இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

ஆண்டவரின் திருக்காட்சி

ஆண்டவர் உன்மீது எழுந்தருள்வார்

முதல்வாசகம் : எசாயா 60: 1-6
இரண்டாம் வாசகம் : எபிசேயர் 3: 2-3, 5-6
நற்செய்தி வாசகம் : மத்தேயு 2:1-12

ஆண்டவரின் திருக்காட்சி திருவிழாவை ஆண்டின் முதல் ஞாயிறு அன்று அன்னையாம் தாய் திருச்சபை கொண்டாட அனைவரையும் அழைக்கின்றது. இறைவன் தலைமுறை தலைமுறையாக ஒளியின் இறைவனாக இருக்கின்றார். இன்றுவரை இருளானவன் ஒளியின்மீது வெற்றி கொள்ளவில்லை. இயற்கையின் வழியாகவும், அவருடைய வார்த்தையின் வழியாகவும் ஔியான இறைவன் அவருடைய வல்லமையையும் ஆற்றலையும் வெளிப்படுத்துகின்றார் என்பதை விவிலியத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் எடுத்துரைக்கின்றது. இன்று இறைவாக்கினர் எசாயா கூறுவதை நமது கவணத்திற்கு கொண்டுவருவோம். “எருசலேமே எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது. இதோ! இருள் பூவுலகை மூடும், காரிருள் மக்களினங்களைக் கவ்வும், ஆண்டவரோ உன்மிது எழுந்தருள்வார். அவரது மாட்சி உன்மீது தோன்றும் “ என்று. இன்று பிற இனத்தார் என்று அழைக்கப்படும் நம் அனைவரையும் இறைவன் எழுந்து ஒளி வீசும்படி அழைக்கின்றார். ஏனென்றால் ஆண்டவருடைய ஒளி நம் அனைவரின்மீதும் திருமுழுக்கின் வழியாக முத்திரையிடப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து அருள்சாதனங்களின் வழியாக நம்முடன் செயலாற்றி வருகின்றார். இறைவன் நமக்கு கொடையாக கொடுத்துள்ள அருள் கொடைகளை வளர்க்க நாம் எவ்வாறு உழைக்கின்றோம். இன்று அன்றாட நடைமுறை வாழ்க்கை பயணத்தில் அனைத்தையும் எளிதாக எடுத்துக் கொள்கின்றோம். திருமுழுக்குப் பெற்று கிறிஸ்துவன் - கிறிஸ்துவள் என்று அழைக்கும் ஒவ்வொருவரும் ஒளியானவருக்கு சாட்சியாக வாழவேண்டும் என்று விரும்புகின்றார். உலக அறிவியல் வளர்கின்ற இக்காலக் கட்டத்தில் காரிருளானவன் மக்களினங்களை கவ்விக் கொண்டு இருளின் பாதையில் பயணிக்கத் தூண்டுவதை கண்ணால் காண்கின்றோம், காதால் கேட்கின்றோம். எப்படி இன்று இருளை அகற்ற முடியும்? இறைவார்த்தையை நன்றாக அறிந்திருந்தால் நம்மால் இயேசுவைப் போல் அகன்று போ சாத்தானே என்று நம்மால் கூறமுடியும். இப்புத்தாண்டில் இறைவனின் துணையிருப்பை வார்த்தையின் வழியாக அனுபவிக்க அனுதினம் முயற்சிப்போம்.

இறைமகன் இயேசு தன்னுடைய அன்பு சீடர்களிடம், உலகம் முடிவுவரை நான் என்றும் உங்களோடு இருப்பேன் என்று வாக்கு கொடுத்துள்ளார். அவர் நமக்கு முன்பும் பின்பும் நம்மை சூழ்ந்து இருப்பவர். யூதர்களின் அரசராகப் பிறந்திருப்பவர் எங்கே? என்ற மூன்று கீழ்திசை ஞானிகளின் கேள்வி ஏரோது அரசனும், எருசலேம் முழுவதும் கலங்கிற்று என்று நற்செய்தியில் காண்கின்றோம். ஏன் ஏரோது அரசன் கலங்கினார். இருளானவன; அவருடைய உள்ளத்தில் உலக அரசப் பதவி, சுகமான அரண்மன வாழ்க்கையை கைவிட வேண்டும் என்ற எண்ணம் அவரை மன குழப்பத்திற்கு கொண்டுபோயிருக்கலாம். நம்மைவிட பெரிய அரசர் வேறு யாரும் இம் மண்ணில் உண்டோ என்ற கர்வம் ஆணவம் இருந்ததால்தான் அவர் கலங்குகின்றார். ஆணவம் என்ற இருள் ஔியானவரை அவரால் கண்டு கொள்ள முடியவில்லை. இறைவனுடைய அருள் நிறைந்த வெளிப்பாட்டை அவரால் அனுபவிக்க முடியவில்லை. மூன்று ஞானிகளை வழிநடத்திய விண்மீன் என்ற ஒளியான ஆவியானவர் அவருடைய அரண்மனைக்கு மேல் ஒளிரவில்லை. ஏனென்றால அவருயைட மனம் குழப்பத்தில் கலங்கி இருந்தது, மேலும் நாடு முழுவதும் கலங்கியிருந்தது என்பதை நற்செய்தியில் காண்கின்றோம். ஞானிகள் தன்னை ஏமாற்றியதைக் கண்டு ஏரோது அரசன் மீண்டும் சீற்றம் கொண்டு இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண்குழந்தைகளை கொலை செய்வதற்கு துணிகின்றார். இருளானவன் எப்பொழுதும் இருளின் செயல்களைச் செய்வதற்கு துணைநிற்பான் என்பது உண்மையிலும் உண்மை ஆகையால் நாம் அனைவரும் எப்பொழுதும் அறிவுத் தெளிவோடு ஞானிகளைப் போல் இறைவன் காட்டும் வழியில் பயணிக்க முயற்சி செய்வோம். அன்று ஞானிகளுக்கு விண்மீன் யூதரின் அரசராகிய இயேசுவை வணங்குவதற்கு துணயாகவும் வழிகாட்டியாகவும் இருந்ததுபோல் இன்றும் இறைவன் நமக்கு அவர் அன்பு மகன் இயேசுவின் வழியாக அனைத்து வாழ்வின் அருள் கொடைகளை ஆவியானவரின் வழியாக வழங்கிக் கொண்டுதான் இருக்கின்றார். முழுவாஞ்சையோடு உள்ளத்தை எழுப்பி செப உறவில் விசுவாசத்துடன் மன்றாட வேண்டும். உலகின்மீதும் மணுக்குலத்தின் மீதும் படர்ந்து கொண்டிருக்கும் அனைத்து தீயவனின் செயல்களிலிருந்து விடுதலைப்பெற நடுவராக விளங்கும் இறைமகனிடம் இடைவிடாது நன்றி உள்ளத்தோடு செபிக்க வேண்டும்.

பிற இனத்தவராகிய நாம் அனைவரும் இறைவனின் பார்வையில் பேறுபெற்றவர்கள். இறைமகன் இயேசு கிறஸ்துவின் உண்மையான ஒளி நம்மீது ஒளிர்ந்துள்ளது. அவர் சுடர்விட்டு எரியவிட்ட ஆன்மாவின் விளக்கு அணையாமல் இருக்க வார்த்தையை வாழ்வாக்க முயற்சிக்க வேண்டும். இறைவன் நமது கையில் கொடுத்துள்ள வார்த்தையை அறிய ஆர்வம் கொள்வோம். மூன்று ஞானிகள் பொன், சாம்பிராணி, வெள்ளைப் போளம் கொடுத்தது போல் நாமும் இறைவனுக்கு கொடையாக நமது செப உறவு, இறைவார்த்தையை படிப்பதற்கு அனுதினம் நேரங்களை ஒதுக்கி அவற்றில் வளர்ந்து ஒளியின் பாதையில் பிறரை வழிநடத்துவதற்கு இப்புத்தாண்டில் முயற்சி எடுப்போம். ஆவியானவர் நாம் எடுக்கும் அனைத்து முயற்சியை ஆசீர்வதிப்பார் என்ற நம்பிக்கையுடன் ஆவியானவரின் வழிகாட்டுதலாகிய விண்மீனை நோக்கி பயணிப்போம்.

ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்து கொள்ளவில்லை. யோவான் 1;10