இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் 13ஆம் வாரம்

"நம்மிடம் அடிக்கடி வரும் ஆண்டவரின் அடியவர் புனிதர் "

2 அரசர்கள் 4:8-11, 14-16a
உரோமையர் 6:3-4, 8-11
மத்தேயு 10:37-42

பொதுக்காலம் பதின்மூன்றாம் ஞாயிறு. ஆண்டவரின் பேரன்பைப்பற்றி என்றும் பாடுவேன்.நீர் உண்மையுள்ளவர். உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது. உமது உண்மை வானைப்போல் உறுதியானது. நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை என்று இன்றைய பதிலுரைத் திருப்பாடலில் பாடுகின்றோம். இறைவனின் அன்பின் ஆழத்தையும் உயரத்தையும் உணர்ந்த ஒருவரால்மட்டும் தான் இவ்வாறு இறைவனைப் பாடிப் புகழமுடியும். இறைவாக்கினர் எலியா எலிசாவை நோக்கி, உம்மிடம் எடுத்துக் கொள்ளப்படுமுன் நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல் என்று கேட்டார். அதற்கு எலிசா, "உமது ஆவி என்மீது இரு மடங்காக இருப்பதாக என்றார்.(2 அரசர்கள்2:9-10). இறைவனின் ஆவியானவராய் அருள் பொழிவு செய்தவரால் மட்டும்தான் இறைவனின் செயலையும் ஆற்றலையும் செய்ய முடியும். இறைவாக்கினர் எலியாவின் ஆவியை இருமடங்காக கொடுக்க வேண்டுமென்று எலிசா செபிக்கின்றார். அவருடைய வேண்டுதலுக்கேற்ப இறைவாக்கினர் எலியாவிடமிருந்து விழுந்த போர்வையை எலிசா கொடையாக எண்ணி அந்த போர்வையை எடுத்துக்கொணடார். அந்தப் போர்வையைக் கொண்டு யோர்தான் நதியை அடித்தவுடன் தண்ணீர் இரண்டாகப் பிரிந்து எலிசா அக்கரைக்குச் செல்கின்றார். எலியாவின் வல்லமையைப் பெறுகின்றார். இருமடங்காக தான் பெற்றுக் கொண்ட ஆவியானவரின் கொடைகளினால் வல்ல செயல்கள் செய்து மக்களை வழிநடத்துகின்றார்.

சூனேமியப் பெண், இறைவாக்கினர் எலிசாவை ஆண்டவர் அடியவர், அவர் ஒரு புனிதர், இறைவனின் ஆவியானவரால் அருள்பொழிவு செய்தவர் என்று அவரால் நன்றாக உணரமுடிந்தது. அவர் பணக்காரப் பெண்ணாக இருந்தும் இறைவாக்கினர் எலிசா அவளுடைய இல்லத்திற்கு வந்த போதெல்லாம் அவரை வரவேற்று உபசரித்து அனைத்தும் செய்ததால், அவருக்கு உதவி செய்ய விரும்பி, குழந்தை இல்லாத அவளுக்கு மகன் பிறப்பான் என்று வாக்குறுதி தருகின்றார். இறைவாக்கினர் எலிசா முன்னறிவித்தவாறே அவர் கருவுற்று அடுத்த ஆண்டு அதே பருவத்தில் ஒரு மகன் பெற்றெடுத்தார் என்று காண்கின்றோம். இன்று கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும், அனுதினம் அடிக்கடி பலரை சந்திக்கின்றோம், பலருடைய குடும்பங்களுக்குச் சென்று உணவு உபசாரத்தில் கலந்து கொள்கின்றோம், இரண்டு மூன்று நாட்கள், அல்லது இரண்டு மூன்று வாரங்கள் தங்கி வருகின்றோம். நமது உரையாடல்கள் பரிமாறுதல் அனைத்தும் எவற்றைக் குறித்து உள்ளன என்று ஆய்வு செய்ய வேண்டும். இறைவனுடைய அருளாளும், ஆவியானவரின் கொடைகளாலும் நிறைவாக இருக்கும்போதுதான் நம்மால் அவருடைய நலன்களைப்பற்றி மற்றவர்களிடம் துணிவுடன் எடுத்துக் கூறமுடியும். நமது குடும்ப சொந்தங்கள், உறவுகள், நண்பர்கள் நம்மைக் கண்டு இவ்வாறு கூறியுள்ளார்களா? "நம்மிடம் அடிக்கடி வரும் அவர் ஆண்டவரின் அடியவர் புனிதர்" என்று. சிந்திப்போம். ஆண்டவரின் அடியவர் புனிதர் என்ற நல்வாழ்த்தைப் பெறுவதற்கு முதன்முதலாக நாம் இறைவனின் முன் தாழ்மையாக இருக்க வேண்டும், இறைவார்த்தையால் நம் ஆன்மாவை நிரப்ப வேண்டும், ஆவியானவரின் வெளிப்பாட்டிற்கு இறைஉறவில் விழிப்போடு காத்திருந்து செபிக்க வேண்டும். இறைவனுக்கும் உறவுகளுக்கும் எதிராகச் செய்யப் படும் பாவச் செயல்களை நம்மைவிட்டு நீக்க வேண்டும். முழுமையான மனம் மாற்றம் நமக்குத் தேவை. அப்பொழுதுதான் ஆவியானவரால் செயல்படமுடியம். திருப்பாடல் 51:10ல் காண்கின்றோம் "கடவுளே தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும். உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும் " என்று தாவீது அரசர் மன்றாடியது போல் நாமும் மன்றாட வேண்டும். இறைவாக்கினர் யோவேல் கூறுகின்றார், ஆண்டவர் நாளில் - நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன். (யோவேல் 2:28). இறைவனின் ஆவியானவரால் அருள்பொழிவு செய்தவர்கள் அனைவரும் அவருடைய குணங்களைப் பெறுவதற்கு ஆவல் கொள்ள வேண்டும். இறைமகன் இயேசு கிறிஸ்துவோடு இணைந்து செப உறவில் வளர வேண்டும். உலக சுகங்களை மறந்து, வாழ்வுக்கு ஈட்டுச் செல்லும் பாதை மிகவும் இடுக்கமானதும், மிகவும் குறுகலானதும் உள்ளது என்பதை உணர்ந்து அவ்வழியில் பயணிக்க முயல வேண்டும், ஆகையால் இறைமகன் இயேசு பயணித்த பாதையில் நாமும் பயணித்து, அவர் அருளும் புதுவாழ்வைப் பெற்று புதுப்படைப்பாக மாற்றம் பெறவேண்டும். உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் நம்மில் முழுமையாக வாசம் செய்யும் போது அனைத்தையும் கற்றுத் தருவார் என்ற நம்பிக்கையுடன் பயணிப்போம்.

இறைமகன் இயேசுவனின் அழைப்பை ஏற்றுக் கொண்ட திருப்பணியாளர் ஸ்தேவான் ஒர் எடுத்துக்காட்டு. அவர் அருளும் வல்லமையும் நிறைந்தவராய் மக்களிடையே பெரும் அருஞ்செயல்களையும் அரும் அடையாளங்களையும் செய்து வந்தார். அவரது ஞானத்தையும் தூய ஆவி வாயிலாக அவர் பேசிய வார்த்தைகளையும் எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை. அவரைக் கல்லெறிந்து போது, கடவுளின் மாட்சியையும் அவர் வலப்பக்கத்தில் இயேசு நிற்பதையும், வானம் திறந்திருப்பதையும், மானிட மகன் கடவுளது வலப்பக்கத்தில் நிற்பதையும் காண்கின்றேன் 'என்று கூறினார். மேலும் இறைமகன் இயேசுவைப் போல் இவர் மன்றாடினார். ஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்றும், ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும் என்று வேண்டுகிறார், என்று அவரைப்பற்றி திருத்தூதர் பணிகள் நூலில் கூறப்படுகின்றது. அவரைப்போல் இறைவல்லமையிலும் ஞானத்திலும் வளர முயற்சி எடுப்போம். தூய இறைவனுடைய திருத்தூதர்கள் அன்னை மரியாவுடன் ஒருமனத்தோடு இறைவனிடம் வேண்டியதன் பலனாக ஆவியாவரின் அருள்பொழிவு பெற்று, அவருடைய வழிநடத்துதலாலும், அற்புதம், அதியங்களாலும் அவர்களுடைய வாழ்க்கையில் செயல்படுவதை முழுமையாக அறிகின்றோம். கிறிஸ்துவே அனைவருள்ளும் அனைத்துமாயிருப்பார் என்ற உண்மை நன்கு விளங்குகின்றது. அவர் உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கின்றேன் என்று மொழிந்த நமது ஆண்டவர் இன்றும் என்றும் வாழ்ந்து செயல்படுகின்றார். அவரை முழு உள்ளத்தோடு அனுகும் போது அவர் நமக்கு வேண்டிய அருளைப் பொழிவார் என்பது உண்மை. திருத்தூதர்களின் வாழ்வில் ஆவியானவர் மாட்சியுடன் செயலாற்றினதுபோல் நம் வாழ்விலும் செயலாற்றி புனிதராக மாற்ற முடியும் என்பது நிச்சயம். இன்று நாம் அனைவரும் தூயோராய் வாழ்வதைத்தான் இறைவன் விரும்புகின்றார். ஆகையால் நமது அனுதின வாழ்வில் எதிர் கொள்ளும் சவால்கள், நெருக்கடிகள், துன்பங்கள், முரண்பாடுகள், உலக சுகங்கள் அனைத்தையும் இறைமகன் இயேசுவுக்காக ஏற்றுக் கொண்டு தூய்மை நிறைந்த வாழ்வை வாழ்வதற்கு முயற்சிப்போம். இறைமகன் இயேசுவின் துணையுடன், அவருடைய குணங்களை நிறைவாகப் பெற்று ஆண்டவரின் புனிதர் என்று சொல்லக்கூடிய வகையைில் நமது வாழ்வு மாறட்டும். ஆண்டவராகிய இயேசுவோடு இணைந்து இறைவனுக்காக வாழ்வோம் என்ற தீர்மானம் எடுப்போம். ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பார்ப்போம். அவருடைய வல்லமையை நிறைவாகப் பெற்று இறைமகன் இயேசுவுக்கு பிரியமுள்ள மகனாகமகளாக வாழ்வோம்.

தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டாம். இறைவாக்குகளைப் புறக்கணிக்க வேண்டாம். அனைத்தையும் சீர்தூக்கிப் பாரங்கள். நல்லதைப் பற்றிக் கொள்ளுங்கள். எல்லா வகையான தீமைகளையும் விட்டு விலகுங்கள். 1தெசலோனிக்கர் :19-22