இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுகாலம் 22 ஆம் வாரம்

கடவுளுக்கு உகந்த தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள்

எரோமியா 20: 7-9
உரோமையர் 12:1-2
மத்தேயு:21-27

பொதுக்காலம் 22 ஆம் ஞாயிறு. இன்றைய திருப்பலியில் கேட்கப் போகும் மூன்று இறைவாசகங்களும் மிக அருமையானதும், சவாலும் நிறைந்ததாகவும் உள்ளது. கடவுளே என் உயிர் உம்மீது தாகம் கொண்டுளள்ளது. என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன். கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன் என்ற இறைவார்த்தைகள் நம்முடைய அனுதின வாழ்க்கையில் ஆன்மாவின் தாகமாக இருக்க வேண்டும். மறைஉரை சிந்தனை எழுதவதற்காக மூன்று இறைவாசகங்களை தியானித்துக் கொண்டிருக்கும்போது "கடவுளுக்கு உகந்த தூய உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள் என்ற இறைவார்த்தை என் மனதை மிகவும் தொட்டது. இறைவன் தூய்மையாய் இருப்பதால் அவருடைய படைப்பும் என்றும் தூய்மையாய் இருக்க விரும்புகின்றார். திருத்தூதர் பவுல் தெசலோனிக்கர் எழுதிய திருமுகம் 4:3 ஆம் இறைவசனம் கூறுவது "நீங்கள் தூயோராவதே கடவுளுடைய திருவுளம் என்றும், உங்களை அழைத்தவர் தூய்மையுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் உங்கள் நடத்தையிலெல்லாம் தூய்மையுள்ளவர்களாய் இருங்கள். நீங்கள் தூயவராயிருங்கள் ஏனெனில் நான் தூயவன் என மறைநூலில் எழுதப்பட்டிருக்கிறது என்று திருத்தூதர் பேதுரு தனது திருமுகத்தில் கூறுகின்றார்.(1:15-16). தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றொர் ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர் என்று இறைமகன் இயேசு தனது மலைப்பொழிவில் கற்பிக்கின்றார். சமாரியப் பெண்ணிடம் இயேசு கூறுவது, யாரை வழிபடுகிறீர்கள் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால் நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம். காலம் வருகிறது: ஏன் வந்தேவிட்டது! அப்போது உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவோர்.(யோவான் 4 :22-23) நமது உள்ளத்தை தூய்மையுடன் இறைவனுக்கு காணிக்கையாக ஒவ்வொரு நிமிடமும் கொடுப்பது நமது முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும். விண்ணக வழிபாட்டில் நான்கு விதமான உயிர்கள் அல்லும் பகலும் தூயவர் தூயவர் எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவர் இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் என்று பாடிக்கொண்டிருந்தன என்று திருவெளிப்பாட்டு நூலில் காண்கின்றோம். நாமும் அவரை ஒவ்வொரு நொடிப் பொழுதும் தூயவர் தூயவர் என்று உள்ளத்தின் ஆழத்தில் வழிபட்டு ஆராதிக்க வேண்டும். அறிவியல் தொழில்நுட்பம் விரைவாக வளர்ந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் மனித உள்ளங்கள் வித்தியாசமான வழிகளில் பயணித்து இன்பமும் மகிழ்ச்சியும் பெறத் துடிக்கின்றார்கள். ஆனால் இன்றைய நற்செய்தியில் இறைமகன் இயேசு கூறுவது 'மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? நமது கண்முன் நடக்கும் இயற்கை பேரழிவுகள், அநீதிகள், மனித இழப்புக்கள், இயற்கையும், மனித குலமும் எதிர் கொள்ளும் கொடுமைகள், வன்முறைகள், குடும்ப பிளவுகள், அதிர்ச்சியை ஊட்டும் கொடூரங்கள், சமூகதீமைகள் அனைத்தும் எதை உணர்த்துகின்றது. தீயோனின் சக்தி அவனுடைய சூழ்ச்சி மற்றும் தூய்மை இல்லாத மனித இதயங்களே இதற்கு காரணம். வெறுப்பும், கோபமும் நிறைந்த உள்ளத்தை தவிர்க்க இறைவனிடம் கரம் குவித்து மன்றாடுவோம். காலம் தாழ்த்த வேண்டாம் விழிப்பாயிருங்கள், ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ நமக்கு தெரியாது என்று இறைவார்த்தை கூறுகின்றது. இறைவன் வாழும் நமது உள்ளத்தை தூய்மையாய் வைத்துக் கொள்ள முயற்சிப்போம்.

இறைவனுக்கு உகந்த தூயவர்களாக இன்று நம்மால் வாழ முடியுமா? இறைவனிடமிருந்து நம்மை பிரிப்பது எது? இறைவனுடைய அன்பை உணரமுடியாமல் நம்மை தடுப்பது எது? ஏன் நாம் தூயவர்களாக இருக்க வேண்டும்? உலக சுகங்களையும், இன்பத்தையும், அனைத்தையும் அனுபவித்துவிட்டு நமது ஆன்மாவை தூய்மையாய் பாதுகாக்காவிட்டால் என்ன பயன்? இருளில் தள்ளப்பட்டு அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் தானே இருக்கும். இறைமகன் இயேசுவோடு வாழ்வதற்கு தூய்மை நிறைந்த உள்ளமும் வாழ்க்கையும் தேவை என்பதை நன்கு நாம் அறிய வேண்டும். இறைவாக்கினர் மோசே முட்புதரை அணுகிச் செல்லும்போது, இறைவன் கூறுகின்றார், இங்கே அணுகி வராதே, உன் பாதங்களிலிருந்து மிதியடிகளை அகற்றிவிடு, ஏனெனில் நீ நின்று கொண்டிருக்கிற இந்த இடம் புனிதமான நிலம் என்று. நான் இறைவனை அனுக வேண்டுமென்றால் என்னென்ன மிதியடிகளை அகற்ற வேண்டும்? சிந்தித்து செயலில் இறங்குவோம். நமது உடலையும் உள்ளத்தையும் இறைவன் கூறும் புனித நிலத்திற்கு ஒப்பிடலாம். இறைவன் கொடையாக படைத்த நம்முடைய உள்ளத்தை அவருடைய மகிமைக்காகவே உபயோகிப்போம். தற்பொழுது செய்திதாள்களில் பரவும் விசித்திரமான கொடூரவிளையாட்டு எத்தனை இளம் பிஞ்சுகளை தற்கொலைக்கு தூண்டுகின்றது. இதைப்போல் இன்னும் எத்தனையோ தீய வழிகளை நம் முன் வைக்கின்றது? ஆவியானவரின் வழிநடத்தலும் ஞானமும், அறிவுத்திறனும் இக்காலக்கட்டத்தில் மிக அவசியம். சமூக ஊடகங்களின் வழியாக நன்மையை மட்டும் எடுத்துக் கொண்டு, தீமையை அகற்ற ஆவியானவரின் செயல்பாட்டிற்காக விழித்திருந்து செபிக்கவும், மேலும் இறைவன் 'நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்; உங்கள்புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர் " என்று இறைவன் யோவேல் இறைவாக்கினர் வழியாக மொழிந்த உயிருள்ள இறைவாக்கு இன்று இவ்வுலகில் நடக்க வேண்டுமென்று அவரை நோக்கி குரல் எழுப்புவோம். இயேசுவின் பின்னால் நானும் செல்வேன் திரும்பி பார்க்க மாட்டேன். ஏனென்றால் அவருடைய வார்த்தையில் வாழ்வு உண்டு என்பது உண்மை என்று அறிந்து அவர் வழியில நடக்க முயற்சி செய்வோம்.

இறைவன் விரும்புவது உள்ளத்து உண்மையையே, அவருடைய மெய்ஞானத்தால் நிரப்பவும் அவருடைய ஈசோப்பினால் நம்மை முழுவதும் கழுவி தூய்மையாக்க இறைவனை நாடுவோம். இறைவா தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும் உறுதிதரும் ஆவியை, புதுபிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும் என்று இடைவிடாது மனம் உருகி இறைஉறவில் பங்குபெற்று நமது உள்ளத்தை புனித நிலமாக்குவோம். வருகின்ற வாட்களில் நல்ல பாவசங்கீரத்தனம் செய்து இறைவனில் புதிய உறவில் இணைவோம். ஏனென்றால் கடவுளுக்குகேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே, கடவுளே நொறுங்கிய குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை என்பதை உள்ளத்தின் ஆழத்தில் நம்பி இறைவனின் பிரசன்னத்தில் முழுமையாக நீங்களும் நானும் நம்மை தூய உயிருள்ள பலியாக காணிக்கையாக அவருடைய திருக்கரத்தில் ஒப்புகொடுப்போம். அனுதினமும் அதிகாலையில் எழுந்து இறைவனின் பாதத்தில் அமர்ந்து அவருடைய ஆசீரைப் பெற்று அவருக்காக சாட்சியாக வாழ்வோம். தீயப் பழக்கங்களை கைவிட்டு ஆண்டவரின் வழியில் நடந்து அவருடைய சொந்த மக்களாகுவோம். இறைவார்த்தையை வாசித்து, தியானித்து தீயோனின் சூழ்ச்சியிலிருந்து விடுதலை பெறுவோம்.

கடவுளிடமிருந்து பிறந்தோர் பாவம் செய்வதில்லை என்பது நமக்குத் தெரியும். ஏனெனில் கடவுளிடமிருந்து பிறந்தவர்களை அவர் பாதுகாக்கிறார். தீயோன் அவர்களைத் தீண்டுவதில்லை. நாம் கடவுளைச் சார்ந்தவர்கள், ஆனால் உலகனைத்தும் தீயோனின் பிடியில் இருக்கிறது. இது நமக்குத் தெரியும். 1யோவன் 5: 18-19