ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

திருவருகைக்காலம் இரண்டாம் வாரம்

என் மீட்பரான ஆண்டவரில் என் இதயம் மகிழ்கின்றது

பாரூக்கு 5: 1-9
பிலிப்பியர் 1: 4-6, 8-11
லூக்கா 3:1-6

இன்று திருச்சபை புனித.நிக்கொலாஸ் திருநாளை கொண்டாடுகிறது. இன்றைய துருக்கியில் 280ஆம் ஆண்டளவில் பிறந்த இவர் ஆயராக பணிபுரிந்தவர். ஏழைகள், நோயாளர் மேல் அளவில்லா அன்பு கொண்டு சேவை செய்தவர். குழந்தைகளுக்கு பரிசுதந்து மகிழ்ந்தவர். டிசம்பர் மாதம் ஆறாம் திகதி 343 இல் காலம் ஆனதாக கருதப்படும் இவர் பிள்ளைகள் மாலுமிகளின் பாதுகாவலராக போற்றப்படுகிறார். நெதர்லாந்தில் இவர் திருநாள் தொடர்ந்து இதேநாளில் சிந்தகுலாஸ் ஆக கொண்டாடப்பட்ட போதும் மற்றைய நாடுகளில் அது நத்தார் பாப்பாவாக மாற்றம் அடைந்துவிட்டது.

இன்றைய முதல் வாசகம் புலம் பெயர் மக்கள் மேல் ஆண்டவர் இரக்கம் என்றும் உள்ளது. மீண்டும் சொந்த நாட்டுக்கு அழைத்து வருவார் என்ற நம்பிக்கை வெளிப்படுகிறது. ஆனால் அதற்கு முன் தேவை ஆனது மனமாற்றம். `நீதியில் ஊன்றிய அமைதி', `இறைப் பற்றில் ஒளிரும் மாட்சி' என்னும் பெயர்களால் கடவுள் உன்னை என்றென்றும் அழைப்பார். எம்மிடையே உள்ள பேதங்களை மறந்து ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. கடவுள் தம் மாட்சியின் ஒளியில் மகிழ்ச்சி யோடும், தம்மிடமிருந்து வெளிப்படும் இரக்கத்தோடும் நீதியோடும் இஸ்ரயேலை அழைத்து வருவார் என்ற வரிகள் எமக்கும் பொருத்தமாக அமைகின்றதை எண்ணி பார்ப்போமா?

இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கடவுளின் மாட்சிக்காகவும் புகழ்ச்சிக்காகவும் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நீதியின் செயல்களால் நிரப்பப் பெற்று கிறிஸ்துவின் நாளுக்கென்று குற்றமற்றவர்களாக நேர்மையோடு வாழ்ந்து வர வேண்டுமென ஆசிக்கிறார். இங்கேயும் எம்மை நாமே சுயபரிசோதனை செய்து மாற்றிக் கொள்ள சொல்கிறார்.

இன்றைய நற்செய்தியில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்; பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானவை நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும். மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர் என புனித லூக்கா சொல்கிறார். புனித.யோவானும் “பாவமன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப்பெறுங்கள்'' என்று யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகள் அனைத்துக்கும் சென்று பறை சாற்றி வந்தார். எனவே நான் எனும் அகந்தையை அழித்து வான் வீடு செல்ல சமத்துவ சமரசம்செய்வோமா?