இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பாஸ்கா காலம் நான்காம் ஞாயிறு

நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை

திருத்தூதர் பணிகள் 2:14a,36-41
முதல் பேதுரு 2: 20b-25
யோவான் 10;1-10

பாஸ்கா காலம் நான்காம் ஞாயிறு. ஆண்டவரே என் ஆயர், எனக்கோதும் குறைவில்லை என்று இன்றைய பதிலுரைப் பாடலில் பாடுகின்றோம். இமைறமகன் இயேசுவை நமது ஆயனாகவும் மேய்ப்பனாகவும் ஏற்றுக் கொண்டு, அவருடைய குரலுக்கு செவிசாய்த்து அதன்படி வாழ்ந்தால் அவர் பசும்புல் வெளிமீது இளைப்பாறச் செய்வதுடன் அமைதியான நீர்நிலைகளுக்கு அழைத்துச் சென்று புத்துயிர் அளிப்பார் என்று இறைவன் நமக்கு இன்று வாக்குத் தருகின்றார். திருத்தூதர் யோவான் எழுதிய இன்றைய நற்செய்தியில் இறைமகன் இயேசுவை ஆடுகளின் ஆயனாகவும், ஆடுகளை வழிநடத்துபவராகவும், மேய்ப்பனாகவும் சித்தரிக்கின்றார். நல்ல மேய்ப்பனாக விளங்கும் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன்னுடைய ஆடுகளை அவர் தேர்ந்தெடுத்த வாயில் வழியாக பயணம் செய்ய அழைக்கின்றார். வழியும் திருத்தூதர் தோமா ஆண்டவரே நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுககுத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகும்மிடத்துக்குக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும் என்று கேட்டதற்கு, இயேசு அவரிடம், வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை என்று கூறுகின்றார். இறைமகன் இயேசுவின் வழியாகத்தான் நமக்கு மீட்பும், நிலைவாழ்வும் உண்டு. இறைமகன் இயேசுவை ஆண்டவராக ஏற்றுக் கொண்டால், உண்மையாக நமது வாழ்நாள் எல்லாம் அவருடைய அருளும் நலமும் பேரன்பும் நம்மைப் புடைசூழ்ந்து வரும், மேலும் நாம் அனைவரும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்வார்கள் என்று வாக்குத் தருகின்றார்.

இறைவனின் குரலை இறைவார்த்தையின் வழியாகவும், செப உறவிலும், அருட்சாதனங்களின் வழியாகவும், திருப்பலியில் பங்கு பெறுவதின் வழியாக கேட்டு பலன் பெறுவதுடன் அவருடைய வழிமுறைகளையும் கற்றுத் தருவார். இறைமகன் இயேசு இன்றைய நற்செய்தியின் வழியாக இரண்டு வாயில்கள் வழியாக நுழைபவரை எடுத்துக் காட்டுகின்றார். ஓருவர் நல்ல ஆயன், மற்றவர் கொள்ளையர். நாம் யாருடைய குரலுக்கு இன்று செவிசாய்க்கின்றோம் என்பதை நம்மை நாமே ஆய்வு செய்வோம். வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது, வழியும் மிகக் குறுகலானது, இதைக்கண்டுபிடிப்போர் சிலரே என்று இறைமகன் தனது மலைபொழிவு மறைஉரையில் எடுத்துரைக்கின்றார். இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள் என்றும் அறிவுறுத்துகின்றார். அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது வழியும் விரிவானது, அதன் வழியே செல்வோர் பலர், என்று இரண்டு வகையான வழிகளைப் பற்றி நமக்கு தெளிவாக எடுத்துரைக்கின்றார். வாழ்வுக்குச் செல்லும் வழி மிகவும் இடுக்கமானது, வழியும் மிகக் குறுகலானது. அனுதின வாழ்க்கையில் நாம் விரும்புவது கஷ்டமும், துன்பமும் இல்லாத பயணம். வாழ்வுக்கு இட்டுச் செல்லும் வழியில் பயணம் செய்யும்போது, சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடக்க நேரிடும், நீர்நிலைகள் வழியாக ஆறுகளை கடந்து செல்ல நேரிடும், தீயில் நடக்க நேரிடும், உண்மைக்கும், நீதிக்கும் குரல் கொடுக்கும் போது, ஏளனமாக பேச நேரிடும், உன் நண்பர்களாலும், உறவினர்களாலும் கைவிட நேரிடும், பெற்றோர்களை தங்களுடைய சொந்தப் பிள்ளைகள் கைவிட நேரிடும். இன்று மனிதன் எதிர் கொள்ளும் சவால்களும் துன்பங்களும் ஏராளம். இறைவனை நம்புவோருக்கும் அவரது நீதி வழி நடப்பவருக்கும் அவரது துணையும், உடனிருப்பும் என்றும் இருக்கும் என்பதை திருப்பாடல் 23 வழியாக அறியலாம். இறைமகன் இயேசு சிலுவையின்மீது தம் உடலில் நம் பாவங்களைஅவரே சுமந்தார். நம் பாவங்களுக்கு இறந்து, நீதிக்காக வாழ்வதற்கே இவ்வாறு செய்தார் என்று இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பேதுரு கூறுகின்றார். அவரைப்போல் இன்று நாமும் பிறருக்கு பணிபுரிய தம்மை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும். இன்று வழிதவறி செல்லும் ஆடுகளை ஆட்டுக் கொட்டிலின் வழியாக நடத்திச் செல்ல வேண்டும்.

இன்றைய நற்செய்தியில் இறைமகன் இயேசு கூறும் இரண்டு வழிகளைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். ஆட்டுக் கொட்டிலில் வாயில் 'வழியாக நுழையாமல் வேறு வழியாக ஏறிக் குதிப்போர் திருடர் அல்லது கொள்ளையராய் இருப்பர். வாயில் வழியாக நுழைபவர் ஆயர் என்று வார்த்தை விளக்குகின்றது. உண்மையான வாயில் வழியாக நுழைபவர் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. ஆடுகளும் அவரது குரலுக்கே செவிசாய்க்கும். அவர் தம்முடைய சொந்த ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வெளியே கூட்டிச் செல்வார். அவருடைய குரலை ஆடுகளும் அறிந்து கொள்ளும் என்று கூறுகின்றார். இறைமகன் இயேசுவை ஆண்டவராகவும் மீட்பராகவும் ஏற்றுக் கொண்ட நானும் நீங்களும் இன்று அவருடைய குரலுக்கு செவி கொடுக்கின்றோமா? அல்லது உலகில் ஏழுப்பப்படும் பல்வேறு குரலுக்கு செவி கொடுக்கின்றோமா? நல்ல ஆயனுடைய குரலுக்குச் செவி கொடுக்க வேண்டுமென்றால் நமக்கு உள்ளத் தூய்மை வேண்டும். நமது பாவங்களை அகற்ற வேண்டும். முதல் வாசகத்தில் திருத்தூதர் பேதுரு மக்களிடம் கூறுகின்றார், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவை ஆண்டவரும் மெசியாவுமாக்கினார் என்பதை நீங்கள் அனைவரும் உறுதியாக அறிந்து கொள்ள வேண்டுமென்றும், மேலும் மனம் மாறி அவருடைய பாவங்களிலிருந்து மன்னிப்பு பெறுவதற்காக, இயேசுகிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்கு பெற வேண்டும் என்று வழியுறுத்துகின்றார். பாவம் எது என்று அறியாமல் கூட இன்று மனிதன் வாழ்கின்றான். பாவ அறிக்கை செய்வதற்கும் தயங்குகின்றோம். ஒப்புரவு அருட்சானத்தின் வழியாக இறைமகன் இயேசுவின் அருள் கொடைகள் நம்மிடம் கடந்து வந்து இறைவன் உறவில் ஒன்றாவதை மறக்கின்றோம், ஒப்புரவு அருட்சாதனம் இறைவனுடைய அருள்நிலையில் நிலைத்திருக்கவும், தூய்மையான உள்ளத்துடன் அவருடைய குரலைக் கேட்பதற்கும் உறுதுணையாக இருக்கும் என்பதை நன்கு உணர்வது நல்லது. நல்ல ஆயனாக விளங்கும் இயேசு கிறிஸ்துவின் அன்பையும் வழிநடத்தலையும் உணராமல் இடுக்கமான வாயிலின் வழியே நுழைந்து அருள் வாழ்வை இழந்து கொண்டிருக்கின்றோம். இன்று பாவநிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அனைத்து மனித உள்ளங்களுக்காக மன்றாடுவோம். இன்ற உலகத்தில் மனித குலத்தை வாழ்வுக்குச் செல்லும் வாயில் வழியாக வழிநடத்த நல்ல மேய்ப்பர்கள் தேவையாக உள்ளது. இன்று உலகநாட்டுத் தலைவர்களின் எண்ணமும் நோக்கமும் பல நேரங்களில் இறைவனுடைய வழிமுறைகளுக்கு வித்தியாசமாக உள்ளது என்பதை அறிகின்றோம். மக்களின் அழுகுரலுக்கும், அகதிகளின் அழுகுரலுக்கும், விவசாய்களின் அழுகுரலுக்கும், பசியிலும் பட்டினியிலும் வாடுகின்ற மக்களின் அழுகுரலுக்கும், ஏழ்மையில் வாழும் மக்களின் அழுகுரலுக்கும் செவிசாய்ப்பதற்கு இன்று நல்ல மேய்ப்பர்கள் தலைவர்கள் தேவையாக இருக்கின்றது. வாயில் வழியாக நுழையாமல் வேறு வழியாக ஆட்டுக் கொட்டிலில் குதிக்கும் கொள்ளையர்களும், திருடர்களும் இன்று சமுதாயத்தில் வளர்ந்து வாழ்ந்து, வாழ்க்கையில் சிறந்தவர்களாக வாழ்கின்றார்கள். நல்ல ஆயனாக வாழ்ந்து நல் வழியைக் காண்பித்து, நற்செயல்கள் புரிந்து வாழ்வின் இறைமகன் இயேசுவைப் பின்பற்றி அவர் வழியில் நடக்க இன்று நல்ல மேய்ப்பர்கள் பலரும் உண்டு, அவர்கள் இப்பணியைத் தொடர்ந்து துணிவுடன் செய்ய வரம் கேட்போம். இன்று வாழுகின்ற சமுதாயத்தில் மக்களையும், இளம் சமுதாயத்தையும் ஆன்மிகத்திலும், இறைஞானத்திலும் வளர்ப்பதற்கு நல்ல மேய்ப்பர்கள் தேவையாக இருக்கின்றார்கள். மேலை நாடுகளில் இறை விசுவாசம் குறைந்து காணப்படும் இக்காலக்கட்டத்தில், இறைவனுடையப் பணியைச் செய்ய இன்றைய இளம் சமுதாயம் இறைவனின் அழைப்பை ஏற்க தங்களை அர்பணிக்க முன்வர வேண்டுமென்று அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுவோம். இன்று இறைவனின் பணியைச் செய்ய வேலையாட்கள் அதிகம் அதிகம் தேவையாக இருக்கின்றது. இருளில் வாழ்வோரை ஒளியின் பாதையில் நடத்திச் செல்லவும், ஏழ்மையில் வாழ்வோருக்கு உதவிடவும், பசியில் வாழ்வோருக்கு உணவு வழங்கவும், சிறையில் வாழ்வோருக்கு விடுதலை அளிக்கவும், அகதிகளுக்கு புகழிடம் கொடுக்கவும், தனிமையில் வாழும் முதியோர்களுக்கு ஆறுதல் வழங்கவும் நல்ல மேய்ப்பர்கள் தேவையாக உள்ளார்கள். இன்று உலகில் நல்ல மேய்ப்பர்களாக பணிபுரியும் அனைவரும், நல்ல ஆயனாக விளங்கும் இறைமகன் இயேசுவின் குணங்களைப் பெற்று, தன்னிடம் ஒப்படைக்கப் பட்டுள்ள ஆடுகளை கண்கானித்து வாழ்வுக்குச் செல்லும் இடுக்கமான வாயில் வழியாக தங்களுடைய ஆடுகளைப் பயணிக்க அவர்கள் உதவ வேண்டுமென்று மன்றாடுவோம். சிறப்பாக இறைவனின் பணிக்காக தன்னை அர்பணித்துள்ள அனைவர் மீதும் உயிர்த்த இயேசுவின் அழியா அருள் வரங்களை நிறைவாகப் பொழிந்து, அவர்களை என்றும் இறைவனுடைய சிறகுகளின் நிழலில் வைத்துப் பாதுகாக்க வேண்டுமென்றும் மன்றாடுவோம். அவர்களுடைய வாழ்நாள் எல்லாம் அருளும் நலமும் பேரன்பும் புடைசூழ்ந்து வரவும், ஆண்டவரின் இல்லமாகிய மனித உள்ளத்தில் நெடுநாள் வாசம் செய்ய வழி அமைத்து கொடுக்க அறுவடையின் தேவனாகிய நல்ல ஆயனிடம் குரல் எழுப்புவோம்.

அவர் தம் சீடரை நோக்கி, "அறுவடை மிகுதி, வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். மத்தேயு 9:37