இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் 14 ஆம் வாரம்

நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்

செக்கரியா 9: 9-10
உரோமையர் 8: 9, 11-12
மத்தேயு 11: 25-30

பொதுக்காலம் 14ஆம் வாரம். இறைவாக்கினர் செக்கரியா துன்பத்தில் வாழும் இஸ்ரயேல் மக்களுக்கு கூறும் ஆறுதல் வார்த்தைகள், மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு, மகளே எருசலேம்! ஆர்ப்பரி. உங்களுக்கு இறைஆட்சியைப் பற்றி எடுத்துரைக்க எளிமையான அரசர் உங்களிடம் வருவார், அவர் நீதியுள்ளவர், வெற்றி வேந்தர், எளிமையுள்ளவர், கழுதைக் குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறவர். வேற்றினத்தார்க்கு அமைதியை அறிவிப்பார், அவரது ஆட்சி ஒரு கடல்முதல் மறு கடல்வரை, பேராறுமுதல் நிலவுகளின் எல்லைகள்வரை செல்லும் என்று முன்கூட்டியே இறைமகன் இயேசுவைப்பற்றி எடுத்துரைக்கின்றார். இறைமகன் இயேசுவின் ஆட்சிக்கு முடிவே இராது. இறைவனுடைய வார்த்தை அனைவருக்கும் ஆறுதல் கொடுக்கும் உயிருள்ள வார்த்தையாகும். அரசருக்கெல்லாம் அரசராக விளங்கும் இறைவன் வார்த்தையின் வடிவில் மனிதனாகப் பிறந்து, அவர் நம்மிடையே குடிகொண்டார். அவர் அரண்மனையிலோ, விடுதியிலோ, மாளிகையிலோ பிறக்க வில்லை. அவர் படைத்த மாட்சிமை நிறைந்த உலகத்தில, அவர் பிறப்பதற்கும் தங்குவதற்கும் இடமில்லை. எளிமையின் கோலத்தில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்து, ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து, வளர்ப்புத் தந்தையுடன் தச்சுத் தொழில் செய்து, ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும், பாவிகளுக்கும் நண்பனாக வாழ்ந்து, மனிதகுலத்திற்கு நிலைவாழ்வு வழங்குவதற்கு தன்னையே பலியாக சிலுவை மரணத்திற்கு கையளித்தவர் தான் எளிமையான அரசர் இறைமகன் இயேசுகிறிஸ்து. நேற்றும், இன்றும், என்றும் வாழ்கின்றவர். தன்னுடைய இறையாட்சிப் பணியில் எதிர்கொண்ட அனைவரையும் அன்போடும் கனிவோடும் அனுகி அனைவருடைய தேவைகளை நிறைவுசெய்து ஏழைகளின் உள்ளத்தில் எளிமையின் அரசராக அன்றும் இன்றும் வாழ்ந்து வருகின்றார். எளிமையின் அரசராக விளங்கும் நமது மெசியாவாகிய இறைமகன் இயேசு கிறிஸ்து, இரக்கமும் கனிவும் உடையவர், எளிதில் சினம் கொள்ளாதவர், பேரன்பு கொண்டவர், எல்லாருக்கும் நம்மை செய்பவர். வாழ்வு அளிப்பவர். அமைதி அளிக்கும் இறைவன் பாவிகளாகிய நமது வருகைக்கு என்றும் காத்திருப்பவர். எளிமையின் அரசரால் மட்டும்தான் உண்மையான இளைப்பாறுதலை நமக்குத் தரமுடியும். ஆண்டவராகிய நமது ஆயர் நம்மோடு இருக்கும் போது நமக்கு ஏதும் குறையில்லை. பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார். அமைதியான நீர் நிலைகளுக்கு அழைத்துச் செல்வார். வாழ்நாள் எல்லாம் அவருடைய அருளும் நலமும் பேரன்பும் உண்டு என்று மொழிந்தவர்தான் எளிமையின் அரசர். அவர் எவ்வளவு சுவையுள்ளவர் என்று சுவைதத்துப் பார்க்க சமயம் வேண்டும்.

தந்தையாம் இறைவன் தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். நமக்கு அவருடைய தெய்வீக கொடைகளாகிய எளிமை, சாந்தம், கனிவு, இரக்கம், அன்பு, மன்னிப்பு, தியாகம், நிறைந்த ஆவியானவரின் நற்கனிகளின் வழியாக அர்த்தமுள்ள வாழ்வு வாழ்வதற்கு வழிகாட்டியவர் எளிமையின் அரசர். யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும் என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும். ஆவியானவர் வழிநடத்துதலை அனுதினம் நமது வாழ்க்கையில் உணர்ந்து, அதன்படி வாழ்ந்தால் இறைமகன் இயேசுவின் குணங்களை நம்மால் நிச்சயமாகப் பெறமுடியும். இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் மிகத்தெளிவாக எடுத்துரைப்பது கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல என்று கூறுகின்றார். இறைமகன் இயேசுக்கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த ஆவியானவர், சாவுக்குரிய நமது உடலையும் உயிர் பெறச் செய்வார் என்கின்றார். நாம் ஆவியானவரின் இயல்பைக் கொண்டுள்ளோமா? சிந்திப்போம்.

இன்று மனிதர்களாகிய நமக்கு அனுதினம் இறைவனின் திருக்கரத்தில் இளைப்பாறுதல் பெறுவதற்கு நேரம் ஒதுக்கி, அவருடைய பாதத்தில் அமர்ந்து, அவருடன் தந்தை மகன் என்ற உரிமையுடன் உரையாடி உறவு கொண்டு அவருடைய திட்டத்தை அறிந்து அதன்படி வாழ்ந்தால் நமக்கு கண்டிப்பாக இளைப்பாறுதல் கிடைக்கும். ஆனால் நாம் இறைவனுக்காக நேரம் கொடுப்பது குறைவு. இன்று நமக்கு எதற்கும் நேரமே இல்லை, பலரும் ஆன்மீக வாழ்வு வாழ்வதற்கான வழியை அறிவதற்கு நேரம் ஒதுக்குவது குறைவு. இறைவன் நம்மோடு பயணித்தால் நாம் அனைத்திலும் வெற்றி பெறுவோம். இன்று அவசர உலகத்தில் பயணிக்கின்றோம். நமது வாழ்க்கைப் பயணத்தில் எதிர்கொள்ளும் பல்வேறு பெருச்சுமைகளை எங்கே இரக்கி வைக்கலாம், யாரிடம் சென்றால் அமைதியும் இளைப்பாறுதலும் கிடைக்கும் என்று பலதிசைகளில் ஒடிக் கொண்டுதான் இருக்கின்றோம். நாம் அங்கும் இங்கும் ஓடினாலும் அதற்கு பலன் கிடைக்காது. ஏனென்றால் இறைமகன் இயேசுவின் ஒருவரால் மட்டுமே நமக்கு இளைப்பாறுதல் கொடுக்க முடியும். இறைமகன் இயேசு இறைவனால் அருள்பொழிவு செய்து, ஏழைகளுக்கு நற்செய்தி அறிவித்து, சிறைபட்டோர்க்கு விடுதலை அளித்து, பார்வையற்றோர்க்கு பார்வை அளித்து, பாவிகளுக்கு மன்னிப்பு வழங்கி, யூத சமுதாயத்தினால் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வு கொடுத்தவர். எனவே நம்மோடு என்றும் வாழும் இம்மானுவேலனாகிய மெசியாவை அறிவதற்கு நேரம் ஒதுக்குவோம். திருப்பாடல் ஆசியர் "அமைதி கொண்டு, நானே கடவுள் என உணர்ந்து கொள்ளுங்கள் " என்கின்றார். இறைவன் வாழும் நம் உள்ளத்தை ஆவியானவரின் அருளால் நிரப்ப வேண்டும். இறைவன்முன் தாழ்மையில் நம்மை அர்ப்பணிக்க வேண்டும். நமது சொல்லிலும் செயலிலும் எளிமையான செயல்பாடுகள் வெளிப்பட வேண்டும். தீமைகள் அனைத்தும் நம்மைவிட்டு நீங்க வேண்டும். அப்பொழுதுதான் ஆவியானவர் நம்மில் செயலாற்றுவார். இறைவனுடைய அருளும் கொடைகளும் நம்மிடம் நிரையும் போது அவருடைய அமைதியை கண்டிப்பாக உணரமுடியும்.

இன்று உலகெங்கும் காண்பது மக்களின் கதறல், பசி, துன்பம், அநீதியின் செயல்கள், வன்முறைகள், போர், பயங்கரவாதம், கொலைகள், கொள்ளைகள், குடும்பத்தில் பிரிவுகள், உடன்பிறப்புகளின் உறவில் பிரிவுகள், பழிக்குப்பழி முரண்பாடுகள், சமுதாயத்தில் சாதிப் பிரிவுகள், பணம் பதவிக்காக நடக்கும் போராட்டங்கள், மனஅழுத்தம், இளம் உள்ளங்கள் போதைக்கும், குடிபழக்கத்திற்கும் அடிமையாகி இறைவன் கொடையாக கொடுத்த உடலையும் ஆன்மாவையும் அழிக்கும் நிலைகள் போன்ற பெருருஞ்சுமைகளை இறைவன் இன்று அகற்ற வேண்டும். எளிமையின் அரசரும், அமைதியின் அரசருமாகிய மெசியா நம் ஒவ்வொருவரின் உள்ளத்தில் மீண்டும் பிறக்க வேண்டும். அவரைப்போல் எளிமையாக இருக்க வேண்டும். பாவச் செயல்கள் அனைத்தும் எதிரியான அலைகையின் தூண்டுதல்கள் என்று கண்டுகொள்ள வேண்டும். இன்று அலகையின் செயல்களுக்கு அடிமையாகி புனிதம் நிறைந்த வாழ்வை இழந்து கொண்டிருக்கின்றோம். இறைவன் கொடையாக கொடுத்த அவருடைய உயிருள்ள வார்த்தையை பின்பற்றி அதோடு அவற்றை அனுதினம் வாழ்வாக்க வேண்டும். அதற்கு விழிப்போடு இறைவேண்டல் செய்து, அவருடைய ஆவியானவரின் வழிநடத்தலுக்கு வாஞ்சையோடு காத்திருக்க வேண்டும். திருத்தூதர் மத்தேயு நற்செய்தியில் " திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவுகொண்டார்: அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப்போல அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டார்கள். அப்போழுது அவர் தம் சீடரை நோக்கி, அறுவடை மிகுதி, வேலையாள்களோ குறைவு, ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள் " என்று இறைமகன் இயேசு கூறுவது இக்காலக்கட்டத்திற்கு நன்றாகப் பொருந்தும். இன்று எதிர்கொள்ளும் வாழ்க்கைப் போராட்டங்களை பெருஞ்சுமைகளை இறைவன் கையில் கொடுத்துவிட்டு, அவர் துணையுடன் துணிவுடன் முன்னோக்கிப் பயணிப்போம். தாகத்தோடு இறைவனுடைய அருளுக்காக மன்றாடுவோம். இறைமகன் இயேசுவை நம்பிக்கையோடும், விசுவாசத்தோடும், பார்வையற்றோர் இருவர் "தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும் என்று உரக்க கூப்பிட்டதுபோல் நாமும் அனுதினமும் ஒவ்வொரு நிமிடமும் நமது வாழக்கையில் வாழும்படி கெஞ்சி மன்றாடுவோம். ஏனெனில் நமது வாழ்க்கை சுமையை நீக்கக் கூடியவர் இறைமகன் இயேசு கிறிஸ்து ஒருவர் மட்டும்தான். வாழ்வு தருபவர் நம்மோடு, ஆகையால் எதற்கும் அஞ்சவேண்டாம். அவருடன் என்றும் வாழ்வோம்.

யாக்கோபு வீட்டாரே, இஸ்ரயேல் குடும்பத்தாருள் எஞ்சியிருக்கும் அனைத்து மக்களே செவிகொடுங்கள், உதரத்திலிருந்தே உங்களைத் தாங்குபவர் நான். கருவிலிருந்தே உங்களைச் சுமப்பவர் நான். உங்கள் முதுமைவரைக்கும் நான் அப்படியே இருப்பேன். நரை வயதுவரைக்கும் நான் உங்களை சுமப்பேன், உங்களை உருவாக்கிய நானே உங்களைத் தாங்குவேன், நானே உங்களைச் சுமப்பேன் நானே விடுவிப்பேன். எசாயா46:3-4