இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









இறை இரக்கத்தின் பெருவிழா

நம்பிக்கைக் கொண்டோர் அனைவரும் ஒன்றாயிருந்தனர்

திருத்தூதர் பணிகள் 2:42-47
முதல் பேதுரு 1:3-9
யோவான் 20;19-31

இன்று உயிர்ப்பின் இரண்டாம் ஞாயிறு. இறைவனுடைய இரக்கத்தை உணர்ந்து அனுபவிக்கும் ஒரு புனித நாளுமாகும். என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு என்று திருப்பாடலில் கூறப்படும் வார்த்தை இறைவனின் மாறாத அன்பையும், நிலயான அன்பையும் எடுத்துரைக்கின்றது. ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர், நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவுபோன்று உயர்ந்தது. (திபா 103:8,11). இறைவனின் அன்பும் இரக்கமும் மண்ணின்று விண்ணளவுபோன்று உயர்ந்தது என்பதை அவருடைய அன்பு மகன் இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணமும் உயிர்ப்பும் நமக்கு அவருடைய ஆழமான அன்பைப்பற்றி விளக்குகின்றது. "தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார் " ( யோவான் 3:16) என்று நற்செய்தியில் காண்கின்றோம். இறைமகன் இயேசுவும், தந்தையும், தூயஆவியானவருமான அன்பு நிறைந்த இறைவன் மனிதர் ஒவ்வொருவரின் மீதும் வைத்துள்ள பேரன்பை இந்த இறைவார்த்தை உணர்த்துகின்றது. அகரமும் நகரமும் நானே, தொடக்கமும் முடிவும் நானே என்று வாக்கு மாறாத இறைவன் ஆதிமனிதன் முதல் இன்று வரை மனிதனாகப் பிறந்த நம்அனைவரையும் அவரது பேரன்பாலும் இரக்கத்தாலும் வழிநடத்துவதற்கு இறைவனுக்கு ஒவ்வொரு நிமிடமும் நன்றி செலுத்த நாம் கடமைப் பட்டுள்ளோம். சிலுவை மரணத் துன்ப வேளையில் தன்னைத் தனிமையில் விட்டுச் சென்ற தன்னுடைய சீடர்களை உயிர்ப்பின் சாட்சிகளாக மாற்றுகின்றார். கல்வியறிவற்றவர்களாகவும், மீன் தொழில் செய்த எளிமையான மீனவர்களை நற்செய்திப் பணியாளர்களாக தன்னுடைய உயிர்ப்பின் வல்லமையால் புதுப்படைப்பாக மாற்றி தனக்கு சான்று பகர்வதற்கு ஒரு கருவியாக மாற்றுகின்றார். தலைமைகுருக்களுக்கும், சட்டவல்லுனர்களுக்கும், பரிசேயர்களுக்கும் பயந்து கோலையாக இருந்தவர்களின் வாழ்க்கையில், அவருடைய அமைதியும், அருளும், துணிவும், மனத்திடனும், ஆவியானவரின் செயல்பாடுகளும், புதுமைகள் செய்யும் வல்லமையும் பெற்று, அவர்கள் முன்னும் மக்கள் முன்பும் உயிர்த்த இயேசுவைப் பற்றி துணிவுடன் அறிவிக்கின்றார்கள். இறைமகன் இயேசுவின் உடனிருப்பை அவர்களால் ஆழமாக அனுபவிக்கவும் உணரவும் முடிகின்றது. கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டத்துக்கு மூலைக் கல்லாக ஆயிற்று என்று கூறிய இறைவனின் வார்த்தையும் இங்கு மிகவும் பொறுத்தமாக அமைகின்றது.

உயிர்த்து என்றும் உயிருடன் வாழ்கின்ற கிறிஸ்துவை முழு உள்ளத்தோடு நம்பினால் நம்மாலும் அற்புதங்களும் அடையாளங்களும் திருத்தூதர்கள் செய்ததுபோல் இன்று செய்ய முடியும். நமது நம்பிக்கையும் விசுவாசமும் எந்த அளவு நம்மை இறைவன்பால் உயர்த்துகின்றது? உயிர;த்த இயேசுவின் வல்லமையால் அருஞ்செயல்கள் நம்மால் செய்ய முடியுமா? உயிர்த்த இயேசுவை நற்கருணை வழியாக நமது உள்ளத்தில் வரும்போது அவருடைய உடனிருப்பை உணர்ந்துள்ளோமா? வாரம் ஒருமுறை திருப்பலியில் பங்கேற்பது மட்டுமா? தவம், செபம், தர்மம், செய்வதில் மட்டுமா? நமது விசுவாசமும் நம்பிக்கையும்? திருவழிபாடுகள், யாத்திரைகளில் மட்டும் பங்கேற்பது மட்டுமா? நமது நம்பிக்கையும் விசுவாசமும்? மாறாக இவைகள் அனைத்தும் நமக்கு ஓர் இறைஅனுபவத்தை கொடுக்கின்றாதா? நம்பிக்கையை வளர்க்கின்றதா என்று சிந்திக்க வேண்டும். இறைஅனுபவத்தை நமக்கு கொடுக்காவில்லை என்றால், அவற்றில் பங்கேற்பது ஓர் அர்த்தமம் பயனும் இல்லை. கிறிஸ்துவ மக்களாக அன்போடு அழைக்கும் நாம் அனைவரும் உயிர்த்த இயேசுவை ஆண்டவராகவும் மீட்பராகவும் நமது உள்ளத்தில் திருமுழுக்கின் வழியாகப் பெற்றுள்ளோம் , அவர் என்றும் எப்பொழுதும் நம்முடன் வாசம் செய்கின்றார் ஆகையால் அவருடைய உடனிருப்பை ஆழமாக அனுபவிக்க நம்மால் கண்டிப்பாக முடியும். உலகம் முடிவு வரை உங்களோடு இருப்பேன் என்று கூறியவர் வாழ்கின்றார். நம்புவோம். விசுவசிப்போம். அவருடைய வாழ்வு தரும் வார்த்தையை தியானிக்கையில் அவருடைய உடனிருப்பை நம்மால் உணரமுடியும்.

உயிர்த்த இயேசுவின் ஆசீரையும் அருளையும் பெற்றவர்களின் குணநல்களைப்பற்றியும் பண்புகளைப்பற்றியும் இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் லூக்கா ஒருசில ஆழமான உண்மைகளை நம் முன்வைக்கின்றார். இறைமகன் இயேசுவின் பெயரால் திருமுழுக்குப் பெற்றவர்களின் சொல், செயல், சிந்தனை அனைத்திலும் மாற்றம் ஏற்படுகின்றது. திருத்தூதர்களின் வார்த்தைகளைக் கேட்டவர்கள், இறைவேண்டலிலும், நட்புறவில் அப்பம் பகிர்வதிலும், நம்பிக்கை கொண்டவர்கள் அனைவரும் ஒன்றாயிருந்தார்கள் என்று அறிகின்றோம். கிறிஸ்துவர்களாகிய நாமும் திருமுழுக்கின் வழியாக உயிர் பெற்றவர்களாக வாழ்ந்து வருகின்றோம். நம்பிக்கையின் நாயகனாக விளங்கும் இறைமகன் இயேசு இன்றும் உயிரோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். நமது கிறிஸ்துவ நம்பிக்கை எவ்வளவு ஆழமாக உள்ளது என்பதை இன்று ஆய்வு செய்வோம். நமது திருப்பலி வழிபாடுகளின் போது நமது நட்புறவும் ஒற்றுமையும் ஆதித் திருச்சபையைப் போல் உள்ளதா? நம்மிடையே எத்தனை பிரிவுகள், குழுக்கள், குழப்பங்கள். இன்று நமது ஒன்று கூடலில் சந்திக்கின்ற சவால்கள் எத்தனை?ஒரே மனத்தோடு, எளிய உள்ளத்தோடும், பேருவகையோடும் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்கள் என்று காண்கின்றோம். நம்முடைய நடைமுறையில் கடவுளை எப்படிப் புகழ்கின்றோம். நம்மை நாமே நன்கு ஆய்வு செய்து நற்கனிகளை இறைவனுக்கு கொடுக்க முயற்சித்து, அவர்களைப்போல் நாமும் வாழ்வதற்கு முயற்சி எடுப்போம். உயிர்ப்பின் உன்னத இறைபிசன்னம் நிறைந்த இறைக்குடும்பமாக முழுமையாக மாற்றம் பெற வேண்டும். இன்று இறைவனைப்பற்றி புகழ்வதற்கும் எடுத்துரைப்பதற்கும் எவ்வளவு தயங்குகின்றோம். இந்த பாஸ்கா காலத்தில் புதிய ஏற்பாடு நூலில் திருத்தூதர் பணிகள் பகுதியை தவறாமல் வாசித்து அவர்களுடைய துணிவை நாம் ஒவ்வொருவரும் பெற முயற்சிப்போம். சவுலைப் பவுலாக மாற்றிய இறைமகன் இயேசு நம்மையும் மாற்ற வல்லமை உடையவர். நீ நம்பினால் என் மாட்சியைக் காண்பாய் என்று மார்த்தாவிடம் சொன்னவர் நம்மிடையே வாழ்கின்றார் என்பதை நாம் ஒருபோதும் மறக்காமல் அவருடைய வல்லமைக்காக மன்றாடுவோம்.

இன்று மனிதன் உலக ஆசைகளின் மீதும், நவீனப் பொருட்களின் மீதும், பணம், செல்வத்தின் மீதும் நம்பிக்கையை வைத்து தனது வாழ்க்கையைத் இழந்து கொண்டிருக்கின்றான். பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு இறைஅனுபவத்தை முழமையாக கொடுக்க கூடிய வழிமுறைகளை கற்பிக்கத் தவறிவிடுகின்றார்கள். ஆனால் அவர்கள் நவீன உலகத்தைப் பின்பற்றுவதற்கு இன்று சமூக சக்திகள் உதவுகின்றன. மேலும் இன்று உலகில் எத்தனை இளம் உள்ளங்கள் போதை பொருட்களுக்கும், குடி பழக்கத்திற்கும் அடிமையாகி அவற்றில் நம்பிக்கை கொண்டு இறைவன் வாழும் கோவிலை அழித்துக் கொண்டு உள்ளனர். தன்னம்பிக்கை இன்றியும், பிறர் நம்பிக்கையும், இறைநம்பிக்கையும் இன்றி. இளம் உள்ளங்கள் வழிதவறிப் போவதை இன்று சமதாயத்திலும், குடும்பத்திலும், காண்கின்றோம். அவர்கள் மனம் திரும்ப இறைவனின் துணை வேண்டுவோம். திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில், எனக்கு வலுவூட்டுகிறவர் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு என்று தனது இறைநம்பிக்கையை அறிக்கையிடுகின்றார். எப்பொழுதும் இறைவனைச் சார்ந்து அவரில் நம்பிக்கை கொள்ளும்போது நம்மால் எதையும் சாதிக்க முடியும். நீதி மொழி ஆகமம் நம்பிக்கையைப்பற்றி எடுத்துரைப்பது, "முழுமனத்தோடு ஆண்டவரை நம்பு, என் சொந்த அறிவாற்றலைச் சார்ந்து நில்லாதே. நீ எதைச் செய்தாலும் ஆண்டவரை மனத்தில் வைத்துச் செய், அப்போது அவர் உன் பாதைகளைச் செம்மையாக்குவார்.(நீமொ 3:4-5). நாம் நம்பிக்கையோடு செய்யும் எந்தச் செயலும் வெற்றியைத்தரும். திருத்தூதர்களின் வாழ்க்கை நமக்கு இன்று ஓர் எடுத்துக்காட்டு. உயிர்த்த இயேசு தன்னுடைய சீடர்களைபார்த்து கூறும் வார்த்தைகளை சற்று ஆழமாக உள்ளத்தில் ஏற்றுக் கொள்ள வேண்டியது. "துணிவோடிருங்கள், நான் தான் அஞ்சாதீர்கள், அமைதி உரித்தாகுக என்று அவர்களை வாழ்த்துகின்றார். அன்று யூதர்களுக்கு அஞ்சி சீடர்கள் கதவுகளை மூடிக்கொண்டிருக்கும் வேளையில் இயேசுவின் சொற்களும், அவருடைய உயிர்ப்பின் பிரசன்னமும், துணிவையும், மன உறுதியையும், வலிமையையும் கொடுக்கின்றது. இறைமகன் இயேசு தோமையாரிடம் ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள் என்று கேட்கின்றார். அதோடு நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறு பெற்றோர் என்கின்றார். உயிர்த்த இயேசுவைக் கண்டபோது தோமா கூறிய மறுமொழி "நீரே என் ஆண்டவர், நீரே என் கடவுள் "என்று. நம்முடைய அன்றாட வாழ்வில் இறைஉறவில் வளர்ந்து 'நீரே என் ஆண்டவர், நீரே என் கடவுள் " என்று அழைத்து உயிர்த்த இயேசுவின் இறை அன்பை ஆழமாக சுவைத்து இறைஉறவில் வளர்ந்து எளிமை உள்ளம் படைத்த தூதர்களைப் போல் இறைவனின் பேரன்பிற்கும், இரக்கத்திற்கும் சான்று பகர்வோம். இறைவன் நம்முடைய வாழ்வு அனுபவங்களின் வழியாக, நாம் சந்திக்கின்ற அன்றாட ஏற்றத் தாழ்வுகள், போராட்டங்கள் வழியாக நம்முடைய நம்பிக்கையையும் விசுவாசத்தையும் வளர்க்க வேண்டுமென்று விரும்புகின்றார். எனவே உயிர்த்த இறைமகனின் அமைதி நம்முடைய வாழ்விலும் குடும்பத்திலும் சமுதாயத்திலும் உலகிலும் நிலவேண்டுமென்று அமைதியின் அரசரிடம் வேண்டுவோம்.

நம்பிக்கை குன்றியவனே ஏன் ஐயம் கொண்டாய்? ( மத்தேயு14:31)