இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் 29 ஆம் வாரம்

நானே ஆண்டவர், வேறு எவரும் இல்லை

முதல்வாசகம் : எசாயா 45: 1, 4-6
இரண்டாம வாசகம் : 1 தெசலோனிக்கர் 1: 1-5a
நற்செய்தி வாசகம் : மத்தேயு 22:15-21

ஆண்டின் பொதுக்காலம் 29 ஆம் வாரத்தில் பயணம் செய்வதற்கு புதுவாழ்வு கொடுத்த அன்பும் கருணையும் இரக்கமும் பேரன்பும் கொண்ட நம் இறைவனுக்கு நன்றிகூறுவோம். நமது ஆண்டவர் மாட்சிமிக்கவர், பெரிதும் போற்றத்தக்கவர், தெய்வங்கள் அனைத்திறகும் மேலாக அஞ்சுதற்கு உரியவர் அவரே, என்று பதிலுரைப் பாடல் வழியாக இறைவனின் ஆற்றலையும் வல்லமையைப் பற்றியும் காண்கின்றோம். இன்றைய முதல்வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா நூலில் கூறுவது, நானே ஆண்டவர், வேறு எவருமில்லை என்ற இறைவார்த்தை என் உள்ளத்தை மிகவும் ஆழமாகத் தொட்டது. "நானே ஆண்டவர், வேறு எவருமில்லை " என்று மூன்று முறைக் காணப்படுகின்றது. மற்றும் ஆழமாக சிந்திக்க வேண்டிய ஒரு கருத்து. இணைச் சட்டம் நூல் 4-5 அதிகாரங்களை நிதானமாக வாசித்தால் வேறுத் தெய்வம் நம்மிடையே இருக்க கூடாது என்பதை, இறைவாக்கினர் மோசே வழியாக இறைவன் இஸ்ரயேல் மக்களிடம் கூறுவதைக் காணலாம். புதிய இஸ்ரயேல் மக்கள் என்று அன்பாக அழைக்கும் நம் அனைவருக்கும் இறைவன் தரும் மிகப் பெரிய கொடையாகும். உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அழிக்கும் நெருப்புப் போன்றவர், அவர் வேற்றுத் தெய்வ வழிபாட்டடைச் சகிக்காத இறைவன் என்றும், ஆண்டவரே கடவுள், அவரைத்தவிர வேறு எவரும் இலர், என நீங்கள் அறிந்து கொள்ளும் படியாகவும். மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் ஆண்டவரே கடவுள், அவரைத் தவிர வேறு எவரும் இலர் ‘என்று அறிந்து, உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள்.

உன் கடவுளாகிய ஆண்டவர் நானே அடிமைத்தள வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து உன்னைப் புறப்படச் செய்தவர் நானே. என்னைத் தவிர வேறு கடவுள் எனக்கு இருத்தல் ஆகாது. மேலே விண்ணுலகிலும் , மண்ணுலகின் கீழுள்ள நீர்த்திரளிலும் உள்ள எந்த உருவத்திலேனும் உனக்கென நீ சிலையைச் செய்யாதே. நீ அவைகளை வழிபடவோ அவற்றுக்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் நானே உன் கடவுளாகிய ஆண்டவர், வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத இறைவன். இந்த வாரத்தில் இக்கருத்தை மனதில்ஏற்று தியானிப்போம். இறைமகன் இயேசு தந்தையாம் இறைவனின் உண்மையான தோற்றத்தை மன்னிக்கும் இறைவனாகவும், அன்பு செய்யும் இறைவனாகவும், சிலுவை மரணத்தின் வழியாகவும், அவருடைய உயிர்ப்பின் வழியாகவும், நம்மோடு என்றும் வாழுகின்ற இறைவனாகவும் இருக்கின்றார் என்பதையும், அவருடைய செயல்களின் மூலமாகவும் வார்த்தையின் வழியாகவும் இறைவல்லமையோடு சாட்சியாக வாழ்ந்து காட்டியவரும் படிப்பித்தவரும் ஆவார். இன்று நாம் வணங்குகின்ற இறைவன் யார்? நாம் வணங்கும் இறைவன் வாழுகின்ற இறைவன் என்று விசுவசிக்கின்றோமா? வேற்றுத் தெய்வங்களை நம்மை நாமே அறியாமல் வழிபட்டுக் கொண்டிருக்கலாம். ஏன் நம்மை நாமே ஆய்வு செய்து பார்க்ககூடாது? சிந்தித்து செயல்படுவோம். இன்று நானும் நீங்களும் உண்மையிலும் ஆவியிலும் வழிபடுகின்ற இறைவன் யார்? நானே ஆண்டவர், வேறு எவரும் இல்லை என்றவரை முழுமனதுடன் ஆராதிக்கின்றேரமா? அன்று இஸ்ரயேல் மக்களிடம் இறைவன் விரும்பியதை இன்று நம்மிடமும் விரும்புகின்றார். இறைவனுடைய விருப்பம் நாம் அவருக்கு செவி கொடுக்கவும், அவரை முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும் அன்பு செய்யவும். அவருடைய கட்டளைகளையும், வார்த்தைகளையும் நமது உள்ளத்தில் இருத்தவும். நாம் போகும் போதும், வரும்போதும், வழிப்பயணத்தின் போதும், படுக்கும்போதம், எழும்போதும் அவற்றைப் பற்றி தியானிக்கவும் பேசவும், வாழ்க்கைக்கு அடையாளமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகின்ற இறைவனுக்கு என்ன கைமாறு செய்கின்றோம்.

உலகத்திற்கும் இறைவனுக்கும் வேறுபாடுகள் உண்டு என்பதை நாம் அனைவரும் நன்றாக அறிந்திருக்கின்ற உண்மை. இந்த உண்மையை எவ்வாறு நடைமுறையில் பயன் படுத்துவது என்பதை நற்செய்தி வாசகத்தின் வழியாக இறைமகன் இயேசு நிறைந்த ஞானத்தோடும் வல்லமையோடும் பதில் தருவதைக் காண்கின்றோம். சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள் என்று கூறுகின்றார். இன்றுநாம் அனைவரும் பலவகையான உலக சுகங்களுக்கு முதலிடம் கொடுத்து அவைகளின் பின்னால் நேரத்தையும் பணத்தையும் செலவழித்துக் கொண்டு மனஅமைதியில்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். அனுதின வாழ்விற்கு பணம் மிகவும் அவசியம். பணம் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்பது உண்மை. அவற்றை தகுந்த முறையில் சம்பாதித்து, சரியான முறையில் பயன்படுத்துவது மற்றும் போதாது. இறைவனுக்கும் முதலிடம் தர வேண்டுமென்று விரும்புகின்றார். இறைவனுக்கென்று படைத்த மனிதனுக்கு, இன்று அவரை வழிபடுவதற்கும், அவருடைய வார்த்தையை அறிந்து கொள்வதற்கும், திருப்பலிகளில் பங்கு பெறுவதற்கும் சமயமில்லை. பெரியவர்கள் முதல் இளைய தலைமுறை, சிறியவர்கள் வரை, இறைவனில் அமைதி பெறாமல், போதை பொருள், குடி, கணனி, சமூக ஊடங்கள், தொலை, கை பேசி, தொலைக்காட்சியில் தொடர் நாடகங்கள் போன்ற பல்வேறு ஊடகங்களுக்கு அடிமையாகி மேலும் பல்வேறுவகையான தீய சக்திகளுக்கு அடிமையாகி அவைகள்தான் நமக்கு இன்பமும் மகிழ்ச்சியும் தருகின்ற இறைவன் என்று நம்பி தனது வாழ்வை அழித்துக் கொண்டு உள்ளதை கண்கூடாகப் பார்கின்றோம்தானே. இறைமகன் இயேசு தம் சீடர்களிடம் கூறுவது, மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? (மத்தேயு16:26) காலம் நெருங்கிவிட்டது ஆண்டவருடைய வருகையை எதிர் கொள்ள விழிப்பாய் இருப்போம். நமது விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல் நாமும் அவரைப்போல் இறைஞானத்திலும் வல்லமையிலும் நிறைவாயிருந்து, வாழ்வில் நாம் உறுதியாக பற்று வைத்து வழிபடுகின்ற அனைத்து வேறுத் தெய்வங்களை ஆய்ந்து அறிந்து வேரோடு களைந்துவிட்டு வாழ்வுக்கு வழிகாட்டும் உண்மையான இறைவனுக்கு உரியவற்றை மகிழ்ச்சியுடன் கொடுப்போம்.

காலம் வருகிறது, ஏன், வந்தேவிட்டது! அப்போது உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர். கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயலபுக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபடவேண்டும். யோவான் 4:23