இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் 27 ஆம் ஞாயிறு

அமைதியை அருளும் கடவுள் உங்களோடிருப்பார்

முதலாம் வாசகம்: எசாயா 5: 1-7
இரண்டாம் வாசகம்: பிலிப்பியர்:4: 6-9
நற்செய்தி வாசகம் : மத்தேயு : 21: 33-43

இன்று ஆண்டின் பொதுக்காலம் 27 ஆம் வாரம் ஞாயிறு. அமைதியை அருளும் கடவுள் உங்களோடு இருப்பார் என்ற மையக் கருத்து இறைவன் மேல் நாம் அனைவரும் கொண்டுள்ள ஓர் ஆழமான நம்பிக்கையையும் விசுவாசத்தையும் வெளிப்படுத்துகின்றது. பதிலுரைப்பாடல் 18 ஆம் இறைவசனத்தில் கூறுவது "இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும் நாங்கள் உமது பெயரைத் தொழுவோம் "என்று. ஆம் இறைவனின் உறவு மனவலிமையும் அமைதியும் அளிக்கும். வாழுகின்ற இறைவனின் முன்பு அமைதியில் உரையாடும் போது இறைவனின் வெளிப்பாடும் ஆவியானவரின் வல்லமையும் இறங்கி வரும் என்பது உண்மை. இன்று திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில் கூறுகின்றார் 'எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறைவேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள். அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும்"என்றும். மற்றும் அமைதியை அருளும் இறைவன் நம்மோடு இருக்க வேண்டிய வழிமுறைகளையும் இறைத்தன்மையையும் அவர் கற்றுத்தருகின்றார். அவை உண்மையானவை, கண்ணியமானவை, நேர்மையானவை, தூய்மையானவை விரும்பத்தக்கவை, பாராட்டுதற்குரியவை, நற்பண்புடையவை, போற்றுதற்குரியவை ஆகிய இறைப்பண்புகளை மனத்தில் இருத்தும் போது உண்மையில் அமைதியை அருளும் இறைவன் நம்மோடு இருப்பார் என்று ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றார். இன்று அமைதி சமாதானம் இல்லாத உலகத்திலும், சமுதாயத்திலும். குடும்பத்திலும், குழும்பத்திலும், இயற்கையிலும் வாழந்து அனுபவித்து, உணர்ந்து, எதிர் கொண்டு வாழும் அனைவர்க்கும், மேலும் நேர்மையும் , உண்மையும், இல்லாத மனித உள்ளங்கள் வாழ்கின்ற சமுதாயம், கொடூரம், பயங்கர வாதம், பஞ்சம், பட்டனி, பல்வேறு நாடுகளிலிருந்து அகதிகளின் அழுகுரல்கள், அனைத்தையும் இழந்து தவிக்கும் மக்கள் அனைத்தையும் காணும் போது, அமைதியை அருளும் இறைவன் உங்களோடிருப்பார் என்ற இறைவார்த்தை உண்மையாகுமா? இன்று மற்றவரிடம் இவ்வார்த்தையைக் கூறினால் அவர்கள் நம்புவார்களா? இந்த வாரத்தில் என்னிடம் மூன்று தனிப்பட்ட நபரினால் கேட்கப் பட்ட கேள்வி, இறைவன் இருக்கின்றாரா? அவர்கள் மூன்று பேருக்கும் என்னுடைய பதில் ஆம் என்றுதான் இருந்தது. ஏனென்றால் நாம் விசுவசிக்கும் இறைவன் வாழுகின்ற இறைவன். நம்மை கண்ணின் மணியென காக்கின்றவர். அவருடைய சிறகுகளின் நிழலில் நம்மை மூடிக்கொள்கின்றவர். சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நாம் நடக்க நேர்ந்தாலும் நம்மோடு இருப்பவர் என்பதை பல வேளையில் நான் உணர்ந்திருக்கின்றேன். இறைஉறவும் மனிதஉறவும் நமக்கு மிகவும் தேவையானது. (திருப்பாடல் 24 :3-4 ) ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவர் யார்? கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர்: வஞ்சக நெஞ்சோடு ஆணையிட்டுக் கூறாதவர் என்று காண்கின்றோம். அமைதியை அருளும் இறைவனை முழுமையாக அனுபவிக்க வேண்டுமென்றால் கறைபடிந்த உள்ளங்களை தூய்மையாக்க வேண்டும். மேடு பள்ளம் நிறைந்த நம்முடைய வாழ்க்கையை சமதளமாக்க வேண்டும்.

இறைமகன் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை இதற்கு ஓர் மாபெறும் எடுத்துக்காட்டு. அவர் இறைமகன் என்றபடியால் இறைஞானத்தால் நிறைந்து இறைவனுக்கு உகந்தவராய் இருந்தார். மேலும்அவர் ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்தார் என்று நற்செய்தியில் காண்கின்றோம். இறைமகன் இயேசு எப்பொழுதும் இறைஉறவில் தந்தையாம் இறைவனிடம் உறவு கொண்டு அவருடைய சித்தம் எதுவென்று அறிந்து அதன்படி வாழ்ந்து, இறைபணி செய்து அனைவருக்கும் மூலைக் கல்லாய் இருந்து உயர்த்தப் பட்டவர். இறைவன் நம்மீது கொண்ட அன்பினால் தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பி அனைவரையும் மீட்பதில்தான் அவருடைய அன்பு எவ்வளவு உண்மை என்பது விளங்குகின்றது. பல வேளைகளில் நன்மைகள் பல செய்தும், பிறருடைய நல்வாழ்விற்கு தம்முடைய வாழ்வை இரவும் பகலும் தன்னுடைய குடும்பத்திற்கும், பொதுப் பணிக்காகவும் அர்ப்பணிக்கின்ற உள்ளங்கள் எதிர் கொள்ளும் சவால்கள் ஏராளம். அவ்வேளையில் இறைமகன் இயேசுவின் நம்பிக்கை தரும் வார்த்தையை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் அவைதான் " கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று". இறைவன் உலகம் என்னும் திராட்சைத் தோட்டத்தில் நமக்கென்று ஒரு பணியைக் கையில் கொடுத்துள்ளார். அவருடைய பணியை உண்மையுடனும். நேர்மையுடனும், முழு உள்ளத்துடனும் செய்கின்றபோது இறைவனுக்கு உண்மையுள்ளவராக இருக்கவும் வாழவும் முடியும் என்பது நிச்சயம். இறைமகன் இயேசுவுக்கு உண்மையுள்ள பணியாளராக வாழ்வதற்கு அவருடைய அருள்பிரசன்னம் இக்காலக்ட்டத்தில் மிகவும் அவசியம். அறிவுத் தெளிவோடு விழிப்பாய்யிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித்திரிகிறது. இருளானவன் நம்மை இயற்றாமல், ஆவியானவர் நம்மை இயற்ற விழிப்போடு இறைவார்த்தையை உள்ளத்தில் தியானித்து, வாழ்க்கையின் தீபமாக இறைவார்த்தையை ஏற்றுக் கொள்வோம். மணமகனை எதிர்கொள்ள முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணையும் எடுத்துச் சென்றது போல் நாம் அனைவரும் இறைத்தன்மையில் வளர்ச்சி பெற்று இறைவனுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து அமைதி அருளும் இறைவனில் ஒன்றாகி என்றும் விழிப்போடு வாழ்வோம். இறைவனோடு சேர்ந்து வாழ்வோம்.

கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல் கடவுளே! என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது. என் நெஞ்சம் கடவுள்மீது உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது எப்பொழுது நான் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கப்போகின்றேன். திருப்பாடல் 42:1-2