இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

தவக்காலம் முதலாம் ஞாயிறு

உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்

தொடக்கநூல் 2; 7-9, 3: 1-7
உரோமையர் 5: 12-19
மத்தேயு 4 : 1-11

தவக்காலம் முதல் ஞாயிறு. உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணிசெய் என்று சாத்தனை நோக்கி கூறிய இறைமகன் இயேசுவின் வார்த்தையைப் பற்றி சிந்திப்போம். இறைவன் தமது உருவிலும் சாயலிலும் படைத்த தூய்மை நிறைந்த தூய ஆவியானவர் வாசம் செய்யும் நமது ஆன்மாவை என்றும் தூய்மையுடன் பாதுகாப்பது மனிதனாகிய நமக்கு மிகவும் கடினம். இறைவனின் அளவற்ற பேரன்பிற்கும் இரக்கத்திற்கும் எதிராக குற்றங்களைப் புரிந்து, வாழ்க்கை வட்டாரத்தில் நம்மோடு பயணிக்கும் சொந்த உறவுகளுக்கும் எதிராக குற்றங்களைப் புரிந்து நமது ஆன்மா பாவச்சுமையால் நிறைந்து இருள் படர்ந்து பாலைவனம்போல் காட்சி அளிக்கலாம். பாலைவனத்தின் வழியாக நாற்பது ஆண்டுகள் இறைவன் தான் தேர்ந்தெடுத்து அன்பு செய்த இஸ்ரயேல் மக்களை வழிநடத்தி வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள் அழைத்துச் சென்றவர். அவர்களும் அவருக்கு எதிராக முணுமுணுத்தனர். பலமுறை பாவங்களும் செய்தனர் ஆனாலும் அவர் அவர்களை மன்னித்து இரக்கம் காட்டினார். தற்பொழுது இறைவன் நாற்பது நாட்களை நமக்கு கொடையாக கொடுத்துள்ளார். தவம், செபம், மன்னிப்பு, மனம் மாற்றம், புண்பட்ட, காயப்பட்ட நமது உறவுகளைப் புதுப்பிக்க இறைவன் நாற்பது நாட்களை நமக்கு கொடையாக தருவதும் அவருடைய பேரன்பும், இரக்கமும் என்றுதான் சொல்ல வேண்டும். காணாமற்போன ஆடு பற்றிய உவமையின் வழியாக இறைமகன் இயேசு கூறுவது "மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியைவிட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும்" என்று. நொறுங்குண்ட உள்ளத்தைத்தான் இறைவன் விரும்புவது. அனுதினம் அறிந்தும் அறியாமலும் மனதளவிலும், உடலவிலும் இறைவனுக்கு எதிராக செய்யப்படும் அனைத்து குற்றங்களுக்காக மனம் வருந்தி இறைவனிடம் இரக்கம் கேட்டு பயணம் செய்யும் நாற்பது நாட்கள் தான் தவக்காலம் என்று அழைக்கப்படுகின்றது. முதலில் அகவாழ்வாகிய நமது ஆன்மாவை சரி செய்தால்தான் நமது புறவாழ்வை சரி செய்ய முடியும். பாவிகளை ஆதரித்து அன்பு செய்த இறைமகன் இயேசுவின்மீது நமது கண்களைப் பதியவைப்போம். அவருடைய இரக்கத்தின் கதிர்கள் மீண்டும் நம்மீது வரவேண்டுமென்று.

உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய் என்று இயேசு கூறும் வார்த்தையை கருத்தில் கொள்வோம். இன்று நாம் அனைவரும் பலவகையான உலக மாயங்களுக்கும், நவீன தெய்வங்களுக்கும் முதலிடம் கொடுத்து இறை உறவையும், மனித உறவையும் விட்டு அகன்று சென்று கொண்டிருக்கின்றோம். சமூக ஊடகம், வாடஸ் அப், வலைதளங்கள், முகப்புத்தகம், தொலைபேசி, டிவி போன்றவைகளும், மது, போதைப் பொருட்கள், மற்றும் பணம், செல்வம், வெறுப்பு, கோபம், பகைமை, பழிவாங்குதல், சாதி, மதக் கலவரங்கள், வன்முறைகள், பயங்கரவாதம், வன்முறைகள் போன்ற சமூக தீய சக்திகள் அனைத்தும் மனித உள்ளத்தில் குடி கொண்டு மனித நேயம் இல்லாமல் மனிதன் மனிதனையே கொன்று குவிக்கும் காலத்தில் பயணிக்கின்றோம். பணம், செல்வம், அதிகாரம் போன்ற உலக ஆசைகளுக்கு அடிமையாகி தனக்கென்று பொற்சிலைகளை செய்து அலகை காட்டும் பொய்த் தெய்வங்களை வணங்கி வருகின்றோம். குடும்ப செபத்திற்கு, இறைவார்த்தைக்கு, இறைவழிபாடுகள், திருப்பலி கொண்டாங்கள் அனைத்தும் வெறும் சடங்காக மாறிகக்கொண்டிருக்கும் சூழ்நிலை மற்றும் இறைக்குலமாக இறைபணி செய்வதற்கு நேரம் இல்லை, ஆர்வம் இல்லை ஆனால் ஆடம்பர கொண்டாட்டங்களுக்கு நேரத்தை செலவழிக்கின்றோம். மனம் மாறுவோம் ஆண்டவரின் வருகை திருடனைப்போல் இருக்கும் என்று இறைவார்த்தை கூறுகின்றது. அலகையின் வார்த்தைக்கு செவிகொடுக்காமல், ஆன்மாவில் குடிகொண்டிருக்கும் ஆவியானவரின் குரலுக்கு செவிமடுத்து தூய்மை நிறைந்த வாழ்வு வாழ முயற்சிப்போம். இறைவன் முன் நானும் நீங்களும் பாவிகள். மனம் திரும்பிய சக்கேயுவைப்போல், சுங்கச்சாவடியில் அமர்திருந்த மத்தேயு இயேசுவைப் பின்பற்றியது போல், நாமும் அவர் பின் சென்று புது வாழ்வை அவருடன் தொடங்குவோம். இறைவன் நமக்கு கொடுத்த அனைத்து நன்மைகளையும், சுதந்திரத்தையும் முறைப்படி செயல்படுத்த தவக்காலத்தில் முயற்சி எடுப்போம்.

இறைமகன் இயேச பாலைவனத்தில் அலகையை இறைவார்த்தையால் வென்றதுபோல் நாமும் இறைவார்த்தையை ஆயுதமாக இதயத்திலும் மனதிலும் தியானித்து, செயல்படுவோம். இறைவாக்கினர் மோசேயைப் போலும், இறைவாக்கினர் எலியாவைப்போலும் செபத்தில் இறைவனுடன் இணைந்து அவருடைய குணங்களையும் அருட்கொடைகளையும் பெறுவோம்.. கற்களை அப்பமாகும்படிக் கேட்ட அலகையின் கேள்விக்கு, இறைமகன் இயேசு சொன்ன பதில் மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக கடவுளின் வாய்சொல் ஒவ்வொன்றும் வாழ்வர் "என்று . அதே வார்த்தையைத்தான் இறைவனின் சொந்த மக்களாகிய இஸ்ரயேல் குலத்துக்கு சொல்லுகின்றார். ( இணைசட்டம் 8:3) இன்று நாம் அழிந்து போகும் உணவிற்கு பசியாய் இருக்கின்றோமா? வாழ்வு தரும் இறைவார்த்தைக்கு பசியாய் இருக்கின்றோமா? கோவிலின் உயர்ந்த பகுதியில் நிறுத்தி, நீர் இறைமகன் என்றால் கீழே குதியும் என்று கேட்ட கேள்விக்கு, இறைமகன் இயேசு சொன்ன பதில் "கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உம் கால் கல்லில் மோதாபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள் என்று . தாவீது அரசர் பாடிய (திருப்பாடல் 91:11-12) இறைவசனங்கிளில் நம்மை பாதுகாக்கும் இறைவனைப் பற்றி எடுத்துரைக்கின்றார். நம்முடைய அனுதின வாழ்வில் இறைவனை நம்புகின்றோமா? மனிதர்களையா? அலகை இயேசுவை உயர்ந்த மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகளின் மேன்மைகளை காட்டி, நெடுஞ்சாண் கிடையாய் விழுந்து அதனை வணங்க வேண்டும் என்று கேட்ட கேள்விக்கு இறைமகன் இயேசு சொன்ன பதில், உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே, பணி செய் என்று. இஸ்ரயலே, செவிகொடு நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர்இ உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் ஆற்றலோடும் என் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக என்ற உன்னத கட்டளையை இஸ்ரயேல் மக்களுக்கு கொடுக்கின்றார். இன்று நாம் யாரை உண்மையிலும் ஆவியிலும் வணங்குகின்றோம்? உலகம் காட்டும் செல்வங்களையா? அல்லது இரக்கமும் பேரன்பும் கொண்ட இறைவனையா? சிந்திப்போம்.

இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இவ்வார்த்தைகள் உன் உள்ளத்தில் இருக்கட்டும். இணைச்சட்டம் 6 :6