இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் 17ஆம் வாரம்

உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்

1 அரசர்கள் 3: 5, 7-12
உரோமையர் 8: 28-30
மத்தேயு 13: 44-52

ஆண்டின் பொதுக்காலம் 17ஆம் ஞாயிறு. தந்தையாம் இறைவன் இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே, அகரமும் னகரமும் நானே. தொடக்கமும் முடிவும் நானே என்று கூறியவரிடம், அனைத்து கொடைகளும் நிறைந்தவராய் இருக்கின்றார் என்றுதானே பொருள். ஏன் நமக்கு கலக்கம், பயம், கவலை. நமது வானகத்தந்தை என்றும் நிறைவுள்ளவராய் இருக்கின்றவர். அவ்வாறு உள்ளதால்தான் அவரே முன்வந்து சாலமோன் அரசரிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்று கேட்கின்றார். அவசர உலகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நம்மிடம் இன்று இறைவன் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார் என்றால், நம்முடைய பதில் என்ன வாயிருக்கும். நல்ல படிப்பு பட்டம், சுகமான வாழ்க்கை, பணம், நல்ல பதவி, நல்ல வீடு, நல்ல சம்பளம், வாழ்ககையில் உயர்வு, குடும்ப வாழ்க்கையில் சந்தோசமும், சமாதானமும், கஷ்டமில்லாத எளிதான வாழ்க்கை, வேலை தளங்களில் பதவி உயர்வு போன்ற உலக சுகங்களின் ஆசைகளை முன் வைப்போம் மேலும் அவைகள் அனைத்தும் நம்முடைய அன்றாட வாழ்வின் தேவைகளைக் குறித்து மட்டும்தானே உள்ளது. ஆனால் இன்று திருவழிபாட்டில் வாசிக்கப்படும் இறைவார்த்தைகளின் வழியாக இறைவன் நமக்கு வேறு வகையான தேடலைத் தேட வேண்டும் என்று கற்பிக்கின்றார். சாலமோன் அரசருக்கு அனைத்து உரிமைகள் செல்வங்கள் இருந்தும் அவர் இறைவனிடம் கேட்டது, அவருடைய மக்களுக்கு நீதி வழங்கவும், நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான "ஞானம்" நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருளும் என்று கேட்கின்றார். சாலமோன் அரசரைப் போல் இன்றும் இனிவரும் ஒவ்வொரு நாட்களிலும் இறைவனின் ஞானம் என்னும் வரத்தைக் கேட்டு நன்மை தீமை பகுத்தறிய உறுதுணையாக இருக்க ஆவியானவரின் துணை வேண்டுவோம்

நீதிமொழிகள் நூலில் இவ்வாறு காண்கின்றோம் "ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம் ".மேலும் "நீ ஞானத்திற்குச் செவி சாய்த்து. மெய்யறிவில் உன் மனத்தைச் செலுத்தி, என் மொழிகளை ஏற்று, என் கட்டளைகளைச் சிந்தையில் இருத்திக்கொள். செல்வத்தை நாடுவதுபோல் ஞானத்தை நாடி, புதையலுக்காகத் தோண்டும் ஆர்வத்தோடு அதைத் தேடு. அப்பொழுது, ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் இன்னெதென்பதை உணர்ந்து கொள்வாய், கடவுளை அறியும் அறிவைப் பெறுவாய். ஏனெனில் ஞானத்தை அளிப்பவர் ஆண்டவரே, அறிவிற்கும் விவேகத்திற்கும் ஊற்றானவர் அவரே. இன்றைய காலக்கட்டத்தில் நாம் அனைவருக்கும் ஞானம் என்னும் அருள் கொடை மிகவும் தேவையான ஒன்று. சில சமயத்தில் நன்மை எது, தீமை எது, உண்மை எது, பொய் எது என்பதை நன்றாக அறிந்தும், அறியாத உலகத்தில் பயணிக்கின்றோம். இளய சமூதாயம் உலக நாட்டங்களுக்கு அடிமையாகி உண்மையான அருளை இழந்து தவிக்கின்றார்கள். ஆம் உண்மையான புதயலைத் தேடாமல், அழிவுக்குச் செல்லும் உலகப் புதயல்களை நோக்கி மனித உள்ளங்கள் ஏங்கி ஓடித் திறிந்து, இறுதியில் மன அமைதி இல்லாமல் படுகுழியில் விழுந்து கிடப்பதைக் காண்கின்றோம். இன்று எத்தனையோ உள்ளங்கள் மேலும் மேலும் தவறான பாதையில் பயணித்து வாழ்வை இழந்த கொண்டிருக்கின்றார்கள். மனித வாழ்வுக்கு உண்மையான ஞானம் நிறைந்த புதையல் யார் என்று கேட்டால், அது இறைமகன் இயேசுவும், அவருடைய வாழ்வு தரும் வார்த்தை மட்டும் என்று கூறலாம். அவர் நேற்றும், இன்றும் ,என்றும் எப்பொழுதும் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார் ஆனால் அவரை ஒருசிலரால் மட்டும்தான் நன்றாக உணரமுடிகின்றது. கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும், தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள், தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும் என்று இறைமகன் இயேசு மொழிந்த வார்த்தையை நம்பி ஞானம் என்னும் அருள் கொடையைப் பெற்று உலகப் போக்கின்படி வாழாமல், இறைவனின் கட்டளைகளைக் கடைபிடித்து இறைவனுக்கு ஏற்புடையவர்களாக வாழ்வோம். இறைவனை நம்புவோர்க்கு எல்லாமே நன்மையாக அமையும் என்பது உண்மை. இறையாட்சியின் புதயலைத் தேடுவதற்கு ஆவியானவர் எப்பொழுதும் உதவிடுவார். நாம் அனைவரும் இறைவனுக்கு உரியவர்கள் எனவே அவருடைய பாதையில் நடந்து செல்வதற்கு அவருடைய ஆசீரும் வழிநடத்தலும் மிக அவசியம். நாம் அனைவரும் இறைவனுடைய கைவேலைப்பாடு, நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப் படடிருக்கிறோம். அவரைப்போல் இறைஞானத்தில் வளர்வதற்கு தடையாய் உள்ள அனைனத்தையும் களைவோம். நற்செயல்கள் புரிவதற்கு இறைவனின் ஞானத்தை கேட்டு அதன்படி மிகச் சிறியவற்றில் கூட நமது நீதியும் நேர்மையும் வெளிப்படட்டும். இறைமகன் இயேசு கொடுத்திருக்கும் புதையலாகிய உயிருள்ள வார்த்தையைக் கையில் எடுப்போம். மனதில் பதிப்போம், ஆவியானவரின் துணையுடன் செயலில் இறங்குவோம்.

இனிப் பயணிக்கின்ற நாட்களில் உலக நாட்டுத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், சமூகத் தலைவர்கள், குடும்பத்தலைவர்கள் அனைவரும் ஞானம் என்னும் அருள் கொடையைப் பெற்று நீதியோடும் நேர்மையோடும் வாழ்ந்து மக்கள் அனைவரையும் நல்வழி நடத்திட அரசருக்கு அரசராக விளங்கும் அமைதியின் அரசரிடம் மன்றாடுவோம்.

ஆகவே, பொன்னிலும் பசும் பொன்னிலும் மேலாக உம் கட்டளைகளை விரும்புகின்றேன். உம் நியமங்களை எல்லாம் நீதியானவை என்று ஏற்றுக் கொண்டேன், பொய்யான வழி அனைத்தையும் வெறுக்கின்றேன். திருப்பாடல் 119: 127-128