இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் 19 ஆம் வாரம்

நம்பிக்கை குன்றியவனே

1 அரசர்கள் 19: 9a, 11-13a
உரோமையர் 9: 1-5
மத்தேயு 14: 22-33

பொதுக்காலம் 19 ஆம் வாரம். நல்லதையே ஆண்டவர் அருள்வார். பேரன்பும் உண்மையும் நிறைவாழ்வும் உள்ளவர். இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே என்றவர். நம்பிக்கையின் இறைவன் நாற்பது ஆண்டுகளாக பாலை நிலத்தினின் வழியாக இஸ்ரயேல் மக்களை இறைவாக்கினர் மோசேயின் தலைமையில் வழிநடத்தியவர். நமது விசுவாசத் தந்தையர்களும் இறைவனுடைய வார்த்தையை முழுமையாக நம்பியது மட்டும் அல்லாமல், அவருடைய வார்த்தைக்கு செவிமடுத்து அதன்படி வாழ்ந்து இறைவனுடைய அருள் பிரசன்னத்தில் பேறு பெற்றவர்களாக விளங்குகின்றார்கள். முழு மனத்தோடு ஆண்டவரை நம்பு, உன் சொந்த அறிவாற்றலைச் சார்ந்து நில்லாதே என்று (நீதிமொழிகள் 3:5) காண்கின்றோம். கடந்து சென்ற நாட்களில் திருப்பலி இறைவாசகங்கள் விடுதலைப்பயணம், எண்ணிக்கை நூல்களிலிருந்து எடுக்கப்பட்டிருந்தது. இஸ்ரயேல் மக்கள் இறைவனிடம் முழு நம்பிக்கை கொள்ளாமல் அவ்வப்போது இறைவாக்கினர் மோசேயிடம் முனுமுனுக்கின்றார்கள். ஆனால் வாக்குமாறாத இறைவன் அவர்களை இறுதிமட்டும் அன்பு செய்து வழிநடத்துகின்றார். இன்றைய இறைவார்த்தைகளின் வழியாக இறைவன் இரண்டு விழுமியங்களை முன்வைக்கின்றார். ஒன்று இறைஉறவு, மற்றொன்று இறை நம்பிக்கை. இறைஉறவில் வளரும்போது அவருடைய ஆழமான அன்பை நம்மால் உணரமுடியம். அதன்வழியாக நம்பிக்கை என்னும் பற்று வளர்கின்றது.

முதல் வாசகத்தில் இறைவன் இறைவாக்கினர் எலியாவிடம் கூறுகின்றார், மலைமேல் என் திருமுன் வந்து நில்: இதோ ஆண்டவராகிய நான் கடந்து செல்லவிருக்கின்றேன் என்கின்றார். உயர்ந்த ஓரேபு மலையின் மேல் இறைவாக்கினர் எலியா முன்பு பேரும் சுழற்காற்று, நிலநடுக்கம், தீ ஆகிய மூன்று அடையாளங்களின் வழியாக தன்னை வெளிப்படுத்துகின்றார். ஆனால் இறைவாக்கினர் எலியா ஆண்டவருடைய உடனிருப்பை அவரால் உணரமுடியவில்லை, ஆண்டவரும் அங்கு இருக்கவில்லை அதற்குப்பின் அடக்கமான மெல்லிய ஒலியில் ஆண்டவரை அவரால் உணரமுடிகின்றது. அந்த ஒலியைக் கேட்டவுடன் போர்வையினால் தம் முகத்தை மூடிக்கொள்கின்றார். அவர் இரண்டுமுறை ஆண்டவரிடம் கூறுகின்ற பதில் நம் ஒவ்வொருவரின் உள்ளத்தின் ஆழத்தைக் தொடக்கூடிய வார்த்தைகளாக அமைகின்றது, "படைகளின் கடவுளாகிய ஆண்டவர் மீது நான் பேரார்வம் கொண்டவனாய் இருந்து வருகின்றேன். நாம் பயணிக்கின்ற இந்த அவசர உலகத்தில் படைகளின் இறைவனாகிய ஆண்டவரிடம் பேரார்வம் கொண்டுள்ளோமா என்று சிந்திப்போம். இன்று உயர்ந்த மலையாக விளங்கும் நற்கருணைப் பேழையில் உயிருடன் வாழும் இம்மானுவேலாகிய இறைமகன் இயேசுகிறிஸ்துவோடு உறவாட பேரார்வம் கொள்ள விரும்புகின்றோமா? சிந்திப்போம். அவருடைய அருள் பிரசன்னத்தின் வழியாக பெறுகின்ற கொடைகள் ஏராளம். சிறப்பாக திருப்பலியின் வேளையிலும், நற்கருணை ஆராதனை வேளையிலும் உயிருடன் பிரசன்னமாய் இருக்கின்ற நற்கருணை நதரை உளமாற போற்றிப் புகழ்வது மாபெறும் பாக்கியம். இறைமகன் இயேசு தன்னுடைய நற்செய்திப் பணிவாழ்வில், இறைஉறவுக்கு முதலிடம் கொடுத்ததை நான்கு நற்செய்தியாளர்களும் வலியுறுத்துவதைக் காண்கின்றோம். இரவு முழுவதும், விடியற்காலையில், தனிமையான இடத்தில், உயர்ந்த மலையின்மேல் பொழுது சாயும்வரை இறைவனுடன் உரையாடி அவருடைய திருவுளத்தை அறிந்தபிறகு அவரது திருவுளத்தை வாழ்வில் செயலாற்றுகின்றார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டோர் விடுதலை அடையவும், பார்வையற்றோர் பார்வை பெறவும், ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலை பெற்றுத் தரவும் இறைஉறவு மிக அவசியம் என்பதை நமக்கு கற்பித்து தருகின்றார். இன்று எத்தனையோ மனித உள்ளங்கள் இறைவனுடன் உறவாட சமயம் இல்லமால் உலகப் போக்கின்படி தூய்மையான அருளின் வாழ்வை சுவைப்பதற்குப்பதில் இருளின் பிடியில் சிக்கிக் கொண்டு தங்களது தூய்மை நிறைந்த வாழ்வை இழந்து கொண்டிருப்பதை காண்கின்றோம். எனவே இறைநம்பிக்கைக்கு இறைஉறவு மிக அவசியம். இறைமகன் இயேசு நம்மிடம் எதிர்பார்ப்பது நம்முடைய தூய்மையான அன்பும், இடைவிடாது செபிக்க வேண்டும் என்ற நற்பண்புகளை தனது வாழ்வில் நமக்கு கற்றுத் தருகின்றார். கெத்சமனித் தோட்டத்தில் தனது சீடர்களிடம் கேட்பது, ஒருமணி நேரம்கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா? உங்கள் மனம் ஆர்வமுடையதுதான் ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்பாடதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள் என்றும் மேலும் அமைதி கொண்டு நானே கடவுள் என உணர்ந்து கொள்ளுங்கள் என்றும் கூறுகின்றார். வாழ்வு தரும் இறைவார்த்தையை நம்பிக்கையுடன் ஏற்று, இறைவனிடம் தூய்மையான உறவை வளர்க்க முயற்சி எடுப்போம்.

திருத்தூதர்பவுல் பிலிப்பியருக்கு எழுதிய மடலில் , எனக்கு வலுவூட்டுகிறவர் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு என்று தனது இறைநம்பிக்கையை அறிக்கையிடுகின்றார்.(பிலி 4:13). விசுவாசத்தின் தந்தையான ஆபிரகாம் இறைவன்மேல் கொண்ட நம்பிக்கையால் தன் ஒரே மகன் ஈசாக்கைப் பலியிட தயங்கவில்லை. மலையில் ஆண்டவர் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் யாவேயிரே என்ற மலையில் மகனைப் பலியிட துணிகின்றார். ஆபிரகாம் ஆண்டவருக்கு அஞ்சுவதால், அவருக்குப் பரிசாக ஆட்டுக்கிடாயைக் பலியிடும்படி கொடுக்கின்றார். இத்தகைய இறைநம்பிக்கை நம்மில் இருக்க வேண்டும். திருப்பாடல் 27,10 இறைவசனம், என் தந்தையும் தாயும் என்னைக் கைவிட்டாலும் ஆண்டவர் என்னை ஏற்றுக் கொள்வார் என்ற வாக்கு தாவீது அரசர் இறைவன்மேல் கொண்ட ஆழமான நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றது. திருப்பாடல் 23,4 இறைவசனம், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன், உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும் என்றும் பாடுகின்றார். இத்தகைய இறைநம்பிக்கை நம்மில் அனுதினம் வளரவேண்டும். இத்தகைய இறைநம்பிக்கைதான் திருத்தூதர் பேதுருவிடமும் இருந்தது. ஆகையால்தான் அவர் இறைமகன் இயேசுவின் வார்த்தைக்கு கீழ்படிந்து படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து செல்கின்றார் ஆனால் அவர் இயேசுவின்மேல் ஆழமான நிலையான நம்பிக்கை வைப்பதற்குமுன்பு பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி கடலில் மூழ்கும்போது ஆண்டவரே என்னைக் காப்பாற்றும் என்று கத்துகின்றார். நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய் என்று இயேசு கூறி அவருடைய கையைப் பிடித்து மீட்கின்றார். நம்முடைய வாழ்க்கைப் பயணமாகிய சிறியப் படகை பலவிதமான புயல்கள், எதிர்காற்றுகள் போன்ற சமூக தீய சக்திகளின் சிக்கலில் அலைக்கழிக்கப்பட்டு மனம் கலங்கி பல வேளையில் தளர்ந்து காணலாம். அத்தகையோருக்கு இன்று இறைமகன் இயேசு தரும் வாழ்வு தரும் வார்த்தைதான் " "துணிவோடிருங்கள்: நான்தான், அஞ்சாதீர்கள் " என்றும், நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் ஐயம் கொள்வது என்றும் கேட்கின்றார். மேலும் இயேசு தம்முடைய சீடர்களிடம் நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள் என்றும் கூறுகின்றார்.(யோவான் 14,1). முதலாவதாக நம்முடைய வாழ்வு ஆண்டவரில் ஒன்றிருத்திருக்க வேண்டும். இறைவன் நமக்கு கொடுத்த உயிருள்ள வார்த்தையின்படி வாழ்க்கையை கட்டி எழுப்ப வேண்டும். அவருடன் ஒன்றித்து பயணித்தால் எந்தப் புயலும் நம்மை தாக்காது. எனவே இறைவன் நம்மோடு இணைந்திருப்பதுபோல நாமும் அவரோடு இணைந்திருக்க வேண்டும். திருத்தூதர் பவுல் தேர்ந்து கொண்ட வார்த்தையை ஆழமாக தியானித்து வாழ்வில் முன்னோக்கிச் செல்ல வேண்டும். உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்துவிட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாகக்கி கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன். (பிலி 3:8) என்று திருத்தூதர் பவுலடிகளாரின் வார்த்தையை ஏற்று இறைநம்பிக்கையிலும் இறைஉறவிலும் வளர்வோம்.

நீர்நிலைகள் வழியாக நீ செல்லும் போது நான் உன்னோடு இருப்பேன், ஆறுகளைக் கடந்து போகும்போது அவை உன்னை மூழ்கடிக்க மாட்டா, தீயில் நடந்தாலும் சுட்டெரிக்கப்பட மாட்டாய், நெருப்பு உன்மேல் பற்றியெரியாது. ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவர் நானே. எசாயா 43:2-3a