இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் எட்டாம் ஞாயிறு

நான் உன்னை மறக்கமாட்டேன்

எசாயா 49: 14-15
முதல் கொரிந்தியர் 4:1-5
மத்தேயு 6 : 24-34

இன்று பொதுக்காலம் எட்டாம் ஞாயிறு. நான் உன்னை மறக்கமாட்டேன் என்ற வார்த்தையைப் பொதுவாக பல ஆண்டுகளாக நம்முடன் நன்றாகப் பழகிய நண்பர்களும் உறவினர்களும் பயன்படுத்துவதைக் பலமுறைக் கேட்டிருப்போம். மனிதனின் வாழ்க்கையில் நான் உன்னை மறக்கமாட்டேன் என்ற வார்த்தைக்கு ஓர் ஆழமான அர்த்தம் உண்டு. நான் இறந்தாலும் உன்னை மறக்கமாட்டேன் என்றும்கூட கூறுவதுண்டு. அளவுகடந்த நம்பிக்கையும் அன்பும் நட்பும் பகிர்ந்து கொள்ளும்போது ஏற்படுகின்ற ஓர் உணர்வு. நமது நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர்கள் நமக்குச் செய்த நற்செயல்களை நினைவு செய்கின்றபோதும், நம்மிடமிருந்து மற்றவர்கள் நன்மைகளைப் பெறுகின்றபோது ஒருவருக்கொருவர் பறிமாறிக் கொள்ளும் வார்த்தைகள்தான் "நான் உன்னை மறக்கமாட்டேன்" என்பது. நமது வாழ்க்கையில் அடிக்கடி கேட்ட வார்த்தைளும். துன்பத்தினால், நோயினால், விபத்தினால், வறுமையினால், பொருளாதாரத்தில் நலிவுற்ற நிலையினால், மனஉலைச்சலினால் துன்பப்பட்டு தவிக்கும்போது நல்ல உள்ளங்கள் நம்மைத் தேடிவந்து உதவி செய்கின்றபோது ஏற்படும் அனுபவத்தால்தான், உதவிசெய்த நல்லவர்களிடம் "நான் உங்களை என்றும் மறக்கமாட்டேன்" என்று கூறுகின்றோம். உண்மையான நண்பர்கள் ஒருபோதும் நன்மைகளை மறக்கமாட்டார்கள். ஆனால் நம்மில் பலர் மறந்து போவதும் உண்டு. அன்று அடிமைத்தனத்திலிருந்து இறைவாக்கினர் மோசே வழியாக மீட்ட இறைவனையே இஸ்ரயேல் மக்கள் மறந்தார்கள். நாற்பது ஆண்டுகளாய் பாலைவனத்தில் உண்ண உணவும், இரவில் நெருப்புத் தூணாகவும், பகலில் மேகத் தூணாகவும் இருந்து வழிநநடத்தி, செங்கடலை இரண்டாகப் பிரித்து அவர்கள் பயணம் செய்வதற்கு வழியை அமைத்து, அவர்களை அவ்வழியே நடக்கச் செய்து அக்கரைக்கு கூட்டிச் சென்றவரையே மறந்து பொற்கன்றுக் குட்டியைச் செய்து அதுதான் உண்மையான இறைவன் என்று வழிபட்டார்கள். இறைவனின் ஆழமான அன்பை மறந்த ஓர் இஸ்ரயேல் குலம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. ஏன் நமது வாழ்க்கையில் எதிர்மறையான சவால்களையும் துன்பங்களையும் சந்திக்கும்போதும், அனுபவிக்கும்போதும் இறைவனிடம் புலம்புகின்றோம், கண்ணீர்வடிக்கின்றோம், அழுகுரல் எழுப்புகின்றோம், இறைவன்கூட என்னைக் கைநெகிழ்ந்துவிட்டார் என்று. நம்மை அன்பு செய்யும் இறைவன் மாறக்கூடிய நிழல் அல்ல ஆனால் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்பதை இன்றைய முதல் வாசகத்தின் வழியாக நமக்கு எடுத்துரைக்கின்றார். பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் கட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன்" என்கின்றார். நம்மைக் காக்குகின்றவர் கண்ணயர்வதுமில்லை, உறங்குவதும் இல்லை. நமது வலப்பக்கத்தில் இருப்பவர், நிழலாக என்றும் தொடர்பவர். போகும்போதும் வரும்போதும், இப்போதும் எப்போதும் காப்பவர். நமக்கு முன்னும் பின்னும் நம்மைச் சூழ்ந்து வாழ்பவர். எனவே இறைவனை முழுமையாக நம்புவோம் விசுவசிப்போம். நம்மை யார் கைவிட்டாலும் இறைவன் ஒருபோதும் நம்மை இகழ்ச்சிக்கு உள்ளாக்க மாட்டார். அவருடைய மாறாத அன்பிற்கு பிரமாணிக்கமாய் வாழ்வதற்கு முயற்சிப்போம்.

இறைமகன் இயேசு நம்மிடம் கூறியது உலகம் முடியும் மட்டும் உங்களோடு இருப்பேன் என்று ஆகையால் உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்று கவலைப் படவேண்டாம், நம்முடைய உயிரும் உடலும் உலகச் செல்வத்தைவிட மிக உயர்ந்தவை என்றும், கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது என்று ஆணித்தரமாக நற்செய்தியின் வழியாக எடுத்துரைக்கின்றார். இன்று காணப்படும் சமுதாயம் பணத்துக்கும் செலவத்துக்கும்தானே முதலிடம் தருகின்றது. பணத்துக்கும் செலவத்துக்கும் அடிமையாகி சொந்த உறவுகளையும் நண்பர்களையும் கொலை செய்து செல்வத்தையும் பணத்தையும் அபகரிக்கின்ற உலகத்தில் வாழ்ந்து வருகின்றோம். உலக அரசியல்வாதிகள் பொருளாதார நிலையில் உயர்ந்து வாழும் செல்வந்தர்கள், பணத்திற்கும் செல்வத்திற்கும் ஆசைகொண்டு போடுகின்ற நாடகத்தை அனுதினம் சமூக ஊடகங்களின் வழியாக அறிகின்றோம். அன்மையில் தமிழ் நாட்டில் நடக்கின்ற சம்பவம் இதற்கு ஓர் உதாரணம். ஏழை எளியவர்கள் அகதிகளின் கண்ணீர் கவலைகள் அதிகரித்துக் கொண்டுதானே இருக்கின்றது. இறைவன் நம்மிடம் விரும்புவது எப்பொழுதும் விழிப்போடு இருக்க வேண்டும், உலகப் பொருளாசை ஒருபோதும் நம்மை அழிவிற்கு இட்டுச் செல்லக் கூடாது என்று. செல்வத்தின்மேல் ஆசை கொண்டவர்கள் இன்று சிறைச் சாலையில் வாழ்கின்றார்கள். இன்று பணத்திற்கும் செல்வத்திற்கும் குடும்பங்களில் காணப்படும் பிளவுகள், பழிவாங்குதல், போன்ற காரியங்கள் ஏளாரம். பணம், செல்வம், சுகம் மற்றும் ஞானக்கொடைகள் அனைத்தும் இறைவன் இலவசமாக கொடுத்தவை ஆனால் மனிதன் தன்னுடைய சுயநலத்தால் தான்மட்டும் உபயோகிக்க வேண்டும் என்று நினைக்கின்றான். அதற்கு மாறாக அவற்றை பிறருடைய நல்வாழ்விற்குப் பகிர்ந்து கொடுக்கும்போது இறைவன் நம்மை நிறைவாக ஆசீர்வதிப்பார். திருப்பாடல் 127:2 இல் காண்பது "வைகறையில் விழித்தெழுந்து நள்ளிரவில் ஓய்வெடுக்கும்வரை மானிடர் தம் உணவுக்காக வருந்தி உழைப்பது வீணே! உறங்கும்போதும் கடவுளின் அன்பர் தேவையானதை அவரிடமிருந்து பெற்றுக்கொள்வர் " என்றும். இறைவாக்கினர் எலியாவிற்கு பாலைவனத்தில் சூரைச்செடியின் அடியில் படுத்துரங்கியபோது தணலில் சுட்ட அப்பமும், குவளையில் தண்ணீரும் கொடுத்து வழிநடத்தியவர்தான் நமது வல்லமையுள்ள இறைவன். எனவே உயிர் வாழ எதை உண்பது எதைக் குடிப்பது என்று கவலை வேண்டாம் ஆனால் இன்று நமது ஆன்மீக வாழ்விற்கான உணவை எவ்வாறு பெறுவது என்றுமட்டும் நாம் கவலை கொள்ள வேண்டும். இறைநம்பிக்கையும், இறைவிசுவாசமும் நம்மிடம் எவ்வளவு ஆழமாக உள்ளது என்று நம்மை நாமே ஆய்வு செய்வோம். என்றும் மாறாத இறைவனிடத்தில் நம்பிக்கை கொண்டு அவருடைய உயிருள்ள வார்த்தையின்படி நமது வாழ்க்கையை கட்டி எழுப்புவோம். நமது விண்ணகத் தந்தைக்கு நம்மைப்பற்றி அனைத்தும் தெரியும் ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும் என்று கூறிய இறைமகன் இயேசுவின் வார்த்தைக்கு செவிமடுத்து பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளியைப் போல் செயல்படுவோம்.

நெஞ்சே கடவுளுக்காக மௌனமாய்க்காத்திரு, ஏனெனில், நான் எதிர்பார்க்கும் நலன் வருவது அவரிடமிருந்தே, உண்மையாகவே, என் கற்பாறையும் மீட்பும் அவரே. எனவே, நான் சிறதும் அசைவுறேன். திருப்பாடல் 62:5-6