இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் 33 ஆம் வாரம்

நீங்கள் எல்லாரும் ஒளியைச் சார்ந்தவர்கள்

முதலாம் வாசகம் : நீதிமொழிகள் 31: 10-13, 19-20, 30-31
இரண்டாம் வாசகம் : 1 தெசலோனிக்கர் 5: 1-6
நற்செய்தி வாசகம்: மத்தேயு 25; 14-30

இன்று பொதுக்காலம் 33 ஆம் ஞாயிறு. ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர். உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர் நற்பேறும் நலமும் பெறுவீர். சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! என்று பதிலுரைப்பாடலில் தியானிக்கின்றோம். குடும்பத் தலைவனும் தலைவியும் இறைவனுக்கு அஞ்சி அவர் வழிகளில் நடந்து அவருடைய விதிமுறைகளின்படி வாழ்ந்து, தம்முடைய திறமைகளையும் நற்செயல்களையும் நற்பண்புகளையும் பிறருடைய நலனுக்காக உழைக்கும்போது இறைவன்தாமே கைமாறு தருவார் என்ற வாக்குறுதியை இன்றைய வாசகங்களின் வழியாக இறைவன் நமக்கு வெளிப்படுத்துகின்றார். நீங்கள் எல்லாரும் ஒளியைச் சார்ந்தவர்கள்: பகலில் நடப்பவர்கள் நாம் இரவையோ இருளையோ சார்ந்தவரல்ல என்ற திருத்தூதர் பவுலின் வாக்கு நமது ஆன்மீக வாழ்வுக்கு நம்பிக்கையும் விசுவாசத்தையும் தரக்கூடிய ஒன்றாகும். நானே உலகின் ஒளி என்று கூறியவராகிய இயேசு கிறிஸ்து நம்மிடம் இல்லை என்றால் நமது வாழ்வு இருள் நிறைந்த ஒன்றாகும். திருமுழுக்கின் வழியாக பெற்ற உயிர்ப்பின் ஒளி மங்காமல் இருக்க இறைவார்த்தையும், செபமும், திருவழிபாடும், ஒளியின் பாதையில் வாழ்வதற்கும் பணிப்பதற்கும் இறைவன் கொடுக்கும் மாபெறும் கொடையாகும். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர், அவருடைய நாமத்தின் பெயர் நாம் எதைக் கேட்டாலும் தருவேன் என்று கூறியவர். அவர் மன்னிப்பவர், பாவிகளை நேசித்தவர் இன்றும் நம்மை நேசித்துக் கொண்டுதான் இருக்கின்றார் ஆகையால்தான் இன்று அவர் ஒளியின் பாதையில் வாழவும், பயணிக்கவும் நம் அனைவரையும் அழைக்கின்றார்.

தீங்கு செய்யும் போதும், தவறுகள் செய்து பாவ வழியில் வாழும்போதும், மேலும் கோபம், ஆணவம், வெறுப்பு, பகைமை போன்ற தீமையின் குணங்கள் நம்மிடம், இருக்கும் போது, நானும் நீங்களும் இன்னும் இருளில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பது உண்மை. பொதுவாக எல்லோருமே அவற்றை மறந்து நமக்கு எது நல்லதோ அதைத் தொடர்ந்து செய்து கொண்டே வாழ்கின்றோம். இறைவனின் விழுமியங்கள் அனைத்துமே வாழ்வுக்கு ஈட்டுச் செல்லக்கூடிய ஒரு கருவியாகும். இறைமகன் இயேசு கிறிஸ்து நிக்கதேமுடன் உரையாடியபின் இறுதியாக கூறும் வார்த்தை “ தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள், இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்“(யோவான்3:20-21) நமது தீச்செயல்கள் வெளியாகிவிடும் என்று அஞ்சுவது ஏன்? ஒப்புறவு அருட்சாதனம் வழியாக இறைமன்னிப்பு பெற்று இறைவனுடனும் உறவுகளுடனும் ஒப்புரவு செய்வதற்கு ஏன் தயக்கம்? இன்று நம்மில் பலர் வாழ்வு தரும் அருட்சாதனத்தை மறந்து வாழ்கின்றோம். உண்மை ஒன்று மட்டமே நமக்கு விடுதலை தரும். இறைவனுக்கு எதிராக செய்யும் எதாவது தீய சக்திகள் நம்மிடம் இருந்தால் அவற்றை முற்றிலும் தவிர்க்க முயற்சி செய்வோம். இன்று தீயவன் எத்தனையோ உள்ளங்களை தீச்செயல்களில் ஈடுபட எல்லா முயற்சிகளையும் எடுத்துக் கொண்டுதான் உள்ளான். இன்று பேரூந்து நிலயத்தில் இருந்த போது நான் கவணித்த உண்மை சம்பவம், 14 – 15 வயது உள்ள ஐந்து ஆறு சிறுவர்கள் போதைப் பொருட்கள் விற்கும் கடையின் பக்கத்தில் இருந்து போதைப் பொருட்களுக்கு அடிமையாகி சந்தோசத்துடன் புகைப்பிடித்துக் கொண்டு மகிழ்ச்சியடன் ஆடிப்பாடி இருப்பதைக் கண்டு மிகவும் வருத்தப்பட்டேன். சிறுவர்களை எவ்வாறு அவன் அடிமையாக்குகின்றார் என்று பாருங்கள். இன்று எத்தனையோ ஆன்மாக்கள் பாவவழியில் பயணித்து அருமையான வாழ்வை துலைத்துக் கொண்டுள்ளார்கள். தீயவன் தீயவழியில் பயணிக்க இளம் உள்ளங்களை கவர்ந்து அழிவின் பாதைக்கு அழைத்துச் செல்கின்றான். பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை வளர்ப்பதற்கு வழிப்பாய் இருங்கள்.

பெற்றோர்கள் இன்று தங்களுடைய குழந்தைகளுக்கு ஆன்மீக வழிகளை கற்றுக் கொடுக்க வேண்டும். “பாவத்துக்கு கிடைக்கும் கூலி சாவு, மாறாகக் கடவுள் கொடுக்கும் அருள்கொடை நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழும் நிலைவாழ்வு” என்று உரோமையர் திருமுகத்தில் மிகத் தெளிவாக இறைவார்த்தை கூறுகின்றது. தீயவனின் செயல்களைக் கண்டு உணர்வதற்கு ஆவியானவரின் துணை இக்காலக்கட்டத்தில் மிகவும் அவசியம். ஆவியானவரின் கொடைகள் நம்மில் நிறைவாக இருக்க வேண்டும் அப்போதுதான் ஒளியின் நற்செயல்களைச் செய்வதற்கு ஆவியானவர் என்றும் நமக்கு துணைபுரிவார். நாம் அனைவரும் இறைவனால் தேர்ந்து அழைக்கப்பட்டவர்கள். அவைனரும் அவருடைய அன்பு மக்கள் எனவே இறைவனைப்போல் நம்மில் அன்பு, இரக்கம், பரிவு, மன்னிப்பு, உள்ளத் தாழ்மை, பொறுமை, பிறரைப்பற்றி உயர்வான எண்ணம், இறைவன்முன்பு நம்மை தாழ்மையுடன் முழுமையாக அர்ப்பணிப்பது போன்ற நற்பண்புகள் நம்மில் வளர வேண்டும். இறைவன் நமக்கு பலவகையான திறமைகளையும் கொடைகளையும் இலவசமாக கொடுத்துள்ளார் அவற்றை எவ்வாறு உபயோக்கின்றோம் என்று இன்று ஆய்வு செய்ய வேண்டும். நமது குடும்பத்திலும், சமூக வாழ்விலும், குழும வாழ்விலும், இறைவன் கொடுத்துள்ள தாலந்து என்னும் திறமைகளையும், நற்செயல்களையும் எவ்வாறு பயன்படுத்துகின்றோம். திறமை உள்ளவர்களைக் கண்டு உற்சாகப்படுத்துகின்றோமா? அல்லது பொறாமைப் படுகின்றோமா? ஒளியின் செயற்பாடுகள் ஒருவர் மற்றொருவரை தட்டி கொடுத்து உதவும் பண்பு வேண்டும் இறைவன் கொடுக்கும் எச்சரிக்கை அவருடைய நாள் திருடன் இரவில் வருவதுபோல என்று. அவர்முன்பு நாம் அனைவரும் சமமாக இருப்போம் அவரிடம் ஏற்றத் தரழ்வு என்னது அல்லை அப்போது நாம் என்ன செய்யப் போகிறோம் சிந்திக்கவும். இறைவனுடைய வாழ்வு தரும் வார்த்தை நாம் எவ்வாறு வாழ வேண்டுமென்று கற்பிக்கின்றது எனவே இறைவார்த்தையை நமது வாழ்வாக்கி, ஒளியின் பாதையில் நடந்து ஔியான இறைவனுக்கு சாட்சியாக வாழ்வோம். இறைவன் ஒளியாய் இருக்கின்றார் அவரிடம் இருள் என்பது இல்லை. குடும்பத் தலைவியும் தலைவர்களும், உலகத் தலைவர்களும், திருச்சபையை வழிநடத்தும் தலைவர்கள், அருட்பணியாளர்கள், இறைப்பணிபுரியும் பொதுநிலையினர், துறவிகள் அனைவரும் ஒளியின் விழுமியங்களை தங்களுடைய வாழ்வில் முழமையாகப் பெற்று, அவர்களுடைய நற்செயல்களாலும் திறமைகளாலும் இறைவனுக்க பணிபுரியவும், அவர்கள் பணியாற்றும் அனைவருக்கும் நற்செய்தியின் விழுமியங்களையும் மதிப்பீடுகளையும் கற்றுத் தரவேண்டுமென்று இந்த வாரம் இறைவனிடம் மன்றாடுவோம்.

ஆண்டவரே! நீர் என் விளக்குக்கு ஒளியேற்றுகின்றீர். என் கடவுளே, நீர் என் இருளை ஒளிமயமாக்குகின்றீர். உம் துணையுடன் நான் எப்படையையும் நசுக்குவேன், என் கடவுளின் துணையால் எம்மதிலையும் தாண்டுவேன். திருப்பாடல் 18:28-29