இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு

ஆண்டவர் அவனோடு இருந்தார்

முதல்வாசகம் : 1 சாமமூவேல் 3:3-10,19
இரண்டாம் வாசகம் : 1 கொரிந்தியர் 6: 13-15, 17-20
நற்செய்தி வாசகம் : யோவான் 1:35-42

இன்று பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு. இன்றைய இறைவாசகங்கள் இறைவன் தனது இறைப் பணிக்கென்று மனித உள்ளங்களை அழைக்கும் சம்பவத்தையும், அழைக்கப்பட்டவர்களின் வாழ்வில் அவருடைய உடனிருப்பைபற்றியும் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. இறைவன் தனது மீட்புப் பணிக்காக விவிலியத்தில் அழைத்தவர்களின் எண்ணிக்கை ஏராளம். இன்றும் அழைத்துக் கொண்டுதான் இருக்கின்றார். இறைவன் நம் அனைவரையும் அவருடைய உருவிலும் சாயலிலும் படைத்து, ஒவ்வொருவரையும் ஒரு குறிப்பிட்ட பணிக்காக அழைத்துள்ளார். இன்றைய முதல் வாசகம் இறைவாக்கினர் சாமுவேலின் அழைப்பைப் பற்றி கூறுகின்றது. சாமுவேல் கடவுளின் பேழை வைக்கப்பட்டிருந்த ஆண்டவரின் இல்லத்தில் இருந்த பொழுதுதான் இறைவன் மூன்று முறை அழைத்தும் அவரால் அவருடைய குரலைக் யாரென்று அறிந்து கொள்ள முடியவில்லை. மூன்று முறையும் ஆண்டவரின் குரு ஏலிதான் அழைக்கின்றார் என்று அவரிடம் கேட்கின்றார். ஆண்டவரின் குரு ஏலி இறைவன்தான் அழைக்கின்றார் என்று உணர்ந்து அவரிடம் இவ்வாறு கூறுகின்றார் “உன்னை அவர் மீண்டும் அழைத்தால் அதற்கு நீ ‘ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கின்றேன் “என்ற பதில் சொல் என்று கூறுகின்றார். மீண்டும் ஆண்டவர் இரண்டுமுறை அழைத்த போது அவர் இறைவன்தான் என்று அறிந்து “பேசும் உம் அடியான் கேட்கிறேன் “என்று மறுமொழி கூறுகின்றார். அவசர உலகத்தில் பயணிக்கின்ற நமக்கு இறைவின் குரலைக் கேட்பது இன்று மிகவும் கடினமாக இருக்கலாம். இன்று நமக்கு ஆண்டவரின் குருவாக விளங்கிய ஏலியாவைப் போல் ஆன்மீக குருக்கள் தேவைப்படுகின்றது. இறைவன் இன்று எத்தனையோ வழிகளில் நம்மை சந்திக்க விரும்புகின்றார். ஆனால் இன்று அவரை முழுமையாக அனுபவிக்க மனிதனாகிய நமக்கு நேரம் இல்லை. வேலைப் பழுவால் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டுள்ளோம். இக்காலக் கட்டத்தில் நாம் அனைவரும் அறிவுத் தெளிவோடு விழிப்பாய் இருக்க வேண்டும். இறைவார்த்தையின்படி வாழ முயற்சி எடுக்க வேண்டும். அப்பொழுதான் இறைவனின் குரலைக் கேட்க முடியும். மூன்று முறை அழைத்தும் சிறுவன் சாமுவேல் இறைவனுடைய குரல்தான் என்று உணரமுடியவில்லை. அவருக்கு குருவான ஏலியின் உதவி தேவையாய் இருந்தது. இன்று பெற்றோர்கள் விழிப்பாய் இருந்து தங்களுடைய பிள்ளைகளுக்கு இறைவனுடைய வழிகளை அவருடைய வார்த்தையின் வழியாக கற்பிக்க வேண்டும். பெற்றோர்கள் இறைஅனுபவம் பெறுவதற்கு குடும்ப செபமும், குடும்பமாக இறைவார்த்தை படித்தல், குடும்பமாக இறைவழிபாட்டில் பங்கு பெறுவது, மேலும் அடுத்திருப்பவர்களுக்கு இறைஅனுபவத்தைபற்றி எடுத்துரைப்பது போன்ற பணிகள் செய்யும் போது இறைவனின் குரலை நம்மால் கேட்கமுடியும் என்பது உண்மை.

அழைக்கும் இறைவன் என்றும் வாக்கு மாறாதவர். விசுவசத்தின் தந்தை என்று அழைக்கும் ஆபிரகாம் முதல் இன்று வரை அழைத்த அனைவரின் வாழ்க்கையில் இறைவன் துணையிருந்து வழிநடத்தின்றார் என்பது உண்மை. இறைவனுடைய அழைப்பு நேரடியாகவோ அல்லது மற்றவர்களின் வழியாகவோ ஏற்படலாம் என்று இன்றைய வாசகம் விளக்குகின்றது. இறைவாக்கினர் எரேமியா நூலில் இறைவன் கூறுகின்றார் “ தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன், மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன் என்று வாக்கு மொழிந்து அந்த சிறுபிள்ளையை அழைக்கின்றார். அவருக்கு பேசத் தெரியாது என்று அவர் பதில் கூறிய போது இறைவன் கொடுக்கும் பதிலைக் கவணிப்போம். அவர்கள் முன் அஞ்சாதே. ஏனெனில், உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கின்றேன் “ என்கிறார் ஆண்டவர். மேலும் ஆண்டவர் தம் கையை நீட்டி என் வாயைத் தொட்டு என்னிடம் கூறியது: இதோ பார்! என் சொற்களை உன் வாயில் வைத்துள்ளேன். பிடுங்கவும் தகர்க்கவும் அழிக்கவும் கவிழ்க்கவும் கட்டவும் நடவும், இன்று நான் உன்னை மக்களினங்கள் மேலும் அரசுகள் மேலும் பொறுப்பாளனாக ஏற்படுத்தியுள்ளேன் என்று வாக்கு தருகின்றார். இன்று இப்படிபட்ட இறைவாக்கினர்கள் நம்மிடையே எழும்ப வேண்டும். எவ்வளவு ஓர் அருமையான வாக்கை இன்று இறைவன் நமக்கு தருகின்றார். ஏனென்றால் இறைவன் பார்வையில் நாம் அனைவரும் மதிப்பு மிக்கவர்கள். விலையேறப் பெற்றவர்கள். நீ நம்பினால் என் மாட்சியைக் காண்பாய் என்று சொல்லிய இறைவன் நேற்றும் இன்றும் என்றும் வாழ்கின்றவர். அவர் கூறுவதைச் செய்பவர். ஆகையால் அமைதி கொண்டு அவரே நம்முடைய இறைவன் என்று உணர்ந்து கொள்வோம். அவருடைய நற்செய்தியை அறிவிக்க துணிவுடன் எழும்புவோம். இறைவனால் ஆகாதது ஒன்றும் இல்லை. இறைவார்த்தை என்னும் ஆயுதத்தை நமது கையில் எடுப்போம். அவைதான் நம்மை இருளின் படியிலிருந்தது விடுவிப்பது.

நாம் அனைவரும் இறைவனுக்குரியவர், ஆவியானவர் வாழும் கோவில் என்று அழைக்கின்றார். நாம் நமக்குரியவர்கள் அல்ல என்றும், நம் அனைவரையும் விலை கொடுத்து மீட்டுள்ளார் என்றும், ஒவ்வொரு நொடிப் பொழுதும் இறைவனுக்கு பெருமை சேர்க்க வேண்டுமென்று இறைவார்த்தை எடுத்துரைக்கின்றது. இனிவரும் நாட்களில் இறைவனுக்கு பெருமை சேர்ப்போம். உலகம் நமக்கு தங்கும் வீடு அல்ல மாறாக நாம் அனைவரும் உலகில் வழிபோக்கர்கள். உலகில் இருப்பது ஒன்றும் நிரந்தரம் இல்லை ஆனால் இறைவன் உறவுமட்டும் நிரந்தரம் என்பதை உணர்ந்து இறைவனுக்கு ஏற்ற தூய வாழ்க்கை வாழ முயற்சிப்போம். வார்த்தையின் வழியாக இறைவனின் குரலுக்கு செவிமடுத்து அதன்படி வாழ்வதற்கு முயற்சி எடுப்போம். சிறப்பாக இறைவனுக்காக தன்னை அர்ப்பணித்துள்ள அனைவருக்காகவும், குடும்பத் தலைவர் தலைவிகளுக்காகவும் மன்றாடுவோம். இவர்கள் அனைவரும் இறைவனில் தங்களுடைய வாழ்வைக் கட்டி எழுப்பி அதன் வழியாக சாட்சிய வாழ்வு வாழ வேண்டும் என்று உரிமையாளரிடம் நமது வேண்டுதலின் குரலைக் கொடுப்போம்.

யாக்கோபே, உன்னைப் படைத்தவரும் இஸ்ரயலே, உன்னை உருவாக்கியவருமான ஆண்டவர் இப்போது இவ்வாறு கூறுகிறார்,அஞ்சாதே, நான் உன்னை மீட்டுக் கொண்டேன். என் பெயரைச் சொல்லி என்னை அழைத்தேன், நீ எனக்குரியவன். எசாயா 43:1