்தார் என்று (மாற்கு 3:13-15). இறைமகனுடன் வாழ்வது சவால் நிறைந்த ஒன்று. நாம் அனைவரும் அறிந்த ஓர் உண்மை. மனம் மாற்றம் பெற்று இறைவனுடன் உள்ளத்தூய்மையுடன் இனணவது, அவர் சொல்லும் வழிகளில் மறுப்பு தெரிவிக்காமல் பயணிப்பது. எளியவர் முதல் செல்வந்தர் வரை இறைவன் பார்வையில் ஒன்று. அவர் பணிக்கென்று அழைக்கும் முறை வித்தியாசமானது. அவருடன் இணைந்து வாழ்ந்தோம் என்றால் அவருடைய வல்லமை நிறைந்த செயல்பாடுகள் நம் வாழ்க்கையிலும் நடக்கும் என்பது நிச்சயம். இறைவனுடைய குரலுக்கு செவி கொடுத்தால் அவர் நம்மை அவருடைய பணிக்காக நம்மை முழுவதும் பயன் படுத்துவார் என்பதை விவிலியம் முழுவதும் கற்பிக்கின்றது.

இறைவாக்கினர் யோனா நினிவே நாட்டின் மக்களிடம் கூறுவது போல் இன்று என்னிடமும் உங்களிடமும் நமது பங்குத் தந்தையோ அல்லது நற்செய்தி பணிசெய்யும் ஊழியரோ அல்லது தியான இல்லத்தில் மறையுரை ஆற்றி, அற்புதங்களும், அடையாளங்களும் செய்துவருகின்றவர்களில் ஒருவர் “இன்னும் நாற்பது நாட்களில் உலகம் அழிக்கப்படும் “ என்று கூறினால் நாம் என்ன செய்வோம்? பதற்றம் அடைவோம் அல்லவா? அதற்கான வழிமுறைகளையும் தேடுவோம் அல்லவா? அனேகமாக எல்லா ஆலயங்களிலும் பாவசங்கீர்த்தன தொட்டிகள் நிறைந்து காணும் அல்லவா? இறைவன் நம்மோடு மிகவும் பொறுமையாக உள்ளார் ஆககாயல் நினிவே நாட்டு மக்களைப்போல் இறைவன் இன்று நமக்குத் தரும் செய்தி என்று நம்பி தீயவழிகளினின்று விலகவும், நாம் செய்த பாவத்திற்காக மனம் வருந்தவும், ஒப்புரவு அருட்சாதனம் பெறவும், இறைவனுடைய இரண்டாம் வருகைக்காக நம்மை நாமே ஆயத்தம் செய்வும் ஆயத்தமாவோம். ஆண்டவரின் வருகை திருடன் வருவதுபோல் இருக்கும். மனம் மாற்றம் பெற்று நற்செய்தியை நம்புவோம்.

இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கூறுவது போல் இனியுள்ள காலம் குறுகியதே. இவ்வுலகம் இப்போது இருப்பது போல் நெடு நாள் இராது என்று தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றார். உங்களை அழைத்தவர் தூய்மையுள்ளவராய் இருப்பதுபோல் நீங்களும் உங்கள் நடத்தையிலெல்லாம் தூய்மையுள்ளவர்களாய் இருங்கள். நீங்கள் தூயவராயிருங்கள். ஏனெனில் நான் தூயவன் என மறைநூலில் எழுதப்பட்டிருக்கிறது என்று திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்தில் காண்கின்றோம். மேலும் ஆண்டவரது மலையில் எறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவர் யார்? கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர்: வஞ்சக நெஞ்சோடு ஆணையிடடுக் கூறாதவர் என்று திருப்பாடல் 24 :3-4 இறைவசனங்களில் காண்கின்றோம். கடவுளுக்குக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே கடவுளே நொறுங்கிய குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை என்று திருப்பாடல் 51:17 இறைவசனங்களில் காண்கின்றோம். தூய்மையான வாழ்வு இறைவனுக்கு உகந்த வாழ்வு. கறைபடாத உள்ளத்துடன் வாழ கற்றுக் கொள்வோம். இறைவசனங்கள் நம்மை நேர்மையான வழியில் பயணிக்க என்றும் துணையாக இருக்கும். இன்று இருளானவன் உலகை பல வழிகளில் துன்புறுத்திக் கொண்டுதான் இருக்கின்றான். உண்மையான இறையாட்சியை மக்கள் மனங்களிலிருந்து அகற்ற கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித்திரிகிறான். ஆகவே அறிவுத் தெளிவோடு விழிப்பாய் இருப்போம். இறைவன் நம் அனைவரையும் ஆய்ந்து அறிந்திருப்பவர். எண்ணங்களையும், ஏக்கங்களையும், அவருக்கும், நம்முடைய உறவுகளுக்கும் எதிராகச் செய்யும் அனைத்துப் பாவங்களையும் நன்கு அறிந்திருப்பவர். ஆகையால் பாவம் என்னும் உலக வலைகளைக் கலைந்துவிட்டு இயேசு என்னும் ஒளியானவரின் பாதையில் பயணிப்போம். அவர் வாழ்வு தருபவர். அவரிடம் வாழ்வு உண்டு. ஆகையால் நினிவே மக்கள் இறைவாக்கினர் யோனாவின் வார்த்தையை நம்பி மனம் மாறியது போல் நாமும் இறைமகன் இயேசுவின் வார்த்தையை நம்பி அவருடன் என்றும் ஒன்றித்து வாழ்வதற்கு முயற்சிப்போம். மனம் மாற்றத்திற்காக நாம் எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் பார்த்து நம்மை பாவிகள் என்று தண்டிக்காமல், மனம் மாறிய பாவிகள் என்று நம்மை அன்போடு ஏற்றுக் கொள்வார். ஆண்டவர் எத்துனை இணியவர் என்று சுவைத்து பார்ப்போம்.

இதோ! நீர் விரும்புவது உள்ளத்து உண்மையையே, மெய்ஞானத்தால் என் மனத்தை நிரப்பும். ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும், நான் தூய்மையாவேன், என்னைக் கழுவியருளும், உறைபனியிலும் வெண்மையாவேன். திருப்பாடல் 51:6-7