இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு

என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்

எசேக்கியேல் 37:12-14
உரோமையர் 8: 8-11
யோவான் 11:1-45

தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு. இன்றைய வாசகங்கள் இறப்பையும் உயிர்ப்பையும் பற்றி எடுத்துரைக்கின்றது. நாம் அனைவரும் உயிர்ப்பின் மக்களாக வாழ வேண்டுமென்று இறைவன் விரும்புகின்றார். வழியும் உண்மையும் உயிருமான இறைமகன் இயேசுவின் உயிர்ப்பின் வல்லமையை எடுத்துக் கூறும் உண்மையாகும். நாம் அனைவரும் எத்தனையோமுறை இறந்தவர்களின் இறுதி சடங்கில் பங்கு பெற்றிருப்போம். ஒருவரின் இறப்பு நமக்கு எடுத்துரைக்கும் உண்மை எதுவென்றால் ஒருநாள் நானும் நீங்களும் இந்த இறப்பை சந்திக்க வேண்டும் என்று. பலமுறை இறந்தவர்களின் திருப்பலி வழிபாட்டில் நமது காதுகளில் இந்த வார்த்தையைக் கேட்டிருக்கலாம். "வழியும் உண்மையும் வாழ்வும் நானே", என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை, உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்", மேலும் உயிர்த்தெழச் செய்பவனும் வாழ்வு தருபவனும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார் என்று. இந்த இறைவசனங்கள் அனைத்தும் தருகின்ற உண்மை எதுவென்றால் இறைமகன் இயேசுவில் நம்பிக்கை கொள்பவர் என்றும் அவருடன் வாழ்வர் என்ற ஆழமானக் கருத்தினை எடுத்துரைக்கின்றன.

இறைவன் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத மனிதன் உயிர் உள்ளவன் ஆனான் என்று தொடக்க நூலில் காண்கின்றோம். இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய நடத்தையாலும் தீச்செயல்களாலும் வேற்றினத்தாரிடையே இறைவன் பெயரை தீட்டுப் படுத்தினர் ஆகையால் அவர்கள் முன்பு தூய்மையான இறைவனை மாட்சியை நிலைநாட்டுவேன் என்று இறைவாக்கினர் எசேக்கியல் வழியாக வாக்கு கொடுக்கின்றார். உலர்ந்த எழும்புகளுக்கு உயிர் கொடுத்தவர். தலைவராகிய ஆண்டவர் இந்த எழும்புகளுக்கு இவ்வாறு கூறுகிறார், "நான் உங்களுக்குள் உயிர்மூச்சு புகச் செய்வேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். (எசேக்கியேல் 37:5), என் மக்களே! நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை அவற்றிலிருந்து வெளிக்கொணர்கையில், நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள். என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். (எசேக்கியேல் 37:13-14). நமது இறைவன் வாழும் இறைவன். அவரிடம் வாழ்வு உண்டு. அவர் உருவில் படைத்தவருக்குள் வாழ்ந்து வாழ்வு தருபவர். உலர்ந்த எழும்புகளுக்கு வாழ்வு கொடுத்தவர் இன்று நமக்கும் வாழ்வு கொடுக்க ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றார். அவருடைய வாழ்வு பெறுவதற்கு எங்கே போவது என்று சிந்திக்கலாம். செபம், இறைவார்த்தை, திருப்பலி, மனம் முறுகி பாவ அறிக்கை செய்தலின் வழியாக இறைவனில் புதுவாழ்வு பெறமுடியம். தவக்காலத்தில் பயணிக்கின்ற நமக்கு இன்று இறைவன் வாழ்வு தரும் வார்த்தையையும், இறைமகன் இயேசு வாழ்வு தருபவர் என்ற உண்மையை விளக்குகின்றது. ஒரு வேளை நமது உள்ளமும் உடலும் பாவக்கறையால் துவண்டு இறைவனையும், உறவுகளையும் விட்டு தொலைவில் உலர்ந்த எழும்புக் கூடு போல் உயிரில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கலாம். கவலை வேண்டாம். நமது இறைவன் இரக்கமும் பேரன்பும் உடையவர். நமது மீட்புக்காக சிலுவையில் பலியானவர். அவர் சிந்திய ஒவ்வொரு இரத்தத் துளிகள் என்னையும், உங்களையும், மனுக்குலம் முழுவதையும் மீண்டும் நமது பாவச்சிறையிலிருந்து விடுதலையாக்கி நிலைவாழ்வு அளிக்ககூடியவர். திருப்பாடல் 34, 18ஆம் இறைவசனத்தில் காண்பது "உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார். நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார் என்ற கூறுகின்றது. நமது உள்ளம் எவ்வளவுதான் உடைந்து போயிருந்தாலும் இறைவன் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார். திருத்தூதர் பவுல் இவ்வாறு கூறுகின்றார் "பாவத்தின் விளைவாக உங்கள் உடல் செத்ததாயினும் கிறிஸ்து உங்களுள் இருந்தால், நீங்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுவீர்கள். எனவே உலர்ந்த எழும்புகளுக்கு உயிர் கொடுத்த இறைவனிடம் நமது பயனற்ற உடலையும் உள்ளத்தையும் கொடுத்து முழுமையாக அவரிடம் சரணடைவோம். அவருடைய ஆவியானவரால் புதுப்பிக்க வரம் வேண்டுவோம்.

நற்செய்தி வாசகத்தில் இறந்த லாசருக்காக அவருடைய இரண்டு சகோதரிகளும், யூதர்களும் அழுதுகொண்டிருந்த வேளையில் அவர்கள் முன்பு உள்ளங் குமுறிக் கலங்கியதுடன், அவர் கண்ணீர் விட்டு அழுதார் என்றும், லாசருடனும் அவருடைய இருசகோதரிகளுடனும் மிகுந்த நட்பு கொண்டதினால் அவர்களுடைய துக்கத்திலும் அவர் பங்கு கொள்கின்றார். துன்ப வேளையிலும் பகிர்வு வேளையிலும் இறைமகன் இயேசுவின் உடனிருப்பு நம்மோடும், நம்முடைய குடும்பத்தோடும், சமுதாயத்திலும் உலகிலும் உள்ளார் என்பதை இந்த நற்செய்தி சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது. லாசரின் சகோதரி மரியா காலில் விழுந்து, ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான் என்று சொல்லுவது நமது வாழ்க்கைக்கு மிகவும் பொறுந்தும். பாவம் என்னும் சூழலில் சிக்கி தவித்து இறந்து கொண்டிருக்கும் வேளையிலும், துன்ப துயரங்கள், கவலைகள், சவால்கள், நம்மை வாட்டும் நேரத்திலும் இறைவனை நோக்கி அழுகுரல் எழுப்புகின்றோம் அல்லவா இறைவா நீர் எங்கள் வாழ்க்கைப் பயணத்தில் எங்களோடு இருந்திருந்தால் இவ்வாறு நிகழ்ந்திருக்காது என்று. அன்று லாசரின் கல்லரைமுன் இயேசு கண்ணீர்விட்டு அழுததுபோல் இன்று நம் முன்நின்று அழுது கொண்டுதான் இருக்கின்றார். சமயப்போரின் விளைவாக கண்ணீர் சிந்தும் மக்கள், ஆப்பிரிக்கா நாடுகளில் பசி பட்டினியால் துன்புற்று கண்ணீர்விடும் மக்கள், விவசாய்களின் அழுகுரல், இன்னும் எத்தனையோ சமூக தீய சக்திகள் மனிதனை வாட்டிவதைக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், நேர்மையற்ற முறையில் தீர்ப்பிடும் போதும் இறைமகன் இயேசு கண்ணீர்விட்டு குமுறி அழுகின்றார். இறைமகன் இயேசு இறந்த லாசரை உயிர்ப்பித்து அவருடைய கட்டுகளை அவிழ்த்து வாழ்வு தந்ததுபோல் இன்று நம்முடைய தனி வாழ்க்கையிலும், சமூக வாழ்க்கையிலும் படர்ந்து கொண்டிருக்கின்ற அனைத்துப் பாவக்கட்டுகளிருந்து விடுதலை பெற்று புத்துயிர் பெற்றிட இனிவரும் நாட்களில் நம்மை நாமே தயார் செய்வோம். இறைமகன் இயேசு மார்த்தாவிடம் கூறிய வார்த்தைகளை நமது சிந்தனையில் சுமந்து பயன் பெறுவோம். ஆண்டவரே நான்கு நாள் ஆயிற்றே நாற்றம் அடிக்குமே! என்று கூறிய மார்த்தாவுக்கு இறைமகன் இயேசு கூறும் பதில்தான் 'நீ நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்பாய் " என்று. ஆம் உயிர்த்த இயேசுவை நம்பினால் நாம் அவருடைய மாட்சியை இன்மையிலும் மறுமையிலும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்க முடியும். இறைவாக்கினர் எசாயா நூல் (59:1-2) "மீட்க இயலாதவாறு ஆண்டவரின் கை குறுகிவிடவில்லை, கேட்க முடியாதவாறு ஆண்டவரின் காது மந்தமாகி விடவில்லை. உங்கள் தீச்செயல்களே உங்களுக்கும் உங்கள் கடவுளுக்கும் இடையே பிளவை உண்டாக்கியுள்ளன, உங்கள் பாவங்களே அவர் செவி சாய்க்காதவாறு அவரது முகத்தை உங்களுக்கு மறைத்துள்ளன என்று கூறுகின்றார். இறைவனுடைய மாட்சியைக் காண்பதற்கு நம்முடைய பாவங்கள் தடையாக இருக்கலாம் எனவே மனம் மாற்றத்தின் காலத்தில் நமது தவறுகளை உணர்ந்து இறைவனிடம் மன்னிப்பு பெற்று அவருடைய மாட்சியைப் இன்மையிலும் மறுமையிலும் பெறுவதற்கு தகுதியுள்ளவர்களாக நம்மை நாமே தயார் செய்வோம். ஒப்புரவு அருட்சாதனத்தை இறைவனின் அருட் கொடையாக ஏற்று அதன் வழியாக இறைவனுடன் ஒப்புரவாகுவோம்.

இறந்த உம்மக்கள் உயிர் பெறுவர், அவர்களின் உயிரற்ற உடல்கள் மீண்டும் எழும், புழுதியில் வாழ்வோரே, விழித்தெழுந்து மகிழ்ந்து பாடுங்கள், ஏனெனில், நீர் பெய்விக்கும் பனி ஒளியின் பனி. இறந்தோர் நிழல்களின் நாட்டிலும் அதை விழச்செய்கின்றீர். எசாயா 26: 19