இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் 32 அம் வாரம்

எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம்

முதல் வாசகம் : சாலமோன் ஞானம் 6: 12-16
இரண்டாம் வாசகம் : 1 தெசலோனிக்கர் 4: 13-18
நற்செய;தி வாசகம் : மத்தேயு: 25: 1-13

இன்று பொதுக்காலம் 32 ஆம் வாரம். ஞாயிறு இறைசிந்தனை எழுதுவதற்காக இறைவார்த்தைகளை வாஞ்சையுடன் வாசித்து தியானித்தபோது “எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம்“ என்ற இறைவார்த்தை என் உள்ளத்தின் ஆழத்தை தொட்டது, அவசர உலகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு, நாட்களும் நேரமும் வேகமாக ஓடிக்கொண்டிருப்பதை நன்றாக உணர்முடிகின்றது. திங்கள் தொடங்கி சனி முடிந்து, ஞாயிறு தொடங்குவதையும் கண்டு பலர் இவ்வாறு கூறுவதைக் கேட்டுள்ளோம் நாட்கள் வேகமாக ஓடுகின்றது என்று. (Days are running). மற்றும் ஆண்டின் இறுதி நாட்களையும் எதிர் கொள்ளப் போகின்றோம், புதிய ஆண்டு ஆரம்பிக்க இன்னும் 50 நாட்கள் உண்டு. ஆண்டவரின் வருகை அன்மையில் உள்ளது என்று அவ்வப்போது உலகில் நடக்கின்ற மாற்றங்களையும் நண்பர்களுடன் உறையாடுகின்றோம். அதற்கேற்றால் போல் தாய் திருச்சபையும் இன்றைய திருப்பலி இறைவசனங்களின் வழியாக நாம் அனைவரும் ஆண்டவரின் வருகைக்காக முன்மதியோடு விழிப்பாய் ஆயத்தமாய் இருக்க வேண்டுமென்று அழைப்பு கொடுக்கின்றது.

இன்றைய முதல்வாசகம் சாலமோனின் ஞானம் நூலில் இறைவன் நமக்கு வெளிப்படுத்துவது இறைக்கொடையான ஞானத்தைப்பற்றி. சாலமோன் அரசர் இறைவனிடம் இஸ்ரயேல் மக்களை ஆட்சி செய்வதற்கு இறைவனுடைய ஞானம் வேண்டுமேன்று செபித்தார். அவர் எழுதிய வார்த்தையின் வழியாக இறைவனுடைய ஞானத்தின் சிறப்பைப்பற்றி ஆழமாக எடுத்துரைக்கின்றார். நற்செய்தி வாசகத்தில் முன்மதியுடையோர்கள் ஞானம் நிறைந்தவர்களாக இருந்ததால்தான் அவர்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றார்கள். அதனால் அவர்கள் மணமகனுடன் திருமண மண்டபத்துக்கள் தயக்கமின்றி நுழைந்தார்கள். ஆண்டவரின் நாளை எதிர்கொண்டிருக்கும் நாம் அனைவரும் விழிப்போடு இருக்க ஞானம் மிகவும் அவசியம். இறைவனுடன் உள்ள ஆழமான உறவும், அவருடைய ஆவியானவரின் எழுப்புதல் நம்மில் வெளிப்பட வேண்டும். ஞானம் ஒளிமிக்கது, மங்காதது. அதன்பால் அன்புகூறுவோர் அதை எளிதல் கண்டுகொள்வர்: அதைத் தேடுவோர் கண்டடைவர். வைகறையில் அதைத் தேடுவோர் தளர்ச்சி அடையமாட்டார்கள்: ஏனெனில் தம் கதவு அருகில் அது அமர்ந்திருப்பதை அவர்கள் காண்பார்கள் என்று இறைவன் கூறுகின்றார். இன்று நாம் தேடுவது ஞானமா? அல்லது செல்வமா? பதவியா? புகழா? பணமா? இறைவனா? வாழ்க்கைப் பயணத்தில் எதற்கு முதலிடம் தருகின்றோம்? சிந்தித்து செயலாக்குவோம். இறைவார்த்தைக்கும் அதனுடைய விழுமியங்களை அறிவதற்கும் வாஞ்சையும் தாகமும் கொண்டுள்ளோமா? இன்று நானும் நீங்களும் பல்வேறு சமயங்களில் இறைவனுடைய ஞானம் நிறைந்த விழுமியங்களை மறந்து, உலக விழுமியங்களுக்கு முதலிடம் கொடுத்து அதன் பின்னால் ஓடி அதனை அடைய எல்லா முயற்சிகளையும் சவால்களையும் மேற்கொண்டு அவற்றை அடைகின்றோம். இறைவன் நம்மை ஒவ்வொரு நிமிடமும் தேடிவருகின்றார். ஆவியானவர் அசைவாடிக் கொண்டுள்ளார். வார்த்தை மனுஉருவான இறைவன் நம்முடன் வாழ்கின்றார். அவருடன் வாழ்வத்றகு ஏன் தயக்கம். இறைவன் கூறும் இவ்வார்த்தையை சற்று சிந்திப்போம். தனக்குத் தகுதியுள்ளவர்களை ஞானம் தேடிச் செல்கிறது? உண்மையாக நாம் இறைவனுக்கு செவிமடுக்கின்றோமா? இன்று இறைவனுடைய ஞானத்தையும் அருளையும் பெறுவதற்கு நமது ஆன்மாவும் வாழ்வும் கறைபடாமல் இருக்க வேண்டும். திருவெளிப்பாடு நூல் (3:20) இறைவசனத்தில் கூறுவது “ இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக் கொண்டிருக்கின்றேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன், அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள் “என்று. இன்றைய சமுதயத்தில் நாம் அனைவரும் அறிவிலிகளின் குணங்களையும், முன்மதியுடையோரின் குணங்களையும் கொண்டுள்ளோம் என்பது உண்மை. அறிவிலிகளும், முன்மதியுடையோர்களும் தங்களுடன் எண்ணெய் வைத்திருந்தார்கள். ஆனால் அவர்கள் உறங்கிவிட்டார்கள். மணமகளின் தோழியர் உவமையில் உறங்குவது பாவத்தைக் குறிக்கின்றது. இறைவனால் ஒளியேற்றப்பற்ற புனிதமான நம்முடைய வாழ்வு என்னும் விளக்கு இறைஅருள்கொடைகள் என்னும் எண்ணெய் இல்லாமல் கொளுந்துவிட்டு எறிய முடியாமல், பாவங்கள் என்னும் உறக்கத்தால் அணைந்து போக முடியும். அதனால் பாவம் என்னும் உறக்கத்திலிருந்து எழுந்து நம்முடைய வாழ்வு என்னும் விளக்கு அணையாமல் இருக்க ஞானம் என்னும் கொடையால் நம்மை நிரப்ப வேண்டும். இறைவன் கொடையாக கொடுத்துள்ள வாழ்வு என்னும் நமது விளக்கு சுடர்விட்டு எரிந்து மணமகனுடன் செல்ல வேண்டுமென்றால் விழிப்பாய் இருந்து, இறைவன்மீது அதிகம் தாகம் கொண்டு அவர் உறவில் வளர வேண்டும்.

இறைவன்மீது ஆழமான விசுவாசம் நம்பிக்கை வளர தாகம் கொள்ளும்போது அவருடைய வெளிப்பாட்டை நம்மால் நன்றாக உணரமுடியும் என்பது உண்மை. என் இறைவா ! என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது என்ற இறைவார்த்தையை ஏற்று ஆண்டவருடைய வருகைக்காக விழிப்போடு ஆயத்தமாய் இருப்போம். நாம் அனைவரும் ஒன்றை மட்டும் மறக்ககூடாது “ஆண்டவரின் பார்வையில் ஒரு நாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒருநாள் போலவும் இருக்கின்றன என்று இறைவார்த்தை கூறுகின்றது. இறை நம்பிக்கையுடனும் விசுவாசத்துடனும் ஆயத்தமாய் இருப்போம். ஆண்டவராகிய எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும். விசுவாசம் என்னும் எண்ணெயால் எங்கள் அனைவரையும் அபிசேகம் செய்யும்.

ஏனெனில் நீர் எனக்குத் துணையாய் இருந்தீர், உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகிறேன். நான் உம்மை உறுதியாகப் பற்றிக் கொண்டேன், உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது. திருப்பாடல் 63:7-8