இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பாஸ்கா காலம் மூன்றாம் ஞாயிறு

நான் ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்

திருத்தூதர் பணிகள் 2:14, 22-23
முதல் பேதுரு 1: 17-21
லூக்கா 24:13-35

பாஸ்கா காலம் மூன்றாம் ஞாயிறு. எருசலேமிலிருந்து எம்மாவுக்கு பயணித்த இரண்டு சீடர்களுடன் உயிர்த்த இயேசுவின் உடனிருப்பைபற்றி இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கின்றது. இரண்டு சீடர்கள் உரையாடிக் கொண்டும் வினாவிக்கொண்டும் பயணிக்கின்ற நேரத்தில் உயிர்த்த இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்து சென்றார் என்று காண்கின்றோம். எம்மாவு பயணத்தில் சீடர்களுடன் பயணம் சென்ற உயிர்த்த இயேசு இன்றும் நம்மோடு நெருங்கி வாழ்கின்றார் என்பதை நம்மால் கண்டிப்பாக உணரமுடியம் என்பது உண்மை என்று இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கின்றது. இறைமகன் இயேசுவின் உடனிருப்பை இன்றைய முதல் வாசகம் திருத்தூதர் பணிகள் நூலின் வழியாக திருத்தூதர் பேதுரு உரத்த குரலில் யூத மக்களிடம் கூறிய சில முக்கியமான உண்மைகளைச் சிந்தித்து தியானிப்பது இன்றைய நமது வாழ்க்கைப் பயணத்திற்கு ஆணிவேராகவும் உறுதுணையாகவும் இருக்கும். - ஆண்டவரின் திருப்பெயரைச் சொல்லி வேண்டுவோர் யாவரும் தப்பிப் பிழைப்பர். - நான் ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன். - அவர் என் வலப்பக்கம் உள்ளார். எனவே நான் அசைவுறேன். - என் இதயம் பேருவகை கொள்கின்றது. - என் நா மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது - வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர், உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு. இறைவின் பார்வையில் நாம் அனைவரும் தயை பெற்றவர்களாய் வாழ்கின்றோம். அவருடைய அன்பின் அருள் நிறைந்த பிரசன்னம் எங்கு சென்றாலும் நம்மைத் தொடர்ந்து வரும் என்று அவர் வாக்கு தந்தவர். நமக்கு முன்னும் பின்னும் நம்மைச் சூழ்ந்து இருக்கின்றவர். அவருடைய வலக்கரத்தால் பற்றிப்பிடித்து வழிநடத்துபவர். நம்முடைய கால்கள் இடறாதபடி பார்த்துக் கொள்பவர். இரவும் பகலும் உறங்காமல் நம்மை கண்விழித்து காப்பவர். நாம் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி தம்முடைய தூதர்களை அனுப்புகின்றவர். நம்முடைய கால்கள் கல்லின்மேல் மோதாதபடி தூதர்கள் தங்களுடைய கைகளில் தாங்கிக் கொள்ள துணையாய் இருப்பவர் என்று வாக்கு தருகின்றார்.

நம்முடைய இறைவன் எவ்வளவு இனிமையானவர் என்பதை சுவைத்து அறிந்து கொள்வோமா? இன்று இறைவனுடன் நான் கொண்டுள்ள உறவு முறையின் அளவு ஆழமாக உள்ளதா? என்று ஆய்வு செய்வோம். திருத்தூதர் பவுல் கொலோசையர்க்கு எழுதிய திருமுகத்தில், "எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவின் பெயரால் செய்து அவர் வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள் "என்று கூறுகின்றார்.(கொலோ3:17). இன்று இறைசிந்தனைக்கு "நான் ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்" என்ற மையக்கருத்து கூறும் உண்மை நாம் அனைவரும் உயிர்த்த இயேசுவை நமது ஆன்மிகக் கண்முன் வைத்து அவருடைய அழியாத அருள்பிரசன்னத்தை உணர்ந்து அனுபவிக்க நம்மால் எப்பொழுதும் முடியும் என்று விளக்குகின்றது. நமது அன்றாட வாழ்க்கைப் பயணத்தில் நல்வாழ்விற்காக எடுக்கின்ற ஒவ்வொரு தீர்மானங்கள், முடிவுகள் அனைத்தும் இறைவனை நம் கண்முன் வைத்து எடுக்கின்றபோது அவை அனைத்துிலும் வெற்றி பெற நம்மால் முடியும். உயிர்த்த இயேசுவின் பெயரால் திருத்தூதர்கள் உயிரத்த இயேசுவை அவர்கள் கண்முன் வைத்து செயல்பட்டபோது அருள் அடையாளங்களும், அற்புதங்களும் அவர்களால் செய்ய முடிந்தது. அவர்களை சிறையில் அடைத்தபோதும், துன்பங்களின் போதும், இறைவனின் பிரசன்னமும் அவருடைய தூதர்களும் அவர்களைக் காப்பாற்றி உயிர்த்த இயேசு வழிநடத்தினார். ஏனெனில் நாம் அனைவரும் இறைவனுடைய கைவேலைப்பாடு நற்செய்ல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசுவின் வழியாகப் படைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை கிறிஸ்தவர்களாகிய நானும் நீங்களும் நன்கு அறிந்திருக்க வேண்டும். உயிர்த்த இயேசுவின் அருள் பிரசன்னத்தை உணர்ந்திட குடும்பமாக சிறு முயற்சி எடுப்போம்.

உயிர்த்த இயேசு எம்மாவு சீடர்களிடம் மோசேமுதல் இறைவாக்கினர்வரை, மற்றும் அனைவரின் நூல்களிலும் இயேசுவின் உயிர்ப்பைக் பற்றி குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர்களுக்கு விளக்கினார். ஆனாலும் அவர்கள் அவருடைய பிரசன்னத்தை உணரமுடியவில்லை ஏனென்றால் அவர்களுடைய உள்ளம் எருசலேமில் நடைபெற்ற அநீதி செயல்களை நினைத்தும், யூதர்களுக்கு அஞ்சி கவலையிலும் பயத்திலும் நிறைந்து இருந்தது. அவர்களுடைய கவலையையும் பயத்தையும் நீக்குவத்றகு உயிர்த்த இயேசு அவர்களுடன் பயணிக்கின்றார். உயிர்த்த இயேசுவின் உடனிருப்பும், வல்லமை நிறைந்த வார்த்தைகளும், அவர்மேல் நம்பிக்கை கொள்வதற்கு வழிஅமைத்துத் தருகின்றது. .அவர்களுடைய நம்பிக்கை தன்னுடன் பயணித்தவரை அவர்களோடு தங்கும்படி அழைக்க அவர்களுடைய உள்ளம் ஆவல் கொள்கின்றது. உயிர்த்த இயேசு மனிதனைத் தேடிவருகின்றதை இங்கு நன்கு உணரலாம். இறைமகன் இயேசு தன்னுடைய சிலுவைப் பாடுகளுக்கு முன்பு மொழிந்த வார்த்தைகள், 'உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றோரு துணையாளரை உங்களுக்குத் நான் தந்தையிடம் கேட்பேன். அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார், இப்போது நீங்களும் துயருறுகிறீர்கள், ஆனால் நான் உங்களை மீண்டும் காணும்போது உங்கள் உள்ளம் மகிழ்ச்சி அடையும். உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கிவிட முடியாது என்று மொழிந்த இறைமகன் இயேசுவின் வார்த்தை எம்மாவு சீடர்களின் பயணத்திலும், அவர்களுடன் தங்கி அவர்களுடன் அப்பம் பகிர்ந்த போதும் உயிர்த்த இயேசுவின் உடனிருப்பையும், பிரசன்னத்தையும் அவர்களால் உணரவும், அனுபவிக்கவும் அவர்களால் முடிந்தது, அதோடு அவர் கூறிய வார்த்தை இங்கு நிறைவேறுகிறது. இன்று நம் அனைவருக்கும் இறைவன் திருப்பலியின் வேளையின் போது, திவ்ய நற்கருணையை உலகத்துக்கு மிகப் பெரியக் கொடையாக கொடுத்துள்ளார். இறைவைனை நமது உள்ளத்தில் ஏற்கும் போது நமது உள்ளமும், வாழ்வும் தூய்மையாக இருந்தால்தான் அவரை முழுமையாக நம்மால் அனுபவிக்க முடியும். பல முறை நம்மையே தயாரிப்பு இல்லாமல் அவரை உள்ளத்தில் ஏற்றுக் கொண்டதற்கு இறைவனிடம் மன்னிப்பு கேட்போம். திருப்பிலியில் பங்கு பெறும்போது வார்த்தை வழிபாடுகளின் வழியாகவும், அப்பம், திராட்சைப் பழ இரசத்தின் வழியாக உயிர்த்த இயேசு உயிருடன் மீண்டும் வாசம் செய்து நமக்கு வாழ்வு அளிக்கின்றார். எனவே உயிர்த்த இயேசுவை உண்மையாக உணர்வதற்கு நம்மை முழுமையாக தயார் செய்ய ஆவியானவரின் துணையை நாடுவோம். அப்பொழுதுதான் அவரை அனுபவிக்க முடியும். 'தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர் " என்ற உயிர் தரும் வார்த்தையில் நம்பிக்கை கொண்டு. நமது ஆன்மாவாகிய உள்ளத்தை தூய்மையாக்கி, இன்மானுவேலாகிய இறைவனை வரவேற்று, அவருடைய அன்பின் ஆழத்தையும், உயரத்தையும், நீளத்தையும், சுவைத்து, அவருடைய மகிழ்ச்சி, அன்பு, அமைதி போன்ற வாழ்வு தரும் கொடைகளால் நம்முடைய உள்ளக் கோவிலாகிய ஆலயத்தை அலங்கரிப்போம்.

இறைவன் யோசுவாவிடம் மோசேயின் இறைப்பணியை ஒப்படைத்தபோது கூறிய வார்த்தையை, இறைவன் நமக்கு இன்று வழங்கும் ஆசீரின் கொடையாக நினைத்து அவற்றை நமது உள்ளத்தில் பதியச் செய்வோம். "உன் வாழ்நாள் முழுவதும் எந்த மனிதனும் உன்னை எதிர்த்து நிற்கமாட்டான். மோசேயுடன் நான் இருந்ததுபோல் உன்னோடும் இருப்பேன். உன்னைக் கைநெகிழ மாட்டேன், கைவிடவும் மாட்டேன். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமான நான் நீ செல்லும் இடம் எல்லாம் உன்னோடு இருப்பேன் " என்று, அன்று மொழிந்த இறைவன் இன்றும் அவர் அன்பு மகன் இயேசு கிறிஸ்து வழியாக மனித உள்ளங்களில் வாழவும் அதன் வழியாக நம் அனைவரையும் உண்மையில் வழிநடத்தவும் விரும்பம் கொள்கினறார். எனவே வாழ்கின்ற நமது அன்பு இறைவனை ஒவ்வொரு நொடிப் பொழுதும் நம் கண்முன் வைத்து, அவருடைய ஆசீரையும், உடனிருப்பையும், வழிநடத்தலையும் உணர்ந்து அனுபவிக்க முயற்சி எடுப்போம். நமது இறைவன் வாக்குமாறாதவர். உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கின்றேன்" என்றவரை நம்புவோம், அவருடைய அற்புதமான பிரசன்னத்தை வார்த்தையின் வழியாகவும், அருட்சாதனங்களின் வழியாகவும் அனுபவித்து பயன் பெற்று அவருக்கு சான்று பகர்வோம். மோசே, உம் மாட்சியை எனக்குக் காட்டும்படி வேண்டுகிறேன் 'என்று கூற, அவர், என் நிறைஅழகை என்முன் கடநது போகச் செய்து ஆண்டவர் என்ற பெயரை உன்முன் அறிவிப்பேன். யார்யாருக்கு நான் பரிவு காட்ட விரும்புகிறேனோ அவர்களுக்குப் பரிவு காட்டுவேன். யார் யாருக்கு இரக்கம் காட்ட விரும்புகிறேனோ அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன். விடுதலைப் பயணம் 33:18-19