ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு

ஆண்டவரே என் ஒளி அவரே என் மீட்பு

எசாயா 12:2-3,4,5-6
பிலிப்பியர் 4:4-7
லூக்கா 3:10-18

இந்த மாதம் எட்டாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இரக்கத்தின் யூபிலி ஆண்டை திரு அவையை உயிர் துடிப்புடன் அமைப்பதற்கு பயன் படுத்துமாறு திருத் தந்தை பிரான்சிஸ் கூறி உள்ளார். ஒப்புரவு மற்றும் நற்கருணை திரு அருள் சாதனங்களின் பலன்களை கண்டுணர இது நல்ல சந்தர்ப்பமாகும். இறை இரக்க பக்தியை நம் மத்தியில் வளர்த்து விலகிப் போன விழுமியங்களை மீண்டும் கொணர்வோம். நற்கருணை வழிபாட்டின் மூலமாக இறைவனிடம் மனம் விட்டுப் பேசுவோம்.

இன்றைய வாசகங்களில் மீட்பு தரும் மெசியா நம் நடுவில் அன்பை பொழிந்து அளவிலா இரக்கத்தால் புத்துயிர் அளிப்பார் என மகிழுங்கள் என சொல்கிறது. ஆண்டவர் அண்மையில் உள்ளார் எதற்கும் அச்சம் அடையத் தேவையில்லை என நம்பிக்கை தருகிறது. இறைவன் தந்த எல்லாவற்றுக்கும் நன்றி சொல்லி முழு மனதோடு செபிக்கையில் நம் வேண்டுதல் கேட்கப்படும். இறைவனோடு உள்ளத்தால் உறவாடி நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை அவரிடமே கேட்போமா?

இன்றைய நற்செய்தி ''அப்போது, 'நாங்கள் என்ன செய்ய வேண்டும்?' என்று கூட்டத்தினர் திருமுழுக்கு யோவானிடம் கேட்டனர். அதற்கு அவர் மறுமொழியாக, 'இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்' என்றார்'' எனச் சொல்கிறது. மற்றும் பகிர்தல் , பேராசை விட்டு வாழ்தல், அதிகார துஷ் பிரயோகம் இல்லாமை என்பன நம் வாழ்வில் தேவை ஆனது. இறைவன் தந்த வளங்கள் எல்லோருக்கும் பொதுவானவை என்பதை எண்ணி வாழுவோம் வாழ விடுவோம் வாழ வைப்போம். அண்மையில் மழையால் நடந்த பேரழிவுக்கு மனித ஊழலும் மனிதம் தவறிய செயல்களுமே காரணமாக அமைந்தது. இறைவன் எமக்குத் தந்த பொருள்களை, திறமைகளை மற்றவருடன் பகிர்ந்து பயன் பெற ஆசிப்போம். சில யுத்தங்களுக்கு மிகப் பெரிய ஏற்ற தாழ்வுகளே வழி அமைக்கின்றன. எனவே பகிர்தல் மூலம் அமைதிப் பூக்களால் அவனியை அழகு படுத்துவோம்.