இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் நான்காம் ஞாயிறு

கிறிஸ்து உன்மீது ஒளிர்ந்தெழுவார்

1 சாமூவேல் 16: 1b,6-7,10-13a
எபேசியர் 5:8-14
யோவான் 9:1-41

தவக்காலம் நான்காம் வாரம். எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது! இதோ! இருள் பூவுலகை மூடும், காரிருள் மக்களினங்களைக் கவ்வும், ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார், அவரது மாட்சி உன்மீது தோன்றும்" என்று இறைவாக்கினர் எசாயா வழியாக நமக்கு இறைவன் வாக்குறுதி தந்துள்ளார். இறைமகன் இயேசுவை ஆண்டவராக ஏற்றுக் கொண்ட அனைவருடைய வாழ்வில் அவர் உயிருடன் வாழ்கின்றார் என்பதுதான் உண்மை. அவருடைய அருளின் பிரசன்னம் அவர்களுக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருந்து ஒளியின் சாட்சிகளாக விளங்க அவர் துணைபுரிகின்றார். நேற்றும் இன்றும் அவர்களுடைய உடனிருப்பை உணர்ந்தவர்கள் ஏராளம். நற்செய்தியில் திருத்தூதர்கள், அவரிடம் கும் பெற்றவர்களாகிய சமாரியப் பெண், திருத்தூதர் மத்தேயு, சக்கேயு, தாபோர் மலையில் அவருடன் இருந்த மூன்று திருத்தூதர்கள், சவுலாக இருந்த பவுல் மேலும் அனைத்து புனிதர்களும் இவர்கள் அனைவரும் இறைவனுக்கு சாட்சியாக வாழ்ந்தவர்கள். இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் சாமூவேல் வழியாக இறைவன் மனிதர்களுடைய அன்றாட வாழ்க்கைச் சூழலில் நடக்கும் ஓர் ஆழமான உண்மையை எடுத்துரைக்கின்றார். இறைவன் சாமூவேலிடம் உரைப்பது "மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பதில்லை. மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர். ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றனர் என்கின்றார். நம்முடன் வாழ்கின்றவர்களின் வெளித்தோற்றத்தைக் கண்டு பலமுறை அவள் இப்படித்தான்? அவன் இப்படித் தான்? என்று தீர்ப்பிடுகின்றோம். இறைவனின் சாயலில் படைக்கப்பட்ட அனைவரும் நல்லவர்கள். சூழ்நிலையின் காரணமாக நமது தோற்றம், குணங்கள், செயல்கள் வேறுபடுவதுண்டு, மாறுவதுண்டு ஆனால் நமது உள்ளத்து உணர்வுகளையும் செயல்களையும் புரியக் கூடியவர் இறைவன் ஒருவர் மட்டும்தான். இறைவன் தாவீதை அருள் பொழிவு செய்து ஆண்டவரின் ஆவியை அவர்மேல் பொழிந்தார். அதனால் அவருடைய வாழ்வில் அவர் உடனிருந்து சிறந்த அரசராக இறைவனுக்கும் மக்களுக்கும் பணிபுரிய என்றும் துணையாக இருந்தார் என்று விவிலியம் கூறுகின்றது. இனி வருகின்ற நாட்களில் நமது குடும்பத்தில், சமுதாயத்தில், குழுமத்தில் நம்முடன் வாழ்கின்றவர்களின் புறத்தோற்றத்தைக் கண்டு தீர்ப்பிடாமல், ஒவ்வொருவரின் அகத்தின் நற்குணங்களைக் கண்டு அவர்களை உயர்வித்து அவர்களுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து இறைவனுக்கும் மனிதர்களுக்கும் சாட்சியாக விளங்குவோம். தன்னலம், சுயநலம், குற்றம் காணுதல், முணுமுணுத்தல், குறைகூறுதல் போன்ற தீய சக்திகளை நம்மிலிருந்து அகற்றுவோம்.

இன்றயை இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடிகளார் கூறுகின்றார் ஆண்டவருக்கு உகந்தது எது என்பதை ஆராய்ந்து பாருங்கள் என்று கூறுகின்றார். மேலும் ஒளியே எல்லா நன்மையையும் நீதியையும் உண்மையையும் விளைவிக்கிறது என்கிறார். பயனற்ற இருளின் செயல்களைச் செய்கிறவர்களோடு உங்களுக்கு உறவு வேண்டாம். அவற்றைக் குற்றமென எடுத்துக் காட்டுங்கள் என்று அறிவுரை கூறுகின்றார். இன்று உண்மையை எடுத்துரைக்க தயங்குகின்றோம். உண்மையை எடுத்துரைக்கும்போது தண்டிகப்படுகின்றோம். தனிமையாக விடப்படுகின்றோம். உண்மையை பேசுகின்றவர்களை சுயநல்திற்காக சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்படுகின்றார்கள். மறைநூல் அறிஞர்களும், பரிசேயர்களும், சதுசேயர்களும், மூப்பர்களும், தலமைக்குருக்களும் ஒளியான இறைவனையும் அவருடைய வாழ்வுதரும் வார்த்தையையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் அவர்களுடைய கண்கள் மூடியிருந்தன. அவர்கள் இறைமகன் இயேசுவின் மீது பழிகளைச்சுமத்தி சிலுவையில் அறைந்தனர். இறைமகன் இயேசு அவர்களுடைய வாழ்வின் ஒளி என்பதை அவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை. இறைமகன் இயேசுவை ஒரு தச்சனின் மகன் என்றுதான் அவர்கள் அறிதிருந்தார்கள். அவர் உண்மையை மற்றும் எடுத்துரைத்தார். நன்மைகளையும் அற்புதங்களையும் மக்களுக்குச் செய்தார். அப்படியிருந்தும் அவரை இறைவனுடைய மகன் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இன்று உண்மையை எடுத்துரைக்க தயங்கும் உலகத்தில் பயணிக்கின்றோம். எங்கும் எதிலும் ஒளியின் செயல்கள் குறைந்து கொண்டுபோவதைக் கண்டும் அமைதி காக்கின்றோம். இறைவன் நமக்கு மீண்டும் அழைப்புவிடுக்கின்றார் தூங்குகிறவனே! விழித்தெழு! இறந்தவனே உயிர்பெற்றெழு கிறிஸ்து உன்மீது ஒளிர்ந்தெழுவார் என்று. ஆம் இருள் உள்ள இடத்தில் ஒளியானவர் செயல்பட முடியாது எனவே ஒளியான இறைவனிடம் குரல் கொடுப்போம். அவரது துணையால் இருளின் செயல்களை நம்மிலிருந்து அகற்றி ஒளியான செயல்களைமட்டும் செய்வதற்கு துணைபுரிய வேண்டுமென்று. இருளின் செயல்களாகிய பாவங்களை எம்மிலிருந்து அகற்ற முயற்சிப்போம். தவக்காலத்தில் நாம் எடுக்கும் ஒவ்வொரு நற்செயல்களை இறைவன் நிறைவாக ஆசிர்வதிக்க வேண்டுவோம்.

திருமுழுக்கின் வழியாக இறைமகன் இயேசு நம் அனைவர்மீதும் ஒளிர்ந்துள்ளார். இறைவனால் அழைக்கப்பட்ட ஒவ்வொருவரின்மீதும் அவருடைய ஆவியானவரும், அவருடைய ஒளியும் நிறைந்து இருக்கும் என்ற உண்மையை இன்றைய இறைவாசகங்கள் எடுத்துரைக்கின்றது. நானே உலகின் ஒளி என்றுரைத்த இயேசுவே நமது வாழ்க்கைக்கு ஒளியாக இருப்பவர். அவரைப் பின்செல்லும் நாம் ஒவ்வொருவரும் இருளில் நடக்கமாட்டார்கள் என்றும், வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்கள் என்றும் நம்புகின்றார். மேலும் ஒளி உங்களோடு இருக்கும்போதே ஒளியை ஏற்றுக் கொள்ளுங்கள். அப்போது ஒளியைச் சார்ந்தவர்கள் ஆவீர்கள் என்று கூறுகின்றார். ஒளியான இறைவனை முழுமையாக அனுபவிக்க விரைவோம். காலம் நெருங்கி வந்துவிட்டது. வாருங்கள் இறைவனுடன் பயணிக்க துணிவோம். இன்றைய நற்செய்தியிலும் இயேசு கூறுகின்றார் ' நான் உலகில் இருக்கும்வரை நானே உலகின் ஒளி என்று கூறி தரையில் உமிழ்ந்து, உமிழ்நீரால் சேறு உண்டாக்கி, அச்சேற்றைப் பார்வையற்றவருடைய கண்களில் பூசி சீலோவாம் குளத்தில் கழுவும் என்று பிறவியிலே பார்வையற்றவரிடம் கூற, அவரும் இயேசுவின் வார்த்தையை நம்பி சிலோவாம் குளத்தில் கழுவி குணம் பெறுகின்றார். இன்று நமது வாழ்க்கையில் பலவகையானப் பாவங்கள் நமது கண்களை மறைத்து ஒளியான இறைவனின் அருள் அனுபவத்தை அனுகமுடியாமல் தடுத்துக்கொண்டு இருக்கலாம். இறைவன் இன்று தாய் திருச்சபையின் வழியாக நமக்கு கொடுத்துள்ள சிலோவாம் குளம் என்பதுதான் ஒப்புரவு அருள்சாதனம். இயேசு குருடனுக்கு பார்வை கொடுத்து, அவருடைய ஒளியில் நடக்கவும், அவரைப் பின்பற்றவும், அவருடைய அருள் வாழ்வில் நிலைத்திருருக்கவும் புது சந்தர்ப்பத்தை கொடுக்கின்றார். பார்வை பெற்றவர் இயேசுவுக்கு சாட்சியாக மக்கள் முன்பு திகழ்கின்றார். அக்கம் பக்கத்தாருக்கும், பரிசேயர்களுக்கும், இறைமகன் இயேசு ஓர் இறைவாக்கினராக தீகழ்கின்றார். நீங்களும் நானும் இறைமகன் இயேசுவை அருட்சாதனங்களின் வழியாகவும், செபவாழ்வின் வழியாகவும், இறைவார்த்தைகளின் வழியாகவும் இறைஅனுபவம் பெற்று ஒளியின் சாட்சியாக விளங்க முயற்சிப்போம். தவக்காலத்தில் ஒளியான இறைவன் நம் ஒவ்வொருவரையும் தொட்டு குணமாக்க வேண்டும் என்றும். மீண்டும் ஒளியின் பாதையில் நடந்து பிறருக்கு ஒளிகாட்டும் விளக்காக விளங்க அருளின் வரம் வேண்டுவோம்

அவரிடம் வாழ்வு இருந்தது: அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது. அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது: இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை. யோவான்1:4-5